Skip to main content

கொரியா பெண்களை சூறையாடிய ஜப்பான் ராணுவம்!!! -கொரியாவின் கதை பகுதி 9

கொரியர்களின் நிலத்தை பல்வேறு வகைகளில் ஏமாற்றுச் சட்டங்கள் மூலமாக ஜப்பான் பறித்தது. பிறகு அவர்களையே குத்தகைக்கு விவசாயம் செய்து நான்கில் மூன்று பங்கு விளைச்சலை குத்தகையாக பறித்தது. விளைச்சல் இல்லாவிட்டாலும் மூன்றுபங்கு குத்தகையை கொடுக்க வேண்டும். இல்லையென்றால் அடிமைச் சேவகம் செய்ய வேண்டும் என்ற நிலையை உருவாக்கியது ஜப்பானிய அரசு.

 

koriavin kathai


 

கொரியர்களின் தேசிய அடையாளத்தை அழிக்கும் பல்வேறு சட்டங்களை ஜப்பான் அரசு பிறப்பித்தது. ஜப்பான் பெயர்களை அடைமொழியாக சேர்க்கும்படி கட்டாயப்படுத்தியது. பாரம்பரியமான கொரிய கலாச்சாரம் சிதைக்கப்பட்டது. ஏராளமான கொரிய கலாச்சார அடையாளங்கள் அழிக்கப்பட்டன. அல்லது ஜப்பானுக்கு கொண்டு செல்லப்பட்டன. ஜப்பான் அருங்காட்சியகங்களிலும் தனிநபர் சேகரிப்பாகவும் ஏராளமான கலைப் பொக்கிஷங்கள் இருப்பதை ஒரு புலனாய்வு தெரிவித்தது. ஜப்பானில் 34 ஆயிரத்து 369 கலைப்பொருட்களும், அமெரிக்காவில் 17 ஆயிரத்து 803 பொருட்களும் இருப்பதாக ஒரு கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. ஆனாலும் நிபுணர்கள் மதிப்பீட்டின் அடிப்படையில் ஜப்பானில் மட்டும் 1 லட்சம் கலைப்பொருட்கள் இருப்பதாக தெரியவந்துள்ளது.

 

1939 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப்போர் தொடங்கியது. கொரியா ஜப்பானின் ஒரு பகுதியாகியது. இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் ராணுவத்தில் சேர்ந்து சண்டையிடவும், சுரங்கங்களிலும் தொழிற்சாலைகளிலும் வேலைசெய்யவும் கட்டாயத் தொழிலாளர்களாக சுமார் 50 லட்சம் கொரியர்கள் சேர்க்கப்பட்டனர்.

 

 

 

இப்படி வேலை செய்த சுமார் 4 லட்சம் தொழிலாளர்கள் உயிரிழந்தனர் என்று கூறப்படுகிறது. கொரிய பெண்களில் 2 லட்சம் பேர் ஜப்பான் ராணுவத்தினரின் பாலியல் இச்சைகளை தீர்ப்பதற்காக பாலியல் தொழிலாளிகளாக பல்வேறு ஜப்பான் ராணுவ முகாம்களுக்கு கொண்டுபோகப்பட்டனர்.

 

ஜப்பானில் பாலியல் தொழில் தொடக்கத்திலிருந்தே ஒழுங்குபடுத்தப்பட்டு நடைமுறையில் இருக்கிறது. ஜப்பான் ராணுவம் பிற நாடுகளில் சண்டையிடும்போது, கற்பழிப்புக் குற்றங்களில் ஈடுபடாமல் தவிர்ப்பதற்காக பாலியல் தொழிலாளிகளாக ஜப்பானிய பெண்களை ராணுவ முகாம்களில் இணைப்பது வழக்கம். இதன்மூலம் ராணுவ வீரர்கள் பாலியல் நோய் தாக்குதலில் இருந்து காப்பற்றப்படுவதாக ஜப்பான் அரசு நினைத்தது. அதுமட்டுமின்றி, ராணுவ வீரர்கள் மத்தியில் கலகம் ஏற்படாமல் தடுக்கவும் இந்த ஏற்பாடு உதவுவதாகவும் கருதியது.

 

koriavin kathai


 

ராணுவ முகாம்களில் இதுபோன்ற பாலியல் தொழிலாளிகளின் முதல் முகாம் 1932 ஆம் ஆண்டு சீனாவின் ஷாங்காய் நகரில் உருவாக்கப்பட்டது. அங்கு தொழிலாளிகளாக வந்தவர்கள் அனைவரும் ஜப்பானிய பாலியல் தொழிலாளர்கள். ஆனால், ஜப்பான் தனது ராணுவ ஆக்கிரமிப்பை விரிவுபடுத்தியபோது, இந்த தொழிலில் ஈடுபடுத்த போதுமான ஜப்பானிய பெண்கள் கிடைக்கவில்லை. அப்போது, எந்த நாட்டை ஆக்கிரமிக்கிறார்களோ, அந்த நாட்டிலேயே இந்த தொழிலிலுக்காக ஏஜெண்டுகள் மூலம் பெண்களை சேர்த்தார்கள். அல்லது வலுக்கட்டாயமாக கடத்திவந்து தொழிலில் ஈடுபடுத்தினார்கள். தொழிற்சாலை வேலைக்கு, செவிலியர் வேலைக்கு என்று ஏமாற்றி அழைத்துச் சென்று பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சம்பவங்கள் வரலாற்றில் கொடூரமான பக்கங்களாக நிரம்பியிருக்கிறது.

 

 

 

இரண்டாம் உலகப்போரின் தொடக்கத்தில் விளம்பரம் கொடுத்து பாலியல் தொழிலுக்கு பெண்களை சேர்த்தார்கள். ஜப்பானின் குடியேற்ற நாடுகளான கொரியா, தைவான், சீனா ஆகியவற்றில் இதுபோன்ற விளம்பரங்களை ஏஜெண்டுகள் வெளியிடுவார்கள். சீனாவில் ஹுய் முஸ்லிம் பெண்களை, பள்ளிகளில் கற்பிக்கும் வேலை என்று சேர்ப்பார்கள். பின்னர் பாலியல் அடிமைகளாக மாற்றுவார்கள்.

 

இத்தகைய பாலியல் அடிமைகள் உலகின் பல நாடுகளில் ஜப்பான் ராணுவ முகாம்களில் இருந்தனர். ஜப்பானிய ராணுவத்தில் நேதாஜியின் இந்திய தேசிய ராணுவமும் இணைந்திருந்தது. அவர்கள் இத்தகைய பாலியல் தொழிலாளர்களை பயன்படுத்தினார்களா என்பது தெரியவில்லை என்று அமெரிக்க வரலாற்று ஆசிரியர் ஜெரார்டு வெய்ன்பெர்க் கூறியிருக்கிறார்.

 

koriavin kathai


 

யுத்தத்தின் வீரியம் அதிகரித்தபோது, உணவுப் பொருட்களுக்காக ஜப்பான் ராணுவம் கொள்ளையில் ஈடுபட்டது. கிராமப்புறங்களில் கொலை, கற்பழிப்புக்கு பிறகு கொள்ளையடித்துவிட்டு, தீக்கிரையாக்குவதை வாடிக்கையாக மாற்றினார்கள்.

 

இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு ஜப்பான் ராணுவம் இரண்டாம் உலகப்போர் சமயத்தி்ல் நடத்திய யுத்தக் குற்றங்கள் குறித்து விசாரணை நடைபெற்றது. ஜப்பான் தனது ராணுவத்திற்காக சட்டவிரோதமாக கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பெண்களின் எண்ணிக்கை துல்லியமாக தெரியவில்லை. ஆனால், 2 லட்சத்திற்கும் அதிகமான பெண்களை ஜப்பான் ராணுவத்தினர் கடத்தி பாலியல் தொழிலுக்கு பயன்படுத்தினர் என்கிறார்கள். அதிகபட்சமாக 3 லட்சம் பேர் இப்படிக் கடத்தப்பட்டிருக்கலாம் என்றும் சில கருத்து நிலவுகிறது.

