ADVERTISEMENT

உள்ளாட்சித் தேர்தலை குழப்பும் எடப்பாடி அரசு!

02:45 PM Dec 09, 2019 | rajavel

ADVERTISEMENT

ஒரு திடமான முடிவு எடுக்காமலும் உயர் நீதிமன்ற, உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களை கடைப்பிடிக்காமலும் தமிழக அரசும் தேர்தல் ஆணையமும் போக்கு காட்டி வருகிறது. 2016 சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு உள்ளாட்சி தேர்தல் நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டது. அதில் முறையான இட ஒதுக்கீடு கடைப்பிடிக்கப்படவில்லை என்பதை 2016 நவம்பர் 5-7 நமது நக்கீரன் இதழில் ''உள்ளாட்சி ஒதுக்கீடு இரட்டை நிலை'' என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டோம். அதிலே உள்ளாட்சியில் முறையான இட ஒதிக்கீடு வரையரைகளை கடைபிடிக்கவில்லை என்பதை விரிவாகவே செய்தி வெளியிட்டோம்.

ADVERTISEMENT



அப்போது திமுக தரப்பில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இப்போது வரை அதை காரணம் காட்டி தேர்தல் ஆணையம் தேர்தலை இழுத்தடித்து வந்தது. இப்போது உச்சநீதிமன்ற உத்தரவுப்படி 9 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் தேர்தல் நடத்தலாம் என்ற உத்தரவை அடுத்து, மீண்டும் அவசர கோலத்தில் அள்ளித் தெளித்து உள்ளாட்சியில் தங்கள் கட்சிக்காரர்களை பதவியில் அமர்த்த துடியாய் துடிக்கும் முயற்சியாக செய்கிறது எடப்பாடி அரசு.

நடக்கப்போகும் தேர்தலில் குழப்பமோ குழப்பம் என்கிறார் கடலூர் மாவட்டம் திருமுட்டம் ஒன்றியம் கீரனூர் செந்தில்குமார். இவர் மேலும் கூறுகையில், 'ஒன்பது மாவட்டங்களுக்கு மட்டும் ஆறு மாதம் கழித்து தேர்தல் நடத்தினால் இப்போது நடத்தப்போகும் 27 மாவட்டங்களில் உள்ளாட்சி பதவி காலம் முன்கூட்டியே முடியும் அப்போது மேற்படி ஒன்பது மாவட்ட உள்ளாட்சி பதவிகளில் உள்ளவர்கள் எங்களுக்கு இன்னும் ஆறு மாத பதவிக்காலம் உள்ளது. அதை இழக்க முடியாது என்று நீதிமன்றம் செல்ல மாட்டார்களா? எனவே 38 மாவட்டங்களுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தினால் நல்ல தீர்வாக அமையும்.

இது ஒரு பக்கம் என்றால் உச்ச நீதிமன்றம் 1995 விதி 6.ன் சட்டப்படி அனைத்து மட்டத்திலும் தமிழக தேர்தல் ஆணையம் முறையாக சரியாக உள்ளாட்சி பதவிகளில் இட ஒதுக்கீடுகளை வரையறை முறைகளை சரியாக ஆய்வு செய்து திருத்தம் செய்து பட்டியலை வெளியிட்டு அதன் படிதேர்தல் நடத்த பலமுறை முறைசொல்லியும் தமிழக தேர்தல் ஆணையம் உருப்படியாக எதையும் செய்யவில்லை. குளறுபடிகளை மட்டுமே செய்துள்ளது. இது மக்களை ஏமாற்றும் செயல்.

உதாரணத்திற்கு எங்கள் கீரனூர் ஊராட்சி சக்கரமங்கலம், கார்மாங்குடி, வல்லியம் ஆகிய நான்கு ஊராட்சிகள் சேர்ந்து ஒரு ஒன்றிய கவுன்சிலர் தொகுதியாக உள்ளது. இந்த தொகுதி பஞ்சாயத்துராஜ் சட்டத்தின்படி 1996 முதல் 2006 வரை தனித் தொகுதியாக (பட்டியல் இன மக்கள்) உள்ளது. அதில் பத்தாண்டுகள் பொது தொகுதியாகவும் அதன் பிறகு 10 ஆண்டுகள் தனி பெண்கள் தொகுதியாகவும் என 20 ஆண்டுகள் 2016 வரை இருந்தது. இப்போது மீண்டும் தனி பொது தொகுதியாகவே அறிவிக்கப்பட்டுள்ளது. பட்டியல் இதை மாற்றியமைத்து திருத்தம் செய்து சுழற்சி முறையில் இதை பொதுத் தொகுதியாக மாற்றி இருக்க வேண்டும்.


இது மட்டுமல்ல ஒரு கிராம ஊராட்சியில் உள்ள இரண்டு வார்டுகளை பக்கத்தில் உள்ள ஒன்றிய கவுன்சில் தொகுதியில் மாற்றியுள்ளனர். உதாரணத்திற்கு ஓட்டிமேடு ஊராட்சி உள்ள ஒரு வார்டை சிறுவரப்பூர் ஒன்றிய கவுன்சிலர் தொகுதியுலும் இன்னொரு வார்டை கம்மாபுரம் ஒன்றிய கவுன்சிலர் தொகுதியிலும் என ஒரு ஊராட்சியை இரண்டாக கூறுபோட்டு பிரித்து வைத்துள்ளனர்.



அதேபோல் நல்லூர் ஒன்றியம் கூடலூர் ஊராட்சியில் உள்ளது. குடிக்காடு இது தனி வார்டு. இதை ஒன்றிய கவுன்சிலர் தேர்தலுக்கு மட்டும் தொளார் ஒன்றிய கவுன்சிலர் தொகுதியில் சேர்க்கப்பட்டுள்ளது. வாக்காளர்கள் எப்படி மாறி மாறி வாக்களிப்பார்கள். ஒன்றியக்குழு உறுப்பினர்கள் தங்கள் திட்ட பணிகளை எந்த அடிப்படையில் செய்வது. இப்படி ஏகப்பட்ட குழப்படிகள் தமிழகம் முழுவதும் செய்துள்ளது எடப்பாடி அரசு. இப்படிப்பட்ட குறைகளை எல்லாம் நீக்கி விட்டு தேர்தல் நடத்தினால்தான் அது முறையான தேர்தலாக இருக்கும். இதை சுட்டி காட்டி தான் திமுக தலைவர் நீதிமன்றம் செல்ல வைத்தார் அவரை குறை சொல்கிறார் எடப்பாடி பழனிசாமி' என்கிறார்.

திமுக பிரமுகர் செந்தில்குமார், சக்கரமங்கலம் வீர வன்னியன் என்ற இளைஞர் கூறும்போது, பல ஊராட்சி தலைவர் பதவிகள் 20 ஆண்டுகளாகவே மாற்றப்படவில்லை. கார்மாங்குடி, பவழங்குடி ஆகிய ஊர்களில் பழங்குடியின மக்கள் (எஸ்டி) வாழ்கிறார்கள். இவர்களுக்கு தலைவர் பதவியும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. ஒரு வார்டு உறுப்பினர் பதவி கூட ஒதுக்கப்படவில்லை. இதுமட்டுமா? தேர்தல் நடைபெறாத புதிதாக பிரிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ளது சங்கராபுரம் ஒன்றியம். இதிலுள்ள சோழம்பட்டு ஒன்றிய கவுன்சிலர் தொகுதி 20 ஆண்டுகளாக பட்டியலின தனி தொகுதியாகவே உள்ளது. அதேபோல் நெடுமானூர் ஒன்றிய கவுன்சிலர் தொகுதி 20 ஆண்டுகளாக பொதுத் தொகுதியாக உள்ளது. இதையெல்லாம் மாற்றியமைக்க வேண்டாமா? 27 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தலை நடத்தி விட்டு மீதமுள்ள ஒன்பது மாவட்டங்களுக்கு அடுத்துதேர்தல் நடத்தினால் நடந்து முடிந்த தேர்தலின் தாக்கம் அதில் பிரதிபலிக்கும்.

மேலும் சட்டமன்ற இடைத்தேர்தலில் ஆளும் கட்சிகாரர்கள் பல மாவட்டங்களிலிருந்து சென்று அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் பணம் என கொடுத்து வெற்றி பெறுவது போல் 9 மாவட்ட மற்றும் நகர்ப்புற தேர்தலில் தங்கள் வித்தையை காட்டி வெற்றி பெறவே இதுபோன்ற குளறுபடிகளை தேர்தல் ஆணையம் அரசின் துணையோடுசெய்து வருகிறது என்கிறார் இளைஞர் வீர வன்னியன்.

நாட்டுக்கு மூன்று அரசுகள் இருக்கவேண்டும். ஒன்று பஞ்சாயத்து அரசு, இரண்டு மாநில அரசு, 3 மத்திய அரசு. அரசியல் சட்டத்தின் கோட்பாடு என்னவென்றால் முதல் அரசை தங்கள் பிரதிநிதிகளை மக்கள் நேரடியாக தேர்ந்தெடுத்து அதிகாரத்தில் அமர்த்துகிறார்கள். மற்ற இரண்டு அரசுகளும் மக்களின் பிரதிநிதிகளை கொண்டு ஆட்சி செய்கிறார்கள். மேற்படி இரண்டு அரசுகளும் சேர்ந்து, மக்கள் நேரடியாக தேர்வு செய்யும் முதல் அரசை நசுக்கும் வேலையை செய்து வருகிறது. இந்த புரிதல் ஆட்சியாளர்களுக்கு இல்லையோ என்ற சந்தேகம் எழுகிறது. எனவே முறையான வரைவுகள் ஒதுக்கீடுகள் செய்யப்படாமல் தேர்தல் நடத்தினால் பலர் மீண்டும் மீண்டும் நீதிமன்றங்களின் கதவுகளை தட்டி கொண்டு தான் இருப்பார்கள். நீதிமன்றங்கள் தேர்தல் ஆணையத்தின் தலையில் குட்டிக் கொண்டே தான்இருக்கும். இதுதான் நடக்கப் போகிறது என்கிறார்கள் மக்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT