ADVERTISEMENT

இன்று எல்லோரும் காதலையே பாடுகிறார்கள்! - கவிஞர் மதிபாலா நூல் வெளியீட்டு விழாவில் ஆதங்கக் குரல்

03:45 PM Feb 11, 2020 | Anonymous (not verified)


விஞர் இரா.மதிபாலாவின் ’அசைந்தபடியே இருக்கிறது தூண்டில்’என்னும் கவிதை நூல் வெளியீட்டு விழா, திருவான்மியூர் பனுவல் அரங்கில் அமர்க்களமாய் அரங்கேறியது. நிகழ்ச்சியை கவிஞர் அனுராதா இனிமையாகத் தொகுத்து வழங்க, தேநீர் பதிப்பகத்தின் சார்பில் எழுத்தாளர் கோகிலன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

ADVERTISEMENT


விழாவிற்கு ஆரூர் தமிழ்நாடன் தலைமை தாங்க, கவிதை நூலை கவிஞர் மானா.பாஸ்கரன் வெளியிட்டார். நூலின் சிறப்புப் படியை கவிஞர் வதிலை பிரபா பெற்றுக்கொண்டார். கவிஞர் நூலை அறிமுகப்படுத்திப் பேசிய கவிஞர் சுசித்ரா மாரன் “மனிதர்களின் மனதில் மறைந்திருக்கும் இருக்கும் அகம் சார்ந்த உணர்வுகள், மதிபாலாவின் எல்லாக் கவிதைகளிலும் அடிநாதமாக ஒலிக்கிறது. பெரும்பாலான கவிதைகளில் கவிஞரின் இளம் எண்ணங்கள் ததும்புகின்றன” என்று நூல் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தினார்.

ADVERTISEMENT


தலைமை உரையாற்றிய ஆரூர் தமிழ்நாடன் ‘உடலை சிறந்த உணவுகள் மூலம் நாம் வளர்த்துக் கொள்வது போல், நாம் நம் உள்ளத்தை சிறந்த நூல்கள் மூலம் வளர்த்துக் கொள்ளவேண்டும். ஆழமான மனதில் இருந்துதான் உயர்ந்த சிந்தனைகள் பிறக்கும்,. அந்த வகையில் மனதின் ஆழத்தை ஆழப்படுத்தும் ஆழமான கவிதைகளை கவிஞர் மதிபாலா எழுதியிருக்கிறார்” என்று குறிப்பிட்டார். நூலைப் பெற்றுக்கொண்டு சிறப்புரையாற்றிய மானா.பாஸ்கரன், ‘தேநீர் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் இந்த நூல், வடிவமைப்பிலும் உள்ளடக்கத்திலும் சிறந்து விளங்குகிறது. கவிஞர் மதிபாலா அன்பானவர். அந்த அன்பே அவரது எல்லாக் கவிதைகளிலும் வெளிப்படுகிறது. உவமைக்கவிஞர் சுரதாவைப் போல், கவிஞர் மதிபாலா, உருவக்கவிஞர் என்று பாராட்டும் வகையில், தன் கவிதைகளில் உருவகத் திருவிழாவையே நடத்தியிருக்கிறார்” என்று பாராட்டினார்.


நூலின் முதல படியைப் பெற்றுக்கொண்ட கவிஞர் வதிலை பிரபா “தலைமைச் செயலகத்தில் பணியாற்றியபடியே தமிழ்ப் பணி ஆற்றியவர் மதிபாலா. அவரது கவிதைகள் சிறப்பானவை. தமிழ் கவிதை உலகம் எப்படி வானம்பாடி இயக்கத்தை மறந்துவிட முடியாதோ, அதேபோல் இன்று தலைமைச் செயலகத் தமிழ்மன்றமும் இலக்கிய வரலாற்றில் இடம்பிடித்து வருகிறது. மதிபாலாவின் மிகச்சிறந்த கவிதையாக அவரது புன்னகை அவர் முகத்தில் எப்போதும் இருப்பது மகிழ்ச்சிக்குரியது’ என்றார் உற்சாகமாக.


விழாவில் திடீர் விருந்தினராகக் கலந்துகொண்ட கவிஞர் ஜெயபாஸ்கரன் ‘இன்று, சிறந்த கவிதை நூல்கள் அதிகம் வெளிவருவதும், அவை சிறந்த வடிவமைப்பில் நம் கைகளில் தவழ்வதும், கவிதையுலகம் செழிக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. கவிதையும் பாடல்களும் மக்களின் வாழ்வைப் பேசவேண்டும். இதுவரை தமிழில் வெளியான திரைப்பாடல்களில், 90 சதப் பாடல்கள் காதலைச் சார்ந்தவையாகவே இருக்கின்றன. இன்று எல்லோரும் வெறும் காதலையே பாடிக் கொண்டிருக்கிறார்கள். வாழ்வின் ஏனைய பகுதிகளையும், மக்களின் உணர்வையும், தகிக்கும் பிரச்சினைகளையும் சொல்லும் பாடல்கள் இங்கே குறைவு. இந்த நிலை மாறவேண்டும்’ என்று சுட்டிக்காட்டியதோடு, நண்பர்களின் வேண்டுகோளை ஏற்று, தனது பெண்ணியக் கவிதைகள் சிலவற்றையும் எடுத்துவைத்து, அரங்கத்தைக் கலகலப்பாக்கினார்.

மேலும், கவிஞர்கள் மயிலாடுதுறை இளையபாரதி, வணவை துரிகா, துபாய் பண்பலை நிகழ்ச்சித் தொகுப்பாளர் அஞ்சுகம் முருகேசன், இளம்பரிதி பார்த்தி, மு.எ.பிரபாகரன், போல்ஸ்விக், ப.தேவபிரான், கு.விநாயகமூர்த்தி, கவிதா சரவணன், வை. இளம்வழுதி, இரா.கவியரசு ஆகியோரும் கவிதை நூலைப் பாராட்டி, கவிஞரை வாழ்த்தினர். நிறைவாக கவிஞர் மதிபாலா, உணர்ச்சி பொங்க ஏற்புரையாற்றினார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT