ADVERTISEMENT

தாமரை, பாம்பு அடுத்தது என்ன?

06:44 PM Feb 04, 2018 | Anonymous (not verified)

தாமரை, பாம்பு அடுத்தது என்ன?

ரஜினியின் மாற்றங்கள் குழப்பமா வியூகமா?






ரஜினி தன் அரசியல் வருகையை கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி உறுதி செய்தார். இது அவரின் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் ஒரு சில ரசிகர்கள் தலைவர் 25 ஆண்டுகளுக்கு முன்பே இதனை தெரிவித்திருக்கலாம் என்று சிறிது வருத்தமும் அடைந்தனர். என்ன தான் ரஜினி சினிமா பிரபலமாகவும் பெரும் ரசிகர் பட்டாளத்துடன் இருந்தாலும், அரசியல் களம் அவரை புதிய மாணவர் போல் தான் பார்க்கிறது. இங்கு மக்களின் நிலை உணர்ந்து அவர்களின் வாழ்வாதார நிறை குறைகளை அறிந்துக்கொள்ள வேண்டும். அவர்களுக்கு ஒன்று என்றால் ஆளும் அரசினை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும், கட்சியின் சார்பாக போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்தவேண்டும். 'அதற்கு வேறு நபர்கள் இருக்கிறார்கள், கொள்கை என்னவென்று கேட்டவுடன் தலைசுற்றுகிறது' என்றெல்லாம் அவர் கூறியது அரசியல் கட்சிகளுக்கு குதூகலத்தையும் மக்களுக்கு குழப்பத்தையும் கொடுத்தது.

இந்த குழப்பம் அவர் பேச்சினால் மட்டும் ஏற்படவில்லை. அவரின் பிரதான முத்திரையான பாபா முத்திரையினாலும் தான். ஏனென்றால் சென்ற ஆண்டு மே மாதமும் டிசம்பர் மாதமும் அவர் ரசிகர்களை சந்தித்தபொழுது, அவரின் பின்னே இருக்கும் பாபா முத்திரையில் ஒரு தாமரை சின்னம் இருந்தது. ஆனால், கட்சி அறிவிப்புக்குப் பின்னர் உறுப்பினர்களை சேர்க்க 'ரஜினி மன்றம்' செயலியை அறிமுகம் செய்தார். அதில் தாமரை நீக்கப்பட்டு பாபா முத்திரையும் நாகமும் மட்டும் இருந்தது. ரஜினிக்கு பின்னணியாக பாஜக இருப்பதாகப் பேசப்பட்டதை நிறுத்தவே தாமரை நீக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.




இது ஒருபுறம் இருந்தாலும் ரஜினியின் அரசியல் வருகை குறித்த மற்ற அரசியத்தலைவர்களின் கருத்தென்பது கலவையானதாக தான் இருந்தது. சீமான் ரஜினியின் மீதும் அவரின் முத்திரையின் மீதும் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். முக்கியமாக சீமான் கலந்துகொண்ட ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பல வெளிநாட்டு தலைவர்கள், தொழிலதிபர்களின் புகைப்படங்களைக் காண்பித்து, "இவர்கள் காண்பிக்கும் முத்திரையை ஏன் இவர் காண்பிக்க வேண்டும். இவர் அவர்களுடய ஆள் தானே? நான் கட்சி ஆரம்பிக்கும்போது வாழ்த்து சொல்லாத ராஜபக்சே மகன் இப்போது ஏன் வாழ்த்து சொல்லவேண்டும்?" என்று ஆவேசமாகக் கேட்டார். சீமான் ஒரு புறம் குற்றச்சாட்டுகள் வைக்க, போக்குவரத்து கட்டண உயர்வை எதிர்த்து சமத்துவ மக்கள் கட்சியின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்ற போது சரத்குமார், "நானும் ஆன்மிகவாதி தான். ஆனால் நான் இப்படி காட்டமாடேன். இது ஆட்டுடைய தலை" என்று பாபா முத்திரையைக் காண்பித்துக் கூறினார்.






இதற்கெல்லாம் பிறகு சமீபத்திய மாற்றமாக ரஜினி மன்ற லட்சினையில் (logo) முன்பிருந்த பாம்பு நீக்கப்பட்டது. பாம்பு, ராமகிருஷ்ணா மடத்துடைய லட்சினையை நினைவுபடுத்துவதாகவும் அதனால் பிற மதத்தை சேர்ந்த ரசிகர்கள், மக்கள் சற்று அந்நியமாக உணர வாய்ப்பிருப்பதாகவும் மன்ற நிர்வாகிகள் சிலர் தெரிவித்த கருத்தால்தான் பாம்பு நீக்கப்பட்டது என்று ரஜினிக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள். இந்த மாற்றங்களைப் பற்றி சிலர், ரஜினி இன்னும் குழப்பத்தில் தான் இருக்கிறார் என்று விமர்சிக்கின்றனர். 'ஆன்மிக அரசியல்' என்ற அவரின் பதம் ஏற்படுத்திய சலசலப்பைக் குறைத்து, இமயமலை, பாஜக நட்பு என்று தன் மேல் உள்ள பிம்பத்தை நீக்கும் வியூகமாகவும் இது பார்க்கப்படுகிறது. ரஜினியின் தனிப்பட்ட வாழ்க்கையில் அவர் இந்து மத நம்பிக்கைகளைக் கொண்டிருந்தாலும் அவரது ரசிகர்கள் அனைத்து மதத்தைச் சார்ந்தவர்களாக இருப்பது அனைவரும் அறிந்தது. உறுப்பினர்கள் சேர்க்கை, நிர்வாகிகள் நியமனம் எதிலும் மதம் சிறிதும் நுழையாமல் தான் இருக்கிறதாம். ரஜினியும் அதில் மிகுந்த கவனமாக இருக்கிறாராம்.

ஒரு புறம் குற்றச்சாட்டுகளும் எதிர்ப்புகளும் இருந்தாலும், ரஜினி ரசிகர்கள் கட்சிக்காக மாவட்ட வாரியாக உறுப்பினர்களைச் சேர்ப்பதில் தீவிரமாக இறங்கிவிட்டனர், நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். மறுபக்கம் கமலும் ஆலோசனைக் கூட்டம், சந்திப்பு என்று தீவிரமாக களமிறங்கிவிட்டார். கமலின் நாத்திக அரசியலும் ரஜினியின் ஆன்மிக அரசியலும் மோதிக் கொள்ளுமா அல்லது கை கோர்த்து தமிழகத்தின் திராவிட அரசியலை எதிர்க்குமா? முத்திரையில் ரஜினி செய்திருக்கும் மாற்றங்கள் கொள்கையிலும் நிகழுமா என்பதை யூகங்கள் தாண்டி ரஜினியின் வியூகங்கள் தான் சொல்ல வேண்டும்.

ஹரிஹரசுதன்

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT