Skip to main content

குஷ்பு, வானதி மணிப்பூர் பற்றி ஏன் வாய் திறக்கவில்லை? - லயோலா மணிகண்டன் கேள்வி

Published on 05/08/2023 | Edited on 05/08/2023

 

Loyola Manikandan Interview

 

மணிப்பூர் பிரச்சனை, தமிழ்நாட்டில் பாஜகவின் பாதயாத்திரை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து தன்னுடைய கருத்துக்களை அரசியல் செயற்பாட்டாளர் லயோலா மணிகண்டன்  நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

 

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும் என்பார்கள். அதனால் தான் மணிப்பூர் விவகாரத்தில் பிரதமரால் மக்களை சந்திக்க முடியவில்லை. அவர் இதுவரை பத்திரிகையாளர்களையே சந்தித்ததில்லை. இந்தியர்களாய் வாழ்ந்து வந்த மக்களிடம் மதப் பிரச்சனையைத் தூண்டியது யார்? சென்னையை விட சிறிய இடமான மணிப்பூரில் ஏற்பட்ட கலவரத்தை உங்களால் அடக்க முடியாதா? கலவரம் செய்தவர்களை அடித்து சிறைக்குள் தள்ளியிருக்க முடியாதா? இந்தக் கலவரத்தை வளர்க்க அரசு தான் முயற்சி எடுக்கிறது. அந்த முதலமைச்சர் ஏன் இன்னும் மக்களை சென்று சந்திக்கவில்லை?

 

இந்தக் கலவரம் குறித்து மகளிர் ஆணைய உறுப்பினராக இருக்கும் குஷ்பூ வாய் திறந்தாரா? வானதி சீனிவாசன் பேசினாரா? பாதிக்கப்பட்டவர்களை இவர்கள் நேரில் சென்று பார்த்தார்களா? பாஜகவின் மகளிர் அணியினர் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்? இவர்களுடைய இரட்டை வேடம் இதில் வெளிப்படுகிறது. அண்ணாமலையின் பாதயாத்திரைக்காக இவர்கள் 200 கோடி வசூலித்துள்ளனர். அவர் செல்லும் வாகனம் அவ்வளவு வசதிகள் நிறைந்ததாக இருக்கிறது. இது பாதயாத்திரையா, இன்பச் சுற்றுலாவா?

 

ஒரு நாளைக்கு இவர்கள் ஒரு கிலோமீட்டர் தான் நடக்கிறார்கள். மக்களை ஏமாற்றும் வேலை இது. அண்ணாமலையின் வேலை ஆடியோ மற்றும் வீடியோக்களை எடுப்பது தான். அண்ணாமலை எப்போது வேண்டுமானாலும் மாற்றப்படலாம். தமிழிசை சௌந்தரராஜன் மாநில தலைவராக இருந்தபோது தான் அதிக உறுப்பினர்களை சேர்த்தார். அதற்கு அவருக்கு கிடைத்த பரிசு தான் ஆளுநர் பதவி. அண்ணாமலை வந்த பிறகு யார் கட்சியில் சேர்கிறார்கள்? காசு கொடுத்து கொடியை நட்டு வைப்பது எல்லாம் சாதனை அல்ல. ஏன் உள்ளாட்சித் தேர்தலில் இவர்கள் வெற்றி பெறவில்லை?

 

'ஆழ்ந்த இரங்கல்' என்பதுதான் இப்போது ட்ரெண்டிங்கில் இருக்கிறது. யூடியூப் சேனல்களுக்காக இவர்கள் பல கோடி ரூபாயை செலவு செய்துள்ளனர். பாஜகவில் அனைவரும் அண்ணாமலை மேல் அதிருப்தியில் தான் இருக்கின்றனர். அண்ணாமலையின் பாதயாத்திரை தொடக்க விழாவுக்கு முதலில் மோடி தான் வருவதாக இருந்தது. ஆனால் அவர் அதை புறக்கணித்தார். ராகுல் காந்தி சென்றது ஒற்றுமைக்கான பயணம். அண்ணாமலை செல்வது பிரிவினைக்கான பயணம். பல இடங்களில் இஸ்லாமியர்களின் கடைகளை இவர்கள் தாக்குகிறார்கள். 

 

கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் சாத்தானின் பிள்ளைகள் என்று சமீபத்தில் சீமான் பேசினார். சீமான் இப்போது முழு சங்கியாக மாறிவிட்டார். தமிழ்நாட்டில் மிகப்பெரிய பிரச்சனை ஏதோ நடக்கப்போகிறது என்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. ஊழலுக்கு எதிரான கட்சி பாஜக என்றால் அதிமுகவுடன் அவர்கள் ஏன் கூட்டணி வைக்கிறார்கள்? அதிமுக முன்னாள் அமைச்சர்களின் வீடுகளுக்கு அமலாக்கத்துறை ஏன் செல்வதில்லை? அண்ணாமலையின் பாதயாத்திரையை கூட்டணிக் கட்சித் தலைவர்களே புறக்கணித்தனர். இந்தியாவுக்கான பாதுகாப்பு அரணாக தமிழ்நாடு தான் விளங்குகிறது. அதிமுக, சிவசேனா உள்ளிட்ட பல்வேறு கட்சிகளையும் பிரித்தது பாஜக தான். அதிகாரம் தான் இவர்களுக்கு முக்கியம்.

 


 

Next Story

''கமல்ஹாசன் கூட ஜிஎஸ்டி பற்றி பேசுகிறார்''-வானதி ஸ்ரீனிவாசன் பேட்டி

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
 "Even Kamal Haasan talks about GST" - Vanathi Srinivasan Interview

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த வானதி சீனிவாசன் பேசுகையில், ''ஒரு பக்கம் ஜிஎஸ்டியைப் பற்றி மாநில அரசு, திராவிட முன்னேற்ற கழகம் பேசிக் கொண்டிருக்கிறது. அவர்கள் மட்டுமல்லாது அவர்களுடன் கூட்டணியில் இருக்கும் கமல்ஹாசன் கூட ஜிஎஸ்டி பற்றிப் பேசுகிறார். கமல்ஹாசன் ஜிஎஸ்டி என்றால் என்ன என்று புரிந்து கொண்டுதான் பேசுகிறாரா? என்று தெரியவில்லை. அல்லது படத்தில் வர வசனமாக நினைத்துப் பேசுகிறாரா? என்று தெரியவில்லை.

இந்த ஜிஎஸ்டி இருப்பதால் இன்றைக்கு வரி வசூல் என்பது அதிகரித்திருக்கிறது. அதனால்தான் தமிழ்நாடு கவர்மெண்டுக்கு எக்ஸ்ட்ரா ரெவென்யூ வந்துள்ளது. அதை விட்டுவிட்டு ஜிஎஸ்டியை நாங்கள் எதிர்க்கிறோம். ஜிஎஸ்டி பாதிப்பு என்று சொல்லிக் கொள்கிறார்கள். ஏமாற்றுவது என்பது திமுகவிற்கு ஒரு கலை. ஒரு ஜிஎஸ்டி கவுன்சில் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியுமா? ஜிஎஸ்டி கவுன்சிலில் அனைத்து மாநிலங்களின் ஸ்டேட் ஹோல்டர் இருப்பார்கள்.

ஜிஎஸ்டியால் ஒரு பிரச்சனை ஒரு மாநிலத்தில் இருக்கிறது என்று சொன்னால் மாநிலத்தினுடைய நிதியமைச்சர் அதை ஏன் அட்ரஸ் பண்ணாமல் இருக்கிறார்.  ஒவ்வொரு மாநிலத்தினுடைய நிதி அமைச்சரும் ஜிஎஸ்டி கவுன்சிலில் மெம்பர்ஸ். ஏதோ மத்திய அரசு நேரடியாக எங்களுக்கு தெரியாமல் அமல்படுத்துகிறார்கள் என்பது போல பேசுவது உண்மை இல்லை. ஜிஎஸ்டி கவுன்சிலில் எல்லா மாநிலத்தினுடைய பிரதிநிதிகளும் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் ஜிஎஸ்டி-ல ஏதாவது பிரச்சனை இருந்தால், இதை சரியாக ரெப்ரசன்ட் செய்து மாநில அரசு சார்பில் ஜிஎஸ்டி கவுன்சிலில் நீங்கள் உங்களுடைய தரப்பு வாதத்தையோ, உங்கள் தரப்பு நியாயத்தையோ அங்குச் சொல்லி அதற்கான தீர்வு கொடுக்காமல், புறக்கணித்திருப்பது மாநில அரசு. இதில் மத்திய அரசு ஜிஎஸ்டில் தவறு செய்கிறது என்கின்ற ஆர்கியுமென்ட் வரக்கூடாது''என்றார்.

Next Story

“கையெழுத்து போடுங்கள் என்றால் போடுவேன்” - வெளிப்படையாகப் பேசிய குஷ்பு

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
kushbu sundar about aranmanai 4

2024 ஆம் ஆண்டு நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் தேதி 7 கட்டங்களாக நடைபெறுகிறது. ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 அன்று நடைபெறவுள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி வருகின்றன. இதனால் தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தங்கள் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

அந்த வகையில் வேலூர் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் புதிய நீதிக் கட்சியின் நிறுவனத் தலைவர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து நடிகையும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான பா.ஜ.க.வை சார்ந்த குஷ்பு, வேலூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்பொழுது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இயக்குநர் சி.சுந்தர் இயக்கத்தில் வெளியாகவுள்ள அரண்மனை 4 திரைப்படத்தை பற்றிப் பேசினார். அவர் பேசியதாவது, “நாங்கள் அரண்மனை 4 பார்த்து விட்டோம். படம் பிரமாதமாக வந்துள்ளது. இதுவரையில் வந்த அரண்மனை படங்களை விட இது வித்தியாசமானதாக இருக்கும். நிறைய உணர்வுப்பூர்வமான காட்சிகள் மற்றும் கமர்சியல் வேல்யூ முழுவதும் ஆக உள்ளது. யோகி பாபு உள்ளிட்ட பல நடிகர்கள் இடம் சிறப்பாக நடித்துள்ளனர்” என்றார்.  

அவரிடம், அரண்மனை திரைப்படம் சீரிஸ் இன்னும் தொடர்ச்சியாக சென்று கொண்டிருக்குமா, எப்போதுதான் அது முடியும் என்ற கேள்வி கேட்கப்பட்ட நிலையில், “அதை நான் முடிவு செய்ய முடியாது. இயக்குநர், எழுத்தாளர் தான் முடிவு செய்வார்கள். இது தான் கதை. கையெழுத்து போடுங்கள் என்றால் போடுவேன் அவ்வளவுதான், எல்லாமே இயக்குநர் தான் முடிவு செய்வார் நான் அல்ல” என பதிலளித்தார். 

அவ்னி சினிமேக்ஸ் சார்பில் குஷ்பு மற்றும் பென்ஸ் மீடியா சார்பில் அருண்குமார் தயாரிப்பில், சுந்தர் சி நடித்துள்ள படம் அரண்மனை 4. இதில் தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா உட்பட பல நடிகர்கள் நடித்துள்ளனர். அரண்மனை பட வரிசையில் நான்காவது படமாக இப்படம் உருவாகியுள்ளது. விரைவில் இப்படம் திரைக்கு வரவுள்ளது. ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. சமீபத்தில் ட்ரைலர் வெளியாகியிருந்தது.