ADVERTISEMENT

வைரமுத்துவும் ஒரு 90ஸ் கிட்டும்!

12:51 PM Mar 10, 2020 | vasanthbalakrishnan

ஆயிரமாயிரம் வார்த்தைகளால் ஜாலமிடும் கவிப்பேரரசு வைரமுத்து திரையுலகில் 40 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார். அவர் எழுதிய பாடல்களை சிலாகிப்பது, பாற்கடலை ஒரு சின்ன சிப்பியில் அள்ள நினைப்பது போலத்தான். இருந்தாலும் அவரின் கவிதை வரிகள் என் வாழ்வோடு கலந்திருப்பதை சொல்லித்தான் ஆக வேண்டும். ஒரு கற்கண்டு மலையை, கட்டெறும்பு சுமக்க நினைக்கும் முயற்சி இது...

ADVERTISEMENT



என் அப்பா பள்ளி ஆசிரியராக இருந்தாலும், இசை தெரிந்தவர். ‘செங்கை கீதாஞ்சலி’ எனும் இன்னிசைக் குழுவை நடத்திவந்தார். எப்போதும் திரைப்பாடல்கள் ஒலித்துக் கொண்டே இருக்கும் வீட்டில்தான், என் சிறுவயது வாழ்வு நகர்ந்தது. அப்பாவின் அறையில் இசை வாத்தியங்கள், திரையிசை கேசட்டுகள் நிரம்பி வழியும். அந்த அறைக்குள் அப்பா இருக்கும் நேரத்தில் செல்ல முடியாது. அவர் வீட்டில் இல்லாத நேரங்களில் கேசட்டுகளை எடுத்து… கேட்கும் பாடல்கள், எந்தத் திரைப்படம், யார் இசை, யார் பாடலாசிரியர் என பார்த்துக் கொள்வேன். அப்படி நான் அதிகம் ரசித்த பாடல்கள்... இளைய நிலா பொழிகிறதே, பனிவிழும் மலர்வனம், பொன்மாலைப் பொழுது, அந்திமழை பொழிகிறது, என்ன சத்தம் இந்த நேரம், அடி ஆத்தாடி, வண்ணம் கொண்ட வெண்ணிலவே, பாடவா உன் பாடலை... என என் பள்ளி நாட்களில் கவிப்பேரரசுவின் கவிதை வரியெனும் பெருநதியில் மிதந்து செல்லும் சிறு பரிசலாய் சுழன்று மகிழ்ந்திருக்கிறேன். இருபது நிலவுகள் நகம் எங்கும் ஒளிவிடும் (பனிவிழும் மலர்வனம்), தண்ணீரில் மூழ்கிக்கொண்டே தாகம் என்றாய் (அந்திமழை பொழிகிறது), நங்கை உந்தன் கூந்தலுக்கு நட்சத்திர பூ பறித்தேன் (வண்ணம் கொண்ட வெண்ணிலவே), இரவும் பகலும் உரசிக்கொள்ளும் அந்திப்பொழுதில் (விழியில் விழுந்து)... இப்படி தன் பாடல்களில் ஒளிக்கீற்றுகளை போகிற போக்கில் அள்ளி வீசியிருப்பார் கவிப்பேரரசு.

என் பள்ளிக்கால இறுதிநாட்களிளும் கல்லூரிக் காலத்திலும் கவிஞரின் வரிகள்தான் என் செவிகளை ஆட்சி செய்தன... ரிபீட் மோடில் கேட்ட பாடல் ‘திருடா திருடா’ படத்தின் ‘ராசாத்தி’ என்ற பாடல்... அந்த கழுத்து தேமலையும் காதோர மச்சத்தையும் பார்ப்பதெப்போ’ என காதல் ஏக்கத்தையும் அழகியலோடு சொல்லும் வரி கிராமத்து சூழலில் வளர்ந்த என்னை மிகவும் ஈர்த்தது. நகரம் சென்று ஊர் திரும்பும் காதலன், மாமன் மகளிடம் ‘அய்த்தையும் மாமனும் சுகந்தானா?’ என்பதோடு ‘ஆத்துல மீனும் சுகந்தானா?’ என்று கேட்பது அழகிலும் அழகு.

கவிஞரின் பேனாவிற்கு காதலை சொல்லித்தர தேவையில்லை...

வருட வரும் பூங்காற்றையெல்லாம் கொஞ்சம் வடிகட்டி அனுப்பி வைப்பேன்
(என்னவளே... - காதலன்)

நாம் இரவின் மடியில் பிள்ளைகளாவோம், பாலூட்ட நிலவுண்டு
(வெண்ணிலவே... - மின்சார கனவு)

உன்னை பிரிந்தாலே, வீசும் காற்றில் வேலை நிறுத்தமடி!
(டெலிபோன் மணிபோல்... - இந்தியன்)

கண்களிலே பௌத்தம் பார்த்தேன், கன்னத்தில் சமணம் பார்த்தேன், பார்வை மட்டும்
கொலைகள் செய்யப் பார்க்கிறேன் ( பெண்ணொருத்தி... - ஜெமினி)

எந்தன் தாயின் கர்ப்பம் தாண்டி, மறுமுறை உயிர் கொண்டேன்…
(முதல் முறை... - சங்கமம்)

உன் நெற்றி வியர்வை கண்டவுடன்... நான் வெயிலை வெட்டப் பார்த்தேன்!
(மொட்டுகளே... - ரோஜாக் கூட்டம் )

ஊசிபோடும் ரெண்டு கண்களில் உயிரை குடித்தவள் நீ…
(என் காதல் தீ... - இரண்டாம் உலகம் )

மூங்கிலுக்குள் நுழைகின்ற காற்று, முக்தி பெற்று திரும்புதல் போல... உன் மடியில்
சொல்லாய் விழுந்தவன் கவியாய் முளைத்தேன் ( மனசுக்குள்... - ஸ்டார் )

ADVERTISEMENT



’சர்க்கரை நிலவே...’ என்ற வார்த்தையே அபாரம். நிலவை இதற்கு மேல் யாரும் கொண்டாடிவிட முடியாது என்றே தோன்றுகிறது. இப்படியாய் கவிஞரின் காதல் வரிகளை அணுஅணுவாய் கொண்டாடிய 90’ஸ் கிட்ஸில் நானும் ஒருவன்.

ஒரு பத்திரிகையாளனாக அரசியல் நிகழ்வுகளை அன்றாடம் கவனிப்பதால்... பல சமயங்களில் கவிஞரின் பாடல் வரிகள் என் தோள்மேல் கைபோட்டு நடக்கும். ‘முதல் மரியாதை’ படத்தில் ‘வெட்டிவேரு வாசம்...’ என தொடங்கும் பாடல் ‘சாதிமத பேதம் எல்லாம் அந்த முன்னவக செஞ்ச மோசம்’ என முடியும். படத்தில் வரும் சிவாஜி கதாபாத்திரம் ஒரு சாதிமறுப்பு திருமணத்தை நடத்திவைக்கும் காட்சியில் ஒலிக்கும் பாடல் அது.

சிவப்பு மல்லி படத்தில் பொதுவுடமை சிந்தனைகளை சொல்லும் பாடல், ‘எரிமலை எப்படி பொறுக்கும்’ என்ற மே தினப் பாடலில்

’எழுதியபடிதான் நடக்கும் எல்லாம்,
விதி வசம் என்பதை விட்டுவிடு...
இளமை உன் தோள்களில் இருக்கும் போதே
எது நிசம் என்பதை எட்டிவிடு’

என்ற வரிகள் தலையெழுத்து என்பதை தூக்கியெறிந்து, லட்சியங்களை அடைய வழி சொல்லும் உந்து சக்தி. ‘கண் சிவந்தால் மண் சிவக்கும்’ படத்தில் ‘மனிதா மனிதா’என்ற பாடலில் ‘சில ஆயிரம் ஆயிரம் சூரிய தீபங்கள் பூமியில் தோன்றிவிடும். சாமரம் வீசிய பாமர ஜாதிகள் சாதனை கண்டுவிடும்’ வரிகளில் உழைக்கும் மக்களின் வலியை பதிவு செய்திருப்பார்.

‘பரதேசி’ படத்தில் ‘செங்காடே’ என்ற பாடலில் பல வரிகள் நெஞ்சை உருக்கும்...

‘உயிரோடு வாழ்வதுகூட சிறு துன்பமே,
வயிறோடு வாழ்வது தானே பெரும் துன்பமே’

என்ற இரண்டே வரியில் பஞ்சம் பிழைக்க அடிமைகளாய் இழுத்துச் செல்லப்படும் எளிய மக்களின் இரத்தத்தை எழுத்துகளாக்கி இருப்பார். 2002-ல் வெளியான ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தில் வரும் ‘விடைகொடு எங்கள் நாடே’ என்ற பாடல் வரிகளில் இருக்கும் உணர்வு 2009-ல் தான் உச்சம் தொட்டது...

‘முன் இரவில் மலரில் கிடந்தோம்,
பின் இரவில் முள்ளில் கிழிந்தோம்…
கண் திறந்த தேசம் அங்கே,
கண் மூடும் தேசம் எங்கே?’

என்று ஒரு இனத்தின் வலியை அந்தப் பாடலின் ஒவ்வொரு வரியும் சுமந்து இதயத்தை அழவைத்தது. 2012-ல் வெளியான ‘நீர்ப்பறவை’ படத்தில் ‘யார் வீட்டு மகனோ...’ என்ற பாடலில்

‘மனிதர் இருவர் உள்ள வரையில்
அகதி என்று யாரும் இல்லை
கால தேசம் எல்லாம் மாறலாம்,
காதல் பாசம் எல்லாம் ஒன்று தான்’

என்ற வரிகளில் இதயம் சற்று இளைப்பாறியது.

2015-ல் ‘புலி’ படத்தில் ‘மனிதா மனிதா’ என்ற பாடலில்

‘விதிகளும் பொடிபட, வேதனை உடைபட,
விடுதலை கொடுத்துவிடு!
விடிவதில் விடிவதில் தாமதம் ஆனால்
வானத்தை கிழித்துவிடு!’

என்ற வரிகளில் இதயம் வீறுகொண்டது.

‘பேராண்மை’ படத்தில் ‘காட்டு புலி அடிச்சு...’ என தொடங்கும் பாடலில்

‘நாம கடவுள் பொறக்கும் முன்னே
இந்த காட்டுக்கு வந்தவுக...
பொதுவுடமை சமுதாயம் தொலைந்து போகவில்லை,
நாங்க பறவைக்கும் விலங்குக்கும் பங்கு மறுத்ததில்லை...’

எனும் வரிகள் மனிதமும் இயற்கையின் புனிதமும் மலைகளில் வாழும் மக்களிடமே மிச்சம் இருக்கிறது என்பதை உணர்த்தும்.



‘ரெட்’ திரைப்பத்தில் ‘கண்ணை கசக்கும் சூரியனோ...’ என்ற பாடலில்

‘நிறத்துக்கு ஒவ்வொரு மதிப்பு,
நிறங்களில் சிவப்பே சிறப்பு,
வறுமையின் நிறமா சிவப்பு,
அதை மாற்றும் நிறமே சிவப்பு’

என அந்தப் பாடல் முழுவதும் பொதுவுடைமை சிந்தனை படர்ந்திருக்கும்.

காதல், ஊடல், தத்துவம், சோகம், போர்குணம் என கவிப்பேரரசு வைரமுத்துவின் பாடல் வரிகள் பல உணர்வுகளை நிறைவு செய்திருந்தாலும், காலம் காத்திருக்கிறது, சமூக ஏற்றத்தாழ்வுகள் ஒழியும் வரை அவர் பாடல் வரிகள் அவசியமானது!

இந்தக் கட்டுரையை இந்த பாடலோடு முடிக்க வேண்டும் என விரும்புகிறேன்... அது சமகாலத் தேவையும்கூட என கருதுகிறேன்...

நீ இந்து அல்ல, நீ முஸ்லிம் அல்ல, நீ இந்த மண்ணிலே இந்தியனே...
உடல் வேறு வேறு, ரத்​தம் ஒன்று ஒன்று, இதை நினைவில் கொள்ளடா இந்தியனே...
புத்தன் அவதாரம் செய்த திருமண்னில், புத்தன் நம்மோடு ஏன் இல்லை...
ரத்தம் சிந்தாத நல்ல நூற்றாண்டு, எங்கள் வரலாற்றில் நினைவு இல்லை...
கத்தி ஏந்தாத சுதந்திரம் இன்று, கத்தி ஏந்துவது சரி இல்லை...
இந்த திரு நாடு சொந்த தாய் வீடு, என்ற உணர்வு ஏன் வர வில்லை...
யுத்தத்தை நிறுத்து! ரத்தத்தை நிறுத்து!

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT