ADVERTISEMENT

கொடநாடு விவகாரம்: மிரண்டுபோன 'நிழல்' இளங்கோவன்! மவுனம் கலைத்ததன் பின்னணி என்ன?

09:49 AM Sep 11, 2023 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

சேலம் மாவட்டம், இடைப்பாடி அருகே உள்ள சமுத்திரத்தைச் சேர்ந்தவர் கனகராஜ். இவர், ஜெயலலிதா, சசிகலாவிடம் சிறிது காலம் கார் ஓட்டுநராக இருந்தார். இந்நிலையில், ஜெ., மறைவுக்குப் பிறகு 2017ஆம் ஆண்டு பிப். மாதம் எடப்பாடி பழனிசாமி முதல்வராக பொறுப்பேற்றார். அப்போது, ஜெ.,வுக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறின. இதில் 'மாஸ்டர் மைண்ட்' ஆக செயல்பட்ட கனகராஜை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில், 2017ஆம் ஆண்டு ஏப். 28ஆம் தேதி இரவு, சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த சந்தனகிரி - சென்னை புறவழிச்சாலையில் விபத்தில் கனகராஜ் பலியானார். இந்த விபத்து தற்செயலானது அல்ல; திட்டமிடப்பட்டது என்று சர்ச்சை கிளம்பியது. இதுகுறித்து சிபிசிஐடி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், கனகராஜின் அண்ணன் தனபால், தன் தம்பி இறப்பதற்கு முன்பாக கொடநாடு எஸ்டேட்டில் இருந்து திருடிக்கொண்டு வந்த முக்கிய ஆவணங்கள் அடங்கிய 5 பைகளை, நிழல் முதல்வர் போல வலம் வந்த சேலம் புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் இளங்கோவன், எடப்பாடி பழனிசாமியின் மைத்துனர் வெங்கடேஷ் ஆகியோரிடம் கொடுத்து இருந்ததாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிர்ச்சிகரமான குண்டை தூக்கிப் போட்டார்.

அந்தப் பைகளில்தான், ஜெ., ஆட்சியின்போது அமைச்சர்களாக இருந்த அனைவரின் சொத்து விவரங்கள் கொண்ட ஆவணங்கள் இருந்ததாகவும், அதைக் கைப்பற்றிய பிறகுதான் எடப்பாடி பழனிசாமி முன்பு ஆட்சியையும், பின்னர் கட்சியையும் கைப்பற்றிக் கொண்டதாகவும் தனபால் கூறியிருந்தார்.

கடந்த 2021ஆம் ஆண்டே கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை நக்கீரன் புலனாய்வு இதழும், இணையமும் புலனாய்வு செய்தபோது, தனபால் பல பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து இருந்தார். தொடர்ச்சியாக எடப்பாடிக்கு எதிராக எடப்பாடி பழனிசாமியின் ஒன்றுவிட்ட அண்ணன் உள்ளிட்ட பலர் கருத்து கூறியிருந்தனர்.

அப்போதெல்லாம் அசைந்து கொடுக்காத 'நிழல்' இளங்கோவன், ஆவணங்கள் அடங்கிய பைகள் பற்றிய விவகாரத்தில் மட்டும் பேசத் தொடங்கியிருக்கிறார். தனபாலின் இந்த ஸ்டேட்மென்ட் எடப்பாடி பழனிசாமி மற்றும் இளங்கோவன் கூடாரத்தை சற்று அசைத்துப் பார்த்ததாகவே சொல்கிறார்கள்.

இந்த நிலையில்தான் இளங்கோவன், செப். 9ஆம் தேதி, சேலம் மாவட்ட காவல்துறை அலுவலகத்திற்கு நேரில் வந்து, எஸ்.பி., அருண் கபிலனிடம் தனபால் மீது புகார் அளித்துள்ளார். இதையடுத்து இளங்கோவன் கூறுகையில், “கனகராஜின் அண்ணன் தனபால், தொடர்ந்து பொய்யான தகவல்களைக் கூறி வருகிறார். கனகராஜ் இறப்பதற்கு முன்பு, சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே என்னிடம் சில பைகளை கொடுத்ததாக கூறியிருக்கிறார். அது முற்றிலும் தவறானது.

கனகராஜ் விபத்தில் இறந்தபோது, ஆத்தூர் காவல்நிலையத்தில் வைத்து இதே தனபால், கொடநாடு வழக்கில் கனகராஜிக்கு சம்பந்தம் இல்லை என்று சொல்லி இருக்கிறார். அப்போது என்னைப் பற்றியும் எதுவும் கூறவில்லை. இப்போது, திமுக அரசு மற்றும் அதன் 'பி டீம்' ஆக செயல்படும் ஓ.பன்னீர்செல்வம் தூண்டுதலின் பேரில் தனபால் பொய்யான தகவல்களைக் கூறி வருகிறார்.

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கைதான அவர் பிணை மனு தாக்கல் செய்தபோது, தனக்கு மனநிலை பாதிப்பு உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். மருத்துவர்களின் சான்றிதழையும் இணைத்துள்ளார். அதன் அடிப்படையில்தான் நீதிமன்றம் அவருக்கு பிணையில் வெளியே செல்ல அனுமதி அளித்தது.

மனநிலை பாதிக்கப்பட்ட தனபாலின் கருத்து பெரிதாக்கப்பட்டு உள்ளது. கடந்த இரு நாட்களுக்கு முன்பு தனபாலின் மனைவி, சேலம் மாவட்ட எஸ்.பி.யிடம் ஒரு புகார் அளித்துள்ளார். அதில், தன் கணவருக்கு மனநிலை பாதிப்பு உள்ளதாகவும், அவரால் தனக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

ஆகவே, மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவர் சிலரின் தூண்டுதலால் என் மீது குற்றச்சாட்டு தெரிவிப்பதால், தனபால் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கொடநாடு வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் உள்ளதால், இதற்கு மேல் எதுவும் கூற முடியாது” என்றார் இளங்கோவன்.

எடப்பாடியின் நிழல் போல் வலம் வரும் இளங்கோவன் மவுனம் கலைத்திருப்பது, கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தனபால் மீது புகார் கொடுக்கும் அளவுக்கு இளங்கோவன் திடீரென்று இறங்கி அடிக்க காரணம் என்ன என்பது குறித்து அதிமுக வட்டாரத்தில் விசாரித்தோம்.

‘கொடநாடு விவகாரம் மற்றும் கனகராஜின் மர்ம மரணம் குறித்த வழக்கு விசாரணையில் சிபிசிஐடி முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. தனபாலிடம் செப். 14ஆம் தேதி கோவையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணை நடத்தப்பட உள்ளது. இந்த நிலையில், அமைச்சர்களின் சொத்து ஆவணங்கள் குறித்த முக்கியமான பைகள் இளங்கோவன், எடப்பாடியின் மச்சான் வெங்கடேஷிடம் இருக்கலாம் என தனபால் கொளுத்திப் போட்டுள்ளார்.


இதை வைத்து, தனபாலின் வாக்குமூலத்தின் அடிப்படையில் இளங்கோவனை சிபிசிஐடி கைது செய்ய வாய்ப்பு இருக்கிறது. பாராளுமன்ற தேர்தல் நெருக்கத்தில் உள்ள நிலையில், இளங்கோவனை முடக்கிப் போடுவதன் மூலமாக எடப்பாடியை சொந்த மண்ணிலேயே நிலை குலையச் செய்ய முடியும் என்று ஆளுங்கட்சியும் கணக்குப் போட்டுதான் காய் நகர்த்துகிறது.

இதன்மூலம் கொங்கு மண்டலத்தில் இலை கட்சிக்கு கணிசமான சேதாரத்தை ஏற்படுத்த முடியும் என்ற கணக்கும் இருக்கிறது. தனபால் திடீரென்று இளங்கோவன், எடப்பாடியின் மைத்துனர், கொங்கணாபுரம் கரட்டூர் மணி மற்றும் எடப்பாடி, இளங்கோவனுக்கு நெருக்கமான சிலரை வரிசையாக கைகாட்டுவதன் பின்னணியில் ஆளுங்கட்சியினருக்கும், ஓ.பி.எஸ்.ஸூக்கும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டதால்தான் இளங்கோவன் அதை உங்களிடம் (ஊடகங்கள்) பகிரங்கப்படுத்தி உள்ளார். எல்லாமே அரசியல் லாப, நட்டக் கணக்குதான்’ என்கிறார்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT