Kovilangulam temple archaeological symbol Chola and Pandya historical record

Advertisment

விருதுநகர் மாவட்டம் கோவிலாங்குளத்தில் கி.பி. 12 ஆம் நூற்றாண்டில் சோழர்களால் கட்டப்பட்ட சமணர் கோயிலையும், கி.பி. 13 ஆம் நூற்றாண்டில் பாண்டியர்களால் கட்டப்பட்ட பெருமாள் கோயிலையும் தொல்லியல் சின்னமாக பாதுகாத்துப் பராமரிக்க தொல்லியல் ஆய்வு மாணவி வே.சிவரஞ்சனி அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

Kovilangulam temple archaeological symbol Chola and Pandya historical record

பால்கரையைச் சேர்ந்த ராமநாதபுரம் சி.எஸ்.ஐ. கல்வியியல் கல்லூரி மாணவி வே.சிவரஞ்சனி, ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு வழிகாட்டுதலில், தொல்லியல் இடங்களை நேரில் கள ஆய்வு செய்து ஆய்வுக்கட்டுரைகள் எழுதி வருகிறார். கோவிலாங்குளத்தில் உள்ள தொல்லியல் தடயங்களை ஆய்வு செய்தபின் மாணவி வே.சிவரஞ்சனி கூறியதாவது, “தற்போது கோவிலாங்குளம் என அழைக்கப்படும் இவ்வூர் வெண்பு வளநாட்டு செங்காட்டிருக்கை கும்பனூரான குணகணாபரண நல்லூர் என கல்வெட்டில் சொல்லப்படுகிறது.

அம்பலப்பசாமி கோயில்;

Advertisment

ஊரின் தெற்கில் கோயில் போன்ற அமைப்பில் கருவறையும், அர்த்தமண்டபமும் உள்ள பெரிய மேடை போன்ற இடத்தில் அமர்ந்த நிலையில் மூன்று சிற்பங்கள் உள்ளன. இதில், தெற்கில் 24-ம் தீர்த்தங்கரர் மகாவீரரும், வடக்கில் முக்குடைகளின் கீழ் ஒரு தீர்த்தங்கரரும், நடுவில் சுருள்முடியுடன் ஒரு தீர்த்தங்கரரும் உள்ளனர். இதை அம்பலப்பசாமி கோயில் என்கிறார்கள்.

Kovilangulam temple archaeological symbol Chola and Pandya historical record

இங்கு கி.பி. 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த முதலாம் குலோத்துங்கச் சோழனது 3 கல்வெட்டுகள் உள்ளன. இதில் ஒன்று முக்குடையோரான ஜைனர்களுக்கு ‘திருமண்டபம், செம்பொன் திவ்ய விமானம் செய்து திருக்கோயில் அமைத்ததாக’ சொல்கிறது. இதன் பராமரிப்புக்காக நிலங்களும், கிணறும், நறுந்தண்ணீர் பந்தலும் அமைத்துக் கொடுத்துள்ளனர். மற்ற இரு கல்வெட்டுகளில் சில ஊர்ப் பெயர்களும், அதிகாரிகள் பெயர்களும் வருணனையுடன் வருகிறது. இது கி.பி. 12 ஆம் நூற்றாண்டுகளில் தமிழர்களின் பெயர் வைக்கும் வழக்கத்தை அறிய உதவுகிறது. இவ்வூருக்கு அருகில் புல்லூர், தொப்பலாக்கரை, குறண்டி ஆகிய ஊர்களில் சமணப்பள்ளி இருந்துள்ளது. ஆனால் இங்கு பள்ளி என்ற சொல்லே கல்வெட்டில் வராததும் திருக்கோயில் என அழைக்கப்பட்டுள்ளதும் ஆச்சரியமாக உள்ளது.

எங்கும் அழகிய பெருமாள் கோயில்;

Advertisment

Kovilangulam temple archaeological symbol Chola and Pandya historical record

இங்குள்ள எங்கும் அழகிய பெருமாள் கோயிலில் 4 கல்வெட்டுகள் உள்ளன. இதில், மூன்று குலசேகர பாண்டியனுடையது. வரமண்ண வீரர் குறி நம்பிள்ளை, நாரணன், சாணாடனான கன்னி நாட்டரையன் ஆகியோர் இவ்வூர் கோயிலுக்கு கொடையாக பசு, நூறு குழி நிலம் வழங்கியதை கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. கோயில் விமானம் பிரஸ்தரம் வரை கருங்கற்களாலும், அதன் மேல்பகுதி சுதை மற்றும் செங்கற்களாலும் கட்டப்பட்டுள்ளது. ஸ்தூபி சேதமடைந்துள்ளது.

பாதுகாக்க வேண்டும்;

பல நூறு ஆண்டு வரலாறு கொண்ட இக்கோயில், புல் பூண்டு முளைத்து ஆங்காங்கே கற்களெல்லாம் இடிந்து விழுந்த நிலையில் காட்சியளிக்கிறது. கருவறையும் அர்த்தமண்டபமும்தான் சேதமடைந்த நிலையில் மிஞ்சியுள்ளது. மகாமண்டபத்தில் அடித்தளத்தை மட்டுமே காணமுடிகிறது. சிற்பங்களோடு உள்ள தூண்கள் கோயிலருகில் உடைந்து கிடக்கின்றன. கோயில் கிணறு குப்பை போடும் இடமாக உள்ளது.

சோழ, பாண்டிய மன்னர்களின் கல்வெட்டு ஆதாரத்துடன் நீண்டதொரு வரலாற்றையும் தனக்குள் கொண்டுள்ள, கோவிலாங்குளத்தின் சமண, வைணவக் கோயில்களை தொல்லியல் துறையினர் புணரமைத்து, தொல்லியல் சின்னமாகப் பாதுகாக்க வேண்டும் என அரசைக் கேட்டுக் கொள்வதாகத் தெரிவித்தார்.