Skip to main content

பால்ய திருமணத்தால் பாழான வாழ்க்கை! ‘டாப் கியர்’ போட்டு முன்னேறிய செல்வி!

Published on 08/03/2019 | Edited on 08/03/2019

மார்ச் 8, சர்வதேச மகளிர் தினம்! சாதனை படைத்த பெண்கள் நம்மையும் அறியாமல் நம் நினைவுக்கு வருகிறார்கள். ஆதரவற்ற பெண்கள் நல்வாழ்க்கை வாழ்வதே, நம்நாட்டில் பெரும் சாதனைதான்! 

 


பெரும்பாலான பெண்கள்,  கணவன் இறந்துவிட்டாலோ, பிரிந்துவிட்டாலோ, நிர்க்கதியாகிவிட்டோம் என்று உடைந்துபோய் ஒரு மூலையில் உட்கார்ந்து விடுவார்கள். மற்றொரு ஆண் தயவை எதிர்பார்த்து வாழ்க்கையை நகர்த்துவதே வழக்கத்தில் உள்ளது. செல்வி அப்படி கிடையாது. அதனால்தான், 2018-ல் மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சார்பில் சாதனைப் பெண்மணி என்ற விருதை அவருக்கு வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த். 

 

நம்மில் இன்னும் பலருக்கு செல்வியைத் தெரியாமல் இருக்கலாம். அல்லது, அவருடைய பெயர் மறந்துபோயிருக்கலாம். மகளிர் தினமான இன்று, அவர் குறித்து தெரிந்துகொள்வோம்!

 

selvi

 

கர்நாடகா மாநிலம் -  மைசூர்  அருகிலுள்ள  குக்கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வி. இவரைப் பற்றிய ஆவணப்படம் தற்போது  நெதர்லாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் திரையிடப்பட்டுள்ளது, அந்த அளவுக்குப் பிரபலமடைந்துவிட்டார். 

 

தமிழகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு 14 வயதில் கட்டாயத் திருமணம் செய்துவைக்கப்பட்டார் செல்வி. கொடுமைக்கார கணவனிடமிருந்து தப்பித்து, 18 வயதில் மைசூரிலுள்ள மகளிர் காப்பகம் ஒன்றில் அடைக்கலமானார். தனக்கான வாழ்க்கை குறித்த தேடல் இருந்ததால், அக்காப்பகத்தின் உதவியுடன், ஆர்வமாக டிரைவிங் கற்றுக்கொண்டார். 2004-ல் வாடகைக் கார் ஓட்டும் அளவுக்கு முன்னேறினார். அதனால், தென்னிந்தியாவில் டாக்ஸி ஓட்டும் முதல் பெண்மணி என்ற பெயர் அவருக்குக் கிடைத்தது. பிறகு சொந்தமாக டாக்ஸி வாங்கி ஓட்டிய செல்வி, படிப்படியாக லாரி போன்ற கனரக வாகனங்களையும் ஓட்டத் தொடங்கினார். 2014-ல் ஹெவி லைசென்ஸ் பெற்றார். 

 

selvi

 

2014-ல் இந்தியாவுக்கு சுற்றுலா வந்தார் கனடாவைச் சேர்ந்த எலிசா பலோச்சி. அவர்,  செல்வியின் டாக்ஸியில் பயணித்தார். அப்போது, செல்வி வெகு லாவகமாக கார் ஒட்டுவதைக் கண்டு வியந்த அவர், வாழ்க்கையில் செல்வி பட்ட கஷ்டங்களைக் கேட்டார். தனக்குப் பல கொடுமைகளை இழைத்த கணவன், கடைசியில் கைவிட்டதையும், குழந்தைகள் இருவரையும் காப்பாற்றுவதற்காக வைராக்கியத்துடன் இத்தொழிலுக்கு வந்ததையும் அவரிடம் விவரித்தார் செல்வி. 

 

selvi

 

செல்வியின் சோகக்கதையைக் கேட்டுவிட்டுத் தன் நாட்டுக்குத் திரும்பிய எலிசா பலோச்சி, ‘டிரைவிங் வித் செல்வி’ என்ற பெயரில் ஆவணப்படம் எடுத்தார். அதில், செல்வியின் வாழ்க்கைச் சம்பவங்கள் அனைத்தையும் இடம்பெறச் செய்தார். அமெரிக்கா, நெதர்லாந்து போன்ற நாடுகளில் அந்த ஆவணப்படத்துக்கு அமோக வரவேற்பு. அதனால், பல்வேறு திரை விழாக்களிலும் அப்படம் திரையிடப்பட்டது. மீண்டும் இந்தியா வந்த எலிசா பலோச்சி, டாக்ஸி டிரைவர் செல்வியை,  பெண்களை ஊக்கப்படுத்தும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க வைத்தார். அதனால், உள்ளூரிலும் செல்வியின் புகழ் பரவியது. தற்போது, சொந்தமாக டாக்ஸி நிறுவனம் நடத்தும் செல்வி, தனக்குக்கீழே மூன்று பெண்களுக்கு வேலைகொடுக்கும் அளவுக்கு முன்னேறியுள்ளார். பள்ளிகளுக்கு வாடகை அடிப்படையில் வாகனங்களையும் அனுப்புகிறார்.  

 

 

selvi

 

கடந்த வாரம்,  ‘டிரைவிங் வித் செல்வி’ ஆவணப்படம், கண்டாவில் 2 விருதுகளுக்காகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. விருது கிடைக்கும் என்ற அழுத்தமாக நம்புகிறார் எலிசா பலோச்சி. தான் பிறந்த நாட்டில் மட்டுமல்ல, வெளிநாடுகளிலும் பெண்களுக்கு நம்பிக்கை அளிக்கக்கூடிய சாதனைப் பெண்ணாகத் திகழ்கிறார் செல்வி.

 


 

Next Story

‘பெண்களுக்கு பாதுகாப்பான பயணம்’ - மெட்ரோ ரயில் நிறுவனம் புதிய முன்னெடுப்பு

Published on 15/02/2024 | Edited on 15/02/2024
Safe Travel for Women Metro Rail's New Initiative

சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பெண்களுக்கு பாதுகாப்பான பயண அனுபவத்தை வழங்குவதற்காக மெட்ரோ ரயில் நிறுவனம் கூடுதல் நடவடிக்கையாக அதன் பாதுகாப்பில் தற்காப்புக் கலைகளில் பயிற்சி பெற்ற பெண் பாதுகாப்புப் பணியாளர்களை உள்ளடக்கிய ‘பிங்க் ஸ்குவாட்’ ஐ (Pink Squad) இன்று (15.02.2024) அறிமுகப்படுத்தியுள்ளது. மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சித்திக் முன்னிலையில் மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பாதுகாப்புக் குழுவில் பிங்க் ஸ்குவாட் பாதுகாப்பு சேவை உறுப்பினர்கள் இணைக்கப்பட்டனர். இந்நிகழ்ச்சியில் மெட்ரோ ரயில் நிறுவனத்தின் திட்டங்கள் துறை இயக்குநர் அர்ச்சுனன் முதன்மை பாதுகாப்பு அதிகாரி ஜெயலக்ஷ்மி, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.

இது குறித்து மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் அ.சித்திக் கூறுகையில், “சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஏற்கனவே மெட்ரோ ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்களில் முழு சிசிடிவி கேமரா கண்காணிப்பு அமைப்புகளை வழங்கி வருகிறது. இருப்பினும், மெட்ரோ ரயில்களில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், சிசிடிவி கேமரா கண்காணிப்பு வழங்குவதைத் தவிர, ஈவ் டீசிங் மற்றும் பெண்களுக்கு எதிரான பிற குற்றங்களைத் தடுக்க அதிக கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், பெண் பயணிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு சேவையை வழங்குவதற்காகவும் பிங்க் ஸ்குவாட் அணியை நியமித்துள்ளது.

பிங்க் ஸ்குவாட் உறுப்பினர்கள் தற்காப்புக் கலைகள் மற்றும் தற்காப்பு நுட்பங்களில் நன்கு பயிற்சி பெற்றதுடன் வாடிக்கையாளர் சேவை மற்றும் தகவல் தொடர்பு திறன் ஆகியவற்றிலும் பயிற்சி பெற்றுள்ளனர். முதல் கட்டமாக இந்த குழுவில் 23 பெண்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பயணிகள் அதிகமாக பயணிக்கும் மெட்ரோ ரயில் நிலையங்களான சென்ட்ரல் மெட்ரோ, ஆலந்தூர் மெட்ரோ மற்றும் விமான நிலையம் போன்ற மெட்ரோ ரயில் நிலையங்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மெட்ரோ ரயில் நிறுவனம் பொதுவாக அனைத்து பயணிகளுக்கும் குறிப்பாக பெண்கள் மற்றும் சிறப்புத் தேவைகள் உள்ள நபர்களுக்கும் பாதுகாப்பான பயணம் மற்றும் பாதுகாப்பான சூழலை வழங்குவதற்கான தனது உறுதிப்பாட்டை தொடர்ந்து செய்து வருகிறது” எனத் தெரிவித்தார். 
 

Next Story

ரீல்ஸ் வீடியோ எடுப்பதில் தகராறு; கலவரக் காடான பார்க் 

Published on 27/11/2023 | Edited on 27/11/2023

 

Reels videotaping dispute; Womens fight in park

 

அண்மைக் காலமாகவே 'மாஸ், ரொமான்ஸ்,காமெடி என்ற பெயரில் இளைஞர்கள், பெண்கள் சிறுவர்கள், மாணவர்கள் என வயது பாரபட்சமின்றி ரீல்ஸ் வீடியோ வெளியிடுவது ட்ரெண்டாகி வருகிறது. சில நேரங்களில் ஆபத்தான முறைகளில் வாகனங்களில் செல்லும் போதும், நீர் நிலைகளின் அருகிலும் விபரீதம் அறியாமல் ரீல்ஸ் எடுக்க முயன்று உயிரிழப்பு வரை ஏற்படுகின்ற சம்பவங்களும் அதிகம். இந்நிலையில் பார்க்கில் ரீல்ஸ் வீடியோ எடுக்க முயன்று குடுமிப்பிடி சண்டை போட்டுக்கொண்ட பெண்களால் கலவரமே வெடித்த சம்பவம் ஆந்திராவில் நிகழ்ந்துள்ளது. 

 

ஆந்திர மாநிலம் குண்டூரில் புதிதாக நேற்று பூங்கா ஒன்று திறக்கப்பட்டது. இதனால் அந்த பூங்காவில் அதிகப்படியான கூட்டம் கூடியது. அப்பொழுது அந்த பகுதியில் ரீல்ஸ் வீடியோ எடுத்துக் கொண்டிருந்த இரண்டு தரப்பு பெண்களுக்கிடையே தகராறு ஏற்பட்டு வாக்குவாதமானது. இதில் ஒருவரை ஒருவர் குடுமியை பிடித்துக் கொண்டு கடுமையாக தாக்கிக் கொண்டனர். இதனால் ஏற்பட்ட பரபரப்பால் சற்று பதற்றம் நிலவியது. இந்த தாக்குதல் தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.