Skip to main content
Nakkheeran Magazine Nakkheeran Magazine

கொரியர்களிடம் தமிழர்கள் கற்றுக்கொள்ள வேண்டியது இதுதான்.... கொரியா தமிழர்கள் சந்திப்பில் ஆதனூர் சோழன்

indiraprojects-large indiraprojects-mobile

தென்கொரியாவில் வாழும் தமிழர்களை இணைத்து சீயோன்  நகரத்தில் அமைந்துள்ள கியோங்கி பல்கலைக்கழத்தின் பன்னாட்டு வளாகத்தில் கொரிய தமிழ்   தளம் ஒருங்கிணைத்த “தமிழ் கலை இலக்கிய சந்திப்பில் மூத்த எழுத்தாளரும் நக்கீரன் இணையதளத்தின்   தலைமை துணை ஆசிரியருமான ஆதனூர் சோழன் இணையவழி நேரடி காணொளி வழியாக கலந்துகொண்டு பேசினார். கொரியா வரலாற்றிலிருந்து தமிழர்கள் அறிந்துகொள்ள விடயங்கள் என்ற தலைப்பில் அவர் பேசியது...

கொரியாவில் ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்னரே மனித இனம் வாழ்ந்ததற்கு ஆதாரம் இருப்பதாக கூறுகிறார்கள். எரிமலைக் குழம்பில் சிக்கிய மனித உயிர்களின் படிமங்கள் இருப்பதாகவும், நவீன மதிப்பீடுகளின் அடிப்படையில் அந்த படிமங்களின் காலம் 3 லட்சம் ஆண்டுகளாக இருக்கும் என்று கூறுகிறார்கள். சுமார் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மண்பாண்டங்களை உபயோகப்படுத்தி இருக்கிறார்கள். அதற்கான ஆதாரங்களும் இருக்கின்றன.

தமிழ்நாட்டில் சேர, சோழ, பாண்டிய முடியரசுகள் நடைபெற்ற சமகாலத்தில் கொரியா தீபகற்பத்திலும்  பேக்செ, சில்லா மற்றும் கோகொரியோ என்ற மூன்று அரசுகள் அமைந்திருந்தன, இந்த முடியரசுகள் தங்களுக்குள்ளே அடிக்கடி சண்டையிட்டு வந்தன. இதில் மிகச்சிறிய சில்லா அரசு, அரசியல் ரீதியாக தந்திரமாக செயல்பட்டது. சில்லா தன்னை பாதுகாத்துக்கொள்ள சீனாவை ஆட்சி செய்த டாங் பேரரசுடனும் கொரியாவின் பிற முடியரசுகளுடனும் சந்தர்ப்பவாத உடன்படிக்கைகளை வைத்துக்கொண்டது. பேக்செ முடியரசு கடல்வழி இராணுவ கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கியது.

கொரியா தீபகற்பத்தின் வடபகுதியான கோகொரியோ அந்தக் காலத்திலேயே ராணுவ பலமிக்க நாடாக இருந்திருக்கிறது. வடக்கே மஞ்சூரியாவின் பெரும்பகுதியையும், மங்கோலியாவின் உள்பகுதிகளையும், ரஷ்யாவின் பகுதிகளையும், தெற்கே சியோல் பிரதேசம்வரை கோகொரியோ கைப்பற்றியிருக்கிறது. க்வான்கயேட்டோ தி கிரேட் மற்றும் அவருடைய மகன் ஜாங்சு ஆகியோர் காலத்தில் பலம்பொருந்திய நாடாக கோகுரியோ இருந்திருக்கிறது.

 

korean tamilsபாண்டியர்கள் இலங்கை போன்ற நாடுகளை ஆண்டதையும், சேரர்கள் கடல் வாணிபத்தில் சிறந்து விளங்கியதையும், சோழர்கள் கிழக்காசியாவரை கைப்பற்றி ஆண்டதையும் இந்த நேரத்தில் ஒப்பிட்டுக் கொள்ளலாம்.

குறிப்பிட்ட காலப்பகுதியை சங்ககாலம் என்று குறிப்பிடத்தக்க அளவிற்கு மொழிசார்ந்த செயற்ப்பாட்டை  தமிழ்மன்னர்கள் செய்திருந்தனர் ஆனால் இந்த கொரிய முடியரசுகள் அதுபோல் கொரிய மொழி வளர்ச்சிக்கு பங்காற்றியதாக தெரியவில்லை. இந்த முடியரசுகளின் வீழ்ச்சிக்கு பின்னால் அமையப்பெற்ற சுசோன் பரம்பரையை சேர்ந்த அரசரான சேஜொங்தான் கொரியா  மொழிக்கான எழுத்துருவை உருவாக்கி மொழிசார்ந்த பங்களிப்பை முறையாக தொடங்கினார்.

அதற்கு முன்னர் கொரிய மொழி பேச்சு வழக்கில் மட்டுமே இருந்தது. அந்த பேச்சு மொழியிலும் சீன வார்த்தைகள் கலந்திருந்தன. ஆனால், சீன எழுத்துருவான ஹன்ஜாவே கொரிய மொழியை எழுத பயன்படுத்தப்பட்டது. இன்றும் ஹன்ஜா எழுத்துரு கொரியா மக்களிடமும் அரச முத்திரைகளிலும்  பரவலாக புழக்கத்தில் இருப்பதை காணலாம்.

மன்னர் சேஜோங் கொரிய மொழிக்கான அறிவியல்பூர்வ  எழுத்துரு உருவாக்கம், அறிவியல், விவசாயம், தொழில்நுட்பம் மற்றும் படை கட்டமைப்பு போன்றவற்றிற்கு ஆற்றிய பங்களிப்பிற்காக இன்றும் கொரியாவில் மதிக்கப்படுகிறார்.

கொரியா வரலாற்றை நாம் கூர்ந்து கவனித்தால், இந்தியாவில் நிலவும் சாதி சமூக கட்டமைப்பைப்போல் கொரியாவிலும் இருந்திருக்கிறது. யாங்பான் என்பவர்கள் ஆளும் மற்றும் வணங்குதற்குரிய வர்க்கமாகவும், ஜுன்ஜின் என்பவர்கள் நடுத்தர வர்க்கமாகவும், யான்ஜின் பொதுப்பிரிவாகவும் இருந்திருக்கிறது. செயோனின் என்பவர்கள்  கடைசி வர்க்கத்தினராக கருதப்பட்டனர். இவர்கள்தான் கசாப்புவேலை, தோல்பதனிடும் வேலை, குறிசொல்லும் வேலை, பொழுதுபோக்கு வேலைகளை செய்திருக்கிறார்கள். இவர்களையும் தாண்டி நோபி என்ற பிரிவினர் அடிமைகளாக கருதப்பட்டார்கள். இவர்கள் தனிப்பட்டோரின் சொத்தாக கருதப்பட்டார்கள். ஆடு, மாடுகளைப் போல இவர்களை விற்கவும் வாங்கவும் முடியும். மன்னர் சேஜோங்கின் சுசோன் பேரரசை நிறுவிய யி சியோங் ஜியே காலத்தில் சமூகநீதிக்காவலர்களாக செயல்பட்ட கன்பூசிய மதகுருமார்களான சியோன்பிக்கள்கூட  இவர்களுக்காக போராடவோ வாதாடவோ முடியாது. ஆனால், மற்ற மூன்று வகுப்பினருடைய பிரச்சனைகளையும் அரசின் கவனத்துக்கு கொண்டுபோகும் வாய்ப்பு இருந்தது. அந்த அளவிற்கு கொரியாவில் சமூக வகுப்புவாத அல்லது சாதிமுறை வலுவாக இருந்திருக்கிறது.

இரண்டாம் உலகப்போர் சமயத்தில் மட்டுமல்ல 1910 ஆம் ஆண்டு ஜப்பானின் பிடியில் கொரியா போனதிலிருந்தே கொரியா மக்கள் அனுபவித்த கொடுமைகள் ஏராளம். குறிப்பாக, கொரியா பெண்கள் ஜப்பான் படையால் பாலியல் அடிமைகளாக பயன்படுத்தப்பட்ட கொடுமை இன்றும் கொரியா மக்கள் நடுவில் மாறாத வடுவாகவும், கொரியா-ஜப்பான் அரசுமுறை பேச்சுக்களில் எதிரொலிக்கும் உணர்வெழுச்சியாகவும் நீடிக்கிறது.

 

athanoor chozhan

ஆதனூர் சோழன்இத்தகைய கடினமான வரலாற்று பின்னனியை கொண்டிருந்தாலும்கூட, இன்று நாம் காணும்  தென்கொரியா நாட்டின் சீரிய வளர்ச்சி உலகிற்கே பாடமாக அமைந்திருக்கிறது. இன்று அங்கு சாதிக்கொடுமைகள் இல்லை, கிம், லி, பார்க் மற்றும் காங் என பல குடும்பப்பெயர்களே உள்ளன. கொரியா மக்கள் சந்தித்த துயரங்களும், வளர்ச்சியை நோக்கிய உழைப்பும் அவர்களை இன்று உலகில் பெருமையுடன் வாழும் இனமாக மாற்றியிருக்கிறது என்பதே நிதர்சனமான உண்மை. தமிழர்களும் கொரியா மக்களைப்போல் தம்மிடையே உள்ள வேற்றுமைகளை விட்டொழித்து வளர்ச்சியை நோக்கி உழைக்கும் பணியை விரைவுபடுத்த வேண்டும் என்றார்.

முன்னதாக, ஆதனூர் சோழன் வரலாறு முதல் அறிவியல் வரை  பலதளங்களில் பயணிக்கும் மூத்த எழுத்தாளர் என்றும், தமிழ் சமூகம் போற்றி பயன்படுத்திக்கொள்ள வேண்டியவர் என்றும் அறிமுகப்படுத்தப்பட்டார். 

நிறைவாக ஆதனுர் சோழன் அவர்களுக்கும் மற்றும் அவருக்கு இந்த நிகழ்வில் உரையாற்ற ஊக்கமளித்த இந்தியாவின் மூத்த புலனாய்வு இதழாளர்களில் ஒருவரும் நக்கீரன் இதழியல் குடும்பத்தின் தலைவருமான நக்கீரன் கோபால் அவர்களுக்கு கொரியாவில் வாழும் தமிழ் மக்கள் சார்பில் கொரியா தமிழ் தளம் நன்றி தெரிவித்தது.

உரையைத் தொகுத்தவர்: முனைவர்.சுப்ரமணியன் இராமசுந்தரம், ஆராய்ச்சி பேராசிரியர், கொரிய தொழில்நுட்ப மற்றும் கல்வியியல் பல்கலைக்கழகம், தென்கொரியா.  

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
Loading...