Skip to main content

"4 மணி நேரம் குரல் எழுப்பினோம்... ஆனால் இந்தியாவில் யாருக்கும் தெரியாது" சு. வெங்கடேசன் ஆதங்கம்!

Published on 03/10/2019 | Edited on 04/10/2019


நாடக கலைஞர்களையும், மேடை நாடகங்களையும் ஊக்குவிக்கும் முயற்சியாக சென்னையில் முதல் முறையாக பிரம்மாண்ட நாடகத் திருவிழா நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் மற்றும் கேரள சமாஜம் இணைந்து நடத்தும் இந்த நாடகத் திருவிழாவில் தென்னிந்தியா முழுவதிலும் இருந்து சுமார் 500 நாடக கலைஞர்கள் பங்கேற்க இருக்கிறார்கள். நேற்று தொடங்கிய இந்த நாடகத் திருவிழா வரும் 6 ஆம் தேதி வரை, 5 நாட்கள்கள் நடைபெற உள்ளது. இந்த விழாவில் திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித், நடிகர் நாசர், மதுரை எம்.பி சு.வெங்கடேசன், பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபால் ஆகியோர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.
 

h



விழாவில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பேசும் போது, " நீண்ட நாட்களுக்கு பிறகு இத்தகைய விழாக்கள் நடக்க ஆரம்பித்துள்ளது. எந்த ஒரு கலைஞனும் எதிர் அரசியலில் தான் பயணிக்க வேண்டியுள்ளது. அதுவே மண் சார்ந்தும், மக்கள் சார்ந்தும் இருக்கும். நாடக கலைஞர்களிடம் நாம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. அவர்களின் இடைவிடாத உழைப்பு என்பது யாராலும் ஈடு செய்ய இயலாது. கடந்த நாடாளுமன்ற கூட்டத்தின் கடைசி நாளில் காஷ்மீர் மசோதா நிறைவேற்றப்பட்ட போது அதற்கு எதிராக நான்கு மணி நேரம் கோஷம் எழுப்பினோம். ஆனால் இந்தியாவில் யாருக்கும் அது தெரியாது. அப்போது நான் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதில் உள்ள சிரமங்களை சந்தித்தோம். அந்த வகையில் செய்யும் வேலையில் உறுதியாகவும், தெளிவாகவும், கடினமாகவும் ஆற்றலை வெளிப்படுத்தும் இத்தகைய கலைஞர்களையும், கலைகளையும் வளர்க்க வேண்டும். கடந்த 30 ஆண்டுகளில் பொதுப்பணித்துறை கட்டிய எந்த ஒரு கட்டடங்களிலும், கலை உணர்வு வெளிப்படவில்லை என்பதே எதார்த்த உண்மை" என்றார். 
 

 

Next Story

'இந்தியாவிலேயே இவரைப் போன்ற எம்பி யாரும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை' -கமல்ஹாசன் பேச்சு

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Kamal Haasan campaign in madurai

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இந்நிலையில் இந்தியா கூட்டணி சார்பில் மதுரையில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து  மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். கூட்டத்தில் பேசிய அவர், ''இவரைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால் வழக்கமாக என்னை கேட்பார்கள் அரசியலுக்கு ஏன் வந்தீர்கள்? நீங்கள் எப்படி கையெழுத்து போட போகிறீர்கள் என்று. வித்தியாசமான அரசியல் செய்ய வந்திருக்கிறேன் என்று பெருமையாக மார் தட்டிக் கொண்டேன். இனி நாம் செய்ய போவதையும் செய்து இருப்பதைதான் சொல்ல வேண்டுமே தவிர, செய்யத் தவறியவர்களின் குற்றங்களை பட்டியலிடுவது என்பது நேர விரையம். அது உங்களுக்கே தெரியும். எங்கெங்கு தப்பு நடந்திருக்கிறது என்பதை சொல்லி உங்க நேரத்தையும் எங்க நேரத்தையும் வீணடிக்க கூடாது.

நவீன அரசியல் ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்ளும் அரசியலாக இருக்கக்கூடாது. ஒருவரை ஒருவர் திருத்திக் கொள்ளும் அரசியலாக இருக்க வேண்டும். அதனால் நான் சொல்கிறேன் இவர் செய்ததை சொல்கிறேன். கோவிட் என்ற காலகட்டத்தில் ஒரு சாதாரணமாக எம்பிக்கு  கொடுக்க வேண்டிய ஐந்து கோடி ரூபாய் ஒதுக்கீடு கூட இல்லாத நேரத்தில், பல நற்பணிகளை செய்து இருக்கிறார். அவருக்கு இன்னொரு வாய்ப்பு கொடுக்க வேண்டியது உங்களுடைய கடமை. இந்த வட்டாரத்திற்கு நீங்கள் செய்யும் நல்லது.

இவர் நல்ல எழுத்தாளர், பெரிய பெரிய நாவல்களை எழுதி இருக்கிறார் என்பதெல்லாம் சொல்வதை விட ஒரு இடத்திற்கு பம்ப் செட் போட்டு கொடுத்திருக்கிறார். ஒரு விவசாய ஊருக்கு ரயில் பாதை அமைத்துக் கொடுத்திருக்கிறார். இவர் செய்த நற்பணிகளை எல்லாம் திரட்டி ஒரு வீடியோ ஆவணம் செய்திருந்தார்கள். அதை வெளியிடும் பெருமை எனக்கு கிடைத்தது. நான் சொல்லுவது மிகை என்றால் திருத்திக் கொள்கிறேன். ஆனால் இந்தியாவிலேயே இப்படி, தான் செய்த விஷயங்களை பட்டியல் போடும் அளவிற்கு வேலை செய்த எம்பிக்கள் என்று யாரும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை'' என்றார்.

Next Story

'எந்த முகத்தை வைத்துக்கொண்டு வருகிறார் மோடி' - முதல்வர் மு.க.ஸ்டாலின் பரப்புரை

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
'Which face is Modi coming with'- CM Stalin's lobbying

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் மதுரையின் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன், சிவகங்கை காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திக் சிதம்பரம் ஆகியோரை ஆதரித்து மதுரை ரிங் ரோடு பகுதியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். கூட்டத்தில் முதல்வர் பேசுகையில், ''சு.வெங்கடேசனையும், கார்த்தி சிதம்பரத்தையும் மீண்டும் இரண்டாவது முறையாக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க தயாராகி விட்டீர்களா? நீங்கள் வாக்களிப்பது மட்டுமல்ல ஸ்டாலினின் தூதுவனாக உங்கள் பகுதியில் இருக்கக்கூடிய மக்களிடையே இந்தியா கூட்டணிக்கு வாக்கு கேட்க வேண்டும். தமிழ் மக்கள் மீது உண்மையான பாசம் கொண்டவராக இந்தியா கூட்டணியின் பிரதமர் ஆட்சி செய்வார்.

இன்னும் ஒரே வரியில் சொன்னால் இப்பொழுது இருக்கக்கூடிய பிரதமர் மாதிரி நிச்சயம் இருக்க மாட்டார். பத்தாண்டு காலமாக தமிழ்நாட்டுக்கு எந்தச் சிறப்பு திட்டத்தையும் செய்து கொடுக்காத பிரதமர் மோடி இப்பொழுது வாக்கு கேட்டு தமிழ்நாட்டுக்கு வந்திருக்கிறார். தமிழ்நாட்டுக்கு சிறப்பு திட்டங்களை செய்துவிட்டு வந்திருக்கிறாரா? இல்லை. பக்கத்து மாவட்டங்களில் வெள்ளத்தால் தவிச்சாங்களே அவர்களுக்கு உதவி செய்துவிட்டு வந்தாரா? இல்லை. எந்த முகத்தோடு மோடி தமிழ்நாட்டுக்கு வருகிறார். இவர் தமிழ்நாட்டை மட்டும் இப்படி வஞ்சிக்கவில்லை. எதிர்க்கட்சி ஆளுகின்ற எல்லா மாநிலங்களையும் வஞ்சிக்கிறார்.

பக்கத்து மாநிலம் கேரளாவில் மக்கள் நலத்திட்டங்களுக்கு கடன் வாங்கக்கூட உச்சநீதிமன்றத்திற்கு போகின்ற நிலையை உருவாக்கி இருக்கிறார். மோடி கர்நாடகா வறட்சி நிவாரணம் கேட்டு உச்ச நீதிமன்ற கதவுகளை தட்டி இருக்கிறது. அது மட்டுமல்ல அந்த ரெண்டு மாநில முதலமைச்சர்களும் டெல்லி சாலையில் போராடுகின்ற அவலநிலையை உருவாக்கி இருக்கிறார் பிரதமர். மேற்கு வங்கத்திற்கும் இதேநிலைமைதான். மகாராஷ்டிராவில் என்ன நடக்கிறது குதிரை பேரம் நடத்தி, எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சியைக் கலைத்தார். ஆளுங்கட்சியை உடைத்து இப்பொழுது அந்த மாநிலத்தையும் நாசமாக்கி விட்டார்கள். அடுத்து ஜார்க்கண்ட் மாநிலத்தில் பழங்குடியின முதலமைச்சரை கைது செய்துள்ளார். டெல்லி, பஞ்சாபிலும்  ஆம் ஆத்மி கட்சிக்கு ஆளுநர்களை வைத்து தொல்லை கொடுத்தார்கள். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்துள்ளார்கள். எதிர்க்கட்சி ஆளுகின்ற மாநிலங்களில் மட்டும் இ.டி, ஐ.டி, சிபிஐ, மற்றும் கவர்னர்களை வைத்து தொல்லை கொடுப்பார். இதுதான் மோடி இந்தியா'' என்றார்.