Skip to main content

"ஆண்கள் இரண்டே வகை தான்.." - மாதவி குறும்படம் உருவான கதை சொல்லும் குழுவினர்!

சில வாரங்களுக்கு முன்பு வெளியான மாதவி குறும்படம் இணையத்தில் வைரலானது. படம் வெளியான இந்த 40 நாட்களில் 20 லட்சத்துக்கும் அதிகமான நபர்கள் இந்த படத்தை இணையத்தில் பார்த்துள்ளார்கள். பெண்களையும், அவர்களுக்கு அலுவலகங்களில் கொடுக்கப்படும் அழுத்தங்களையும் மிக மென்மையாக கோணத்தில், அதே சமயம் அதிரடியான வார்த்தை பிரயோகத்தின் வழியாக இந்த படத்தில் தெரிவித்து இருப்பார்கள். படம் முழுவதும் ஒரு ஆணின் கதையை சொல்ல முற்பட்டாலும், படத்தில் மத்தாப்பாக வரும் மாதவியே படத்தை பார்த்தவர்களின் மனதில் நிற்கிறார். எப்படி இந்த கதையை தேர்ந்தெடுத்தீர்கள், என்ன காரணத்துக்காக இதை பொது சமூகம் முன்பு சொல்ல வருகிறீர்கள் என்ற கேள்வியை படத்தின் இயக்குநர் உள்ளிட்ட படக்குழுவினரிடம் நாம் கேட்க இருக்கிறோம். நம்முடைய கேள்விக்கு அவர்களின் அதிரடியான பதில்கள் வருமாறு, 

 

hjபெரிய திரையில் படம் எடுக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் குறும்படங்களை எடுக்க முயல்வார்கள் என்ற நிலையில், குறும்படத்தில் பெண்ணியம் பேச வேண்டும் என்ற எண்ணம் எப்படி ஏற்பட்டது?

இயக்குநர் சாரதி
- பெண்ணியம் பேச வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த குறும்படத்தை எடுக்கவில்லை. நீங்கள் கூறியது போல பெரிய திரையில் படம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த முயற்சியில் இறங்கியது என்பதுதான் உண்மை. எனவே இதில் அனைவரையும் ஈர்க்கின்ற மாதிரியான, வேலைக்கு செல்லுகின்ற பெண்கள் சந்திக்கும் இடர்பாடுகளை பொதுவெளியில் வைக்கலாம் என்ற எண்ணத்தில் உருவானதுதான் இந்த குறும்படம். என் மனைவி இதில் பெரிய பங்களிப்பு செய்தார்கள். நான் எனக்கு தேவையான மாதிரி சிறிய மாற்றங்களை உருவாக்கி கொண்டு இந்த படத்தை உருவாக்கினேன் என்பது தான் நிஜம்.

இந்த குறும்படத்தில் வசனங்கள் எல்லாம் மிக நன்றாக இருந்ததாக பொதுவாக பேசப்படுகின்றது. படம் முழுவதும் ஆணின் மனநிலையில் இருந்து காட்சிகள் ஒவ்வொன்றாக நகரும் விதத்தில் அமைந்திருக்கும். அது எப்படி சாத்தியமானது? 

எழுத்தாளர் ராஜூ - ஒவ்வொருவருக்கும் ஒரு சொந்த அனுபவம் என்ற ஒன்று கண்டிப்பாக இருக்கும். அந்த வகையில் பல பேருடன் நாம் கலந்து பேசும் போது அவர்களின் அனுபவங்களையும் நாம் கேட்கின்ற சூழ்நிலை வரும். அப்படி உருவான வசனங்களை தான் படத்தில் பயன்படுத்தி இருப்போம். 

ஒரு நல்ல விஷயங்களை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்று நினைத்து படத்தை இயக்கியதாக கூறுகிறீர்கள். அப்படி இருக்கையில் படத்தின் முகப்பு புகைப்படத்தில் படுக்கையறையில் பெண் இருப்பதை போன்று புகைப்படம் இருக்கின்றது. இதை எப்படி புரிந்து கொள்வது?

இயக்குநர் சாரதி -  நீங்கள் கூறுவதை ஏற்றுக்கொள்ள கூடியதுதான். ஆனால் நான் இதை செய்யவில்லை என்றால், நீங்கள் முதலில் கூறியதை போல இத்தனை லட்சம் பேர் பார்த்திருக்க மாட்டார்கள், நீங்கள் என்னை பேட்டியும் எடுத்திருக்க மாட்டீர்கள். இந்த முறையை சரி என்று சொல்லவில்லை. ஆனால் இப்படி செய்தால்தான் உள்ளே வருகிறார்கள். ஆனால், கதையில் அந்த மாதிரியான கருத்துக்கள் இல்லை. நாம் சொல்ய வந்தது அவர்களுக்கு போய் சேர வேண்டும் என்பதற்காக சில விஷயங்களை நாம் செய்ய வேண்டியது அவசியமாகின்றது. படத்தின் நோக்கம் என்னவென்று பார்க்க வேண்டும். அதுதான் முக்கியம்.
 

jkபடம் முடியும் போது ஆண்கள் ஜாக்கிரதை என்று பெயர் தெரிவது, நாய்கள் குரைப்பது என்று ஆண்களை ஏன் தனிமைப்படுத்த முயற்சி செய்துள்ளீர்களே? 

எழுத்தாளர் ராஜூ - என் பார்வையில் ஆண்கள் இரண்டே இரண்டு வகைதான். ஒன்று வாய்ப்பை உருவாக்கி கொள்கிறவன், மற்றொருவன் வாய்ப்புக்காக ஏங்குகிறவன். இந்த இரண்டில் 99 சதவீத ஆண்கள் அடங்கி விடுகிறார்கள். இந்த இரண்டில்தான் எல்லா ஆண்களும் வருவார்கள் என்பது எண்ணுடைய எண்ணம். திருமணம் தாண்டிய உறவு ஆண்களுக்கு இருக்கும் போது அதை அவர் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை.

இந்த சமூகமும் அதை பெரிதாக நினைப்பதில்லை. ஆனால் பெண்களுக்கு அந்த மாதிரியான தொடர்புகள் இருக்கும் போது அவர்களை தனிமைப்படுத்த பார்க்கிறார்கள். அவர்களை சொல்லக்கூடாத வார்த்தைகளை கொண்டு விமர்சிக்கிறார்கள். இருவரும் அந்த தவற்றை செய்யும் போது ஆண்களுக்கு அதனால் எந்த பாதிப்பும் வருவதில்லை. பெண்களை இந்த சமூகம் ஒதுக்கும் போது அவர்களின் பக்கத்தில் நாம் நிற்க வேண்டிய அவசியம் ஆகின்றது. 


 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்