 

 

 

உலகம் முழுவதும் ஜப்பான் ராணுவத்தினருக்காக 2 ஆயிரம் முகாம்களில் பாலியல் தொழிலாளர்கள் அடைக்கப்பட்டனர் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. இந்த முகாம்களில் ஜப்பான், கொரியா, சீனா, பிலிப்பைன்ஸ், தைவான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பெண்கள் இருந்தனர்.

 

பாலியல் தொழிலாளிகளாக ஜப்பான் ராணுவம் பயன்படுத்திய பெண்களில் நான்கில் மூன்று பங்கினர் உயிரிழந்தனர். உயிரோடு இருந்தவர்கள் பாலியல் நோய்களால் தாக்கப்பட்டு வாழ்க்கையை இழந்தனர்.

 

பாலியல் தொழிலாளிகளை ராணுவத்தினர் அடித்தும் உதைத்தும் உடல்ரீதியாக கொடுமைப்படுத்தியும் உறவு வைத்துக்கொண்டனர். பாலியல் தொழிலுக்கு தொடர்பில்லாத குடும்பப் பெண்களை இந்த முகாம்களில் கொண்டுவந்து பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கும்போது உடைந்து நொறுங்கினர்.

 

koriavin kathai


 

ஜப்பான் ராணுவத்தின் கொடுமைகள் குறித்து 1991 ஆம் ஆண்டு கிம் ஹாக் சுன் என்ற கொரிய பெண் பேட்டியளித்தார். அந்தப் பேட்டி உலகையே உலுக்கியது.

 

“எனக்கு 17 வயது இருக்கும்போது எனது தோழியுடன் நானும் ஜப்பான் ராணுவத்தினரால் கடத்தப்பட்டோம். தொழிற்சாலையில் வேலை இருப்பதாக கூறி கடத்தினார்கள். ஆனால், நாங்கள் ராணுவ முகாமுக்கு போகும்போதே ராணுவ வாகனத்தில் வன்புணர்வுக்கு ஆளானோம். முதல் நாள் தொடங்கிய அது பிறகு எப்போதும் நிற்கவே இல்லை. தினமும் 30 முதல் 40 முறை என்னுடன் யாரேனும் ஒருவர் உறவு கொண்டார். நான் பெண்ணாய் பிறந்தாலும், பெண்ணாக வாழவில்லை. ஒரு ஆண் எனக்கருகில் வந்தாலே நான் நோயாளியைப் போல உணர்ந்தேன். ஜப்பான் கொடியை பார்த்தாலே நடுங்குகிறேன். எனக்கு நடந்ததை சொல்ல நான் வெட்கப்படவில்லை.” என்று அவர் அழுதபோது நாகரிக உலகம் வெட்கித் தலைகுனிந்தது.

 

ராணுவ முகாம்களில் இருந்த பாலியல்தொழிலாளிகளில் 80 சதவீதம் பேர் கொரியர்கள். இவர்கள் சாதாரண வீரர்களுக்கு ஒதுக்கப்பட்டார்கள். ஜப்பான் மற்றும் ஐரோப்பிய பெண்கள் என்றால் அவர்களை ராணுவ உயர் அதிகாரிகள் மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற நிலையும் இருந்தது.

 

ஜப்பான் ராணுவத்தின் இந்த அட்டூழியம் வெளிவந்ததே தனிக்கதை. அதை அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்…

 

(இன்னும் வரும்)

 

அடுத்த பகுதி:

ஜப்பானின் சர்ச்சைக்குரிய போர்க்குற்றங்கள்! கொரியாவின் கதை #10

முந்தைய பகுதி:

கொரியர்களை கொன்று குவித்த ஜப்பான்!!! கொரியாவின் கதை பகுதி 8
 

 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்