Advertisment

பொற்பனைக்கோட்டையில் கொத்தளம் அமைப்பு; அரண்மனையிலும் கோட்டையிலும் ஒரே மாதிரியான செங்கல்!

Kothalam structure at Porpanaikottai

Advertisment

தமிழ்நாட்டில் எஞ்சியுள்ள சங்ககால வட்டக் கோட்டைகளில் ஒன்று புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையில் உள்ளது. வட்டக் கோட்டை எப்படி சிறப்பு மிக்கதாக உள்ளதே அதே போல கோட்டையின் நுழைவாயில்களில் உள்ள பொற்பனைமுனீஸ்வரன் உள்ளிட்ட காவல் தெய்வங்களின் வழிபாடுகளும் தமிழ்நாடு முழுவதும் சிறப்பு பெற்றது.

பொற்பனைக்கோட்டையில் இன்றும் அழிவில்லாத சங்ககால கோட்டையின் நடுவில் உள்ள அரண்மனைத்திடலில் தமிழ்நாடு அரசு அகழாய்வு இயக்குநர் தங்கத்துரை தலைமையில் ஆய்வு மாணவர்கள் முன்னிலையில் அகழாய்வுப் பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். அகழாய்வில் கருப்பு, சிவப்பு, பானை ஓடுகள், வட்டசில்கள், தங்க மூக்குத்தி, விளையாட்டு பொருட்கள், பாசி மணிகள் என ஏராளமான பொருட்கள் கிடைக்கப்பெற்று பாதுகாக்கப்பட்டு வருகிறது.

Kothalam structure at Porpanaikottai

Advertisment

அரண்மனைத் திடலில் சுடு செங்கல் கட்டுமானம் கண்டுபிடிக்கப்பட்டு வட்ட வடிவ கட்டுமானம், தண்ணீர் வெளியேறும் கட்டுமானமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அகழாய்வுப்பணியின் தொடர்ச்சியாக பிரமாண்டமாக இன்னும் உறுதியாக நிற்கும் கோட்டைச் சுவர், கொத்தளம் பகுதியில் கோட்டை சுற்றுச் சுவர் கட்டுமானம்பற்றி அறிய அகழாய்வு தொடங்கி நடந்து வருகிறது.

கோட்டைச் சுவர் தொடங்கும் சுமார் 60 அடி சாய்வில் இருந்து 5 மீட்டர் நீளம் அகலத்தில் தேவைக்கேற்ற உயரத்தில் படிக்கட்டு வடிவில் அகழாய்வு செய்யத் தொடங்கி நடந்து வருகிறது. கோட்டை சுவரின் அடியில் இருந்து முழுமையாக எளிதில் கரையாத கடினமான மண் கொண்டு உயரமாக அமைக்கப்பட்டு சுவரின் மேலே நடுவில் ஒரு மீட்டர் உயரம், அகலத்தில் சுடுசெங்கல் வைத்து நடைபாதை அமைக்கப்பட்டுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதே போல பாதுகாப்பு வீரர்கள் நிற்க செங்கல் கட்டுமானத்தில் 'ப' வடிவத்தில் கொத்தளமும் அமைக்கப்பட்டுள்ளது.

கோட்டை சுவருக்கு அருகிலேயே அகழி வெட்டி அதிலிருந்து மண் எடுத்து நிரப்பியுள்ளனர் என்பது அகழியையும் கோட்டை சுவரில் உள்ள எளிதில் கரையாத கல் கலந்த கடினமான மண்ணைப் பார்க்கும் போது அறிந்து கொள்ள முடிகிறது. மேலும் கோட்டை சுவரின் மேல் நடைபாதை, கொத்தளத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள செங்கற்களும் அரண்மனைத் திடலில் உள்ள கட்டுமான செங்கற்களும் ஒரே மாதிரியாக உள்ளதால் கோட்டையும், அரண்மனையும் ஒரே நேரத்தில் கட்டப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Kothalam structure at Porpanaikottai

இன்னும் அகழாய்வுப் பணிகள் தொடர்ந்து கொண்டிருப்பதால் இறுதிக்கட்ட ஆய்வறிக்கையிலேயே கோட்டை, அரண்மனைத்திடல் கட்டுமானம் ஆகியவை எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது என்பது உறுதியாகத் தெரிய வரும். இந்த கோட்டைச் சுவரின் கட்டுமானத்தைப் பார்க்கும் போது இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் உறுதியாக நிலைத்து நிலைத்து நின்று தமிழர்களின் பெருமையைப் பறைசாற்றும்.

pudukkottai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe