Skip to main content

ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் - 'தேர்தல் சாணக்கியன்' என்று மீண்டும் நிரூபித்த அமித்ஷா!

Published on 05/12/2020 | Edited on 05/12/2020
l


2020 ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் 48 வார்டுகளை கைப்பற்றி ஆளும் கட்சிக்கு மரண பயத்தை காட்டியுள்ளது பாஜக. தெலுங்கானா மாநிலத்தில் கடந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் முன்பு வரை மாநில பாஜக என்பது காண கிடைக்காத ஒரு கட்சியாகவே இருந்தது. கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு சில மாதங்கள் முன்பு இந்த விவகாரம் அமித்ஷா காதுக்கு எட்டியது. புதிய பொறுப்பாளர்கள் போட்டார். அவருக்கே உரிய சில அரசியல் சடுகுடுகளை ஆடினார். விளைவு கே.சி.ஆரின் கோட்டையான அங்கு நான்கு தொகுதிகளில் வெற்றி பெற்று பாஜக தன்னுடைய உறுப்பினர்களை நாடாளுமன்றம் அனுப்பியது.

 

இதைக்கூட மோடி அலை என்று சொல்லி மனசை தேற்றிக்கொள்ள டி.ஆர்.எஸ். மற்றும் காங்கிரஸ் கட்சிகள் முயலும். ஆனால் கடந்த மாதம் துபக் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் டி.ஆர்.எஸ். கட்சியிடம் இருந்து தொகுதியை வென்றது பாஜக. இதை சற்றும் எதிர்பாராத டி.ஆர்.எஸ். அதிர்ந்து கிடந்த நிலையில், நேற்று வெளியான ஹைதராபாத் மாநகராட்சி தேர்தல் முடிவு அதனை நிலைகுலைய வைத்துள்ளது. 150 வார்டுகள் கொண்ட மாநகராட்சியில் 55 வார்டுகளை ஆளும் டி.ஆர்.எஸ். கைப்பற்றி இருந்தாலும், அதனால் முழு மெஜாரிட்டி பெற முடியவில்லை. கிட்டதட்ட 20க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் மேயர் பொறுப்பை கைப்பற்ற அக்கட்சிக்கு தேவைப்படுகிறார்கள்.

 

ஆளும் கட்சியின் நிலைமை இப்படி இருக்க, தேர்தலில் விஸ்வரூபம் எடுத்துள்ளது பாஜக. மொத்தமுள்ள 150 தொகுதிகளில் 48 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது. அதே போன்று ஓவைசி கட்சியும் 44 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதில் என்ன ஆச்சரியம் என்று இந்த தேர்தலை கடந்து போக முடியாது. கடந்த முறை நடைபெற்ற ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் இதேபோன்று 44 வார்டுகளை கைப்பற்றியது ஓவைசி கட்சி. எனவே முஸ்லிம்கள் அடர்த்தியாக உள்ள இடங்களில் தங்களுக்கான இடங்களை அவர்கள் தக்க வைத்துக்கொண்டுள்ளார்கள்.

 

ஆனால் அதே சமயம் கடந்த முறை வெறும் 4 வார்டுகளில் மட்டும் வெற்றி பெற்ற பாஜக, இந்த முறை 12 மடங்கு உயர்ந்து 48 வார்டுகளை கைப்பற்றியுள்ளது. கிட்டதட்ட திரிபுரா அரசியல் மாதிரி மீண்டும் ஒருமுறை தன்னை நிலை நிறுத்தியுள்ளது. ஆளும் டி.ஆர்.எஸ். கடந்த முறை 99 வார்டுகளை கைப்பற்றி இருந்த நிலையில், தற்போது 55 வார்டுகளை மட்டுமே கைப்பற்றி மேயர் பதவியை கைவிட்டு நிற்கிறது. எப்படியும் ஓவைசியுடன் கூட்டணி அமைத்து மேயர் பதவியை தற்போது கைப்பற்றினால் கூட நிஜத்தில் இந்த தேர்தலில் உண்மையான வெற்றியை பதிவு செய்த கட்சி என்றால் அது பாஜக தான்.

நான்கு நாட்களுக்கு முன்பு உள்துறை அமைச்சர் அங்கு பிரச்சாரத்துக்கு வந்தபோதே இந்தத் தேர்தலில் பாஜக ஒரு திட்டம் வைத்துள்ளது என்று அரசியல் ஆய்வாளர்கள் தொடர்ந்து கருத்து தெரிவித்து வந்தார்கள். அவர் கூறியது போலவே யாரும் எதிர்பாராத வகையில் ஆளும் கட்சிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது அம்மாநில பாஜக. "இந்த தேர்தலில் இரண்டாவது இடம் பெற்றுள்ளோம், ஆனால் வரும் சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை பிடிப்போம், அதற்காக எதையும் செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம்" என்று அம்மாநில பாஜக தலைவர்கள் நேற்று சூளுரைத்துள்ளார்கள். அமித்ஷா மாயாஜாலம் தெலுங்கானா மாநிலம் வரை வந்துள்ளது, அது தமிழகம் வருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 


 

Next Story

தேதி கொடுத்த அமித்ஷா; தயாராகும் தமிழக எம்பிக்கள்

Published on 11/01/2024 | Edited on 11/01/2024
Amitsha who gave the date; Preparing Tamil Nadu MPs

அண்மையில் சென்னை மற்றும் தமிழகத்தின் தென் மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடியில் பெய்த கனமழை காரணமாக வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழக அரசு சார்பில் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு நிவாரண பணிகள் நடைபெற்று வருகிறது. அதேபோல் மத்தியக் குழுவும் ஆய்வு செய்த நிலையில், மத்திய அரசிடம் தமிழக அரசு நிவாரணத் தொகையை கோரியிருந்தது.

அண்மையில் டெல்லியில் நடைபெற்ற 'இந்தியா' கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து தமிழகத்திற்கான நிவாரணத் தொகையை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.

தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தமிழக எம்பிக்கள் சந்திக்க நேரம் கேட்டு கடந்த 04/01/2024 அன்று தமிழக முதல்வர் கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்தில் தமிழக அரசு கோரியிருந்த வெள்ள நிவாரண தொகையான 37,907.19 கோடியை உடனடியாக ஒதுக்கீடு செய்ய வலியுறுத்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அவரை தமிழக எம்பிக்கள் சந்திக்க நேரம் கேட்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் வரும் ஜனவரி 13ஆம் தேதி தமிழக அனைத்து கட்சி எம்பிக்கள் குழு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க இருப்பதாகவும், சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கான நிவாரண நிதியை உடனே மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என நேரில் வலியுறுத்த இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜனவரி 13-ஆம் தேதி பிற்பகல் 3:30 மணிக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அனைத்து கட்சி எம்பிக்கள் சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Next Story

'இனியும் மோடி, அமித்ஷாவின் மாயாஜாலத்திற்கு இறையாக மாட்டார்கள்'-திருமாவளவன் பேச்சு

Published on 08/01/2024 | Edited on 08/01/2024
vck Thirumavalavan speech

ஜனவரி 26 வெல்லும் ஜனநாயகம் என்ற மாநாடு திருச்சியில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன் பேசுகையில், ''இந்த மாநாட்டில் முதல்வர் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்று உரையாற்ற உள்ளனர். தேசிய அளவில் காங்கிரஸ் பேரியக்கத்தின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, இடதுசாரிகள் கட்சித் தலைவர்கள் சீதாராம் எச்சூரி, ராஜா உள்ளிட்டவர்கள் பங்கேற்று பேருரை ஆற்ற உள்ளனர்.

நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சார முதல் புள்ளியாக இது அமையும் என நம்புகிறேன். வெல்லும் ஜனநாயகம் என்றால் வெல்லும் இந்தியா கூட்டணி என பொருள். அனைத்து ஜனநாயக சக்திகளும் இந்த மாநாட்டில் பங்கேற்க வேண்டும் என அறைகூவல் விடுகிறோம்.

நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தல் வழக்கமான நாடாளுமன்ற தேர்தல் அல்ல. இது இறுதி யுத்தம். ஜனநாயகத்தை, அரசியலமைப்பை, நாட்டு மக்களை காப்பாற்றுவதற்கு. இறுதி போராகவே இதனை கருதுகிறது விசிக. இந்த இறுதி போரில் இந்தியா கூட்டணி வெற்றி பெறும். பாரதிய ஜனதாவை ஆட்சி பீடத்தில் இருந்து தூக்கி எறியும். அதற்கான ஒரு அச்சாரமாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வெல்லும் ஜனநாயக மாநாடு நடைபெறும்.

பில்கிஸ் பானு வழக்கில் மேல்முறையீட்டு தீர்ப்பு வெளியாகி இருப்பது மிகுந்த ஆறுதலை தருகிறது. பாதிக்கப்பட்ட அம்மையாரின் குடும்பத்திற்கு நீதி வழங்கப்பட்டிருக்கிறது. குஜராத் உயர் நீதிமன்றத்தால் அவர்கள் அனைவரும் நிரபராதிகள் என விடுவிக்கப்பட்ட நிலையில் அந்த தீர்ப்பு அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது அரசியல் அமைப்புச் சட்டத்தை அதிகாரிகள் ஒன்று சேர்ந்து மோசடி செய்திருக்கிறார்கள் என்று உச்சநீதிமன்றம் குறிப்பிட்டு இருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. 

ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட சங்பரிவாரங்கள் எத்தகைய கொடூரத்தையும் செய்துவிட்டு தப்பிவிட முடியும் என பில்கிஸ் பானு தீர்ப்பின் போது கருதப்பட்டது. ஆனால் அவர்கள் தப்ப முடியாது மீண்டும் சிறைப்படுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் இன்றைக்கு அளித்துள்ள தீர்ப்பு அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும் நீதித்துறையின் மீதும் நமக்கான நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளது. இந்த தீர்ப்பை வரவேற்கிறோம். பில்கிஸ் பானு குடும்பத்தினரை கொடுமையான வன்முறைக்கு உள்ளாக்கி குற்றச் செயலில் ஈடுபட்ட 11 பேரும் தண்டிக்கப்பட வேண்டும் விரைவில் சிறை படுத்தப்பட வேண்டும்.

மோடி, அமித்ஷா போன்றவர்களின் மாய மாளவித்தைகளுக்கு மக்கள் இனி மயங்க மாட்டார்கள், ஏமாற மாட்டார்கள். பத்தாண்டு காலம் நரக வேதனையை அனுபவித்திருக்கிறார்கள். பிஜேபியால் வஞ்சிக்கப்பட்டவர்கள் பெரும்பான்மையினர் இந்துக்கள் தான். ஆக இனியும் மோடி, அமித்ஷா போன்றவர்களின் மாயாஜால வித்தைகளுக்கு இறையாக மாட்டார்கள் என நம்புகிறோம்.

2024 நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் இவிஎம் முறையை பயன்படுத்த கூடாது. ஓட்டு சீட்டு முறையை பயன்படுத்த வேண்டும். ஓட்டுச்சீட்டு முறை நடைமுறைப்படுத்தப்பட்டால் சங்பரிவார அமைப்புகளுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள். இனி எந்த காலத்திலும் அவர்கள் தேர்தல் களத்தில் அடி எடுத்து வைக்க முடியாத அளவுக்கு பாடம் புகட்டுவார்கள்.

அதனால்தான் அண்மையில் விசிக சார்பில் வேண்டாம் இ.வி.எம் வேண்டாம் மீண்டும் வாக்குச்சீட்டு முறை என்ற ஆர்ப்பாட்டத்தை நடத்தினோம். இது இந்தியா முழுமைக்கும் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைக்க வேண்டிய கோரிக்கை. ஆகவே இதை இந்தியா கூட்டணி பெருமளவில் மக்களை திரட்டி போராட்டத்தை முன்னெடுக்கும். 

போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் தொழிற்சங்கங்களை தொழிற்சங்க தலைவர்களை அழைத்து அரசு பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் கோரிக்கைகளை கனிவாக கேட்டு நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். பொங்கல் பண்டிகை நாள் என்பதால் பொதுமக்கள் பாதிக்காத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

பாஜக தரப்பினர் மற்றும் அவர்களுக்கு ஒத்து ஊதுகின்ற உதிரி கட்சிகள் தொடர்ந்து இந்திய கூட்டணி குறித்த கருத்துகளை பரப்பி வருகிறார்கள். இது இந்தியா கூட்டணி மீது அவர்களுக்கு உள்ள அச்சத்தை காட்டுகிறது. இந்தியக் கூட்டணியில் சிறு சிறு முரண்பாடுகள் உள்ளது தான். பல மாநில கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கிய கூட்டணியில் முரண்பாடுகள் இருப்பதை தவிர்க்க முடியாது. எந்த வகையிலும் இந்தியா கூட்டணியில் கட்டுக்கோப்பாக தேர்தலை சந்திக்கும். பாஜகவை ஆட்சி அதிகாரத்தில் இருந்து தூக்கி எறியும். இதிலிருந்து திமுகவோ அதன் கூட்டணி கட்சிகளோ வெளியேற வாய்ப்பே இல்லை. இந்திய கூட்டணி தமிழகத்திலும் கூட்டம் நடத்த கட்டாயம் வாய்ப்பு உண்டு. 

விசிக எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடும் என்பதை தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு பிறகு தெரிவிக்கப்படும்' என்றார்.