Skip to main content

குர்திஸ்தான்! காவு வாங்கப்படும் கனவு தேசம்!

Published on 01/11/2019 | Edited on 01/11/2019
k

 

குர்திஸ்தான் போராட்டத்திற்கு இப்போது 92 வயதாகிறது.  இத்தனை வயதானாலும் கொஞ்சமும் தளராமல் இருக்கிறது அதன் தனிநாடு தாகம்.

 

எதற்கும் அஞ்சாத நெஞ்சுரம் கொண்டவர்கள் குர்துகள். அதனால்தான் பல தேச படைகளில் இவர்கள் முக்கிய அங்கம் வகிக்கிறார்கள்.  அப்படியிருக்கையில், தங்களுக்கான தனிநாடு போராட்டத்தில் இருந்து பின்வாங்கிவிடுவார்களா என்ன? 1927ல் துவங்கிய இவர்களது போராட்டம் நூறு வருடங்களை எட்டுகிறது. தனிநாடு ஒன்றுதான் சரியான தீர்வு என்று அதற்கான போராட்டங்களையே தொடர்ந்து முன்னெடுத்து வருகிறார்கள்.

 

k

 

மத்திய கிழக்கில் பாரம்பரியமாகவே வாழ்ந்து வரும் இனமான குர்துக்கள் தென்கிழக்கு துருக்கி, வட கிழக்கு சிரியா, வட ஈராக், வடமேற்கு ஈரான், தென்மேற்கு ஆர்மேனியா ஆகிய பகுதிகளில் அதிகம் வாழ்கின்றனர். இந்த ஐந்து பகுதிகளும் ஒவ்வொன்றுடனும் இணைந்தவாறு, அந்தந்த நாடுகளின் எல்லைப் பகுதிகளிலேயே அமைந்திருக்கின்றன. குர்துகள் வாழும் இந்த மலைப்பகுதிகளை இணைத்து  ‘குர்திஸ்தான்’ எனும் தனிநாடு காண விரும்புகிறார்கள்.

 

முதலாம் உலகப்போருக்குப்பின்னர் ஓட்டோமான் சாம்ராஜ்யம் வீழ்ந்ததையடுத்து  நடைபெற்ற வெர்சாய்ஸ் சமாதான மாநாட்டில் குர்திஸ்தான் கோரிக்கை முன்மொழியப்பட்டது.  இதையடுத்து, முதலாம் உலகப்போரில் வெற்றிபெற்ற மேற்கத்திய கூட்டுப்படையினர் சுவிட்சர்லாந்தில் கூடி, செவ்ரெஸ் ஒப்பந்தம் கொண்டுவந்தனர். 1920ல் கொண்டுவரப்பட்ட அந்த ஒப்பந்தத்தில், ஐந்து நாடுகளிலும் உள்ள பகுதிகளை சேர்க்காமல், துருக்கியில் மட்டும் உள்ள பகுதியில் ’குர்து தேசம்’ ஒன்று உருவாக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.   ஆனால், 1923ம் ஆண்டில் அமெரிக்கா,பிரிட்டன் நாடுகளுடன் கையெழுத்தான  லாவ்சன்னே ஒப்பந்தத்தின்படி நவீன துருக்கியின் எல்லைகள் வரையறுக்கப்பட்டபோது குர்து தேசம் உருவாக்கப்படவில்லை.  மத்திய கிழக்கில் குர்து இன மக்கள் ஐந்து நாடுகளில் சிதறும் வகையில் நாடுகள் பிரிக்கப்பட்டன.    அடுத்த பேரிடியாக ஐந்து நாடுகளிலுமே அடிப்படை உரிமைகள்  மறுக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டார்கள். விடுதலை போராட்டத்திற்கும் தள்ளப்பட்டார்கள். 

 

k

 

ஈராக், ஈரான், சிரியா, துருக்கி நாடுகளுக்குள் ஆயிரம் போட்டியிருந்தாலும்,  குர்திஸ்தான் என்கிற ஒரு அரசு உருவாகிவிடக்கூடாது என்பதில் இந்நாடுகள் ஒத்த கருத்தைக் கொண்டிருக்கின்றன.  தனி நாட்டிற்கான போராட்டங்களால் குர்து மக்கள் பல அடக்கு முறைக்கு உள்ளானார்கள்.  குர்துக்களின் எழுச்சிகளை கட்டுப்படுத்த நினைத்த ஈராக்கின் அதிபர் சதாம் உசேன் ஈவு இரக்கமின்றி அம்மக்களை கொன்றுகுவித்தார். 1988-ல் குர்து இன மக்கள் மீது நரம்புகளை செயலிழக்க வைத்துக்கொல்லும் அதிபயங்கர ரசாயன ஆயுதங்களையும் ஏவினார்.   சதாமின் எதிரியான ஈரானிலும் குர்துகள் கொன்றுகுவிக்கப்பட்டனர். துருக்கி அரசாலும் குர்துகள் கொலை செய்யப்பட்டு வருகிறார்கள். சிரியாவும் குர்துக்களை ஒடுக்கிக்கொண்டே வருகிறது.  

 

அமெரிக்கா நடத்திய போரால் ஈராக் அதிபர் சதாம் 2003ல் வீழ்ந்தது குர்துகளுக்கு சாதகமாக அமைந்தது.  இப்போரில் அமெரிக்காவுக்கு உதவியதற்கு பலனாக ஈராக்கில் 2005ல் எண்ணெய் வளமிக்க குர்துக்களின் பகுதியில் குர்து ஆட்சி அமைக்க முடிந்தது.  2017ல் இந்த அரசு இஸ்ரேல் உதவியுடன் தனிநாடு வாக்கெடுப்பை நடத்தியது.  ஈராக் துண்டாக பிரிவதை விரும்பாத அவ்வரசு இதை எதிர்த்தது.  ஈராக் அரசின் கடும் எதிர்ப்பையும் மீறி குர்திஸ்தான் தனிநாடு கோரிக்கைக்கான பொதுவாக்கெடுப்பில் அதிகமானோர் வாக்களித்தனர்.  தனிநாட்டுக்கு ஆதரவாக 92 சதவிகிதத்தினர் வாக்களித்தார்கள்.  இந்த வாக்கெடுப்பு அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று ஈராக் அறிவித்தது.   வாக்கெடுப்பு நடந்த நாள் முதலாகவே குர்திஸ்தான்  அரசாங்கத்தின் மீது அனைத்துவிதமான தடைகளையும் விதித்தது ஈராக்.  

 

ஈராக் குர்துகளின் தனிநாடு கோரிக்கை நிறைவேறினால் அது சிரியா, துருக்கி,ஈரான் நாட்டு குர்துகளுக்கும் நன்மை அளிக்குமென்று அம்மக்கள் நம்பிவந்தனர். ஆனால், தங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று அஞ்சுகிறது துருக்கி. அதனால்தான்,  எல்லையில் இருக்கும் குர்துக்களையும் அடியோடு ஒழித்துக்கட்ட  துருக்கி அதிபர் தயீப் எர்டோகன், தக்க சமயம் பார்த்துக் கொண்டிருந்த வேளையில், சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராகப் போரிட்ட வீரர்களை அமெரிக்கா திரும்ப அழைத்தது. 


சிரியாவில் இருந்துகொண்டு உலகத்திற்கே பெரும் அச்சுறுத்தலாக இருந்த ஐ.எஸ். பயங்கரவாதிகளை அமெரிக்கா ஒழித்துக்கட்டுவதற்கு  பெரும் உதவியாக இருந்தனர் குர்து படையினர்.  அமெரிக்க படையினருடன் இருந்ததால் துருக்கியும் குர்து படை மீது போர்தொடுக்காமல் இருந்தது.  திடீரென்று அமெரிக்க படைகளை ட்ரம்ப் வாபஸ் பெற்றதால், சிரியாவுக்குள் புகுந்து குர்துபடையினர் மீதும் தாக்குதல் நடத்தியது துருக்கி. இது அமெரிக்கா செய்த துரோகம் என்றே குர்துகள் நினைக்கிறார்கள்.  அமெரிக்காவின் துரோகத்திற்கு ஆளாவது இது முதல்முறையும் அல்ல.  துரோக அரசியலுக்கு தொடர்ந்து ஆளாகிக்கொண்டே இருப்பதால்தான், ஈழத்தின் துரோக அரசியலையும்  உணர்ந்திருந்தார்கள்.  2009ல் ஈழப்போர் முடிந்தவுடன் குர்து போராளிகள் வெளியிட்ட ஈழ ஆதரவு கடிதத்தில் கருணாவின் துரோகம் குறிப்பிட்டு எழுதப்பட்டிருந்தது.

 

k

 

சிரியாவில் பிடிபட்ட ஐஎஸ் பயங்கரவாதிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் உள்ள பகுதிகளில் இருக்கும் சிறைகளில் அடைத்து வைத்துள்ளார்கள் குர்துகள்.   துருக்கியின் தாக்குதால், தங்களையும் தன் மக்களையும் பாதுகாப்பதே பெரிதாக இருக்கிறது.  இதில், பயங்கரவாதிகளை எங்கே பாதுகாப்பது?  சிறைகளில் இருந்த 950 பேர் தப்பிச்சென்றுவிட்டனர் என்று அமெரிக்காவை அதிரவைத்தனர் குர்துகள்.

 

நம்பிக்கை துரோகம் செய்த அமெரிக்காவுக்கான பதிலடியாகவே இது பார்க்கப்பட்டது.   ஆனாலும், ஒடுக்கப்பட்ட ஐஎஸ் பயங்கரவாதிகள் மீண்டும் தலைதூக்கிவிடுவார்கள் என்று உலகநாடுகள் பயந்தன.   இதற்கெல்லாம் காரணமான துருக்கிக்கு எதிராக  உலக நாடுகள்  கண்டனம் தெரிவித்துவந்த நிலையில்... குர்து படைகளுடன் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டது துருக்கி. தற்காலிகமாக போர் நின்றிருக்கிறது. ஆனாலும், தீராப்பசியால் கனன்று எரிந்துகொண்டிருக்கிறது குர்துகளின் கோபம்.


-கதிரவன்