Skip to main content

சிவகங்கையில் மகாவீரர் சிற்பம் கண்டுபிடிப்பு!

Published on 03/04/2023 | Edited on 04/04/2023

 

mahaveer statue discovered in sivaganga district

 

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், சிறுகானூரில் மகாவீரர் சிற்பம் கண்டுபிடிப்பு.

 

புதுக்கோட்டை மாவட்ட எல்லையில் அமைந்துள்ள கொடிக்குளம் பொறியியல் பட்டதாரி மாணவர் அபிமன்யு மற்றும் வெளிநாட்டில் பணிபுரியும் டி.களத்தூர் பெரி.முத்துத்துரை ஆகியோர் அளித்த தகவலின்படி, புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வு கழகத்தின் நிறுவனர் ஆ. மணிகண்டன், தலைவர் கரு. ராஜேந்திரன், துணைத் தலைவர் கஸ்தூரிங்கள், உறுப்பினர் மா. இளங்கோ ஆகியோர் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மகாவீரர் சமண சிற்பம் மற்றும் முக்குடை நில தான கோட்டுருவ நடுகல் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

இந்த கண்டுபிடிப்பு குறித்து புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வு கழகத்தின் நிறுவனர் ஆ. மணிகண்டன் கூறியதாவது, "சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டம், சிறுகானூர் கிராமத்தின் குண்டடி காளி திடலில் சமண பள்ளிக்கு நில தானம் வழங்கிய முக்குடைக்கல்லும், மகாவீரர் சிற்பமும்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முக்குடைக்கல்லின் மையத்தில் காணப்படும் முக்குடை அமைப்பு சமண சமயத்தின் முக்காலத்தையும் உணர்த்தும் சமணத்தின் புனித சின்னமாகும். இதன் இருபுறங்களிலும் குத்துவிளக்கு பொறிக்கப்பட்டிருக்கிறது. இடது புறம் மேற்பகுதியில் காணப்படும் மேழி (ஏர்) அமைப்பு, வேளாண் குடிகள் சமண பள்ளிக்கு நில தானம் வழங்கியதை குறிப்பதாகவும், வலது புறம் மேல் பகுதியில் வேலியிட்ட மர கோட்டுருவம், விவசாய நிலத்தை குறிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட குறியீடாக கருதலாம். முக்குடைக்கு மேலாக மங்கள மேடு அமைப்பும் கோட்டுருவமாக  சிதைந்து காணப்படுகிறது. இதன் காலம் 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக கருதலாம்.

 

குண்டோடி காளி என்ற பெயரில் வழிபாட்டிலிருக்கும் மகாவீரர் சிற்பம், இரண்டேகால் அடி அகலத்துடனும், மூன்றரை அடி உயரத்துடனும் வர்த்தமானர் எனும் சமண சமயத்தின் இருபத்து நான்காவது தீர்த்தங்கரரான மகாவீரர் திகம்பரராக, தியான கோலத்துடன் சுருள் முடி தலையுடனும், திறந்த கண்கள், நுனியில் சிறிது சேதமடைந்த மூக்கு, நீண்ட துளையுடைய காதுகள், கீழ் உதடு சிதைந்தும், விரிந்த மார்புடன் அமைக்கப்பட்டுள்ளது. தலையின் பின்புறமாக பிரபா வளையமும், மேற்பகுதியில் சந்திராதித்தம், நித்த விநோதம், சகல பாசானம் எனும் முக்குடையும், அதன் இரு மருங்கிலும் குங்கிலிய மரமும், சிற்பத்தின் பக்கவாட்டில் சித்தாக்கியா இயக்கியும், இயக்கன் மாதங்கனும் சாமரத்துடன் இருப்பதாக வடிக்கப்பட்டுள்ளது, மூன்று சிங்க முத்திரை கொண்ட அரியாசனத்தில் மகாவீரர் அமர்ந்த கோலத்தில் வடிக்கப்பட்டுள்ளது.

 

mahaveer statue discovered in sivaganga district

 

பாரம்பரியமாக வழிபட்டு வரும் ராஜேஸ்வரி குடும்பத்தினர் சைவ படையலிட்டு வழிபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதன் உருவமைப்பு ஒப்பீட்டின் படி பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த சிற்பமாக கருதலாம். ஆவுடையார் கோவில் கழுவேற்ற ஓவியம் சொல்லும் தகவல் உண்மையா?. ஆவுடையார் கோவிலின் மண்டபக் கூரையில் நூற்றாண்டுகள் பழமையான ஓவியங்கள் உள்ளன. அவற்றுள் முக்கியமானவையாக சமணர்கள் கழுவேற்றிய காட்சியும் சித்தரிக்கப்பட்டுள்ளது என்றாலும் ஆவுடையார் கோவில் பகுதியில் சமண தடயங்கள் ஏதும் கண்டறியப்படாமல் இருந்தது.

 

mahaveer statue discovered in sivaganga district

 

இந்நிலையில் திருப்புனவாசல் கோவில் கருவறை விமானத்தின் தென்புற பிரஸ்தர பகுதியில் சமண கழுவேற்றும் சிற்பமும் அருகே மன்னன் மற்றும் சைவத்துறவி ஒருவர் நிற்பதாகச் செதுக்கப்பட்டுள்ளது. இச்சிற்பம் பதினான்காம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக கருதலாம் . பத்தாம் நூற்றாண்டு மகாவீரர் சிற்பம் புதுக்கோட்டை மாவட்ட எல்லையில் 16 கிமீ தொலைவில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது புதிய ஆய்வுகளுக்கு வழிவகுக்கும்" என்றார். தலைமை ஆசிரியர் கா. அய்யர், தொன்மை பாதுகாப்பு மன்ற மாணவர்கள் ம. திருக்குறள் அரசன், ம. லோகேஷ், சி.விஷ்ணுவர்தன், அ. கவினேஷ் , கோவில் பக்தர் குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

 

 

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

Next Story

அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு?

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Cuddalore Dt Kullanjavadi Near Ambedkar statue incident

அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச முயற்சித்த சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று அதிகாலை வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அபப்குதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.