Advertisment

ஆண்டுகள் பலவாகியும் சிறகசைக்கும் வரிகள்! - 2.0வில் நா.முத்துக்குமார்

கிராஃபிக்ஸ் பிரம்மாண்டம், சூப்பர் ஸ்டாரின் ஸ்டைல், மிரட்டும் ஒளிப்பதிவு, இசை... அத்தனையையும் தாண்டி 2.0 படத்தில் மனதைத் தொட்ட ஒரு விசயமென்றால் அது ‘புள்ளினங்காள்...’ பாடல், அந்தப் பாடலின் வரிகள்.

Advertisment

na.muthukumar

நா.முத்துக்குமார்... கண்ணதாசன் - வாலி - வைரமுத்து என தமிழ் திரைப்பட பாடல்களில் அரசர்களாக சாம்ராஜ்யம் நடத்திய பாடலாசிரியர்கள் வழியில் அல்லாமல், தமிழ் திரைப்பட இசை ரசிகர்களுக்குத் தோழராக அவர்களின் காதல் வலியையும், வாழ்க்கை தோல்வியையும் இன்னும் பல உணர்வுகளையும் புரியாத பெருங்கவிதைகளாகச் சொல்லாமல் மெல்லிய சிலேடைகளாலும், எளிதான வார்த்தைகளாலும் எழுதியவர் நா.முத்துக்குமார். இவர் மறைந்த 2016ஆம் ஆண்டுக்கு முந்தைய ஆண்டுவரை பல வருடங்களாக தமிழ் திரைப்படங்களில் அதிகமான பாடல்கள் எழுதியவர் என்ற பெருமையையும் சுமையையும் கொண்டிருந்தவர்.

'விழியோரமாய் ஒரு நீர்த்துளி வடியுதே என் காதலி', 'காற்றிலே காயும் நிலவை கண்டுகொள்ள யாருமில்லை, மின்னலை கையில் பிடிக்க மின்மினி பூச்சிக்குத் தெரியவில்லை', 'அழகான நேரம் அதை நீதான் கொடுத்தாய், அழியாத சோகம் அதையும் நீதான் கொடுத்தாய்', 'ஒரு கல் ஒரு கண்ணாடி...' 'காற்றினில் கிழியும் இலைகளுக்கெல்லாம் காற்றிடம் கோபம் கிடையாது', 'மின்சாரக் கம்பிகள் மீது மைனாக்கள் கூடு கட்டும், நம் காதல் தடைகளைத் தாண்டும்'... இன்னும் எழுதிக்கொண்டே போகலாம். இப்படி காதலையும், 'வெயிலோடு விளையாடி, வெயிலோடு உறவாடி', 'ஒரு நாளில் வாழ்க்கை இங்கே எங்கும் ஓடிப்போகாது' என்று வாழ்வியலையும், 'கொடுவா மீச அருவா பார்வை' என வீரத்தையும் எழுதியவர். இவர் எழுதியதில் இவை ஒரு சிறு துளியே. இப்படி இவரது வார்த்தைகள் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதுக்குள் எப்பொழுதும் மிதந்துகொண்டு இருக்க, இவர் நோய்வாய்ப்பட்டு கடந்த 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மறைந்தார். தன் நாற்பதுகளிலேயே இவர் மறைந்தது கேள்விப்பட்ட அனைவருக்கும் பேரதிர்ச்சி. ஆனால், இவர் எழுதிய பாடல்களின் எண்ணிக்கையையும் அவற்றின் வகைகளையும் அவை தொட்டுச் சென்ற விஷயங்களையும் பார்த்தால், ஒரு பாடலாசிரியராக முழு வாழ்வு வாழ்ந்து சென்றார் என்றே தோன்றுகிறது.

இவர் மறைந்த பிறகு வெளிவந்த 'தரமணி' திரைப்படத்தின் பாடல்கள் இவரது இழப்பு எவ்வளவு பெரியது என்பதை உரக்கப் பாடிச் சென்றன. இவர் மறைந்து இரண்டு ஆண்டுகள் ஆன பின்பு நேற்று வெளியான 2.0 படத்தில் நா.முத்துக்குமார் எழுதிய 'புள்ளினங்காள்...' பாடல் படத்தின் ஆன்மாவை அழகாகச் சொல்கிறது. பறவைகளைப் பற்றிய அந்தப் பாடலின் ஒவ்வொரு வரியும் சிறகை அசைத்து காற்றில் பறக்கிறது. அத்தனை அழகோடும் ஆழமான அர்த்தத்தோடும் எளிமையாகவும் எழுதப்பட்டுள்ளன அந்த வரிகள்.

'காற்றோடு விளையாட ஊஞ்சல் எங்கே செய்கிறாய்...

கடன் வாங்கி சிரிக்கின்ற மானுடன் நெஞ்சை கொய்கிறாய்...

உயிரே ....எந்தன் செல்லமே...

உன் போல் உள்ளம் வேண்டுமே....

உலகம் அழிந்தே போனாலும்

உன்னை காக்கத் தோணுமே...

செல் செல் செல் செல்...

எல்லைகள் இல்லை

செல் செல் செல் செல்...

என்னையும் ஏந்திச் செல்'

இப்படி படத்தின் கருவை எளிமையும், வலிமையும் நிறைந்த சொற்களால் ரசிகர்களுக்குக் கடத்தி எவரும் இட்டு நிரப்பாத அந்த இடத்தில் மீண்டும் மீண்டும் மென் சிரிப்புடன் நிற்கிறார் நா.முத்துக்குமார். மிஸ் யூ நா.முத்துக்குமார்! #MissYouNaMuthukumar

2.0 a.r.rahman na.muthukumar rajinikanth
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe