Skip to main content

புதைகுழியான பதினோரு மாடி... - 4 ஆண்டுகளாகியும் மறக்கமுடியாத சோகம்

Published on 28/06/2018 | Edited on 28/06/2018

தமிழகம் இதுவரை சந்தித்திராத ஒரு விபரீதத்தை நான்காண்டுகளுக்கு முன்பு இதே ஜூன்  28-ம் தேதி  மாலை சந்தித்தது.

 

mavulikkam

 

ஆம்புலன்ஸ்கள், காவல்துறை வாகனங்கள், அதிரடிப்படையினரின் வேன்கள், இயற்கை பேரிடர் மீட்புக் குழுவினரின் வாகனங்கள் என போரூரை நோக்கி சர்சர்ரென விரைந்ததைப் பார்த்த மக்கள், சென்னையில் ஏதோ விபரீதம் நடந்திருக்கிறது எனப் புரிந்து கொண்டு கலக்கமடைந்தனர். அடுத்த சில நிமிடங்களில், போரூரில் 11 மாடிக் கட்டிடம் இடிந்தது. கட்டிட இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியிருக்கிறார்கள் என்ற செய்தி டி.வி.க்களில் ஓடத் தொடங்கின.

 

 

 

என்ன நடந்தது? சென்னையில் இருந்து போரூரை நோக்கிச் செல்லும்போது போரூர் சிக்னல் வரும். அதன் இடது பக்கம் திரும்பினால் 2-வது கிலோ மீட்டரில் மவுலிவாக்கம் பாய்கடை ஸ்டாப் இருக்கிறது. பிரசித்தி பெற்ற மாங்காடு காமாட்சியம்மன் கோவில், குன்றத்தூர் முருகன் கோவில் ஆகியவற்றுக்குப் போகிற சாலை இது. அந்த பாய்கடை ஸ்டாப்பில் இருந்து 100 அடி தூரத்திலேயே ஒரு பிரமாண்டமான 11 மாடிக் கட்டிடம் நிற்கிறது அதன் அருகே அதேபோல் நின்ற 11 மாடிக் கட்டிடம்தான், இடிந்து விழுந்து கான்கிரீட் குப்பை மேடாய்க் காட்சியளித்தது.

 

mavulikkam

 

’பிரைம் சிருஷ்டி பில்டர்ஸ்’ என்ற நிறுவனம் கட்டிய அந்தக் கட்டிடம்தான் கொஞ்ச நேர மழையிலேயே பொலபொலவென கட்டிடக் குப்பையாய் உதிர்ந்திருக்கிறது. கூச்சல், அழுகுரல், மீட்புக் குழுவினரின் பரபரப்பு என அந்த இடமே கலவரக்காடு போல் காட்சியளித்தது. அங்கே பதட்டமாய் நின்ற அல்தாப் என்ற இளைஞன் “என் செல்போன்ல பாருங்கண்ணே. போனமாசம் எங்க வீட்டு பால்கனியில் இருந்து அந்தக் கட்டிடத்தைப் படம் எடுத்தேன். அது இவ்வளவு சீக்கிரம் விழும்ன்னு நான் நினைச்சுக்கூட பார்க்கலை'' என்றார் பரபரப்பாக.

 

 

 

அவருடைய அம்மா நசீராவோ "இதோ அந்த மாடி வீட்டின் ஃபர்ஸ்ட் ஃபுளோர்ல தான் குடியிருக்கோம். மதியம் 3 மணியில் இருந்து நல்ல இடியும் மழையுமா இருந்தது. 4 மணிக்கு கரண்ட் கட் ஆச்சு. அப்ப நானும் என் பையன் அல்தாப் பும் பால்கனியில் நின்னுக்கிட்டு, எதிரில் இருந்த அந்தக் கட்டிடத்தைப் பார்த்துக்கிட்டிருந்தோம். என்ன நடக்குதுன்னு உணர்றதுக் குள்ள எதிர்ல இருந்த அந்த 11 மாடிக் கட்டிடம் ரெண்டாப் பிளந்து, அப்படியே சரசரன்னு உட்கார ஆரம்பிச்சிடுச்சு. ஏழெட்டு செகண்ட்ல அந்தக் கட்டிடம் எப்படி ஆய்டிச்சி பாருங்க. நினைக்கும்போதே பதறுதுங்க'' என்றபடி முகத்தில் அரும்பிய வியர்வையைத் துடைத்துக்கொண்டார்.

 

mavulivakkam


 

அந்த 11 மாடிக் கட்டிடத்தின் ஒரு பகுதி மேலே விழுந்து அமுக்கியதில், ராஜராஜன் நகர் 1-வது தெருவில் இருக்கும் நான்கைந்து வீடுகள் தரைமட்டமாகி விட்டன. அதில் ஒரு வீட்டிலிருந்த கணேசன் என்பவர் இடிபாடுகளில் சிக்கி இறந்துவிட்டார். கதறி அழுதுகொண்டிருந்த அவரது மனைவி மலர் "என் வீட்டுக்காரர் செக்யூரிட்டி வேலை பார்த்துக்கிட்டிருந்தார். அன்னைக்கு மதியம் சாப்பிட்டவர், தூங்கிக்கிட்டிருந்தார். மழைபெய்ததால், விளையாடப்போன எங்க மக புனிதாவைத் தேடி வீட்டைவிட்டு வெளியில் வந்தேன். அந்த நொடியில்தான் கட்டிடம் இடிஞ்சி எங்க வீட்டுமேல் விழுந்தது. எங்க வீடுகளின் இடிபாடுகளில் இருந்த 9 பேரை மீட்டுட்டாங்க. என் கணவரும் தப்பி வந்திருப்பாருன்னு நினைச்சேன். ஆனா அவரைப் பொணமாத்தான் வெளியில் எடுத்துப் போட்டாங்கய்யா. இனி என் மகளை வச்சிக்கிட்டு என்ன பண்ணப்போறேனோ'' என்று தலையில் அடித்துக்கொண்டு கதறினார்.

 

கட்டிட மேஸ்த்திரிகளில் ஒருவரான சுதாகரோ "எனக்கு சொந்த ஊர் காஞ்சிபுரம்ங்க. எனக்குக் கீழ் 11 பேர் வேலை செஞ்சாங்க. எங்க ஆளுங்கள்ல சிலர் 3-வது ஃபுளோர்ல பெயிண்ட் அடிச்சிக்கிட்டிருந்தாங்க. இன்னும் சிலர் 4, 5, 6-வது ஃபுளோர்கள்ல பூச்சு வேலை பண்ணிக்கிட்டிருந்தாங்க. நான் பக்கத்துக் கட்டிடத்தில் வேலை பார்த்துக்கிட்டிருந்தேன். அப்ப பெரிய சத்தத்தோட அந்தக் கட்டிடம் சரிஞ்சு விழ்ந்ததைப் பார்த்ததும் என்ன பண்றதுன்னே தெரியலை. எங்க ஆளுங்கள்ல எத்தனை பேர் இருக்காங்கன்னே தெரியலை'' என்றார் வெடவெடப்பாய்.

 

மேஸ்த்திரி முத்துப்பாண்டியனோ "சொந்த ஊர் திருமங்கலம். 40 பேரை கட்டிட வேலைக்காக கூட்டிட்டு வந்தேன். சமீபத்தில் ஃபுளோர் போட்டப்ப 4 ஆடுகளை வெட்டி எங்களுக்கெல்லாம் விருந்து வச்சார். ஓனர் மனோகரன் சம்பவத்தன்னைக்கு வந்து அவரும் அவர் மகன் முத்துவும் எங்களுக்கு சம்பளம் போட்டாங்க. அவங்க கிளம்பிய அரைமணி நேரத்தில் இப்படி ஆய்டுச்சி. எனக்கு கட்டிட வெளிப் பகுதியில் வேலை. மழைபெய்ததால் வேலையை நிப்பாட்டிட்டு கிரவுண்ட் ஃபுளோர்ல இருந்தேன். அது பார்க்கிங் பகுதி என்பதால் அங்க பலர் தங்கியிருந்தாங்க. அப்ப ஒரு ஆந்திரக் கார அம்மா எனக்கு டீ போட்டுக் கொடுத்தாங்க. அதை வாங்கி குடிச்சிக்கிட்டிருக்கும்போது தரை அதிர ஆரம்பிச்சிடுச்சி. என்ன நடக்குதுன்னு தெரியாமலே கேட்டுப்பக்கம் ஓட ஆரம்பிச்சேன். பலத்த சத்தத்தோட கட்டிடமே விழுந்ததைப் பார்த்து அப்படியே நின்னுட்டேன். அப்புறம் சுதாரிச்சிக்கிட்டு மறுபடி கட்டிடத்துக்கிட்ட ஓடினேன். எனக்கு டீ போட்டுக்கொடுத்த ஒரு அம்மா உட்பட அங்க இருந்த எல்லோரும் உள்ளே அமுங்கிட்டாங்க.

 

அப்ப மருதுபாண்டிங்கிறவர் மேல் ஸ்லாப் விழுந்திருந்தது. ரெண்டு, மூணு பேர் உதவியோட ஸ்லாப்பை நகர்த்தி மருதுபாண்டியை மீட்டேன். ரோட்டுக்கு அவரைத் தூக்கிட்டு ஓடிவந்தேன். அப்ப அந்த மருதுபாண்டி, "என்னை எப்படியாவது காப்பாத் துங்கண்ணே. என் பிள்ளை குட்டியெல்லாம் நான் இல்லாட்டி தவிக்கும். ஊர்ல இருக்கும் என் நிலபுலத்தை வித்துக்கூட பணத்தக் கொடுக்குறேன், என்னை ஆஸ்பத்திரியில் சீக்கிரமா சேருங்கண்ணே'ன்னு கெஞ்சினார். ஆனா எந்த ஆட்டோவும் அவரை ஏத்திக்கலை. என் கண்ணு முன்னாலே துடிதுடிச்சி இறந்துட்டார் மருதுபாண்டி'' என்றார் கண்கள் ததும்ப.

 

 

 

இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட ராமகிருஷ்ணா துக்கம் தொண்டையை அடைக்கப் பேசினார். "சொந்த ஊர் ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம். நானும் என் மனைவி ஜோதியும் இங்க வேலை பார்த்துக்கிட்டிருந்தோம். எங்க குழந்தைகள் ஆந்திராவில் படிக்குதுங்க. அன்னைக்கு சனிக்கிழமை. சம்பளம் கொடுத்தாங்க. மழையால் எங்களுக்கு அன்னைக்கு வேலை இல்லை. மதியம் கோழி எடுத்து சமைச்சி சாப்பிட்டோம். நானும் என் மனைவியும் பேசிக்கிட்டிருக்கும்போது, திடீர்ன்னு கட்டடம் குலுங்க ஆரம்பிச்சிடிச்சி. என்ன நடக்குதுன்னு தெரியாமலே ஓட ஆரம்பிச்சிட்டேன். இருந்தும் தப்பிக்க முடியலை. என்மேல் கட்டிடக் கற்கள் விழுந்து அமுக்கிடிச்சி. கை, காலை நகர்த்த முடியலை. இருட்டா இருந்துச்சி. மூச்சுவிட முடியலை. உடம்பெல்லாம் வலி. இனி அவ்வளவுதான்னு நினைச்சேன். என் மனைவியாவது பொழைச்சிருக்கணும்ன்னு வேண்டிக்கிட்டேன். மூணு மணி நேரத்துக்கப்புறம் அரைமயக்கத்தில் இருந்த என்னை மீட்டாங்க. ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போனாங்க. என் மனைவிக்கு என்ன ஆச்சோன்னு அங்கிருந்து மறுபடி இங்க ஓடிவந்தேன். கட்டிடத்துக்கிட்டயே என்னை விடமாட்டேன்னுட்டாங்க. நான் ரத்தக்கறையோட அலங்கோலமா நிக்கிறதைப் பார்த்து, ஆந்திராவில் இருந்து வந்திருந்த டாக்டர் சுனில் எனக்கு வேட்டி சட்டை வாங்கிக் கொடுத்தார். என் ஜோதிக்கு என்ன ஆச்சுன்னு தெரியலீங்க'' என்றபடி அழுதார்.

 

mavulikkam

 

அடுத்த கொஞ்ச நேரத்தில் ஜோதி மீட்கப்பட்டார், சடலமாக. ஜெயலலிதா’ வருகிறார் என்று தகவல் வந்ததால் மூன்றரை மணிக்கே மீட்பு வேலைகளை நிறுத்தினர். அப்போது இடிபாடு களுக்குள் ஒரு பெண் சிக்கி இருப்பதைக் கண்டுபிடித்தவர்கள், ஜெ. வந்து போவதற்காகக் காத்திருந்தனர். அதுவரை அவருக்கு ஜூஸ், குளுக்கோஸ் எனக் கொடுத்தனர். அதேபோல் மீட்கப்பட்ட ஒரு சடலத்தையும் ஓரம்கட்டி வைத்துவிட்டு, ஜெ.வின் கார் ஈர மண்ணில் சிக்காமல் இருக்க, மணலைக் கொட்டி பாதை அமைத்தனர். ஜெ. இறங்கி நடக்க மரக்கட்டைகளால் ஒரு பிளாட்பாரம் அமைக்கும் வேலையும் நடந்தது. மாலை 6.05-க்கு வந்த ஜெ.’ ஸ்பாட்டைப் பார்வையிட்டார்.

 

நெல்லூர் ஜாயிண்ட் கலெக்டர் ரேகாவிடமும் காஞ்சிபுரம் கலெக்டர் பாஸ்கரன் போன்றவர்களிடம் சிறிது நேரம் பேசிய ஜெ.’ புறப்படும் முன்பாக பத்திரிகையாளர்களிடம் "கட்டிடத்துக்கு அப்ரூவல் வழங்கியதில் தவறு நடக்கவில்லை. பில்லடர்ஸ் செய்த தவறுதான் விபத்துக்குக் காரணம். அது என்ன என்பதை இப்போது சொல்ல முடியாது. இது குறித்து விசாரிக்கக் குழு அமைக்கப்பட்டிருக்கிறது'' என்றார். அப்போது ஒரு ஆங்கில சேனல் நிருபர் "நீங்கள் வருவதால் 3 மணி நேரம் மீட்புப் பணிகள் நிறுத்தப்பட்டிருக்கிறதே'’ என்று கேட்க, இதைக்கேட்டு கோபமான ஜெ. "அரசியல் உள் நோக்கம் கொண்ட இந்தக் கேள்விக்கு என்னால் பதில்சொல்ல முடியாது” என்றபடி காரில் ஏறினார்.