Kushboo joined bjp

Advertisment

காங்கிரஸ் கட்சியின் பதவியிலிருந்து நீக்கப்பட்ட குஷ்பு, இராஜினாமா கடிதத்தை காங்கிரஸின் தலைமைக்கு அனுப்பியுள்ளார். இது குஷ்புவின் இரண்டாவது இராஜினாமா கடிதம். 2010ஆம் ஆண்டு திமுகவில் இணைந்த குஷ்பு பின் நான்கே ஆண்டுகளில் அங்கிருந்து விலகி 2014ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். தற்போது ஆறு வருடங்கள் கழித்து காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணையவிருக்கிறார்.

தமிழ்த் திரையுலகில் 1989ஆம் ஆண்டில் ‘வருஷம் 16’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான குஷ்பு, அதன்பின் 90களில் தமிழ்த் திரையுலகில் கொடிகட்டி பறந்தார். குஷ்புவை கதாநாயகியாக தங்களுடன் நடிக்கவைக்க நடிகர்கள் பலரும் அவரது கால்ஷீட்டுக்காக காத்திருந்தனர். அதே வேளையில் தமிழ் இரசிகர்கள் அலாதியான அன்பின் உச்சத்தினால் குஷ்புவுக்காக கோவில் கட்டினர். தமிழகத்தின் மல்லி இட்லி 'குஷ்பு' இட்லியாக மாறியது. அந்த அளவிற்கு தமிழகத்தின் டாப் முதல் பாட்டம் வரை குஷ்பு பிரபலமாகியிருந்தார்.

Kushboo joined bjp

Advertisment

அனைவருக்கும் ஏற்படுவதுபோல் குஷ்புவுக்கும் கதாநாயகி மார்கெட் குறைந்தது. அந்தவேளையில் அரசியலை நோக்கி நகர்ந்தார் நடிகை குஷ்பு. 2010ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் கலைஞர் தலைமையில் மே மாதம் தி.மு.கவில் இணைந்தார். அதனைத் தொடர்ந்து 2011ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் திமுகவின் நட்சத்திரப் பேச்சாளர்களில் ஒருவராக குஷ்பு இருந்தார். 90களில் கதாநயகர்கள் குஷ்புவின் கால்ஷீட்டுக்காக காத்திருந்ததைப்போல் 2011 தேர்தலில் குஷ்புவின் பிரச்சாரத் தேதிக்காக சில வேட்பாளர்கள் காத்திருந்தனர் என்பது நிதர்சன உண்மை.

இதே நிலை 2014 நாடாளுமன்றத் தேர்தலிலும் நீடித்தது. இதனிடையே 2013ஆம் ஆண்டு திமுகவின் அடுத்த தலைவர் குறித்தானபேச்சு எழுந்தபோது “திமுகவின் அடுத்த தலைவர் ஸ்டாலின்தான் என்று ஒரு முடிவுக்கு வரக்கூடாது” என குஷ்பு பேசியது திமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்தப் பேச்சுக்கு காரணம், திமுகவில் அவர் எதிர்ப்பார்த்த சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர்பதவி என எதுவும் கிடைக்காத விரக்தியே என அரசியல் விமர்சகர்களால் பேசப்பட்டது. அதன்பின் 2014 நாடாளுமன்றத் தேர்தலை திமுகவுடன் முடித்துக்கொண்டு காங்கிரஸை நோக்கி நகர்ந்தார் குஷ்பு.

2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் முடிந்ததும் அந்த ஆண்டு நவம்பர் மாதமே திமுகவில் இருந்து விலகி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை சந்தித்து காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார் குஷ்பு. அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த குஷ்பு “எனது வாழ்க்கையில் இது மகிழ்ச்சியான தருணம். எனது சொந்த வீட்டுக்கு நான் வந்ததைப்போல் உணருகிறேன்.” எனத் தெரிவித்தார்.

Advertisment

Kushboo joined bjp

திமுகவில் நிலையே காங்கிரஸ் கட்சியிலும் குஷ்புவுக்கு தொடர்ந்தது. ஆனால், திமுகவில் வெறும் தேர்தல் பிரச்சார பீரங்கியாய் மட்டுமிருந்த குஷ்பு, காங்கிரஸில் தேசிய செய்தித் தொடர்பாளர் பொறுப்பை பெற்றார். ஆனால் அவர் எதிர்பார்த்த அதிகார ரீதியான எந்தப் பதவியும்கிடைக்கவில்லை. இருந்தபோதும் அவர் காங்கிரஸில் தீவிரமாகச் செயல்பட்டுவந்தார். சில தினங்களுக்கு முன் குஷ்பு பாஜகவில் இணைய இருப்பதாகச் செய்திகள் பரவத் தொடங்கியபோது. செய்தியாளர்களின் கேள்விக்கு குஷ்பு, “ஒரு ட்வீட்க்கு ரூ.2 வாங்கிக்கொண்டு நான் பாஜகவில் இணையப்போவதாக வதந்திகள் பரப்புகின்றனர்.” எனக் கடுமையாக மறுப்பு தெரிவித்தார்.

அதேபோல் உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் வன்கொடுமை சம்பவத்தின்போது “மக்களை ஏமாற்றியது போதும், நமது இந்தியாவில் ஒரு பெண் பாதிக்கப்படுகிறாள். ஒரு பெண்ணுக்கு இவ்வளவு பிரச்சனை நடந்துள்ளது. பாஜகவில் உள்ள பெண் தலைவர்கள் எங்கே?” எனக் கேள்வி எழுப்பி போராட்டங்களை எல்லாம் நடத்தியிருந்தார். அதேவேளையில் தனி நபர் கருத்தாக பா.ஜ.க கொண்டுவந்த புதிய கல்விக் கொள்கையை ஆதரிக்கவும் செய்திருந்தார்.

இப்படி குஷ்புவின் அரசியல் ஓட்டம் பல்வேறு பாதைகளில் இருக்க. சில நாட்களாகவே அவர் பாஜகவில் இணையப்போவதாகச் செய்திகள் பரவி வந்தது. இந்நிலையில், நேற்று இரவு திடீரென டெல்லி புறப்பட்டார் குஷ்பு. அப்போது சென்னை விமான நிலையத்தில்'பாஜகவில் இணையத்தான் டெல்லி செல்கிறீர்களா?' என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு 'நோ கமெண்ட்ஸ்' என்று பதிலளித்துவிட்டுச் சென்றார்.

Ad

அவர் பாஜகவில் இணைவதற்கு முன்பாக காங்கிரஸ் கட்சி அவரின் தேசிய செய்தித் தொடர்பாளர் பதவியைப் பறித்தது. அதனைத் தொடர்ந்து சில விநாடிகளிலேயே காங்கிரஸின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலும் இருந்து நான் விலகுகிறேன் என காங்கிரஸின் தலைமைக்கு கடிதம் அனுப்பினார் குஷ்பு.

Kushboo joined bjp

இந்நிலையில் இன்று பிற்பகல் 1.50 மணி அளவில் பாஜகவில் இணைந்தார். அந்த நிகழ்ச்சியின்போது தமிழக தலைவர் எல்.முருகன் உடன் இருந்தார். அதே வேளையில் குஷ்புவுக்கு ராஜ்யசபா சீட் வழங்க பா.ஜ.க திட்டம் தீட்டியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. குஷ்புவின் அரசியல் பதவி 'கனவு' பா.ஜ.கவிலாவது பலிக்குமா என்கிறஇணையவாசிகளின்கேள்வி இணையத்தை ஸ்தம்பிக்க வைத்திருக்கிறது.