Skip to main content

தனியாக நின்றால் ஒரு தொகுதியில் டெபாசிட் வாங்குவார்களா? ; சுடுகாட்டுக்குப் போவதும் பாஜகவோடு கூட்டணி வைப்பதும் ஒன்றுதான்.." - குடியாத்தம் குமரன் பேச்சு

Published on 12/12/2022 | Edited on 13/12/2022

 

 

க


இரண்டு தினங்களுக்கு முன்பு பாக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய மாநிலத் தலைவர் அண்ணாமலை அதிமுகவிடம் நான்கைந்து சீட்டுக்களைப் பெற வேண்டிய நிலையில் நாம் இல்லை. தமிழகத்தில் தனித்து நிற்கும் அனைத்து தகுதிகளும் பாஜகவுக்கு வந்துள்ளது. அதனால் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் 80 இடங்களில் வெற்றிபெறும் அளவுக்குக் கட்சியின் வளர்ச்சி இருக்கிறது. இதை மோடியிடமே நான் நேரடியாகத் தெரிவித்து விட்டேன் என்று பேசியதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக திமுக பேச்சாளர் குடியாத்தம் குமரனிடம் கேள்வியை முன்வைத்தோம்.நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு,

 

கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற பாஜக கூட்டத்தில் பேசிய அண்ணாமலை தமிழகத்தில் பாஜக பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. இதை நான் மோடியிடமே நேரடியாகத் தெரிவித்துள்ளேன். ஐந்தாறு சீட்டுக்காக இனி நாம் அதிமுகவிடம் நிற்கத் தேவையில்லை. நாம் தனித்து நின்றாலே 20 சதவீத இடங்களைப் பெறும் ஆற்றல் நமக்கு இருக்கிறது என்றெல்லாம் பேசி இருக்கிறார். தனியாக நின்றாலே நாடாளுமன்றத் தேர்தலில் அதிக இடங்களில் நாம் வெற்றிபெறுவோம், சட்டமன்ற தேர்தலில் 80 இடங்களில் வெற்றி கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார். இதை எப்படிப் பார்க்கிறீர்கள்? 

 

ரொம்ப சந்தோஷம். அவர்கள் தனித்து நின்று தேர்தலைச் சந்திக்க வேண்டும். அவர் வேண்டுமானால் பிரதமரிடம் அனைத்து தொகுதிகளிலும் கூட நாங்கள் வெற்றிபெறுவோம் என்று சொல்லியிருக்கலாம். அது அவருடைய விருப்பமாகக் கூட இருக்கலாம். ஆனால் கள நிலவரம் என்ன, பாஜக தமிழகத்தில் எந்த நிலவரத்தில் இருக்கிறது என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் அண்ணாமலை பேசுவது எல்லாம் தமிழக அரசியல் விவகாரம் தெரியாதவர்கள் வேண்டுமானால் தலைவர் கூறிவிட்டார் என்று நம்புவார்கள். ஆனால் தமிழகத்தில் பாஜகவைப் பார்த்து வரும் எவரும் அது நோட்டாவை தாண்டாது என்பது எளிதாகத் தெரியும். அதற்கு பெரிய கண்டுப்பிடிப்புகள் எதுவும் தேவையில்லை. 

 

தமிழகத்தில் நோட்டா என்ற வார்த்தையைக் கேள்விப்பட்டாலே அது பாஜகவுக்கு சம்மந்தப்பட்ட ஒன்று என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அவர்கள் தனியாக நாடாளுமன்றத் தேர்தலில் நின்றால் ஒரு தொகுதியில் கூட அவர்கள் டெபாசிட் வாங்க மாட்டார்கள் என்பது மட்டும் நிஜம். அரசியல் அரிச்சுவடி தெரியாமல் அண்ணாமலை தொடர்ந்து வாய்க்கு வந்ததைப் பேசி வருகிறார். மைக்கை பார்த்தால் எதாவது பேசவேண்டும் என்று நினைத்துத் தொடர்ந்து கோமாளித்தனமாகப் பேசி வந்தால் அதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். இது தவறான முன்னுதாரணமாக்க அமைந்துவிடும். அதனால் அவர் பேசுவதற்கு உரியத் தகுந்த பதிலடியைக் கொடுத்து விட வேண்டும். 

 

அவர்கள் தனியாக நின்று வெற்றிபெறுவேன் என்று தொடர்ந்து கூறிவருகிறார்களே அப்படியான வரலாறு ஏதாவது பாஜகவிற்கு இருக்கிறதா? தமிழ்நாட்டில் அமித்ஷாவே நின்றாலும் அவரால் வெற்றிபெற முடியுமா? ஏன் இன்றைக்கு வாய் கிழிய பேசுகிறாரே அண்ணாமலை அவரால் நாடாளுமன்றத் தேர்தலில் நின்று தமிழகத்தில் வெற்றிபெற முடியுமா, ஒரே ஒரு தொகுதியில் தங்களால் டெபாசிட் வாங்க முடியும் என்று இவர்கள் உறுதியாகக் கூறுவார்களா? இன்னும் சொல்லப்போனால் சில தொகுதிகளில் இவர் நோட்டாவுக்கு கீழாகத்தான் வாக்குகளைப் பெறுவார்கள். இவர்களால் வாய் சவடால் மட்டும் தான் விட முடியும். செயலில் எதையும் காட்ட முடியாது. எனவே அண்ணாமலையின் பேச்சுக்களை சீரியராக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை.