Skip to main content

சட்டக்கல்லூரி மாணவி நந்தினி 70வதுமுறையாக கைது...

Published on 23/06/2018 | Edited on 23/06/2018

மதுக்கடைகளுக்கு எதிராகவும், சமூகப் பிரச்சனைகளுக்காகவும், மத்திய - மாநில அரசுகளின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராகவும் தொடர்ச்சியாகப் போராடி பல வழக்குகளை சந்தித்து வரும் சமூக ஆர்வலர்  நந்தினி நேற்று இரவு அவரது தந்தை ஆனந்தனுடன் டில்லியில் உள்ள பிரதமர் வீட்டின்முன் உண்ணாவிரதம் இருப்பதற்காக மதுரை ரயில்வே நிலையத்தில் வைத்து இருவரையும் கைது செய்தனர். மதுவுக்கு எதிராகவும், அரசுக்கு எதிராக செயல்பட்டதாகக்கூறி இதுவரை 70 முறை கைதாகி உள்ளார். வழக்கறிஞரான நந்தினி 23 வயதில் தன் வாழ்நாளில் மக்கள் பிரச்சனைகளுக்காக ஒற்றை ஆளாக காவல்துறையின் அச்சுறுத்தலுக்கும், அடக்குமுறைக்கும் பயப்படாமல் தொடர்ந்து போராடி வருகிறார்.

 

nanthini


 

 

 

இவருக்கு போலிஸார் பல்வேறு வகையில் தினந்தினம் தொந்தரவு கொடுத்து வருகின்றனர். கடந்த  மூன்று வருடத்தில் 10 முறை வீட்டை காலி செய்திருக்கிறார். இவர்  வாடகைக்கு  எந்த வீட்டிற்கு சென்றாலும் போலிஸார் வீட்டின் உரிமையாளரை மிரட்டிவிடுகின்றனர். இவரின் தந்தை ஆனந்தனோ "என் மகள் பாரதி கண்ட புதுமைப்பெண். என் வம்சத்தில் இவ்வளவு தைரியமான, படித்த உணர்வோடு உண்மையாக மக்கள் பிரச்சனைகளுக்காக தன்னை அர்பணித்து வாழ்ந்தவர் எவரும் இல்லை. வெளியிலும் எனக்கு தெரிந்து யாரையும் பார்க்கவில்லை என்பதில் பெருமையாக இருந்தாலும் ஒரு தகப்பனாக பார்க்கும் போது அவளுக்கு துணை தேடுவது மிக கஷ்டமாக இருக்கிறது. பொதுவாழ்வில் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திகொள்வது அவரின் பாதுகாப்புக்கு கேள்விகுறியாகவே உள்ளது. 

 

 

 

ஒரு பக்கம் போலிஸாரும், ஒரு பக்கம் அரசியல் ரவுடிகள் என்று தொடர்ந்து அச்சுறுத்தல் இருந்து கொண்டே இருக்கிறது. வேண்டாம்மா போதும் உன் வாழ்கையை பாரு நீ ஒரு பெண் இப்படியே போராடிக்கொண்டே இருக்கமுடியுமா? என்று உறவினர்கள் எவ்வளவோ எடுத்து சொல்லியும் அநியாயத்தை கண்டு காந்திய வழியில்கூட போராடக்கூடாதா, உண்மைக்காக என் வாழ்நாள் முழுவதும்கூட போராட தயார் என்கிறார். என்னால் ஒன்றும் சொல்லமுடியவில்லை.  நான் எந்த சொத்தும் சேர்க்கவில்லை.  என் மகள்தான் எல்லாம். அவள் பாதுகாப்பிற்காக கூடவே இருக்கிறேன். மதுரை மீனாட்சி  உருவத்தில் என் மகள்  மக்களை காப்பாள் என்று அழுகிறார் தந்தை ஆனந்தன்....

 

 

 

 

 

Next Story

“வருங்காலத்தில் விவாகரத்து வழக்குகள் அதிகரிக்கும்..” - உச்ச நீதிமன்ற நீதியரசர் உருக்கம்!

Published on 21/12/2021 | Edited on 21/12/2021

 

"Divorce cases will increase in the future .." - supreme Court Judge

 

விழுப்புரத்தில் சட்டக்கல்லூரி உருவாக்கப்பட்டு இயங்கிவருகிறது. இதில் படித்த மாணவர்களுக்கு முதல் பட்டமளிப்பு விழா நேற்று (20.12.2021) கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் கல்லூரி முதல்வர் கயல்விழி வரவேற்புரையாற்றினார். இந்தப் பட்டமளிப்பு விழாவில் உச்ச நீதிமன்ற நீதியரசர் எம்.எம். சுந்தரேஷ் தலைமை தாங்கி தேர்ச்சிபெற்ற மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கினார். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, “சட்டம் படிக்கும் மாணவர்கள் முதலில் தங்களுக்கான தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும். தெளிவான சிந்தனை, அதன் வாயிலாக வெளிப்படும் வார்த்தைகள் மிக அவசியம்.

 

சட்டத்தை எப்படி கையாள வேண்டும் என்பதையும் நன்கு தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். வழக்கறிஞர் தொழில் மிகச் சிறந்த தொழில். ஆனால் அதில் முன்னேறுவதற்கு மிகவும் கடினமாக உழைக்க வேண்டும். முதன்முதலில் வழக்கறிஞராகப் பணியாற்ற வருபவர்களுக்கு சிரமங்கள் அதிகமாகவே இருக்கும். எனவே அப்படிப்பட்டவர்கள் என்னென்ன பணிகளை எப்படி எப்படி செய்ய வேண்டும், செயல்படுத்த வேண்டும் என்பதை நீங்கள் முன்கூட்டியே திட்டமிட்டு முடிவுசெய்ய வேண்டும். அதன் மூலம் சிறந்த வழக்கறிஞர்களாக வர முடியும், வர வேண்டும். நீதித்துறையில் சேர்ந்து உயர்நிலைக்கு வர வேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள். இன்றைய காலகட்டத்தில் பல்வேறு நீதிமன்றங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நீதிபதிகள் உள்ளனர்.

 

இதில் பெண்களுக்காக தனியாக இடஒதிக்கீடு இருக்கிற ஒரே மாநிலம் தமிழ்நாடுதான். மற்ற மாநிலங்களிலும் பெண்களுக்கான இடஒதுக்கீடு உள்ளது. ஆனால் இங்கு மட்டும்தான் 30% சதவீதம் உள்ளது. இருந்தாலும் இது இன்னும் அதிகரிக்க வேண்டும். அதன் மூலம் மற்றவர்களுடன் அவர்களால் போட்டி போட முடியும். எனவே ஒரு கனவோடு உங்கள் தொழிலைத் தொடங்குங்கள். இந்தத் தொழிலில் தர்மம் இருக்க வேண்டும், தர்மத்தை தொழிலாக செய்யக் கூடாது. இன்றைய காலகட்டத்தில் இளம்பெண் வழக்கறிஞர்களுக்கு சில துறைகள் உருவாக்கப்பட்டிருந்தாலும் நீதிபதிகளாக வர வேண்டும் என்ற கனவை அவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

 

ஏனென்றால் தமிழகத்தில் மொத்தம் உள்ள 14 அரசு சட்டக் கல்லூரிகளில் 9 சட்ட கல்லூரிகளில் பெண்கள்தான் சட்டக் கல்லூரி முதல்வராக இருக்கிறார்கள். இதையெல்லாம் பார்க்கும்போது நாளை நீதித்துறை பெருமளவு பெண்கள் கையில் இருக்கும் நிலை உள்ளது. அது சமுதாய மாற்றத்தைப் பொறுத்து நீதித்துறையும் மாறும், வழக்கின் தன்மைகளும் மாறும். இப்போதைய காலகட்டத்தில் விவாகரத்து, அதன் மூலம் குழந்தைகள் பராமரிப்பு போன்ற வழக்குகள் நடைபெறுகின்றன. இதுபோன்ற வழக்குகள் வரும் காலங்களில் அதிகரிக்கும் நிலை உள்ளது என்பதால், அதுபோன்ற வழக்குகளைக் கையாள பெண்கள் அதிக அளவில் நீதித்துறையில் பணியாற்ற வேண்டும்” இவ்வாறு உச்ச நீதிமன்ற நீதியரசர் சுந்தரேஷ் பேசினார்.

 

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் செஞ்சி மஸ்தான், எம்.எல்.ஏ.க்கள் விக்கிரவாண்டி புகழேந்தி, விழுப்புரம் டாக்டர் லட்சுமணன் ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும், பேராசிரியர்கள், மாணவர்கள் பெருமளவில் கலந்துகொண்டனர். விழுப்பும் சட்டக்கல்லூரியில் பயின்ற மாணவர்களுக்கு முதல் பட்டமளிப்பு விழா வெகு சிறப்பாக நடந்தது.

 

 

Next Story

திருச்சி தேசிய சட்டக்கல்லூரியில் படித்த பஞ்சாப் மாணவன் தற்கொலை! 

Published on 26/07/2020 | Edited on 26/07/2020
Trichy

 

திருச்சி தேசிய சட்டக்கல்லூரியில் படித்த பஞ்சாப் மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருச்சியில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

பஞ்சாப் மாநிலம் சண்டிகரை சேர்ந்தவர் சித்தாந்த் சிங். (24 வயது). இவர் திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தேசிய சட்டக்கல்லூரியில் 3ம் ஆண்டு எல்.எல்.பி படித்து வருகிறார். 

 

கரோனோ வைரஸ் காரணமாக தேசிய சட்டக்கல்லூரி விடுமுறை விடப்பட்டு விடுதிகள் மூடப்பட்டது. இந்த கல்லூரியில் பெரும்பாலும், வெளிமாநில மாணவர்களே படித்து வருகிறார்கள். 

 

இந்த நிலையில் சித்தாந்த் சிங் என்பவர் கல்லூரியில் இருந்து வெளியேறி திருச்சி மாநகரில் மன்னார்புரம் அருகே உள்ள நடுத்தெருவில் கடந்த ஜீன் 1ம் தேதி முதல் தங்கியிருந்திருக்கிறார்.  

 

கடந்த இரண்டு நாட்களாக வெளியே வரவில்லை. ஆனால் உட்புறம் தாழ்டப்பட்டிருந்த அந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசவே, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்து இருக்கிறார்கள்.

 

உடனே சம்பவ இடத்திற்கு சென்ற கண்டோன்மென்ட் போலிசார் அந்த வீட்டின் கதவை உடைத்து பார்த்த போது, உள்ள சித்தாந்த் சிங் முகத்தை பிளாஸ்டிக் கவரினால் மூடி முடிச்சு போட்டுக்கொண்டு தன்னை தானே மூச்சு விட முடியாமல் செய்து தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரிந்தது. 

 

உடலை கைப்பற்றிய கண்டோன்மென்ட் போலீஸ் அவருடைய பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்து விசாரணை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். 

 

வெளிமாநிலத்தில் இருந்து தேசிய சட்டக்கல்லூரியில் வந்து படிக்கும் மாணவர் ஒரு பேரழிவு காலத்தில் வீட்டிற்கு சென்று விட்டாரா என்பதை உறுதிபடுத்தாமலே இருந்ததும், கல்லூரியின் கவனக்குறைவே என்கிறார்கள். 

 

கல்லூரியில் மிக நன்றாக படிக்கும் மாணவன் என்று பெயர் எடுத்த ஒருவனின் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு சென்று விட்டதே என்று  வருத்தப்படுகிறார்கள்.