Skip to main content

"எழுந்து சென்ற பறவை நீ" - பாடலாசிரியர் வேல்முருகன்

Published on 14/08/2021 | Edited on 14/08/2021

 

lyricist velmurugan about na.muthukumar

 

பெரியார் பாதையின் முடிவில்
அண்ணா பாதை தொடர்கிறது
அண்ணாவின் ஊரிலிருந்து
அண்ணா உன் பாதை தொடங்குகிறது.

 

வீட்டின் எல்லா அறைகளிலும்
விளக்குகள் அணைந்து
ஓய்வு கொள்ளும் 
நீ இருக்கும் அறை மட்டும் 
விழித்துக்கொண்டேயிருக்கும்.

 

உண்டால் உறக்கம் வரும்
உறங்கினால் படிக்கமுடியாது என்று
உணவையே வெறுத்தவன் நீ.

 

நேரில் பார்ப்பவர்களை எல்லாம்
எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்களா?
என்று கேட்டுக்கொண்டிருந்த நீ
ஒருநாளில் ஒருமுறைகூட
உன்னைக் கேட்டுக்கொண்டதில்லையே ஏன்?

 

சிக்கனமான வார்த்தைகளில்
கவிதை சொல்லும் 
திறன் இருக்கட்டும்
அதற்காக உன் வாழ்விலுமா?

 

நெரிசலில் சிக்கிய 
சிறுவர்களைப் போல
உன் கையெழுத்தில் பிறந்த 
எத்தனையோ பாடல்கள்
மனித சிக்கலுக்கு வழி சொல்கிறது.

 

அரிசியில் எழுதப்பட்ட
பெயர்களைப் போல
உன் பாடல்கள்
உரியவர்களுக்குச் சென்று சேருகிறது.

 

நீ வெளுக்கப்போடும் ஆடைகளிலும்
மறந்ததைப் போலவே
பணத்தை வைப்பாய்
பாக்கெட்டில் கையை விட்டால்
துவைப்பவன் துவண்டு போகக்கூடாது
என்பதை எங்ஙனம் கற்றாய்?

 

நம் அலுவலக வாசலில்
உன்னிடம் பணத்தைப் பெற்றுக்கொண்ட
திருநங்கைகள்
உன் தலைமீது கை வைத்து
ஆசீர்வதித்தபோது
யானையிடம் தலையைக் கொடுத்த சிறுவனாக
உன் சிரம் குனிந்தது
அவர்களோ ஆசிர்வதிப்பதுபோல்
ஆசி வாங்கிப்போனார்கள் உன்னிடம்.

 

சென்னையின் ஏதோ ஒரு மூலையில் இருக்கும்
பெயர் தெரியாத ஆட்டோக்காரர்கள் கூட
நம் அலுவலகம் வந்து
ஆட்டோ பயணத்துக்கு சில்லறை இல்லாமல்
எப்போதோ நீ தந்துவிட்டுப் போன பணத்துக்கு
மீதிப் பணத்தைக் கொடுத்துவிட்டுப் போவார்கள்

 

உன்னைச்சுற்றி எப்போதும் 
புத்தகங்கள்,  நண்பர்கள்
நடுவே நீ அமர்ந்துகொள்வதே
உன் ராஜபாட்டை
உன் கவிதைக் குறிப்புக்கு ஏங்கி
இப்போதும் பேனாவும் பேப்பரும் தட்டுதே உன் வீட்டை.

 

ஸ்ரீஹரிகோட்டாவை தொடும் தூரத்தில் 
முனியாண்டி விலாஸ்
குறுகுறு வட்டுகளில் இருக்கும்
ஊர்வன நடப்பன யாவும் 
பாடல் பயணத்தில் 
உன் இலையை நோக்கிப் பயணிக்கும்
கடந்த நாலைந்து வருடமாக 
உனை காணாது அதுவெல்லாம் 
எத்தனை முறைதான் மரணிக்கும்?

 

உனக்கு வந்த எத்தனையோ
பணவோலைகள் ஆகியிருக்கு பவுன்ஸ்
நீ செக்புக்கிலும் கவிதைதான்
எழுதுவாய்
ஆனாலும் அது
பொய் சொன்னதேயில்லை.

 

இறக்கும் வரை நீ
பள்ளிச்சிறுவன் தான்
போகுமிடமெல்லாம்
பேனாவும் பேப்பரும்
வாங்கியபடியேதான் இருந்தாய்

 

எல்லா அப்பாவும்
தன் பிள்ளையை தவிட்டுக்கு
வித்திடுவேன் என்று
மிரட்டுவதுண்டு
உன் அப்பா மட்டும்தான் 
உன்னைப்
புத்தகத்துக்கு வித்திடுவேன் என்று 
மிரட்டியிருக்கிறார்.

 

நீ வாழ்ந்தது நாற்பத்தியொரு வருடம்
ஆனால் உழைத்தது அறுபது வருடம்
தமிழனின் சரிபாதி ஆயுளில் இறந்தாய்
தமிழின் சரிசமமாய் இன்றும் இருந்தாய்.

 

பத்திரிகையில் உன்னைப் பற்றி வரும்
செய்திகளை
பத்திரப்படுத்திக் காண்பிக்கச்சொல்வாய்
உன் இறப்புச் செய்தியையும்
பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன் அண்ணா.

 

எழுந்து சென்ற பறவை நீ
கிளைகளாய் அசைகிறது
உன் நினைவுகள்.

 

 

Next Story

"நா.முத்துக்குமாரின் உதவியாளன் என்ற தகுதிக்காகவே விஜய் சார் என்னை சேர்த்துக்கொண்டார்!" - பாடலாசிரியர் வேல்முருகன்

Published on 26/04/2020 | Edited on 26/04/2020


மறைந்த, தமிழ் திரையிசை ரசிகர்கள் மறக்க முடியாத பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் உதவியாளராக தொடங்கி 'நேரம்' படத்தின் மூலம் பாடலாசிரியராகி, தற்போது இயக்குனர் ஏ.எல்.விஜயின் உதவி இயக்குனராகப் பணியாற்றிவரும் வேல்முருகனிடம் பேசினோம். சென்ற பகுதியில் தன் விருப்பமான பாடல்களையும் வரிகளையும் பகிர்ந்த அவர், இப்போது நா.முத்துக்குமாரிடமிருந்து இயக்குனர் விஜய் வரை தான் பயணித்த கதையை சொல்கிறார்...


"இன்னும் போகவேண்டிய தூரம் அதிகமாக இருக்கிறது. இருந்தாலும் சிறு கூழாங்கல் என்றாலும் அதுவும் பல நதிகளை கடந்துதான் அந்நிலையை அடைந்திருக்கும். அண்ணன் நா.முத்துக்குமாரிடம் உதவி இயக்குநராக நான் சேர்ந்து ஆண்டுகள் பல ஆன பின்னும் ஒரு திரைப்படத்தைக்கூட அவர் இயக்குவதற்கு தமிழ் திரையிசைப் பாடல்கள் எழுதும் பணி  அவருக்கு வாய்ப்பளிக்காமல் தடுத்துக்கொண்டே வந்தது; தடுத்தும்விட்டது. அப்போது நிறைய இயக்குநர்கள் அலுவலகத்திற்கு வந்து பாட்டு எழுதி வாங்கிப் போவார்கள். நா.முத்துக்குமார் அண்ணன் எந்தப் படத்தையும் இயக்கப் போவதில்லை என்று தெரிந்த பின்னும், அங்கு வரும் எந்த இயக்குநரிடமும் நானாகச் சென்று உதவி இயக்குநராக என்னைச் சேர்த்துக்கொள்ளுங்கள் என்று கேட்டதே இல்லை.

 

 

na.muthukumar

நா.முத்துக்குமார்



ஒரு நாள் அண்ணனிடம், "நான் எதாவது ஒரு படத்துல ஒர்க் பண்றேன் அண்ணே, யார்கிட்டயாவது சொல்லிவிடுங்கண்ணே" என்றேன். அவர் கொஞ்ச நேரம் அமைதியாக இருந்துவிட்டு, என்ன நினைத்தாரென்று தெரியவில்லை "யார்கிட்ட தம்பி சேத்துவிடனும்?" என்று கேட்டார். நான் இயக்குநர் ஏ.எல்.விஜய் பெயரைச் சொன்னேன். கொஞ்சம் யோசித்தவர், "சரி தம்பி பார்க்கலாம்" என்று சொல்லியிருந்தார். அப்போது 'மதராச பட்டினம்' படம் துவங்கி ஓரிரண்டு பாடல்கள் முடிந்த நேரம். அப்படத்திற்கான பாடல்கள் எழுதும் நேரம் இரவில் தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடந்துகொண்டிருந்தன. ஒரு நாள், இரவு ஒன்றரை மணிக்கு பாடல் எழுதி முடிக்கப்பட்டது. அப்போது இயக்குநர் விஜயிடம் அண்ணன், "தம்பி உங்ககிட்ட உதவி இயக்குநரா சேர ஆசைப்படுகிறார்" என்றார். அதற்கு இயக்குநர், பிறகு சொல்வதாக சொன்னார். மனதிற்கு ஆறுதலாக இருந்தது.
 

http://onelink.to/nknapp


அதன்பிறகு காலம் என்னை சிறுவனின் கையில் அகப்பட்ட பழைய சைக்கிள் டயரைப் போல பயன்படுத்திக்கொண்டிருந்தது. கடைசியில், நானும் சில படங்களுக்குப் பாடல்கள் எழுதி பாடலாசிரியனாக ஆனேன். ’காதல் என்னுள்ளே வந்தநேரம்’ பாடலைக் கேட்டு அண்ணனும் நல்லா இருப்பதாக சொன்னார். இடையில் 'எனக்குள் ஒருவன்' திரைப்படத்திற்கு வசனமும் எழுதி அப்படியே ஒத்தையடி பாதையாகவே போய்க்கொண்டிருந்தேன். இடையில் அண்ணன் மீளாத்துயரில் எம்மை ஆழ்த்திவிட்டு சென்ற அன்று, நான் மீண்டும் இயக்குநர் விஜய் அவர்களை சந்தித்தேன். அண்ணன் தங்கியிருந்த சென்னை பாடியிலிருக்கும் அவர் வீட்டிலிருந்து அவரை எரியூட்டப்பட்ட அயனாவரம் சுடுகாடு வரை, இயக்குநர் விஜய் அவர்கள் அண்ணனின் பூதவுடல் ஏற்றிய வண்டிக்குப் பின்னால் நடந்தும் ஓடியும் வந்துகொண்டிருந்தார். நானும் அவ்வண்ணமே நடந்தும் ஓடியும் சென்றுகொண்டிருந்தேன். அங்கு அவரிடம் நான் எதுவுமே பேசவில்லை. சொல்லப்போனால் எனக்காக அண்ணன் அவரிடம் சிபாரிசு செய்ததையே மறந்துவிட்டிருந்தேன். பிறகு பதினாறாம் நாள் காரியத்தில் நக்கீரன் கோபால் அண்ணனோடு இயக்குநர் விஜய் சாரை பார்த்ததோடு சரி. காலம் தன் போக்கில் ஓடிக்கொண்டிருந்தது. ஓரிராண்டாண்டுகளுக்குப் பிறகு ஒரு நாள் விஜய் சாரைபோனில் தொடர்புகொண்டு பேசினேன். அலுவலகம் வரச்சொன்னார். போனேன். என்னைப் பற்றி விசாரித்தார். அவர் இப்போது இயக்கிக்கொண்டிருக்கும் ’தலைவி’ திரைப்படத்தில் நானும் ஓர் உதவி இயக்குநராக வேலை பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

 

director a.l.vijay

ஏ.எல்.விஜய்



பட வேலைகள் ஆரம்பித்து ஒரு ஷெட்யூல் ஷூட்டிங் முடிந்தும் வந்துவிட்டு அடுத்த ஷெட்யூலுக்கான வேலைகளைப் பார்த்துக்கொண்டிருக்கும்போது, ’தனுசு ராசி நேயர்களே’ திரைப்படத்தின் இயக்குநரும் விஜய் சாரின் உதவி இயக்குநருமான சஞ்சய் அவர்கள் அவ்வப்போது அலுவலகத்திற்கு வருவார். உரையாடிவிட்டுச் செல்வார். ஒருநாள் "வேற என்ன படமெல்லாம் ஒர்க் பண்ணீங்க?" என்று கேட்டார். நான் என்னைப் பற்றிச் சொன்னதும், ஆச்சர்யப்பட்டு "நான் தினமும் கேட்கிற பாடல்களில் ஒன்று 'நேரம்' திரைப்படத்தில் 'காதல் என்னுள்ளே வந்த நேரம்’ என்ற பாடல், அது நீங்க எழுதுனதுன்னு தெரியாம போச்சே” என்றார். அவரிடம் இதைச் சொல்லிய அரைமணி நேரத்தில் இயக்குநர் வந்து என்னைக் கூப்பிட்டார். "என்னைய்யா.. நீங்க பாட்டெல்லாம் எழுதியிருக்கீங்களா.. என்ன பாட்டு எழுதியிருக்கீங்க?" என்று ஐபேடில் சர்ச் பண்ணிப் பார்த்துவிட்டு "நல்ல நல்ல பாட்டெல்லாம் எழுதியிருக்கீங்களே இதை ஏன் எங்கிட்ட சொல்லல..." என்று கேட்டதும் எனக்கு ஒன்றுமே புரியாமல் ஒரு நிமிசம் தலை சுத்திடுச்சி. "சார் உங்களுக்கு முன்னாடியே சொல்லிட்டேன் சார்" என்றேன். உதவி இயக்குனர் வாய்ப்பு கேட்டு அவரைப் பார்த்தபோது சொன்னது அவருக்கு நினைவில் இல்லை என்பது புரிந்தது. இருந்தாலும் ரொம்பவும் சந்தோசப்பட்டார். அங்கிருந்த உதவி இயக்குநர்களிடம் சொல்லி சந்தோசப்படுத்தினார்.

 

velmurugan

வேல்முருகன் 


நான் அதுநாள் வரை நாம இவ்வளவு பாட்டு வசனமெல்லாம் எழுதியிருக்கிறதாலதான் வாய்ப்பு கொடுத்தார்னு நெனைச்சிக்கிட்டு இருந்தேன். ஆனா நா.முத்துக்குமாரின் உதவியாளன் என்ற தகுதிக்கு மட்டுமே உதவி இயக்குநரா சேர்த்துக்கொண்டார் என்பதை நினைத்து அவர் மீது நிறைய மரியாதை கலந்த அன்பு கூடியது. நா.முத்துக்குமார் அண்ணன் இருந்தபொழுது என்றோ எனக்காக விஜய் சாரிடம் உதவி இயக்குநர் வேலைக் கேட்டது இன்று அவருக்கும் நினைவில் இல்லை நானும் ஞாபகப்படுத்தவில்லை. ஆனால் அண்ணன் எனக்கு செய்ய நினைத்ததை அவர் இல்லாதபோதும் செய்துவிட்டார்."

பேட்டியின் இன்னொரு பகுதி...

என் லாக்டவுன் தினங்களை நிறைத்த பாடல் வரிகள்... பகிர்கிறார் பாடலாசிரியர் வேல்முருகன்

 

 

Next Story

என் லாக்டவுன் தினங்களை நிறைத்த பாடல் வரிகள்... பகிர்கிறார் பாடலாசிரியர் வேல்முருகன்

Published on 26/04/2020 | Edited on 26/04/2020


கவிஞர் நா.முத்துக்குமாரின் உதவியாளர், ‘நேரம்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘காதல் என்னுள்ளே வந்த நேரம்' என்ற பாடல் மூலம் பாடலாசிரியராக அறியப்பட்டவர், தொடர்ந்து ’ரிச்சி’, ’ஒரு கிடாயின் கருணை மனு’, ’பாடம்’, ’பட்டிணப்பாக்கம்’ போன்ற படங்களுக்குப் பாடல்களும், சித்தார்த் நடித்த ’எனக்குள் ஒருவன்’ என்ற திரைப்படத்திற்கு வசனமும் எழுதியவர் வேல்முருகன். மேலும் பல படங்களுக்கு பாடல்கள் எழுதிக்கொண்டே இயக்குநர் விஜயிடம் உதவி இயக்குநராக ’தலைவி’ திரைப்படத்தில் பணிபுரிந்துகொண்டிருக்கிறார். சென்னையில் லாக்-டவுன் தினங்களை பாடல்களோடும் புத்தகங்களோடும் கழிக்கும் அவரிடம் பேசினோம்...


