Skip to main content

குவைத் –திருச்சி விமான சேவை ஏன் திட்டமிட்டு தவிர்க்கப்படுகிறது?

Published on 10/08/2020 | Edited on 11/08/2020

 

Kuwait- tiruchirappalli - airways - central - government


கரோனா நோய்த்தொற்று காலத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலில் இயக்கப்படும் மத்திய அரசின் சிறப்பு விமான சேவையான "வந்தேபாரத்" திட்டத்தில் இதுவரை ஒரு விமானசேவை கூட "குவைத் - திருச்சிராப்பள்ளி" ஆகாய மார்க்கத்தில் இயக்கப்படவில்லை என்கிற அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. 


"திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமானநிலையத்தைப் பொறுத்தவரையில் "திருச்சிராப்பள்ளி -குவைத்" வழித்தடமானது ஒரு தனித்துவ(Unique) தேவையுடைய வழித்தடமாகும். மத்தியஅரசு அனுமதிக்காததால் குவைத் நாட்டின் விமான நிறுவனங்களான 'குவைத் ஏர்வேஸ்' மற்றும் 'ஜஜீரா ஏர்வேஸ்' ஆகிய விமான நிறுவனங்களால் திருச்சிராப்பள்ளிக்கு சேவை வழங்க இயலவில்லை என்பது நாம் அறிந்ததே.


அதேபோல் இந்திய விமான நிறுவனங்களும் இந்த "திருச்சிராப்பள்ளி - குவைத்" சேவையின் தேவை(Demand) விளங்காததால் அல்லது விளங்கியும், தேவையை தனியார் விமான நிலையங்களின் ஆதிக்கத்தின் காரணமாக வெளிக்கொணர மறுப்பதால், சேவை தொடங்கவில்லை என்பதும் நாம் அறிந்ததே.


கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் பரவிய கரொனா நோய்த்தொற்றின் காரணமாக இந்தியா மட்டுமன்றி உலகமெங்கும் பன்னாட்டு விமானப் போக்குவரத்து தடைசெய்யப்பட்டது. இந்நிலையில் உலகமெங்கும் தவித்த இந்தியர்களை மீட்கும் பொருட்டு தொடங்கப்பட்டதே "வந்தேபாரத்" திட்டமாகும்.


வெளிநாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்களில் பதிவுசெய்த பாதிக்கப்பட்ட இந்தியர்களின் பதிவின் அடிப்படையில் இந்தியாவில் உள்ள விமான நிலையங்களுக்கு விமான சேவைகள் வழங்கப்பட்டன. குறிப்பாக கல்ஃப் மற்றும் கிழக்காசிய நாடுகளில் இருந்து அதிகமாக சேவைகள் இந்திய விமானநிலையங்களுக்கு வழங்கப்பட்டன.


அதேபோல் பாதிக்கப்பட்ட மக்கள் தாங்களாகவே விமானங்களை குத்தகைக்கு எடுத்தும் அவரவர்களுக்கு தேவையுடைய விமான நிலையங்களுக்கு வந்தடையவும் மத்தியஅரசு அனுமதித்தது. மாநிலஅரசு ஒத்துழைப்புடன் இந்தத் தனியார் விமானங்களை குத்தகைக்கு எடுத்துவரும் திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டது. இவ்வகையில் மத்தியஅரசின் "வந்தே பாரத்" திட்டம் மற்றும் தனியார் குத்தகை விமானங்களின் எண்ணிக்கை திருச்சிராப்பள்ளியில் நூற்றைக்கடந்து இந்திய அளவில் சாதனை படைத்துள்ளது என்பது மிகவும் பெருமைக்குரிய விசயம்..


"திருச்சிராப்பள்ளி - குவைத்" விமானசேவையின் தேவையும்(Demand) தனித்துவமும்(Unique) கரோனாவால் வெளிக்கொணரப்பட்டது என்றால் மிகையில்லை. ஆம், கரோனாவால் விமானப்போக்குவரத்து தடைசெய்யப்பட்ட இக்காலகட்டத்தில் இதுவரை 19 விமானசேவைகள் குவைத்தில் இருந்து திருச்சிராப்பள்ளிக்கு இயக்கப்பட்டன.


குவைத் ஏர்வேஸின் 8 விமானசேவைகளில் 909 பயணிகளும், ஜஜீரா ஏர்வேஸின் 8 விமானசேவைகளில் 1,311 பயணிகளும், இண்டிகோ விமானநிறுவனத்தின் 3 விமானசேவைகளில் 499 பயணிகளும், மொத்தம் 19 விமானசேவைகளில் 2,719 பயணிகள் திருச்சிராப்பள்ளியை வந்தடைந்தனர். இதில் கவனிக்கவேண்டிய விசயம் என்னவெனில் இதில் ஒன்று கூட மத்திய அரசின் சிறப்பு மீட்பு விமானசேவைத் திட்டமான "வந்தே பாரத்" திட்டத்தின்படி ஒரு விமானசேவைகூட இல்லை.


தற்போது "வந்தே பாரத்" மீட்பு நடவடிக்கையின் ஐந்தாம் கட்ட மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால், இதில் இதுவரை குவைத்தில் இருந்து இந்தியாவிற்கு எந்தவொரு மீட்பு விமானசேவைகளும் பட்டியலிடப்படவில்லை. இந்தியா மற்றும் குவைத்திற்கு இடையேயான தற்காலிக மீட்பு நடவடிக்கை ஒப்பந்தம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. அநேகமாக வரும் 10ஆம் தேதிக்குள் இறுதி செய்யப்பட்டு சேவைகள் தொடரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது..


இந்தத் தற்காலிக மீட்பு விமானசேவைகள் குறித்த ஒப்பந்தம் தொடர்பாக, மத்திய பயணிகள் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சகமானது பொதுமக்களின் கருத்தைத் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டரான 'MoCA_GoI'-ல் கேட்டது. பொதுமக்களும் தங்களும் கருத்துகளைப் பதிவு செய்தனர். குவைத்திலிருந்து திருச்சிராப்பள்ளிக்கு "வந்தே பாரத்" மீட்பு விமானசேவைகள் வேண்டும் என்ற கருத்தும் அழுத்தமாகப் பதிவிடப்பட்டது.

 

இந்நிலையில் 6ஆம் தேதி, அதே ட்விட்டர் பக்கத்தில் குவைத் மற்றும் இந்தியாவிற்கான தற்காலிக ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது என பதிவிடப்பட்டது. அதிலும் குவைத்திலிருந்து திருச்சிராப்பள்ளிக்கு "வந்தே பாரத்" மீட்பு விமானசேவைகள் வேண்டும் என்று அழுத்தமாக பதிவிடப்பட்டது. பின்னர் அதே ட்விட்டர் பதிவில், மேலும் ஒரு பதிவு இடப்பட்டது. 

 

அதில் இந்தியாவிற்கு, குவைத் மற்றும் இ்ந்தியாவைச் சேர்ந்த விமானநிறுவனங்கள் தற்காலிகமாக, அதாவது வரும் 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை தற்காலிக விமான சேவைகளை இரு நாடுகளுக்கிடையில் இயக்கிக் கொள்வதென்றும், குவைத் விமானநிறுவனங்களான குவைத் ஏர்வேஸ் மற்றும் ஜஜீரா ஏர்வேஸ் ஆகியன சேவை வழங்க அனுமதிக்கப்பட்ட இந்திய விமானநிலையங்கள் பட்டியலும் வெளியிடப்பட்டது. அதில் தென்னிந்திய அளவில் கேரளாவின் அனைத்து விமானநிலையங்களும், கர்நாடகாவின் பெங்களூரு மற்றும் மங்களூருவும், தெலங்கானாவின் ஹைதராபாத்தும், ஆந்திராவின் விஜயவாடாவும் அனுமதிக்கப்பட்டு இருந்தது. தமிழ்நாட்டைப் பொறுத்து மெட்ராஸ் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தது. திருச்சிராப்பள்ளியைப் பொறுத்து ஏற்கனவே குவைத் ஏர்வேஸ் மற்றும் ஜஜீரா ஏர்வேஸ் இரண்டும் தலா 8 சேவைகள் வழங்கிய நிலையில் தற்போதைய தற்காலிக ஒப்பந்தத்தில் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.


அதாவது "வந்தே பாரத்" மீட்பு விமான சேவையும் இல்லை. குவைத் விமானநிறுவனங்கள் சேவையும் அனுமதிக்கப்படவில்லை என்பது பேரதிர்ச்சியாக இருந்தது. இதைச் சுட்டிக்காட்டியும் திருச்சிராப்பள்ளிக்கு சேவை வழங்கவும் வேண்டி அந்த ட்விட்டரில் பல பதிவுகள் இடப்பட்ட நிலையில், மத்திய அரசின் பயணிகள் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சகம் அந்த ட்விட்டர் பதிவுகளை நீக்கியது மேலும் அதிர்ச்சி தந்தது. திருச்சிராப்பள்ளிக்கு சேவை வழங்கக்கூடாது என்ற மனநிலையில் மத்தியஅரசு இருக்கிறதா எனத் தெரியவில்லை. அதேபோல் தமிழ்நாடு அரசும் திருச்சிராப்பள்ளிக்கு சேவை வழங்க மத்தியஅரசை வலியுறுத்தியதா? எனவும் தெரியவில்லை.


தற்போது 5ஆம் கட்ட "வந்தே பாரத்" மீட்பு நடவடிக்கைகள் நடைபெற்று வரும் சூழலில், இந்தியா மற்றும் குவைத்திற்கான தற்காலிக ஒப்பந்தத்தின் நிலை என்னவென்று தெரியாத சூழலில், ஒரு விமானசேவை கூட குவைத் மற்றும் இந்தியாவிற்கு இடையில் பட்டியலிடப்படவில்லை. மேலும் ஏற்கனவே இயக்கப்பட்ட நான்கு கட்ட "வந்தே பாரத்" மீட்பு நடவடிக்கைகளில், குவைத்தில் இருந்து மொத்தம் 120 "வந்தே பாரத்" விமானசேவைகள் இந்தியாவிற்கு இயக்கப்பட்டன. இந்த 120 சேவைகளில் ஒன்று கூட திருச்சிராப்பள்ளிக்கு இல்லை என்பது மிகவும் வேதனையான விசயம்.


120 விமானசேவைகளும் எங்கெங்கு இயக்கப்பட்டன எனக் காண்போம். முதற்கட்ட "வந்தே பாரத்" மீட்பு விமானசேவைகளில், கேரளா - 2., தெலங்கானா - 1, மகாராஷ்ட்ரா - 1, தமிழ்நாடு – 1 என மொத்தம் 5. இரண்டாம் கட்டத்தில், கேரளா - 2, தெலங்கானா - 1, ஆந்திரப் பிரதேசம் - 1, குஜராத் – 1, இரண்டாம் கட்டம் (கூடுதல்) கேரளா - 6, குஜராத் - 1, இராஜஸ்தான் - 1, டெல்லி – 4 , பீகார் - 1, ஒரிஸா - 1, உத்திரப் பிரதேசம் – 1  என மொத்தம் 15.


இரண்டாம் கட்டம் (++)  கேரளா - 3,  மகாராஷ்ட்ரா - 1, டெல்லி - 1, தமிழ்நாடு – 1 என மொத்தம் 6. மூன்றாம் கட்டமாக - குஜராத் - 1, மகாராஷ்ட்ரா - 1, பீஹார் - 1, மேற்கு வங்காளம் – 1 என மொத்தம் 4. நான்காம் கட்டம்  கேரளா - 26,  தமிழ்நாடு - 12, மகாராஷ்ட்ரா - 11, இராஜஸ்தான் - 9, உத்திரப் பிரதேசம் - 9, தெலங்கானா - 7, ஒரிஸா - 4, கர்நாடகா - 4, குஜராத் - 2, கோவா - 1 என மொத்தம் 85 "வந்தே பாரத்" விமானசேவைகள் குவைத்திலிருந்து இந்தியாவிற்கு இயக்கப்பட்டன.


ஒட்டுமொத்த 120 "வந்தே பாரத்" விமானசேவைகளையும் மாநிலங்கள் வாரியாக பார்க்கும்போது, கேரளா - 39, தமிழ்நாடு - 14, மகாராஷ்ட்ரா - 14, இராஜஸ்தான் - 10, உத்திரப் பிரதேசம் - 10, தெலங்கானா - 9, டெல்லி - 5, ஒரிஸா - 5, குஜராத் - 5, கர்நாடகா - 4, பீஹார் - 2, ஆந்திரா - 1, மேற்கு வங்காளம் - 1, கோவா - 1, என மொத்தம் 120 சேவைகள் இந்தியாவின் 14 மாநிலங்களுக்கு இயக்கப்பட்டன.


இதில் கேரளாவைத் தவிர தமிழ்நாடு உட்பட மற்றெந்த மாநிலங்களுக்கும் குவைத்தில் இருந்து  இயக்கப்பட்ட "வந்தே பாரத்" விமானசேவைகளை  விட, திருச்சிராப்பள்ளிக்கு குவைத்தில் "வந்தே பாரத்" சேவை இல்லாமல்  இயக்கப்பட்ட விமானசேவைகளின் எண்ணிக்கை அதிகமாகும். அதாவது 19 விமானசேவைகள்.


இதிலிருந்தே விளங்கிக் கொள்ளலாம், குவைத்தில் இருந்து எவ்வளவு தேவையுடைய மக்கள் திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமானநிலைத்தைச் சார்ந்திருக்கிறார்கள் என்று? இவ்வளவு தேவையுடைய திருச்சிராப்பள்ளிக்கு, மத்தியஅரசானது போதுமான "வந்தே பாரத்" விமானங்களை இயக்காமல் இருப்பதற்கும், சேவை வழங்கத் தயாராக உள்ள குவைத் ஏர்வேஸ் மற்றும் ஜஜீரா ஏர்வேஸ் விமானங்களை திருச்சிராப்பள்ளிக்கு சேவை வழங்க அனுமதிக்காமல் இருப்பதற்கும் நியாயமான காரணங்களைக் கூற முடியுமா?


குவைத்தில் இருந்து திருச்சிராப்பள்ளிக்கு ஒரு "வந்தே பாரத்" விமானசேவையைக்கூட இயக்காததால், திருச்சிராப்பள்ளி விமானநிலையத்தைச் சார்ந்துள்ள பயணிகள் வேறு வழியின்றி தனியார் குத்தகை விமானங்களை எடுத்து திருச்சிராப்பள்ளிக்கு வரவேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகிவிட்டனர்.


மேலும் தனியார் குத்தகை விமானங்களில் திருச்சிராப்பள்ளி மட்டுமல்ல தமிழ்நாட்டின் எந்வொரு விமானநிலையத்திற்கும் வருவதற்கு கடுமையான விதிகள்; அதாவது ஒரு வாரம் கட்டாய தனிமைப்படுத்தலை அவர்கள் சொந்தச் செலவிலேயே மேற்கொள்ளுதல் மற்றும் வரும்போதும், தனிமைப்படுத்தலை முடித்துக் கிளம்பும்போதும் என இரு முறை கரோனொ பரிசோதனை எனக் கூடுதல் செலவினங்கள்.


இதனால், "வந்தே பாரத்" விமானசேவையில் அதிகபட்சம் 100 குவைத் தினாருக்குள் முடிக்கவேண்டிய பயணக்கட்டணமானது, தனியார் குத்தகை விமானங்களில் குறைந்தது 220 குவைத் தினாரில் இருந்து அதிகபட்சம் 300 குவைத்ந தினார் வரை நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

 

http://onelink.to/nknapp


தனியார் குத்தகை விமானங்களில் திருச்சிராப்பள்ளிக்கு வந்த ஒவ்வொரு பயணியும் சராசரியாக 150 குவைத் தினார் கூடுதலாக செலவழித்துதான் வந்துள்ளனர். இதன்படி பார்த்தால், குவைத் ஏர்வேஸின் சலுகைப்பயணம் தவிர்த்து, திருச்சிராப்பள்ளிக்கு ஜஜீரா ஏர்வேஸில் வந்த 1,311 பயணிகள் மற்றும் இண்டிகாவில் வந்த 499 பயணிகள் என 1,810 பயணிகளும் கூடுதலாக 2,71,500 குவைத் தினார் செலவளித்துள்ளனர். இன்றைய பரிமாற்ற (Exchange) விலையான 245 இந்திய ரூபாய் மதிப்பில் இது  6,65,17,500 ரூபாய் ஆகும்.


எவ்வளவு பொருளாதார விரயம்? வேலை இழந்து, கடுமையா மன உளைச்சலில் குவைத்திலிருந்து "வந்தே பாரத்" விமானசேவை இல்லை என்ற நிர்ப்பந்தம் காரணமாக திருச்சிராப்பள்ளிக்கு வந்த பயணிகள் செலவளித்த தொகை 6,65,17,500. அதுவும் இம்மாதிரி பொருளாதார நெருக்கடியான சூழலில். எவ்வளவு வேதனைப்படவேண்டிய விசயம்? யோசித்து பலன் ஒன்றுமில்லை. இது முடிந்துவிட்ட விசயம்.


இனியாவது வரக்கூடிய "வந்தே பாரத்" 5ஆம் கட்ட மீட்பு நடவடிக்கையிலாவது மத்திய அரசு, குவைத்திலிருந்து தேவையுடைய திருச்சிராப்பள்ளிக்கு தேவையான அளவு விமானசேவைகளை அனுமதிக்குமா? சேவை வழங்கத் தயாராக உள்ள குவைத் ஏர்வேஸ் மற்றும் ஜஜீரா ஏர்வேஸை திருச்சிராப்பள்ளிக்கு சேவை வழங்க அனுமதிக்குமா? சூழ்நிலையின் முக்கியத்துவம் கருதி மாநில அரசானது மத்திய அரசை வலியுறுத்துமா? குவைத்தில் உள்ள தமிழ் அமைப்புகள் சூழ்நிலையைக் கருதி அங்குள்ள இந்தியத்தூதரகத்திற்கு கூடுதல் அழுத்தம் கொடுப்பார்களா? என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

 

அதுமட்டுமன்றி, குவைத்தில் உள்ள அனைவருக்கும் தற்போது விளங்கியிருக்கும்; "குவைத் - திருச்சிராப்பள்ளி" நேரடி விமானசேவையின் முக்கியத்துவம். மத்திய அரசாகட்டும் மாநில அரசாகட்டும், பயணிகளின் வசதிக்குத்தான் விமான சேவைகளே அன்றி, இரு நாடுகளிக்கிடையேயான புரிந்துணர்வு ஒப்பந்த வசதிப்படி அல்ல என்பதை உணர்ந்து, விரைவில், ஒன்று குவைத் நாட்டின் விமானங்களை திருச்சிராப்பள்ளிக்கு சேவை வழங்க அனுமதிக்கவேண்டும் அல்லது இந்தியாவின் விமான நிறுவனங்களை திருச்சிராப்பள்ளியில் இருந்து குவைத்திற்கு சேவை வழங்க ஆவண செய்யவேண்டும். செய்வார்களா?


 
 

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

Next Story

மத்திய அமைச்சர் மீது ஆர்.எஸ்.பாரதி புகார்

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
RS Bharati complains against Union Minister Shoba

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள ஒயிட்ஃபீல்ட் 80 அடி சாலை என்ற இடத்தில் ராமேஸ்வரம் கஃபே என்ற பிரபல உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. கடந்த 1 ஆம் தேதி (01.03.2024) பிற்பகல் 01.05 மணியளவில் திடீரென யாரும் எதிர்பாராத வேளையில் அடுத்தடுத்து இரண்டு முறை மர்மப் பொருள் வெடித்தது. இந்த வெடி விபத்தில் மொத்தம் 10க்கும்  மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த வெடி விபத்தின் முதற்கட்ட விசாரணையில், இது சிலிண்டர் வெடிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. அதே சமயம் வெடி விபத்து நிகழ்ந்த இடத்தில், தடயவியல் நிபுணர்கள் குழு தடயங்களைச் சேகரித்து ஆய்வு நடத்தினர். பின்னர் அது திட்டமிடப்பட்ட குண்டு வெடிப்பு என்பது உறுதி செய்யப்பட்டது.இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (N.I.A.) மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது

இத்தகைய சூழலில் மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜே செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “பெங்களூரு ராமேஸ்வரம் கஃபேவில் நடந்த வெடிகுண்டு சம்பவம் தமிழகத்தில் இருந்து வந்தவர்களால் தான் நடைபெற்றது” எனத் தெரிவித்திருந்தார். இது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. மேலும், மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலஜேயின் இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அமைச்சரின் பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

RS Bharati complains against Union Minister Shoba

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், அ.தி.மு..க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மத்திய இணை அமைச்சரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்குள் உள்ளது.  சர்ச்சைக்குரிய மற்றும் பிளவுபடுத்தும் கருத்துக்களை அரசியல் தலைவர்கள் பேசக்கூடாது என ஏற்கெனவே தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்நிலையில், மத்திய இணை அமைச்சரின் பேச்சு கடும் கண்டனங்களைப் பெற்றுள்ள நிலையில், இரு மாநிலங்களுக்கு இடையே கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாகவும், தமிழ்நாட்டு மக்களை இழிவுபடுத்தியதாகவும்  திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜே மீது தேர்தல் ஆணையத்தில் புகார் மனு கொடுத்துள்ளார்.