ADVERTISEMENT

தமிழ் ஊடகத்துக்கு மூடுவிழா! -சர்ச்சையில் லயோலா கல்லூரி!

05:01 PM Nov 13, 2020 | felix

ன்னும் ஐந்து வருடங்களில் தன் நூற்றாண்டு விழாவைக் கொண்டாட இருக்கும் சென்னை லயோலா கல்லூரி. கடந்த 14 ஆண்டுகளாக கல்லூரியில் செயல்பட்டு வந்த ஊடகக் கலைகள் துறைக்கு அதிரடியாக மூடுவிழாவை நடத்தியிருப்பது விமர்சனங்களைக் கிளப்பியுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

விஷுவல் கம்யூனிகேஷன் துறை நீண்டகாலமாக சிறப்பாகச் செயல்பட்டு வந்தாலும், தமிழ்வழியில் கல்வி கற்ற மாணவர்கள் ஊடகத் துறையில் முன்னணிக்கு வரவேண்டும் என்ற எண்ணத்துடன் தொடங்கப்பட்டு, தமிழரின் சங்க இலக்கியம், கலை, அரசியல், சமூகம் என தமிழர் பண்பாட்டுத் தளத்தில் பாடங்களை வடிவமைத்து ஊடகத் துறையில் தமிழ் மாணவர்கள் சாதிக்க பெரும்பங்கை ஆற்றிவந்த முதுகலைத் துறை இது. திடீரென எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் இந்தத் துறையை மூடியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாணவர்கள் அதிகமாக இந்தத் துறையை தேர்ந்தெடுப்பதில்லை என்றும் இந்தத் துறையால் கல்லூரிக்கு வருமானமில்லை என்றும் காரணங்கள் பேசப்படுகின்றன. சென்ற வருடமே முதலாம் ஆண்டு மாணவர்கள் சேர்க்கப்படாமல் இருந்ததும் இதற்குத்தான் என்று சொல்கிறார்கள். இத்தனை ஆண்டுகளாக அந்த துறையின் பேராசிரியர்களாக இருந்த நான்கு பேருக்கும் மாற்று வேலை ஏற்படுத்தித் தராமல், அவர்களை வீட்டுக்கு அனுப்பியிருக்கிறது கல்லூரி நிர்வாகம்.

லயோலா கல்லூரி முதல்வர் அருட்தந்தை தாமஸ் அமிர்தத்திடம் இதுகுறித்து நாம் கேட்டபோது, ""ஊடகக் கலைகள்’துறை இடைநீக்கம் செய்யப் பட்டுள்ளது. மாணவர்களின் சேர்க்கையும் குறைந்திருப்பதாகத் தகவல் உள்ளது. 4 ஆண்டுகளுக்கு முன்னர் சில மதிப்பீடுகளை கல்லூரி நிர்வாகம் எடுத்திருந்தது. அதில் சில துறைகளை தற்காலத்திற்குத் தகுந்ததுபோல மீட்டுரு வாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. நான் சென்ற ஆண்டுதான் பொறுப் பேற்றேன். தற்போதுள்ள சூழலில் பல சவால்களுக்கு மத்தியில் நிர்வாகத்தை நடத்தி வருகிறோம். இதுகுறித்து வருத்த மடையும் அந்தத் துறையின் முன்னாள் மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்துடன் கலந்துரையாடினால் பிரச்சனைக்கு தீர்வு வரும் என்று நம்புகிறேன்''’என்றார்.

இதுகுறித்து தனியார் தொலைக் காட்சி சிறப்பு செய்தியாளர் ஸ்டாலி னிடம் கேட்டபோது, ""ஊடகக் கலைகள் துறையில் படித்ததன் மூலம் ஏற்பட்ட தொடர்புகளால்தான் எனக்கு இந்த வேலை கிடைத்தது. ஊடகம் சார்ந்த படிப்பை நம் தாய்மொழியில் கற்பது எவ்வளவு சிறப்பானது என்பதை உணர்ந்தவன் நான். தமிழ் செய்தி சேனலில் செயல்பட எனக்கு நாட்டம் வரவும் அதுவே காரணம். அதை மூடியிருப்பது வருத்தமாக இருக்கிறது. மீண்டும் திறக்கப்பட்டால், என்னைப் போன்ற பலர் உருவாக அது வழிசெய்யும்''’என்றார்.

பிரபல பின்னணிப் பாடகரும், வணிக நிகழ்வுகளின் தொகுப்பாளராகவும் திகழும் ஜெகதீஷிடம் கேட்டபோது, "தொழில் நுட்பங்களைக் கற்பதைவிடவும், உணர்வுப் பூர்வமான உறவை தமிழ் சமூகத்துடனும், தமிழ் ஊடகக் கலைகளுடனும் ஏற்படத்தக்கூடியது ஊடகக் கலைகள் துறை''’என்றார்.

இதுகுறித்து லயோலா கல்லூரியின் ஸ்கூல் ஆஃப் மீடியா ஸ்டடீசின் முன்னாள் புலத்தலைவரும், விஷுவல் கம்யூனிகேஷன் துறையின் முன்னாள் துறைத்தலைவருமான அருட்தந்தை ராஜநாயகத்திடம் கருத்துக் கேட்டபோது, ‘""தமிழ்நாட்டின் தலைநகரில் தமிழில் ஊடகம் குறித்த படிப்பை படிக்க முடியாமல் செய்வது வேதனையளிக்கிறது. பொருளாதார அடிப்படையில் வருமானமில்லை என்பதும், மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக இல்லை என்பதும் நியாயமான காரணங்களல்ல.

நஷ்டமே ஏற்பட்டாலும், பணம் சம்பாதிப்பதற்காக மட்டுமா கல்லூரி நடத்துகிறார்கள்? கார்ப்பரேட் கல்லூரிகளுக்கும், துறவியர் நடத்தும் கல்லூரிக்கும் வித்தியாசம் வேண்டாமா? லாப நோக்கத்திற்காகவா தொடங்கப்பட்டது லயோலா கல்லூரி கடந்த ஆண்டு 40 மாணவர்கள் சேர்ந்தார்கள் என்பது பதிவில் இருக்கும். ஆகையால் மாணவர்கள் சேரவில்லை என்பது பொய். இப்படியான ஒரு தமிழ்வழி ஊடகத்துறை இருக்கிறது என்பதை விளம்பரப்படுத்த கல்லூரி எந்த வகையான முயற்சிகளை எடுத்தது. பணம் கட்டமுடியாத ஒரு மாணவன் இந்த துறையைத் தேர்ந்தெடுக்கிறான் என்றால், அவனுக்கு உதவிசெய்து அவனைத் தூக்கிவிட வேண்டியது துறவியர் கல்லூரியின் கடமையல்லவா? 4 ஆண்டுகளுக்கு முன்னர் நடத்தப்பட்ட மதிப்பீட்டில் எந்த முன்னாள் மாணவர்களிடம் கருத்து கேட்டார்கள்?

தமிழ் வழியில் படித்த மாணவர்களை தனித்துப் பார்க்கும் எண்ணமில்லை. ஆனால், ஆங்கில பாடத்திட்டம் கொண்ட விஷுவல் கம்யூனிகேஷன் துறையில் சில சிரமங்கள் அவர்களுக்கு இருக்கலாம். கிராமப்புற ஒடுக்கப் பட்ட சமூகத்திலிருந்து வரும் மாணவர்களும் ஆங்கிலத்தை பிரச்சனையாக நினைக்காமல், எந்த மனத்தடையும் இல்லாமல் ஊடகக் கலைகள் துறையில் பயின்று சிறந்து விளங்கமுடியும். இதுவரை பயின்ற மாணவர்களின் பட்டியலை எடுத்துப் பார்த்தால், பல முன்னணி ஊடகங்களில் இங்கு படித்தவர்கள் முக்கிய பங்குவகிப்பது தெரியவரும்.

தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமல்ல, தமிழ்மொழிக்கே சிறப்பு செய்யும் துறை இது. இதை மென்மேலும் வளர்த்தெடுக்க வழிசெய்யாமல், இழுத்து மூடியிருப்பது அநியாயம். இது தமிழுக்கே செய்த தீமை. இதைச் செய்ததற்கு லயோலா கல்லூரி நிர்வாகம் வெட்கப்பட வேண்டும். இது கல்லூரிக்கு நேர்ந்த தலைகுனிவான ஒரு செயல்''’என்றார் ஆவேசமாக.

-பெலிக்ஸ்


Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT