Skip to main content

தனிமை போதும்... மரணம் வேண்டும்... - தன் இனத்தின் கடைசி ஆண்மகனின் கதை!   

உலகின் அனைத்து உயிரினங்களுக்கும் பிறப்பு என ஒன்று  இருப்பதை போல இறப்பு என்ற ஒன்றும் உண்டு. ஆனால் அந்த இறப்பானது அந்த இனத்தின் கடைசி உயிராக இருந்தால் கண்டிப்பாக அது துயரமானது, பூமிக்கு ஏற்படும் இழப்பு. அப்படித்தான் அழிந்து நிற்கிறது வடக்கு வெள்ளை ஆண் காண்டாமிருக இனம். கடந்த மார்ச் 20-ஆம் தேதி இறந்த 'சூடான்' எனும் காண்டாமிருகம்தான் கடைசி வெள்ளை ஆண்  காண்டாமிருகம்.

 

Sudan feeding1975-ல் சூடானிலுள்ள ஷாம்பே வேட்டை காப்பிடத்தில் குட்டியாக பிடிக்கப்பட்ட இந்த காண்டாமிருகம், செக் குடியரசின் வனவிலங்கு காப்பகமொன்றுக்குக் கொண்டுசெல்லப்பட்டு பின், அந்த இன அழிவைத் தடுக்க கென்யாவின் ஓல்-பெஜெடா காப்பகத்தில் வளர்க்கப்பட்டது. சூடான், கென்யாவின் மண்ணில் கால் வைத்ததிலிருந்து இறந்த கடைசி நிமிடம் வரை துப்பாக்கி ஏந்திய காவலுடன் தான் சுற்றி வந்தது. அந்த அளவிற்கு இப்படி ஒரு பெரிய விலங்கான காண்டாமிருக இனம் பாதுகாக்கப்பட வேண்டிய நிர்பந்தத்திற்கு காரணம் மனிதனே. ஏனெனில் காண்டாமிருகம் மட்டுமல்ல பல காட்டு விலங்குகள் இந்த நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றன. காரணம் சர்வதேச வேட்டையாடல். இதுவரை உலகில் சுமத்ரா காண்டாமிருகம், இந்திய காண்டாமிருகம், ஜாவா காண்டாமிருகம், கருப்பு காண்டா மிருகம், வெள்ளை காண்டாமிருகம் என ஐந்து வகை காண்டாமிருகங்கள் உள்ளன. அதில் வடக்கு வெள்ளை காண்டாமிருகத்தின் கடைசி ஆண் இனம் சூடானுடன் முற்று பெற்றுவிட்டது. சூடானுடைய மகள் நிஜினும்,பேத்தி பதுவும் தான் இப்போது மிஞ்சி இருக்கும் இரண்டே வடக்கு வெள்ளை பெண் காண்டாமிருகங்கள் ஆகும்.

பொதுவாக காண்டாமிருகங்களின் வாழ்நாள் காலம் 50 ஆண்டுகள்தான். சூடானுக்கு 45 வயது. கிட்டத்தட்ட தன் வாழ்நாளை வாழ்ந்து முடித்தது என்றாலும் அந்த இனம் இனி தொடர வழியில்லை என்பதே உலகமெங்கும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 1900களில் 5 லட்சமாக இருந்த காண்டாமிருகங்கள் எண்ணிக்கை 1970-களில் 70 ஆயிரம் என  குறைந்துவிட்டது. சீனா, வியட்நாம் ஆகிய நாடுகளில்  கடந்த 2013 நிலவரப்படி காண்டாமிருகக் கொம்பு ஒரு கிலோவின் விலை சுமார் 60,000 அமெரிக்க டாலர்களாம் (சுமார் 36 லட்ச ரூபாய்). இந்த விலைக்காகத்தான் வேட்டைக்காரர்கள் இந்த இனத்தை அழித்துமுடித்திருக்கின்றனர். 

 

Sudan lastசூடான், தான் பிறந்த நாட்டின் பெயரால் அழைக்கப்பட்டது. கென்யாவுக்கு இது வந்த பொழுது இதன் நண்பனான சுனியும் உடனிருந்தது. சுனி கடந்த 2014ஆம் ஆண்டு மறைந்து விட, சூடான் உலகிலேயே தன் இனத்தின் ஒற்றை ஆண் ஆனது. அது கடும் தனிமையில் தவித்ததாக அதன் காப்பாளர்கள் கூறியுள்ளனர். அந்தத் தனிமையிலும் சூடான் மிகவும் தன்மையாகவும், தன் இனத்திற்கு மட்டுமல்லாது அழிந்து வரும் அதனை உயிரினங்களின் பிரதிநிதியாகவும் நடந்துகொண்டதாக காப்பகத்தின் அதிகாரிகள் கூறியுள்ளனர். சூடான் போன்ற இன்னொரு ஆண் காண்டாமிருகத்தை செயற்கை கருவூட்டல் முறையில் உருவாக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறினாலும் சூடானின் மகள் நிஜினும், பேத்தி பதுவும் இயற்கையாக கருவுருவதற்கான ஆற்றலை இழந்திருப்பதால் சோதனை குழாய் மூலம் கருத்தரிப்பை மேற்கொண்டு வாடகை தாய் முறையில் இந்த இனத்தைக் காக்க முயற்சித்து வருகிறார்கள் அறிவியலாளர்கள். ஆனால் இது கைகொடுக்குமா இல்லையா என்பது கேள்விக்குறிதான். 

இப்படி அழிவின் விளிம்பில் இருப்பது, உருவத்தில் பெரிய காண்டாமிருகங்கள் மட்டுமல்ல சிட்டுகுருவிகள் போன்ற சின்ன சின்ன உயிர்களும்தான். பல காட்டுவிலங்குகள் வேட்டையால் இன்று அழிவை சந்திக்கும் நிலையிலுள்ளன. அவற்றில் பனிக்கரடி, நீர்யானை, சிவிங்கிப்புலி, நீலமஞ்சள் பெருங்கிளி, டிங்கோ நாய், கடல் உயிரினங்களில் வெள்ளை திமிங்கலம், திமிங்கலச் சுறா போன்றவை அழியும் தருவாயிலுள்ள விலங்குகள் ஆகும். ஒரு குறிப்பிட்ட விலங்கினம் முற்றுப்பெறுவது என்பது, சமூக விலங்கான மனிதனையும் ஒருநாள் இன அழிவு தொடும் என்பதன் அறிகுறிதான். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்