Vijay Sethupathi

Advertisment

மக்களுக்கு விரோதமாக எந்தக் காரியம் நடந்தாலும் அதற்கு எதிராக தைரியமாக குரல் கொடுப்பவர் நடிகர் விஜய்சேதுபதி. அதற்காக ஆளும் தரப்பிடமிருந்து எதிர்ப்பையும் சம்பாதித்தவர்.

அதேபோல் 'மண்டி' என்கிற ஆன்லைன் விளம்பரத்தில் நடித்ததற்காக சிறு குறு வியாபாரிகளிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியபோது, தயங்காமல் மன்னிப்புக் கேட்டுவிட்டு, விளம்பரத்திற்கும் தடை போட்டவர் விஜய்சேதுபதி. அப்படிப்பட்ட விஜய்சேதுபதியின் கைகளில் இப்போது 'லாபம்', 'க/பெ.ரணசிங்கம்', 'துக்ளக் தர்பார்'’ உட்பட 5 படங்கள் உள்ளன.

'லாபம்'’ படத்தின் டைரக்டர் எஸ்.பி.ஜனநாதன், கம்யூனிச சித்தாந்தத்தின் மீது பற்றுள்ளவர் என்பதால், 'லாபம்- பகல் கொள்ளை' என சப்-டைட்டில் வைத்துள்ளார். முழுக்க முழுக்க முதலாளித்துவ அரசியல் பேசும் இப்படத்தின் தயாரிப்பாளர் விஜய் சேதுபதிதான். எஸ்.பி. ஜனநாதனின் 'புறம்போக்கு' படத்தில் நடித்தவர் விஜய்சேதுபதி. அந்தப் புறம்போக்கிற்கு உண்மையான அர்த்தத்தைச் சொன்னவர் எஸ்.பி.ஜனநாதன்.

Advertisment

'க/பெ.ரணசிங்கம்' படம் மணல் மாஃபியாக்களையும் குடிநீர் கொள்ளையர்களையும் பற்றிய கதையுடன் வருகிறது.

'துக்ளக் தர்பார்'’ படத்தில்தான் செம அரசியல் தர்பார் நடத்தியிருக்கிறார் விஜய்சேதுபதி. இப்படத்தை விஜய்யின் 'மாஸ்டர்' படத்தின் இணைத் தயாரிப்பாளர் எஸ்.லலித் தயாரிக்க, டெல்லி பிரசாத், தீனதயாளன் என்ற புதியவர் டைரக்ட் பண்ணியுள்ளார். படத்தின் படப்பிடிப்பு 50% முடிந்துள்ளது.

முடிந்துள்ள அந்தப் பாதியிலும் பண மதிப்பிழப்பால் மக்கள் அல்லாடியது, ஜி.எஸ்.டி. வரி, தினசரி ஏறும் பெட்ரோல் விலை என எல்லா பிரச்சினைகளையும் தங்களால் முடிந்த அளவுக்கு போட்டுத் தாக்கியுள்ளதாம் படக்குழு.

Advertisment

இந்தக் கரோனா ஊரடங்கு காலத்தில் திரைக்கதை எழுதுவதில் தேர்ச்சி பெற்றுள்ளார் விஜய்சேதுபதி. அந்த அனுபவத்தை வைத்து 'துக்ளர் தர்பார்' படத்தின் திரைக்கதையில் சில மாற்றங்கள் குறித்து டைரக்டர் டெல்லி பிரசாத்திடம் ஆலோசித்தாராம் விஜய்சேதுபதி.

அதன்படி இந்த லாக்டவுன் காலத்தில் கைதட்டச் சொன்னது, மணி அடிக்கச் சொன்னது, இங்கே ஆயிரம் ரூபாயைக் கொடுத்துவிட்டு டாஸ்மாக் கடையைத் திறந்தது, 28 நாளில் விஜய்மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வருவோம் எனச் சொன்னது, 20 லட்சம் கோடி எங்கே போச்சு, என்ன ஆச்சு என சகலத்தையும் துக்ளக் தர்பாரின் மீதிப் பாதியில் பிரித்து மேயப் போகிறார்களாம்.

‘நையாண்டி கிங்’ ரா.பார்த்திபன் இருப்பது படத்திற்குக் கூடுதல் சிறப்பு.