Skip to main content

தொகுதிகளை பறிகொடுக்கும் சிட்டிங் எம்.பி.க்கள்? எடப்பாடிக்கு நெருக்கடி!

Published on 07/03/2019 | Edited on 07/03/2019

ரட்டை இலை சின்னம் கிடைத்த தெம்பில் அ.தி.மு.க.வின் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் தீவிரம் காட்டிவருகிறார் எடப்பாடி பழனிசாமி. ஆனால், அது அவ்வளவு சுலபமானதல்ல என்கிற ரீதியில் போர்க்கொடி உயர்த்துகிறார்கள் அமைச்சர்கள். இதனால் இடியாப்பச் சிக்கலில் தவிக்கிறார் எடப்பாடி.

நாடாளுமன்றத் தேர்தலோடு தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலையும் சேர்த்து நடத்து வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வைத்திருக் கிறது தலைமைத் தேர்தல் ஆணை யம். இடைத்தேர் தல் நடத்தப்பட வேண்டும் என் கிற எடப்பாடி அரசின் விருப் பத்தையும் தேர்தல் அதிகாரிகள் அறிந்து வைத்திருக் கின்றனர்.

இந்த நிலையில், நாடாளுமன்றம் மற்றும் இடைத்தேர்தல் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை விரைந்து அறிவித்து தேர்தல் பணிகளை துவக்க வேண்டுமென்கிற திட்டத்தில் வேட்பாளர்களை தேர்வு செய்ய அமைச்சர்களிடமும் மூத்த நிர்வாகிகளிடமும் ஆலோசித்துள்ளார் எடப்பாடி. இதில்தான் ஏகப்பட்ட வில்லங்கங்கள் வெடித்திருக்கின்றன.

admk-seat

அ.தி.மு.க.வின் மேல்மட்டத்தில் பரபரப்பாக விவாதிக்கப்படும் இந்த வில்லங்கங்கள் குறித்து விசாரித்தபோது, தேர்தல் நடக்கும் தொகுதிகளில் 60 சதவீதம் எடப்பாடி எடுத்துக்கொள்ள மீதி தொகுதிகளை ஓ.பி.எஸ்.ஸும் அமைச்சர்களும் பகிர்ந்து கொள்வது என விவாதிக் கப்பட்டது. ஆனால், இதனை யாருமே ஒப்புக்கொள்ளவில்லை.

குறிப்பாக, எம்.பி.க்களின் வெற்றியை விட, இடைத்தேர்தல் வெற்றி மீது அதிக கவனமும் அக்கறையும் காட்டும் எடப்பாடி, இடைத்தேர்தலுக்கான 21 தொகுதிகளிலும் தனது ஆதரவாளர்களையே களமிறக்க வேண்டும் என நினைக்கிறார். பல கூட்டல்-கழித்தல் கணக்குகளைப் போட்டுப்பார்த்த அவர், 21 தொகுதிகளில் 12 இடங்களை ஜெயித்து விட்டால் தனது ஆட்சிக்கு பெரும்பான்மையை கொண்டு வந்துவிடலாம் எனவும், ஆட்சியின் ஆயுள் காலம் முடியும் வரை ஆபத்து இருக்காது எனவும் நம்புகிறார். ஆனால், அந்த 12 பேரும் தனது ஆளாக இருக்க வேண்டுமென்பதும் அவரது திட்டம். அதற்காக, "இடைத்தேர்தல் வேட்பாளர் களை என்னிடம் விட்டுவிடுங்கள். அதை நான் பார்த்துக்கொள்கிறேன். எம்.பி. தொகுதிகளை மட்டும் விவாதிப்போம்' என எடப்பாடி சொல்ல, துணை முதல்வர் ஓ.பி.எஸ்., அமைச்சர்கள் சண்முகம், அன்பழகன், வீரமணி, உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன், கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர்களான கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் உள்பட பலரும் இதனை ஏற்கவில்லை.

edapadi palanisamy


இடைத்தேர்தலை எதிர்கொள்ளவிருக்கும் பாப்பிரெட்டிப்பட்டி, ஓசூர் ஆகிய 2 தொகுதிகளில் ஒரு தொகுதியை எனக்கு ஒதுக்கவேண்டும்; அதில் நான் போட்டியிட விரும்புகிறேன்'' என சொல்லியுள்ளார் கே.பி.முனுசாமி. ஆனா, தனது ஆதரவாளரான பென்னாகரம் அன்பழகனுக்காக பாப்பிரெட்டிப்பட்டியைக் கேட்டு அடம் பிடிக்கிறார் அமைச்சர் அன்பழகன். அதேபோல, "ஓசூர் தொகுதியை நான் சொல்லும் நபருக்குத் தான் ஒதுக்க வேண்டும்' என மல்லுக்கட்டுகிறார் பதவி பறிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி. இந்த தொகுதிகளில் இப்படி பிரச்சினை வெடிப்பதால் "கிருஷ்ணகிரி எம்.பி. தொகுதியில் போட்டியிடுங்கள்' என முனுசாமி யிடம் எடப்பாடி சமாதானம் பேச, அதனை ஏற்க வில்லை முனுசாமி. இடைத்தேர்தலில் முனுசாமிக்கு வாய்ப்புத் தரக்கூடாதென அமைச்சர்கள் சிலரும் எடப்பாடியிடம் கொடி பிடிக்கின்றனர்.

அதேபோல, ஆண்டிப்பட்டி, பெரியகுளம் மற்றும் ஒட்டப்பிடாரம் தொகுதிகளில் தனது ஆதரவாளர்களை களமிறக்க போர்க்கொடி தூக்குகிறார் ஓ.பி.எஸ். ஆனால், "ஒட்டப்பிடாரம் தொகுதியை என்னிடம் விட்டுடுங்கள்' என்கிறார் அமைச்சர் கடம்பூர் ராஜு. அதேபோல, குடியாத் தம், சோளிங்கர், ஆம்பூர் தொகுதிகளை தனது ஆதர வாளர்களுக்கு வாங்கித்தர அமைச்சர்கள் சண்முக மும், வீரமணியும் களத்தில் குதித்துள்ளனர். இப்படி ஒவ்வொரு தொகுதியிலும் வில்லங்கம் முளைப்பதால் இடியாப்பச் சிக்கலில் தவிக்கிறார் எடப்பாடி'' என விவரிக் கின்றனர் அமைச்சர்களுக்கு நெருக்க மானவர்கள்.

kp.munusamy


இடைத்தேர்தல் வில்லங்கம் இப்படியிருக்க, தங்களது வாரிசுகளுக் காகவும் குடும்பத்தினர்களுக்காகவும் எம்.பி. தொகுதிகளை குறிவைத்து அமைச்சர்களும் மூத்த நிர்வாகிகளும் மல்லுக்கட்டத் துவங்கியுள்ள னர். தனது சகோதரர் ராதாகிருஷ்ணனுக்காக ஆரணி தொகுதியை கேட்கிறார் அமைச்சர் சண்முகம். ஆனால், அந்த தொகுதி தோழமை கட்சிக்கு ஒதுக்க வேண்டிய சூழல் இருக்கிறது என எடப்பாடி சொல்ல, ஆரணியை அ.தி.மு.க. விட்டுக்கொடுக்கக் கூடாது என சண்முகம் அழுத்தம் கொடுப்பதால் பிரச்சினை வெடித்து வருகிறது.

தென்சென்னையின் எம்.பி.யாக இருப்பது அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்த்தன். ஆனால், இத்தொகுதியை குறிவைத்து பா.ஜ.க. காய் நகர்த்தியிருப்பதால் டென்ஷனாகியிருக்கிறார் ஜெயக்குமார். அதேபோல, தேனி தொகுதியில் தனது மகன் ரவீந்திரநாத்தை களமிறக்க எடப்பாடியிடம் பேசி ஓ.பி.எஸ். முடிவு செய்திருக்க, எம்.எல்.ஏ. ஜக்கையன் தனது மகனுக்கு தேனியை கேட்க, எடப்பாடிக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.

இதற்கிடையே, அ.தி.மு.க.வில் உள்ள 37 சிட்டிங் எம்.பி.க்களில் ஒரு சிலரைத் தவிர பெரும்பாலானோர் மீண்டும் போட்டியிட வாய்ப்புக்கேட்டு மல்லுக்கட்டுகின்றனர். இதில், தோழமைக் கட்சிகளால் தொகுதிகளை பறிகொடுக்கும் சிட்டிங் எம்.பி.க்களில் பலர் தங்கள் மாவட்டத்தில் இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிகள் இருந்தால் அதில் போட்டியிட வாய்ப்புக் கேட்டு நச்சரிக்கவும் தயாராகி வருகின்றனர்.

இந்த நிலையில், எம்.பி. தொகுதி மற்றும் இடைத்தேர்தல் தொகுதிகளில் வாய்ப்பளிக்கப்படும் வேட்பாளர்களின் பட்டியலை தன்னிச்சையாக தயாரித்து வைத்திருக்கிறார் எடப்பாடி. அதேபோல, அமைச்சர்களின் சிபாரிசுகளையும் சிட்டிங் எம்.பி.க்களையும் இணைத்து ஒரு பட்டியலை தயாரித்துள்ளார். இந்த இரண்டு பட்டியல்களிலும் இருப்பவர் களின் சாதக பாதகங்களை சேகரித்து தருமாறு உளவுத்துறையினருக்கு உத்தரவிட்டிருக்கிறாராம் எடப்பாடி பழனிசாமி. உளவுத்துறையின் ரிப்போர்ட்டை வைத்தே வேட்பாளர்களுக்கு அடிக்கப் போகுது லக்கி ப்ரைஸ். ஆக, வேட்பாளர்கள் தேர்வில் குழாயடிச் சண்டைக்கு தயாராகிறது அ.தி.மு.க.

அதேசமயம், வேட்பாளர் தேர்வில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடியை சமாளிக்க முடியாமல் திணறும் எடப்பாடிக்கு, அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனிடமிருந்து மா.செ.பதவி பறிக்கப்பட்டதில் அதிருப்தியடைந்துள்ள அவரது ஆதரவாளர்கள் கட்சி தலைமையகத்தை முற்றுகையிட்டு நடத்தும் போராட்டம் பெரிய தலைவலியைக் கொடுத்து வருகிறது.