Skip to main content

திமுகவிலும் கிச்சன் கேபினெட்?

Published on 24/07/2018 | Edited on 24/07/2018

ஒரு காலத்தில் அதிமுகவில் கிச்சன் கேபினட் என்றால் யாரெல்லாம் இருப்பார்கள் தெரியுமா? சசிகலா, இந்திரா குமாரி, ஈ.வி.கே.எஸ். சுலோச்சனா சம்பத், நெடுஞ்செழியனின் மனைவி விசாலாட்சி ஆகியோரின் பெயர்கள் அடிபடும். இவர்கள் எடுக்கிற முடிவுகளைத்தான் ஜெயலலிதா ஏற்றுக்கொள்வார் என்று கூறப்பட்டது.

 

stalin cabinet



திமுகவில் இதுவரை உயர்நிலைக்குழு உறுப்பினர்களிடம் விவாதித்தே கலைஞர் முடிவெடுப்பது வழக்கமாக இருந்தது. ஆனால், இப்போது, செயல்தலைவர் ஸ்டாலினின் மருமகன் சபரீஷன், அண்ணாநகர் கார்த்தி ஆகியோருடன் எ.வ.வேலு, பொன்முடி உள்ளிட்டோர் எடுக்கும் முடிவுகளையே ஸ்டாலின் அமல்படுத்துவதாக பரவலாக பேசிக்கொள்கிறார்கள். மாப்பிள்ளை ஸார் என்று திமுகவின் மதிப்புமிக்க தலைவர்கள்கூட சபரீஷனிடம் தங்கள் காரியங்களுக்காக அணுகவேண்டிய நிலை இருப்பதை நேரில் பார்க்கும் சாதாரணத் தொண்டர்களே குமுறும் நிலை இருக்கிறது.

 

 


ஸ்டாலின் களையெடுப்பு என்று சமீபத்தில் வெளியான புதிய நியமனங்கள் அனைத்துமே மொத்தமாக பெயில் ஆகி, எதிர்பார்த்ததற்கு மாறாக புதிய குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறதாம். குறிப்பாக கலைஞரிடம் செல்வாக்குப் பெற்றிருந்த, தங்கள் பகுதியின் மிக முக்கிய தலைவர்களாக கருதப்பட்ட திண்டுக்கல் ஐ.பெரியசாமி உள்ளிட்ட தலைவர்கள்கூட பெரிய அளவில் ஈடுபாடு இல்லாமல், தங்கள் பகுதிக்குள்ளேயே ஒடுங்கிக்கிடக்கும் நிலையில்தான் இருக்கிறார்கள்.

  i periasami



எல்லா மாவட்டத் திமுகவிலும் சபரீஷன் மூக்கை நுழைக்கிறார் என்ற புலம்பல் அதிகரித்துள்ளது. தேனி மாவட்டத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்ட ஜெயக்குமார் சுமார் 2 கோடி ரூபாய் வரை செலவழித்த நிலையில், திடீரென அவரை மாற்றிவிட்டு, வயதான கம்பம் ராமகிருஷ்ணனை மாவட்டச் செயலாளராக நியமித்தார்கள். இப்போது, அவர் கட்சிக்காரர்களை நெருங்கவிடாமல், வசூல்வேட்டையைத் தீவிரப்படுத்தி இருக்கிறாராம். சால்வைக்குப் பதிலாக 100, 200 ரூபாயை கையில் கொடுக்கும்படி கேட்கிறாராம். பத்திரிகையாளர்களுக்கு பணம் கொடுக்க மாட்டேன். நாங்கள்தான் அடுத்த ஆளும்கட்சி என்றும், செய்திகளை கவனமாகப் போட்டால் விளம்பரங்கள் கொடுக்க ஏற்பாடு செய்வேன் என்கிறாராம்.

 

kambam ramakrishnan



திமுகவில் எப்போதுமே கோஷ்டிகள் இருக்கும் என்றும், எல்லாக் கோஷ்டிகளுக்கும் கலைஞரே தலைவராக இருப்பார் என்றும், திமுகவின் வெற்றி என்று வரும்போது எல்லாக் கோஷ்டிகளும் இணைந்து செயல்படும் என்றும் மூத்த தலைவர்கள் கூறுகிறார்கள். ஆனால், இப்போது கனிமொழி கோஷ்டி, அழகிரி கோஷ்டி, மாவட்டச் செயலாளர் கோஷ்டி, மாவட்டச் செயலாளருக்கு எதிரான கோஷ்டி, உதயநிதி கோஷ்டி என்று கணக்கற்ற கோஷ்டிகள் இருப்பதாக வேதனைப் படுகிறார்கள்.

 

sabareesan



இந்தக் கோஷ்டிகளை இணைப்பதில் ஸ்டாலின் இதுவரை எவ்வித அக்கறையும் செலுத்தவில்லை என்கிறார்கள். இதை இப்படியே விட்டுவைத்தால் தேர்தலின்போது எதிரொலிக்கவே செய்யும். கடந்தமுறை மிகச்சிறிய வித்தியாசத்தில் பல தொகுதிகளை இழந்ததற்கு கோஷ்டி பூசல்களே காரணம் என்று வருத்தப்படும் தொண்டர்கள், இந்தமுறை பாதிப்பு மிக அதிகமாக இருக்கும். கோஷ்டிகளுக்கு சீட்டுகளைக் கொடுத்துவிட்டு, ஒவ்வொரு கோஷ்டியும் எதிர்க்கோஷ்டிகளை தோற்கடிக்க அண்டர்கிரவுண்ட் வேலையில் ஈடுபடவே செய்யும் என்கிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் திமுகவின் பொதுக்குழு கூடும் என்று அறிவித்துள்ளார்கள். இந்தப் பொதுக்குழுவில் எடுக்கப்படும் முடிவுகள் தமிழகத்தின் அனைத்து மாவட்டத் திமுகவிலும் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

 


கட்சியிலிருந்து கண்டுகொள்ளப்படாமல் ஓரங்கட்டப்பட்டுள்ள திமுகவின் முன்னோடித் தலைவர்கள் அவர்களுடைய ஆதரவாளர்களுடன் அழகிரியுடன் தொடர்பு கொண்டிருக்கிறார்கள். திமுகவின் கொள்கை உணர்வுள்ள இளைஞர்கள் ஏராளமானோர் கனிமொழியை இளந்தலைவர் என்று அழைத்து அவருக்காக அக்கறையுடன் வேலை செய்கிறார்கள். அழகிரியும் சரி, கனிமொழியும் சரி எளிதில் அணுகக்கூடியவர்களாக இருக்கிறார்கள். அவர்களைப் போலவே, கட்சியின் அடுத்தகட்ட தலைவர்கள் வரிசையில் ஆ.ராசா, திருச்சி சிவா உள்ளிட்டோர் உரிய முக்கியத்துவம் இன்றி எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் தங்கள் கடமையை செய்வதில் குறியாக இருக்கிறார்கள். இவையெல்லாம் ஸ்டாலினுக்கு தெரியுமா? தெரிந்தும் எதைப்பற்றியும் கவலைப்படாமல் இருப்பதன் காரணம் என்ன? என்றெல்லாம் கட்சிமீது அக்கறை உள்ளோர் கேள்வி எழுப்புகிறார்கள்.

எல்லாவற்றுக்கும் திமுக பொதுக்குழு தீர்வு காணுமா என்பதே இப்போதைய எதிர்பார்ப்பாக இருக்கிறது.