இந்தத் தனிமைக்கு நீங்கள் துணையாக்கிக்கொண்ட பாடல்கள்...?

'கற்றது தமிழ்’திரைப்படத்திலிருக்கும் அனைத்து பாடல்களும் பிடித்தாலும், 'பற பற பற பற பட்டாம்பூச்சி.. தொட தொட தொட பல வண்ணாமாச்சி..' என்ற பாடலில்

'கண்ணீரைத் துடைக்கும் விரலுக்கு மனம் ஏங்கிக்கிடக்குதே.. 
தண்ணீரில் மிதக்கும் எறும்புக்கு இலை படகு ஆனதே..'

என்ற வரியும் அதற்கான சந்தமும் எப்போது கேட்டாலும் ஏதோ செய்யும். 'கண்மூடித் திறக்கும்போது கடவுள் எதிரே வந்தது போலே... அடடா என் கண் முன்னாடி அவளே வந்து நின்றாளே..' என்ற பாடலை முதன்முதலில் சென்னை பண்பலை ஒன்றில் ஓரிரவு கேட்க நேர்ந்ததிலிருந்து இன்றுவரை அப்பாடல் எப்போதும் கேட்கக் கூடியதாக இருக்கிறது.
 

 

tamil ma



சிலம்பாட்டம் திரைப்படத்தில், 'மச்சான் மச்சான் உம்மேல ஆச வச்சான்...' என்ற பாடலில்,
 

http://onelink.to/nknapp


'சொல்ல வந்த வார்த்தை சொன்ன வார்த்தை சொல்லப்போகும் வார்த்தை யாவும் நெஞ்சில் இனிக்குமே...' என்ற வரிகளும், தரமணி திரைப்படத்தில் 'பாவங்களை சேர்த்துக்கொண்டு எங்கே செல்கிறோம்...' என்ற பாடலில்

’உறக்கம் இல்லை இரக்கம் காட்டு...
இல்லை என் வலிகளை ஆற்று..’

என்ற வரிகளைக் கடக்கும் போதும் நெஞ்சு குறுகுறுக்கும்.

'நீதானே என் பொன்வசந்தம்' திரைப்படப் பாடலான ’முதல்முறை பார்த்த ஞாபகம் உயிரினில் தந்து போகிறாய்’ என்ற பாடலைக் கேட்கும்போது நமக்குப் பிடித்த பெண் நம் தலைமுடிக்குள் மெல்ல பத்து விரல்களை நுழைத்து மெதுவாக ஊடுறுவி உடலின் பூனைரோமங்களை சிலிர்த்தெழ வைத்துவிட்டு அப்படியே மூளைக்குள்ளே விரல்கள் நுழைத்து விட்டால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கும் அந்த இசையும் குரலும் வரிகளும்.

‘நிறம் மாறாத பூக்கள்' திரைப்படத்தில் வரும் 'ஆயிரம் மலர்களே மலருங்கள்’ என்ற உயிரை உருக்கும் பாடலில் ’நீயாரோ நான் யாரோ யார் சேர்த்ததோ’ என்ற வரி வரும்போது கண்ணீர் வரும். இது என்னுடைய தினசரிகளில் இடம்பிடித்துவிடும். 'கவிக்குயில்' திரைப்படத்தில் இடம்பெற்ற ’குயிலே கவிக்குயிலே யார் வரவை தேடுகிறாய்' என்ற பாடலை, அதுவும் சரணத்தைக் கேட்கும் போது பெரும்துன்பம் பெருகும். ஆனாலும் அந்தத் துன்பம் பிடித்திருக்கிறது. ’உதிரிப்பூக்கள்’ திரைப்படத்தில்இடம்பெற்ற ’அழகிய கண்ணே’ பாடலில்,

’என் வீட்டில் என்றும் சந்திரோதயம்... நான் கண்டேன் வெள்ளி நிலா...’, 

’என் நெஞ்சம் என்றும் கண்ணாடிதான்... என் தெய்வம் மாங்கல்யம்தான்...’, 

‘நம் வீட்டில் என்றும் அலை மோதுது... என் நெஞ்சம் அலையாதது...’

ஆகிய வரிகளையும் அந்த இசைத் துணுக்குகளையும் கேட்கும்போது ஏகாந்தவெளியில் தள்ளிவிட்டதைப் போன்று உணர்வேன்.

’என் ஜீவன்பாடுது’ என்ற படத்தின் பாடலான ’எங்கிருந்தோ அழைக்கும் உன் கீதம் என்னுயிரில் கலந்தே அது பாடும்...’ என்ற பாடலில்

’வசந்தமும் இங்கே வந்ததென்று வாசனை மலர்கள் சொன்னாலும்... 
தென்றலும் இங்கே வந்து நின்று இன்பத்தின் கீதம்தந்தாலும்... 
நீயின்றி ஏது வசந்தமிங்கே... நீயின்றி ஏது ஜீவனிங்கே...'
 

என்ற வரிகளும் இசையும் குரலும் கடைசியில் ‘காதலின் உயிரைத் தேடி வந்து கலந்திட வா என் ஜீவனிலே...' என்று முடியும்போது ஒரு காதல் எப்படி காதலிக்கப்பட்டிருக்கிறது என்று மனத்திரையில் படமாக ஓடும்.

அசுரன் படப் பாடலான ’எள்ளு வய பூக்களையே’ என்ற பாடலும் ’சைக்கோ’ படத்திலுள்ள ‘உன்ன நெனச்சு நெனச்சு உருகிப்போனேன் மெழுகா...' என்ற பாடலும் கடந்த ஆறு மாதங்களில் ரொம்பவும் பிடித்துப்போன பாடலாக அமைந்தது. மைசூரிலிருந்து ஹைதராபாத் போகும் ஒன்றரை மணி நேர வானூர்திப் பயணம் முழுக்க ’உன்ன நெனச்சு நெனச்சு’ என்ற ஒரு பாடலே போதுமானதாக இருந்தது.

நீங்கள் எழுதிய பாடல்களில் உங்களுக்குப் பிடித்த பாடல்கள், வரிகள்... எவை? ஏன்?

தமிழ்த் திரையிசைப்பாடல் ரசிகர்களிடம் என்னைக் கொண்டு சேர்த்த பாடல் 'நேரம்' திரைப்படத்தில் இடம்பெற்ற ‘காதல் என்னுள்ளே வந்த நேரம்’ என்ற பாடல்தான். என்னை பொறுத்தவரை காதலின் முக்கிய விதி, பயன்பாட்டில் உள்ள அனுபவம், காதலி எதைச் சொன்னாலும் தலையாட்டிவிட்டுப் போகணும் என்பதுதான்.
 

http://onelink.to/nknapp

 

neram



'அர்த்தமில்லா வீணான வார்த்தைகளை நான் பேசும் வேளையிலும் ரசிப்பாய்' என்ற வரியை எழுதி அதற்கு நியாயம் சேர்த்தேன். அதேபோன்று காதல் யாரிடமும் முன் அனுமதி பெற்று வருவதில்லை என்பதினை, 'என் வீட்டைத் திடலாக்கி விளையாடும் பறவை போல் மனதினுள்ளே வந்தாடுவதாரோ?' என்ற வரியின் மூலம் தெரியப்படுத்தினேன். என்னைப் போலவே நிறைய ரசிகர்களுக்குப் இப்பாடல் வரிகள் பிடித்திருப்பதாக சொன்னார்கள். அடுத்து ’ரிச்சி’ திரைப்படத்தில் ஒரு பாட்டு. கதாநாயகன் காதல் பித்தேறி ஒரு பெண்ணின் பின்னால் சுற்றுகிறான். அவனைப் பார்த்து, ஊரில் நாலு பேர் நாலுவிதமாக பேசுகிறார்கள் என்று இயக்குநர் சொல்ல,

'சொல்லத்தான் நெனைக்கிறானே
சொல்லாமல் நடக்குறானே
யாரென்ன சொன்னாலும் பல்லத்தான் காட்டுறானேடா..?'

என்று எழுதினேன். அதே பாடலில் 

'சிறகா காதலும் இறகா அதுவொரு சருகா நான் கேட்கிறேன்?' என்று ஒருவர் கேட்க, 'சிறைதான் அதுவொரு இரைதான் அனுபவ முறைதான் நான் வாழ்கிறேன்!' என்று வேறொருவர் பதில் சொல்லுவார். இப்படி அந்த பாடல் முழுக்க ஒரு மூனாவது மனுசன் காதலிப்பவனைப் பார்த்து பாடுவது போலவே இருக்கும். அதே திரைப்படத்தில் மகன் சிறுவயதில் ஒரு குற்றத்தை செய்துவிட்டு ஊரைவிட்டு ஓடியிருப்பான். அவன் இப்போது வளர்ந்து பெரியவனாகியிருந்தாலும் இன்றும் குற்றச்செயல்களில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறான். ஒரு நாள் தனது அம்மாவை தேடி சொந்த ஊருக்குவருகிறான்.

பாடல் இப்படி ஆரம்பிக்கிறது... 

’தாயைத் தேடி வாசல் பார்த்து நானும் வரும் இந்த நேரம்..
என்னை நீயும் யாரோ என்றே பார்த்திடாதே அது சாபம்!'

தொடர்ந்து...

'உயிரை உணவாக்கி எனக்கு நீ ஊட்ட வாசல் தாண்டி தெருவிலும்..
எங்கும் தேடிதான் நானும் இல்லாம போனேனே நெனச்சி அழுதியா... 
நெஞ்சோடுதான் நெறைய நான் தந்தேனே வலியை.. 
இன்னோர் வாய்ப்பும்தான் தந்தால்நானும்தான் வாழ்வேன் 
நாளும் நல்ல மகனாய் உனக்கே..'

என்று வேண்டிக்கொண்டே வருகிறான். அவன் நினைத்தது போலவே அம்மாவிற்கு அவனை அடையாளம் தெரியவில்லை. அந்த இடத்தில் 'உதறுதே எந்தன் கால்களும் அதை உணருதா உந்தன் கண்களும்.. என் சொந்த தாயே..' என்று முடித்தபோது, அம்மா தன்னோட பிள்ளைதான் என்று கண்டுகொண்டு கட்டிப்பிடித்துக்கொண்டு கதறுகிறார். இந்த வரிகளைக் கேட்டுவிட்டு இயக்குநர் முதல் உதவி இயக்குநர்கள் வரை அனைவரும் கைதட்டி வாழ்த்தினார்கள்.
 

நமது தாத்தாபாட்டி காலத்தில் ஒரு பெண்ணை ஒரு ஆணுக்குப் பேசி முடித்து கல்யாணம் செய்துவைக்க வேண்டுமென்றால்,பெண் வீட்டுக்கு நடந்து நடந்து குறைந்தது ஏழு ஜோடி செருப்பாவது தேய்ந்துவிடுமாம். எனது கிராமத்தில் வயதானவர்கள் சொல்ல கேட்டிருக்கேன். ’ஒரு கிடாயின்கருணை மனு’ திரைப்படத்தில் கதாநாயகன் கல்யாணம் செய்து முடிக்க முப்பதைந்து வயதாகிவிடுகிறது. அவ்வளவு வயதாகி கல்யாணம் முடிந்தும் ஒரு பிரச்சனையில் மாட்டிக்கொண்டதால் சிறைக்கு செல்லும்படியாக ஆகிவிடுகிறது என்று இயக்குநர் கதையை சொன்னார். திருமணம் முடிந்ததும்  மனைவிக்கு கணவன் ஒரு நம்பிக்கை தரும்படியானபாடலாக இருக்க வேண்டுமென்றார். முப்பத்தைந்து வயது வரையிலும் தனியாக கெடந்தவன கல்யாணம் பண்ணிக்கிட்ட அந்த புதுப்பொண்ணுக்கு ஆறுதலாகவும் அன்பாகவும் இப்படி எழுதினேன்.

'தனியா கெடந்தேன் இதுவரையிலும் நானாக.. 
துணையா கெடச்சா குடியிருக்குற வீடாக..’

என்று தொகையறாவில் சொல்லிவிட்டு, ஊதாரித்தனமா சுத்திக்கிட்டு இருந்தவனை நம்பி வந்திருக்குற உன்னை எவ்வளவு பாடினாலும் தகும் என்றெண்ணி

'நான் கெட்டக் கேடு வந்தா இந்த ஆடு...
நெடுநாளாக ஏங்கி நான் தனிமையில் படுத்திருந்தேன்...'

என்று  பல்லவியை எழுதினேன். அதே பாடலில்,

'உன் கையை நான் புடிக்க ஏழு செருப்பு தேய்ஞ்சதே..
என் உசுரும் தேயும்தான் அதுநாள் வரை...
உனை நான் தாங்கிருப்பேன்…'

என்று அந்த கணவன் தன் மனைவிக்கு ஓர் உறுதிமொழியை சொல்வதாக எழுதிக் கொடுத்தேன்.
 

lyricist velmurugan

வேல்முருகன்
 

http://onelink.to/nknapp



நம்மில் பலர் கடன் வாங்கிவிட்டு துன்பப்பட்டிருப்போம். அதுவொரு கொடும் சொப்பனம் போன்று தூங்கவிடாமல் துரத்திக்கொண்டே வரும். கதாநாயகனும் கடனை வாங்கிவிட்டு கஷ்டத்தை அனுபவிக்கிறான். ஒரு வழியாக கடனை அடைத்துவிட்டு அப்பாடா என்று கொஞ்சம் ஆசுவாசம் அடைகிறான்... என்று ’பட்டினப்பாக்கம்’ படத்திற்கான பாட்டின் சூழலைச் சொன்னார் இயக்குநர். 'நேரம்தான் வந்ததே அதுவா என்னோடுதான் கொண்டாடு..' என்ற பாடலை எழுதினேன். அதில் ’தூக்கமும் போனதே கடனும்வந்த நாளாக.. தூங்க வேணும் நானும் இந்த இரவில் பெண்ணோடு..’ என்று எழுதிக்கொடுத்தேன். இயக்குநர் என்னை மேலும் கீழும் பார்த்துவிட்டு எப்படி என்று கேட்டார். ’எங்கே நிம்மதி எங்கே நிம்மதி’ என்ற பாடலில் கவிஞர் கண்ணதாசன் அவர்கள், 'மனிதர்கள் யாரும் இல்லாத இடத்தில் எனக்கோர் இடம் வேண்டுமெ'ன்று பாடல் முழுக்க கேட்டுவிட்டு கடைசியில், ’என்னைக் கொஞ்சம் தூங்க வைத்தால் வணங்குவேன் தாயே... இன்று மட்டும் அமைதி தந்தால் உறங்குவேன் தாயே’ என்று கேட்டிருப்பார். மனிதர்களே இல்லாத இடத்தில் கூட ஒரு ஆண் அமைதியாக உறங்கவேண்டுமென்றால் ஒரு பெண் இருக்க வேண்டும், அப்போதுதான் அமைதியாக உறங்க முடியும் என்று அவர் அனுபவத்தைச் சொல்லியிருக்கார். ஒரு பெண்ணால்தான் ஒரு ஆணுக்கு அமைதியைக் கொடுக்க  முடியும். அதுதான் என் விருப்பமும் என்று இயக்குநருக்கு எடுத்தியம்பினேன். என் பதில் பிடித்துப்போனதாலோ என்னவோ என்னையும் படத்தில் ஒரு சில காட்சிகளில் வரும்படியான பத்திரிகை ரிப்போர்ட்டராக நடிக்க வைத்துவிட்டார்.

இன்னும் இருக்கின்றன மறக்க முடியாத வரிகளும் வார்த்தைகளும்.
 

பேட்டியின் இன்னொரு பகுதி...

"நா.முத்துக்குமாரின் உதவியாளன் என்ற தகுதிக்காகவே விஜய் சார் என்னை சேர்த்துக்கொண்டார்!" - பாடலாசிரியர் வேல்முருகன்