Skip to main content

தண்டிக்கப்படாத OPS-EPS, தண்டிக்கப்பட்ட தினகரன், மாட்டிக்கொள்ளாத ஸ்டாலின் - ம.நீ.ம. முரளி அப்பாஸ்
மக்கள் நீதி மய்யம் செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸ் நக்கீரன் இணையதளத்திடம் சில கருத்துக்களை பகிர்ந்துகொண்டார். 
 

திமுக - மக்கள் நீதி மய்யம் கருத்து மோதல் முற்றி வருகிறதே? 
 

இரு கட்சிகளுக்கும் எதிராகத்தான் மக்கள் நீதி மய்யம் தொடங்கப்பட்டது. அதிமுக ஆளும் கட்சியாக இருந்ததால் அதிகமாக விமர்சனம் செய்தோம். திமுகவை விமர்சனம் செய்ய வேண்டிய அவசியம் இல்லாமல் இருந்தது. இதனால் திமுகவோடு மக்கள் நீதி மய்யம் இணக்கமாகிவிடும் என்று ஒரு தோற்றத்தை உருவாக்கினார்கள். அப்படி ஒரு எண்ணம் மக்கள் நீதி மய்யத்திற்கு கிடையாது.
 

இரண்டு வகையான கட்சிகள் தமிழ்நாட்டில் உள்ளன. ஆட்சி அதிகாரத்திற்கு வர முடியாது என போராட்டங்கள் நடத்தக் கூடிய கட்சிகள், இன்னொன்று ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி மாற்றத்தை உருவாக்குகின்ற கட்சிகள். அந்த வகையில் திமுக, அதிமுகவுக்கு பிறகு அந்த இடத்தில் நாங்கள்தான் இருக்கிறோம். எங்களால் அவர்கள் இரண்டு பேருடன் சேர்ந்து இயங்க முடியாது. ஆனால் அவர்கள் நாங்கள் அவர்களுடன் வருவோம் என்று நினைத்திருக்கிறார்கள். வர மாட்டோம் என்று தெரிந்தவுடன் எங்களை தாக்கிப் பேசுகிறார்கள். தேர்தல் நெருங்குவதால் இரண்டு கட்சிகளையும் எதிர்க்கிறோம். எங்களை முதல் விமர்சனம் செய்ததே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்தான். நாங்கள் கட்சி தொடங்கியபோது காகிதப் பூ என்று சொன்னார். அதற்கு எங்கள் தலைவர் பூ அல்ல, விதை என்று சொன்னார்.

 

முரசொலியில் கமல்ஹாசனை விமர்சித்து ஒரு கட்டுரையே வெளிவந்துள்ளது. அதில் முக்கியமாக கமல் ஒரு கத்துக்குட்டி, அரசியல் தெரியாதவர் என கூறப்பட்டுள்ளதே?

 

இது இல்லையே விமர்சனத்திற்குரிய விஷயங்கள். என்ன சொன்னோமோ அதற்கு பதில் சொல்லலாம். 'நாங்கள் அப்படியில்லை. நீங்கள்தான் சரியில்லை' என்று சொல்லலாம். நாய், பன்றி, பிராமணன் என்று விமர்சிக்கிறார்கள். இந்த மாதிரியான அவர்களின் விமர்சனத்திற்கு ஆளாகாத தலைவர்களே இல்லை. கடைசியாக ரஜினியும் மாட்டினார். பொதுவெளியிலேயே அவர்களது  விமர்சனத்தை பெரியதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள்.

 

அந்தக் கட்டுரையில் 'அரசியலில் எங்கே போகிறோம் என்றும் தன் பின்னால் வருபவர்களை எங்கே அழைத்து செல்கிறோம் என்றும் தெரியாதவர்' என்கிறார்களே? கமல்ஹாசன் பின்னால் அணிவகுத்துள்ளவர்களுக்கு அந்தத் தெளிவு இருக்கிறதா?

 

கமல்ஹாசன் கட்சி தொடங்கியதில் இருந்து அதிகமாக பயன்படுத்தக்கூடிய இரண்டு வார்த்தைகள், ஒன்று கிராம சபை. இன்னொன்று சென்ட்ரிசம். சித்தாங்கள் வலது, இடது என்று இருக்கும்போது சென்ட்ரிசம் என்று இப்போதுதான் பேசப்படுகிறது. எங்களது கொள்கை இடதும், வலதும் இல்லாத ஒரு கொள்கை. தொழில் செய்தவற்கு சுதந்திரமும், உழைப்பவர்களுக்கு உரிமையும் கொடுக்கிறோம். மக்கள் நலனுக்காக செய்யக்கூடிய நல்ல திட்டமாக இருந்தால் அது எந்த சித்தாந்தத்தை சேர்ந்தது என்று பார்க்காமல் அதை செயல்படுத்துவதுதான் எங்களது கொள்கை. தெளிவான கொள்கையுடன் மய்யம் என்ற பெயருடன் வந்துள்ளோம். இது புதிதாக இருப்பதால் அவர்களுக்கு இது குழப்பமாக இருக்கிறது.
 

மாநில சுயாட்சி குறித்து முரசொலி மாறன் புத்தகம் எழுதி எத்தனை வருடங்கள் ஆகிறது. இவர்கள் செயல்திட்டத்தில் ஒரு அங்குலமாவது நகர்த்தியிருக்கிறார்களா? அவர்கள் எங்களை கேட்கிறார்கள் மாநில சுயாட்சி பற்றி உங்கள் கருத்து என்ன என்று? இதனை எதிர்த்தோம், விமர்சித்தோம் என்று பதிவு செய்வதைத்தான் அவர்கள் காலம் காலமாக செய்கிறார்கள். இன்று உள்ள அனைத்து பிரச்சனைகளிலும் தொடங்கிய காலத்திலேயோ, இடைப்பட்ட காலத்திலேயோ ஆட்சியில் இருந்திருக்கிறார்கள். எந்த பிரச்சனைகளிலும் தீர்வு ஏற்படுத்தி தரவில்லை. எங்களுக்கு சான்றிதழ் கொடுக்க வேண்டியது திமுகவோ, அதிமுகவோ அல்ல. மக்கள்தான்.


 

makkal needhi maiam Murali Appasகாகிதப் பூ என்று விமர்சித்தப் பிறகு எங்களை ஒரு வருடமாக யாரும் விமர்சிக்கவில்லை. மேலும் அவர்களின் கூட்டணிக்  கட்சிகளும் எங்களை விமர்சிக்கவில்லை. அரைவேக்காட்டுத்தனம் என்று வைகோ எங்களை விமர்சனம் செய்தார். பின்னர் ஒரு செய்தியாளர்கள் சந்திப்பில் எங்களைப் பற்றிய கேள்விக்கு கருத்து சொல்ல விரும்பவில்லை என்று சொன்னார். ஒரு விவாதத்தில் டி.கே.எஸ்.இளங்கோவன் இருக்கும்போது நான் பேசினேன். அப்போது அவர், இந்தப் பையன் ஏதோ தெரியாமல் பேசிக்கொண்டிருக்கிறான் என நினைத்து மிகவும் விரதக்கட்டுப்பாட்டுடன் இருந்தார். எங்களை வேண்டாம் என்று சொல்ல எந்த காரணமும் இல்லை. அவர்கள் கூட்டணிக்கு எல்லோரையும் சேர்த்துக்கொண்டிருக்கிறார்கள். நாங்கள் கூட்டணிக்கு வரமாட்டோம் என்று தெரிந்த பின்னர்தான் எங்களை தாக்கி பேச ஆரம்பித்திருக்கிறார்கள். கூட்டணிக்கு வரவில்லை என்று ஆதங்கத்தில் இருக்கிறார்கள்.
 

கிராம சபை கூட்டங்களை கலைஞர் முதல்வராக இருந்தபோதே அமைச்சர்களைக்கொண்டு நடத்தியுள்ளார். ஸ்டாலின் பங்கேற்ற கிராம சபை கூட்டங்களின் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்களே?
 

கிராம சபை திட்டத்தை நாங்கள் கொண்டு வந்தோம் என்று சொல்லவில்லை. அந்தத் திட்டத்தை கிடப்பில் போட்டுள்ளார்கள். நீங்கள் அதை கையில் எடுத்தால் பிரபலமாகும் என்று சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தில் இருந்து கேட்டுக்கொண்டார்கள். நல்ல விஷயமாகயிருக்கிறது என்று கமல் அதை கையில் எடுத்தார், கிராம சபை கூட்டங்களுக்கு சென்றார். அதன் விளைவு முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ஒரு கூட்டத்தில் பங்கேற்றார். அன்புமணி கலந்து கொண்டார். அந்த முன்னேற்றத்தை விரும்பினோம். இன்று அதை ஒரு செயல்திட்டமாக எடுத்துக்கொண்டு திமுகவில் மொத்த கட்சியினரும் செல்கிறார்கள். இந்த இடத்தில்தான் நாங்கள் கேட்கிறோம், ஏன் இத்தனை நாட்களாக உங்களுக்கு இது தோன்றவில்லை?
 

கமல், ஸ்டாலினை இத்தனை நாள் இல்லாத அளவுக்கு நேரடியாகத் தாக்கிப் பேச காரணம் என்ன? அதிரடியாகப் பேசுவது தேர்தலுக்கு உதவும் என்பதாலா?
 

'நாங்கள் நட்பாக இருந்தாலும் கூட்டணி வைக்க முடியாது. காரணம், அழுக்குப் பொதி, அதனை சுமக்க முடியாது' என்றுதான் கூறினார். உடனடியாக நேரடியதாக பார்ப்பனர், நாய், பன்றி என நாகரீகம் இல்லாமல் தாக்கியது அவர்கள்தான்.
 

அதிமுகவையும் கடுமையாக விமர்சித்தாகிவிட்டது... இப்போது திமுகவையும் விமர்சிக்கிறீர்கள்... தேர்தலிலும் மய்யத்தில் தான் நிற்க போகிறீர்களா?
 

திமுக, அதிமுகவை எதிர்ப்பதில் எந்த பாகுபாடும் கிடையாது.
 

தேர்தலில் தனித்து போட்டியா?
 

நாங்கள் யாருடனும் பேசவில்லை. 40 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி நடக்கிறது. நாளை எது நடந்தாலும் இந்த இரண்டு கட்சிகள் இல்லாத கூட்டணி அமைந்தாலும் அமையுமே தவிர இவர்கள் கூட இருக்காது.
 

பெரிய வாக்கு வங்கி உள்ள கட்சிகளே கூட்டணி வைத்தால்தான் வெற்றி பெற முடியும் என்கிறபோது, கூட்டணி வைக்காமல் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டா?
 

இவர்களுடன் சேரக்கூடாது என்பதற்காகத்தான் கட்சி தொடங்கிய காரணம். இவர்களிடம் சமாதானம் செய்து கொண்டால் அவர்களை எதிர்த்து பேசக்கூடிய தார்மீக உரிமையை இழந்துவிடுவோம். கட்சி ஆரம்பிக்கப்பட்டதற்கான காரணமே அழிந்து போய்விடும். அப்படிபோனதுதான் தேமுதிக. 1949ல் தொடங்கப்பட்ட திமுக, 69ல்தான் ஆட்சியை பிடித்தது. 63ல்தான் 15 சீட்டையே பார்த்தார்கள். கொள்கைகள், நியாயங்கள் ஜெயிக்க வேண்டுமென்றால் கஷ்டத்தை பார்க்க முடியாது. எல்லாவற்றுக்கும் மேல் மக்கள்தான் எதையும் முடிவு செய்ய வேண்டும். ஏதோ ஒரு காரணத்திற்காக மக்கள் மாற்றி ஓட்டுபோட காத்திருக்கிறார்கள்.

அதிமுக - பாமக கூட்டணி அமைந்துள்ளதே?

அதிமுக - பாமக கூட்டணி அமைந்ததால் அதிமுக பற்றி பாமக பேசிய லிஸ்ட்டை திமுக வெளியிடுகிறது. அதற்கு முதல் நாள் வரை பாமகவைப் பற்றி திமுக ஒரு வார்த்தை கூட பேசவில்லை. ஒருவேளை திமுகவுடன் பாமக சேர்ந்திருந்தால், திமுகவைப் பற்றி பாமக பேசிய லிஸ்டை அதிமுக வெளியிடுவார்கள். கொஞ்சம் கூட குறைவு இல்லாமல்தான் பாமக பேசியிருக்கிறது. இரண்டு தலைமைகளும் தங்களது கூட்டாளிகளை மாற்றிக்கொண்டுதான் வருகிறார்கள். இந்த கூட்டாளிகளும் ஒவ்வொரு தேர்தலிலும் தலைமைகளை மாற்றிக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் சேருவதற்கும், பிரிவதற்கும் காரணம் தேடுகிறார்கள். இடதுசாரிகளும் அப்படித்தான். இவர்களுக்குத் தேவை சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் பிரதிநிதித்துவம் தேவை என்பதுதான். இந்த முறை வெளிச்சம்போட்டு காட்ட வேண்டியது கூட்டணிகளின் மோசடிகளைத்தான். 

stalin-ops-eps-ttv


மாநில கட்சிகளுடன்தான் கூட்டணி என்று அமமுக அறிவித்துள்ளது. அந்தக் கட்சியுடன் கூட்டணி வைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதா?
 

தினகரனை நாங்கள் தனியாகப் பிரித்துப் பார்க்கவே முடியாது. மூன்று வகையான ஊழல் கட்சிகள் உள்ளன. ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். தலைமையிலான தண்டிக்கப்படாத பிரிவு, தினகரன் தலைமையில் தண்டிக்கப்பட்ட பிரிவு, ஸ்டாலின் தலைமையில் மாட்டிக்கொள்ளாத பிரிவு. இவர்கள் மூன்று பேருக்கும் வேறுவேறு அளவீடுகள் தேவையில்லை. திமுக, அதிமுகவை வேண்டாம் என்று சொல்லிவிட்டு, அமமுகவிடம் சேர்ந்தால் அதைவிட கேவலம் எதுவும் கிடையாது. கூட்டணி என்ற நோக்கமே எங்களுக்கு இல்லை. 

40 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் தயாரா?
 

ஓராண்டு நிறைவு விழா திருநெல்வேலியில் 24ஆம் தேதி நடக்கிறது. அதற்கு பிறகு அதற்கான பணிகள் தீவிரமாக நடக்கும். 
 

தேர்தல் செலவுகள் எப்படி?
 

போதுமான பணம் இல்லை. தேர்தல் ஆணையம் நிர்ணயித்த தொகையை திரட்டி செலவு செய்வோம்.

 

 


 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

சார்ந்த செய்திகள்