Skip to main content

"எங்களை விட்டிருந்தா எங்கோ ஒரு ஓரமா வாழ்ந்திருப்போம். ஆனால்..." - கௌசல்யா உணர்வலை

Published on 23/06/2020 | Edited on 23/06/2020
kousalya sankar

 

 

13 மார்ச் 2016... தமிழகத்தை அதிர வைத்த நாள். உடுமலைப்பேட்டை பேருந்து நிலையத்தின் அருகே, பொது வெளியில், பட்டப்பகலில், மக்கள் முன்னிலையில் அரங்கேறியது ஒரு கொடூர செயல். தனது பெற்றோரின் எதிர்ப்பை மீறி சங்கர் என்ற சக மாணவனை திருமணம் செய்துகொண்டு வாழ்ந்த கௌசல்யாவும் அவரது காதல் கணவர் சங்கரும் கூலிப்படை கும்பலால் வெட்டப்பட்டனர். கௌசல்யா படுகாயமடைய, சங்கர் உயிரிழந்தார். தமிழகம் கண்ட சமூக நீதி, முற்போக்கு, மனிதாபிமானம் உள்ளிட்ட பல விஷயங்களை அசைத்துப்பார்த்தது இந்தக் கொடூர செயல். 2017ஆம் ஆண்டு இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய திருப்பூர் நீதிமன்றம், கௌசல்யாவின் தந்தை மற்றும் கூலிப்படையினர் ஐந்து பேர் உள்ளிட்ட ஆறு பேருக்கு மரண தண்டனை வழங்கியது. கௌசல்யாவின் தாய் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கின் மேல்முறையீடு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வந்து, நேற்று (22 ஜூன் 2020) தீர்ப்பளிக்கப்பட்டது. கௌசல்யாவின் தந்தை விடுவிக்கப்பட்டார். பிறருக்குமான தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டுள்ளது.மீண்டும் ஒரு முறை உடைந்து இருந்தார் கௌசல்யா. அவரிடம் பேசினோம்...

 

இந்தத் தீர்ப்பை எப்படி பார்க்கிறீர்கள்?

எதிர்பார்க்கவே இல்லை தோழர். இவ்வளவு வெளிப்படையாக நடந்த, 164 பேர் சாட்சியாக இருக்கும் ஒரு குற்ற வழக்கில், அக்யூஸ்ட் நம்பர் 1 விடுவிக்கப்படுவார் என்பதை துளியும் எதிர்பார்க்கவில்லை. பெருத்த ஏமாற்றமாக இருக்கிறது.

என் பெற்றோருக்கு இதில் எந்த தொடர்பும் இல்லைன்னா, அந்த கூலிப்படைக்காரர்களுக்கும் எங்களுக்கும் என்ன தொடர்பு? சின்ன வயசுல இருந்து நான் அவுங்கள ஒரு தடவ கூட பார்த்ததில்லை. சங்கரும் அப்படித்தான். எந்த வித சம்மந்தமும் இல்லாத ஒருத்தவங்க எங்களை எதுக்கு வெட்டணும்? சம்பவம் நடந்ததுக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமைதான் இவுங்க எல்லோரும் வந்து மிரட்டிட்டுப் போனாங்க, ‘யாராவது ஏதாவது பண்ணிட்டா எங்கள சொல்லக்கூடாதுன்னு...’. அப்புறம் எப்படி இது அவர்கள் தொடர்பில்லாம நடந்திருக்கும்?

 

அந்த சம்பவம் நடந்தபோது வெளிவந்த வீடியோ மிக சக்தி வாய்ந்த ஒரு ஆதாரமா இருந்தது. இப்போ அது கேள்விக்குள்ளாகி இருக்கா?

எங்களுக்கு இந்தக் கொடுமை நடந்தபோது அந்த வீடியோதான் முக்கிய ஆதாரம். அந்த வீடியோ, யாராலும் காரணத்தோடு எடுக்கப்பட்டதல்ல. மிக இயல்பாக நடந்த சம்பவம் பதிவானது. அந்த சம்பவத்தில் வீடியோ ஆற்றிய பங்கை வைத்து பல சம்பவங்களில் வீடியோ ஆதாரங்கள் தேடப்பட்டன. பல முக்கிய இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டன. இப்படி முக்கியத்துவம் வாய்ந்த அந்த ஆதாரமே இப்போ கேள்விக்குள்ளாக்கப்பட்டது வேதனையளிக்குது. மேலும் வழக்கு நடந்த விதத்திலும் மாற்றம் இருந்தது. திருப்பூரில் வழக்கு நடந்தபோது, அந்த வழக்கறிஞர் என்னிடம் அடிக்கடி பேசுவார்கள், நிறைய விவரங்களை கேட்டாங்க. அந்த டி.எஸ்.பியும் ரொம்ப நேர்மையா, கண்ணியமா நடத்தினார். ஆனால், இங்க எல்லாமே மாறியது. என்னிடம் யாரும் பேசவில்லை. நானே கேட்டபோதும் "வழக்கு நடக்குதும்மா... தள்ளி போகுதும்மா"னு மட்டும்தான் சொன்னாங்களே தவிர என்னை  ஈடுபடுத்திக்கொள்ளவில்லை.

 

அரசும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம் என்று சொல்லியிருக்கு. நீங்களும் சட்ட நடவடிக்கைகளை தொடர்வோம் என்று சொல்லியிருக்கீங்க. எந்த வகையில் இந்த வழக்கில் உங்களை இணைத்துக்கொள்ள விரும்புகிறீர்கள்?

உச்ச நீதிமன்றத்தில் தனியாக ஒரு வழக்கறிஞர் அமைத்து, அரசு செய்யும் மேல்முறையீட்டில் கூடுதலாகப் பணியாற்றலாம் என்று இருக்கிறோம்.

 

kousalya sankar together

 

 

நேற்று தீர்ப்பு வெளியான போது சங்கரின் நினைவுகள் இருந்ததா? எப்படி இருந்தது?

அது சொல்ல முடியாத ஒரு வலி. என்னால எக்ஸ்ப்ளெயின் பண்ண முடியல. எல்லோரும் சொல்றாங்க, 'உனக்கென்ன நீ இன்னொருத்தர கட்டிக்கிட்ட... வேற வாழ்க்கை அமைச்சுக்கிட்ட'னு... அவுங்கவுங்களுக்கு நடந்தாதான் தெரியும். எத்தனை பேர் என்னை சுற்றி இருந்தாலும் சங்கரின் அரவணைப்பு வராது. அவனுக்கான நீதிப்பயணம் தொடரும். அதில் எந்த சிறு தடையையும் எனது புதிய வாழ்க்கை ஏற்படுத்தாது. அந்த நீதிப்பயணத்துக்கு என்னை ஒப்புக்கொடுத்துதான் இந்த வாழ்க்கையை வாழ்கிறேன்.

 

சமூகத்தில் சாதி முக்கிய அங்கமாக இருக்கு... சமூக ஊடகங்களில் உங்கள் மீது வன்மம் பெருகி இருக்குன்னு சொல்றீங்க... அப்படியிருக்கும்போது இந்த ஒரு குடும்பத்தை மட்டும் தண்டித்தால் எல்லாம் சரியாகிவிடுமா?

உண்மைதான்... இது சமூக நோய்தான். சமூக ஊடகங்களில் இப்படி பேசுபவர்கள், இதை ஆதரிப்பவர்கள் எல்லாரும் இதன் பின்னணிதான். ஆனால், அவர்கள் கொலை செய்யாமல் இருக்குறாங்க. இவுங்க கொலை செஞ்சுட்டாங்களே? எங்களை விட்டிருந்தா எங்கோ ஒரு ஓரமா வாழ்ந்திருப்போம். ஆனால், விடலையே...? நாங்க வெட்டுப்பட்டு ஆம்புலன்ஸில் சென்ற அந்த காட்சி என்னால இன்னும் மறக்க முடியல. இப்போ இவர்கள் விடுதலை செய்யப்படுவதால் சாதி ஆணவக்கொலை செய்யும் எண்ணம் சுலபமாக வரும். மேல்முறையீட்டில் தப்பிக்கலாம் என்று நினைப்பார்கள்.

இனி எனக்கே என்ன நடக்கும்னு அச்சுறுத்தலா இருக்கு. பவரை பயன்படுத்தி தண்டனையிலிருந்து வெளியே வர முடியுமென்றால், 'இன்னொரு பத்து லட்சம்தானே, இன்னொரு அஞ்சு பேரை வச்சு கொலை செய்துவிட்டு அவுங்கள தண்டனை அனுபவிக்கவிட்டுக்கலாம்' என்ற எண்ணத்தில் எங்களை எதுவேண்டுமானாலும் செய்ய முடியும். எனக்கு அவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்பதுதான் எண்ணம், மரண தண்டனை கொடுக்கணும்னு எப்பவும் நினைக்கல. ஆனால், தண்டிக்கப்படணும். 

உரையாடலின் தொடர்ச்சி...

"என் அப்பா இன்னும் உணரல... என் தம்பி மாறிவிட்டான்...” - கௌசல்யா உணர்வலை #2       

 

 

 

Next Story

ஆணவக் கொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் வேண்டும் - உடுமலை கௌசல்யா

Published on 24/03/2023 | Edited on 24/03/2023

 

Social Activist Kausalya Interview

 

சமீபத்தில் கிருஷ்ணகிரியில் காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாமனாரே தன்னுடைய மருமகனை ஆணவக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தன்னுடைய கருத்துகளை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார் ஆணவக் கொலையால் பாதிக்கப்பட்ட உடுமலை கௌசல்யா...

 

கிருஷ்ணகிரி சம்பவத்தில் காதலித்துத் திருமணம் செய்துகொண்ட இருவரும் ஒரே சாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் இங்கு வர்க்க பேதத்தால் கொலை நிகழ்த்தப்படுகிறது. சொந்த சாதியாகவே இருந்தாலும் நாங்கள் சொல்லும் மாப்பிள்ளையை விட்டு வேறு ஒருவரைத் திருமணம் செய்துகொண்டால் கொலை செய்வோம் என்கிற ஆணாதிக்கத்தின் வெளிப்பாடு தான் இந்தக் கொலை. சாதி இன்னும் ஒழிக்கப்படவில்லை என்பது நிதர்சனம். அதனால் நேரடியாகப் பாதிக்கப்பட்டவள் நான். இன்றும் போராடிக் கொண்டிருக்கிறேன்.

 

பெரியாருடைய பணிகள் சாதியம் எவ்வளவு கொடூரமானது என்பதை நமக்கு உணர்த்தியது. அவருடைய பணிகளை நாம் அனைவரும் தொடர வேண்டும். ஒருவேளை சங்கருக்கு பதிலாக அன்று நான் கொல்லப்பட்டிருந்தால் அது சாதாரண கொலை வழக்காகத் தான் பதிவு செய்யப்பட்டிருக்கும். அதனால்தான் ஆணவக் கொலைகளுக்கு எதிராக தனிச்சட்டம் வேண்டும் என்று கேட்கிறோம். நிறைய பெண்களுக்கு தங்களுடைய துணையைத் தேடுவதற்கான வாய்ப்பு மறுக்கப்படுகிறது. அதுவும் ஆணவக் குற்றம்தான். 

 

சாதி வெறி பலருக்கு ஊறிப்போய் இருக்கிறது. சாதி வெறி இல்லாமல் இருக்கும் பலரும் முற்போக்கு இயக்கங்களுடன் கைகோர்ப்பதில்லை. சாதி ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்குக் கூட இங்கு பல நெருக்கடிகள் கொடுக்கப்படுகின்றன. சாதி மறுப்புத் திருமணங்களை அரசு தொடர்ந்து ஊக்குவிக்க வேண்டும். அப்படி திருமணம் செய்துகொள்பவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொடுக்க வேண்டும். அவர்களுடைய குழந்தைகளுக்கு கல்வியில் முன்னுரிமை கொடுக்க வேண்டும். 

 

அரசியல்வாதிகளும் வாக்கு வங்கிக்காக இதில் பல சமரசங்களைச் செய்துகொள்கின்றனர். இந்த விஷயத்தில் உடனடித் தேவை என்பது ஆணவக் கொலைகளுக்கு எதிரான, சாதி மறுப்புத் திருமணங்களுக்கு ஆதரவான சட்டங்கள் தான்.

 


 

Next Story

உடுமலை அருகே பெண் சுட்டுக்கொலை!

Published on 23/08/2020 | Edited on 23/08/2020

 

tiruppur district udumalpettai women incident police investigation

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகே மறையூரில் காளியப்பன் என்பவர் வனக் காவலர்களை நாட்டுத்துப்பாக்கியால் சுட முயன்ற போது, குண்டு பட்டதால் மலைவாழ் பெண் சந்திரிகா உயிரிழந்தார். 

 

பெண் சுட்டுக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக காளியப்பன் மற்றும் பெண்ணின் உறவினர் உட்பட மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

சந்தன மரக்கடத்தல் வழக்கில் கைதான காளியப்பன் முன்விரோதத்தால் வனக்காவலர்களை சுட முயற்சிச் செய்ததாக தகவல் கூறுகின்றன.