ADVERTISEMENT

அரசியல் ஆதாயம் தேடுவது பாவமான காரியமில்லை

10:13 PM Dec 20, 2017 | Anonymous (not verified)

அரசியல் ஆதாயம் தேடுவது பாவமான காரியமில்லை - நாஞ்சில் சம்பத் அதிரடி!



அரசியலில் ஆதாயம் தேடுவது பாவமான காரியமில்லை என்று டி.டி.வி. தினகரன் அணியைச் சேர்ந்த நாஞ்சில் சம்பத் கருத்துத் தெரிவித்தார்.

இதுகுறித்து நக்கீரன் இணையதளம் எழுப்பிய கேள்விக்கு அவர் அளித்த பதில்...

வீடியோவை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று கே.சி.பழனிசாமியும், அரசியல் ஆதாயத்திற்காகத்தான் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது என்று அமைச்சர் ஜெயக்குமாரும் கூறியிருக்கிறார்களே?

ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று அவர்கள் சொல்வதை நான் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன். ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று சொன்னால் ஆய்வு செய்யக்கூடியவர்கள் எடுக்க வேண்டிய முடிவு. விசாரணை கமிசன் முன்பு ஒப்படைக்க வேண்டும் என்று சொன்னால், நாங்கள் ஒப்படைக்க தயாராக இருக்கிறோம்.

இதில் அரசியல் ஆதாயம் தேடுகிறார்கள் என்றால், அரசியல் ஆதாயம் தேடுவது ஒன்றும் பாவமில்லை. பாவமான காரியமில்லை. ஆனால் அரசியல் ஆதாயத்திற்காக இப்போது வெளியிடப்படவில்லை. நாட்டு மக்கள் மத்தியில் ஒரு அவப்பெயரை திட்டமிட்டு அவர்கள் உருவாக்குவதற்கு முயற்சித்தார்கள். 33 ஆண்டு காலம் தாயாக இருந்து, தாங்கி நின்றவர்களை கொச்சைப்படுத்தினார்கள். துரோகம் செய்தார்கள். நாட்டு மக்கள் மத்தியில் அப்படியும் இருக்குமோ என்ற எண்ணம் இருந்தது. அதனை பொதுக்கூட்டங்கள் மூலமாக என்னைப்போன்றவர்கள் தெளிவுப்படுத்தினோம். அதற்குப் பிறகும் அத்தகைய எண்ணம் இருக்கக் கூடாது என்பதற்காக ஒரு ஜனநாயக நாட்டில் எங்களுக்கு விருப்பப்பட்ட நாளில் வெளியிட்டிருக்கிறோம். இதில் வேறு எதுவும் உள்நோக்கம் இல்லை.

மருத்துவமனையில் ஜெயலலிதாவே எடுக்க சொன்னார். நலம் பெற்று வந்த பின்னர் நானே பார்க்க வேண்டும் என்று சொன்னார். இந்த வீடியோவை வெளியிடுவோம் என்று ஏற்கனவே மதுரையில் பெங்களுரு புகழேந்தி அறிவித்தார். அந்த வீடியோ ஆதாரங்கள் எங்களிடம் இருக்கிறது என்பதை ஜெயா தொலைக்காட்சி செயல் அதிகாரி விவேக் ஜெயராமன் ஏற்கனவே அறிவித்திருக்கிறார். இன்றைக்கு வெற்றிவேல் வெளியிட்டிருக்கிறார்.

அம்மாவால் நிராகரிக்கப்பட்ட கே.சி.பழனிச்சாமி, ஜெயக்குமார் போன்றவர்கள் இந்த வீடியோ பற்றி கேட்கக் கூடாது. ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயலலிதா நிற்பதற்கு ஏதுவாக தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தவர் வெற்றிவேல். இந்த இக்கட்டான நிலையில் தினகரன், சசிகலாவுக்கு ஆதரவாகவும், நம்பிக்கையோடும், விசுவாசமாகவும் இருக்கிறார். இன்று ஆதிக்க சக்திகள் அதிகாரத்தின் துணை கொண்டு, சதிகாரர்களோடு மறைமுகமாக கைகோர்த்துக்கொண்டு ஆடாத ஆட்டம் போடும் வேளையில், ஆர்.கே.நகர் தேர்தலில் எங்கள் அணியை வழி நடத்த எல்லா உரிமைகளும் வெற்றிவேலுக்கு இருக்கிறது. ஆகையால் இந்த வீடியோவை அவர் வெளியிட்டிருக்கிறார். அதனால் அவரை வணங்குகிறேன் என்றார்.

வே.ராஜவேல்

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT