Advertisment

கொங்கு மண்டல தி.மு.க.வுக்கு முதல்வர் எடப்பாடி மீது பாசம்...? –குமுறும் உ.பி.க்கள்

ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அதிமுகவினர் உற்சாகமடைந்த பகுதி என்றால் கொங்கு மண்டலம் தான். அதேபோல் திமுகவினர் உற்சாகம் இழந்த பகுதியும் இந்த கொங்கு மண்டலம்தான். காரணம் இங்கு நடைபெற்ற தேர்தலில் யூனியன் கவுன்சிலர்கள் முதல் மாவட்ட கவுன்சிலர்கள் வரை அதிமுகவினரே அதிகமாக வெற்றி பெற்றுள்ளனர். திமுக இங்கு பெரிய அளவில் தோல்வியைத்தான் தழுவியுள்ளது. இதுபற்றி கொங்கு மண்டலத்தில் உள்ள சீனியர் திமுக உடன் பிறப்புகள் வேதனையோடு தெரிவிப்பது என்னவென்றால்,

Advertisment

"எம்ஜிஆர் காலம் தொடங்கி இன்றுவரை கொங்கு மண்டலம் என்றால் அது அதிமுகவின் கோட்டை என அக்கட்சியினர் கூறிவந்தனர். இது மறைந்த ஜெயலலிதா காலம் வரை பெரும்பாலும் அப்படித்தான் இருந்தது. திமுக இங்கு கொஞ்சம் பலவீனமான அமைப்பாகத்தான் இருந்தது. ஆனால் தலைவர் கலைஞர் மறைவிற்கு பிறகு தளபதி மு.க.ஸ்டாலின் கட்சி தலைமை பொறுப்புக்கு வந்து சந்தித்த முதல் நாடாளுமன்ற தேர்தல் சென்ற நாடாளுமன்ற தேர்தல். அதில் இந்தப் பகுதி முழுக்க திமுக மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதிமுகவின் கோட்டையை திமுக சுக்கு நூறாக உடைத்தது என்பது உண்மைதான்.

Advertisment

eps

ஆனால் இந்த உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுக்கு வெற்றி என்பது எதிர்பார்த்த அளவுக்கு கிடைக்கவில்லை. அதற்கு காரணம் வெளிப்படையாக சொல்ல வேண்டுமென்றால் அதிமுக முதலமைச்சரான எடப்பாடி பழனிச்சாமி மீது இந்த பகுதியில் உள்ள திமுக மாவட்ட செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகள் பலரும் பாசம் வைத்திருப்பதாகத்தான் தெரிகிறது.

கட்சியின் வெற்றி மட்டுமே ஒரே நோக்கம் என்று உழைக்காமல், சாதாரணமாக இந்த உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுபவர்கள் அவர்களே தங்கள் வெற்றிக்காக உழைக்கட்டும் என ஒதுங்கி விட்டனர். இதனால்தான் இந்தப் பகுதியில் திமுக அதிகப்படியான தோல்வியை சந்தித்திருக்கிறது.

எடப்பாடி பழனிச்சாமி இந்த கொங்கு மண்டல பகுதியை சேர்ந்தவர் என்பதோடு அவர் மீது ஒருவகையில் இங்குள்ள திமுகவினர் இணக்கமான அணுகு முறையைத்தான் கடைபிடிக்கிறார்கள். அது முற்றிலும் தவறானது.

எடப்பாடி பழனிச்சாமி மீது அவர்கள் வைத்திருக்கும் பாசத்திற்கு பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் கட்சி என்று வந்துவிட்டால் கட்சிக்காக தானே உழைக்க வேண்டும். குறிப்பாக இந்த மண்டலத்தில் உள்ள 8 மாவட்டத்தில் நீலகிரி மாவட்டம் மட்டும் தான் திமுகவின் கோட்டையாக இப்போதும் விளங்குகிறது. மற்ற கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், சேலம், நாமக்கல், தர்மபுரி இந்த 7 மாவட்டமும் திமுகவிற்கு ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. அதற்கு காரணம் இங்கு கட்சியை நிர்வாகம் செய்யும் முன்னணி நிர்வாகிகள் இந்த தேர்தலில் எந்தவித உழைப்பையும் செலுத்தவில்லை என்பதுதான் உண்மை. மா.செ.க்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால், வருகிற சட்டமன்ற தேர்தல் அதில் சீட் வாங்கி வெற்றி பெற்று தி.மு.க.ஆட்சியில் அமைச்சராக வேண்டும் அதுதான் அவர்களின் ஒரே இலக்காக உள்ளது.

இதில் ஒரு ஆறுதலான விஷயம் ஈரோடு தெற்கு மாவட்டத்தில், மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் சு. முத்துசாமி பாராட்டப்பட வேண்டியவர். அதற்கு காரணம் இந்த தெற்கு மாவட்டத்தில் உள்ள நான்கு மாவட்ட கவுன்சிலர் பதவியில் மூன்று தி மு க வுக்கு வந்துள்ளது. அதேபோல் ஐந்து ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிகளில் 3 திமுகவுக்கு வந்துள்ளது. தெற்கு மாவட்டத்தில் தி.மு.க. அ.தி.மு.க.வை விட கூடுதலாக வெற்றி பெற்றுள்ளது. ஆனால் இதே ஈரோடு மேற்கு மாவட்டத்தில் சொல்லும்படி எதுவுமே இல்லை. அதே போல் தான் மற்ற பல மாவட்டங்களிலும் திமுக வெற்றி பெறாமல் நல்ல வாய்ப்பை இழந்துள்ளது. கட்சித் தலைமை இனிமேலாவது அ தி மு க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது பாசம் வைத்துள்ள திமுக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம் என்றனர். கொங்கு மண்டலத்தில் தி.மு.க.தோல்வியை ஆய்வுக்கு உட்படுத்தினால் உண்மை நிலை தி.மு.க. தலைமைக்கு தெரிய வரும் என்றனர்.

admk eps kongu local body election Zone
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe