Skip to main content

கொலையாளி? கிருஷ்ணசாமிக்கு சிவசங்கர் பதிலடி!

Published on 10/09/2017 | Edited on 10/09/2017



நீட் கொடுமைக்குப் பலியான அனிதாவின் மரணம் குறித்து கல்வியாளர்கள் மீதும் தி.மு.க.வின் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் எஸ்.எஸ்.சிவசங்கர் மீதும் புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி குற்றம்சாட்டுவதுடன், பா.ஜ.க. தரப்பிலிருந்தும் இதுகுறித்த சந்தேகங்கள் கிளப்பப்படுகின்றன. டெல்லி வரை சென்று விசாரணை கோருகிறார் கிருஷ்ணசாமி. அனிதாவின் டாக்டர் படிப்பு கனவு நிறைவேற துணை நின்ற சிவசங்கரிடம் இது தொடர்பான கேள்விகளை முன்வைத்தோம். 

அனிதாவை முதலில் எப்படி சந்தித்தீர்கள்? அவருடைய போராட்டங்களுக்கு எந்தளவில் துணை நின்றீர்கள்?

மத்திய அரசு இந்த ஆண்டு நீட் தேர்வு வரும் என அறிவித்ததில் இருந்து, தொடர்ந்து அதனை எதிர்த்து முகநூலில் எழுதி வருகிறேன். அனிதாவின் சகோதரர் மணிரத்னம் அதனைத் தொடர்ந்து படித்து வந்தார். திராவிடர் கழகம் சார்பாக தமிழக அளவில் அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைத்து நீட் தேர்வுக்கு எதிராக ஜூலை 12-ந் தேதி  ஒரு போராட்டம் நடைபெற்றது. அரியலூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நான் பங்கேற்றபோது, மணிரத்தினம் தனது தங்கை அனிதாவோடு அந்த ஆர்ப்பாட்டத்திற்கு வந்தார். தனது தங்கை அனிதா, 1176 மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும், அவர் நீட் தேர்விலே தேர்வு பெறவில்லை. மாநில பாடத்திட்டத்தின் அடிப்படையில் இதற்கான கலந்தாய்வு நடந்தால் நிச்சயமாக மருத்துவம் பெறுவார். மருத்துவத்திற்கான கட் ஆப் மதிப்பெண் 196.25 இருக்கிறது என்ற விவரத்தைத் தெரிவித்தார். குன்னம் தொகுதியில் 10 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவன் என்பதால், அனிதாவின் குழுமூர் உள்ளிட்ட பகுதிகள் எவ்வளவு பின்தங்கியவை, அங்கே இருந்து படித்து இவ்வளவு மதிப்பெண்கள் பெறுவது எவ்வளவு பெரிய சாதனை என்பதை உணர்ந்து, ஊடகத்தினரிடம் அனிதா பற்றி தெரிவித்தேன். +2வில் அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் அனிதா போல நீட் தேர்வால் மருத்துவப் படிப்பு வாய்ப்பை இழந்தவர்கள் குறித்த விவரங்களை பதிவு செய்வதற்காக முகநூலில் தனிப் பக்கத்தை தொடங்கினேன். அதில் அனிதாவின் விவரத்தை பதிவு செய்த கொஞ்ச நேரத்திலேயே தமிழகமெங்குமிருந்து நிறைய பேர் அதே நிலையில் இருப்பதை பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து ஊடகத்தினர் சந்தித்தனர். அதன்பிறகு, ரத்தத்தில் கடிதம், தலைவர்களுடன் சந்திப்பு, உச்சநீதிமன்றத்தில் சட்டப்போராட்டம் என அனிதா போராடினார். 

சட்டரீதியாக பலன் கிடைக்காத சூழலில் அனிதாவுக்கு நீங்களும் உங்களைச் சார்ந்தவர்களும் ஆலோசனைகள் வழங்கி ஊக்கம் தந்திருந்தால் இப்படிப்பட்ட நிலை ஏற்பட்டிருக்காதே?

அனிதா அவருடைய குடும்பத்தாருடன் ஓரளவு மன உறுதியுடன்தான் பேசிக் கொண்டிருந்திருக்கிறார். மருத்துவம் கிடைக்காவிட்டால் கால்நடை மருத்துவம் படிப்பது பற்றியும்  தெரிவித்திருக்கிறார். என்னுடைய நண்பர்கள் அந்த நேரத்தில் என்னை தொடர்புகொண்டு, "ஒரு கிராமத்து மாணவி, ஒடுக்கப்பட்ட சமுதாயத்து ஏழை மாணவி நீட் தேர்வுக்கான பயிற்சி பெற்றால் நிச்சயம் வெற்றி பெறுவார் என்பதை நாம் காட்ட வேண்டும். எனவே, ஒரு ஆண்டு வெளியில் தங்கி நீட் தேர்வுக்கான பயிற்சியில் சேர்ந்து படித்து அதிலே வெற்றி பெறும்வரை எவ்வளவு பணம் தேவைப்படுகிறதோ அதை தயார் செய்வதற்கு நாங்கள் உறுதுணையாக இருக்கிறோம். நீங்கள் இதனை எடுத்துச் சொல்லி செயல்படுத்த முன்வர வேண்டும்' என்று என்னிடம் கேட்டுக்கொண்டார்கள். நான் அனிதாவின் அண்ணனிடம் இதனை தெரிவித்தேன். மனம் நொறுங்கியிருந்த அனிதாவின் தந்தை, இன்னொரு ஆண்டு வெளியில் தங்கி பயிற்சி எடுத்து படிப்பது குறித்து யோசித்திருக்கிறார். "கால்நடை மருத்துவம் படித்தபடியே மாலை நேரத்தில் நீட் தேர்வுக்கு படிக்க வைப்பதற்கான முயற்சியில் ஈடுபடுவோம்' என்று சொன்னேன். பலரும் இதை வலியுறுத்தினார்கள். 

அனிதாவின் தந்தையை சந்தித்து பேசலாம் என்ற சூழ்நிலையில்தான் அனிதா அவசரப்பட்டு இந்த முடிவை எடுத்துவிட்டார்.

மரணச் செய்தி வந்தபோது எங்கு இருந்தீர்கள்?

அன்று காலையில் மயிலாடுதுறையில் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு, அரியலூர் அலுவலகத்தில் இருந்தபோது அதிர்ச்சி  செய்தி வந்தது. 17 வயது குழந்தையின் மரண செய்தியை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. உடனடியாக காரில் கிளம்பி குழுமூருக்கு சென்றேன். அனிதாவின்  அறிவுச் சுடர்விடுகிற அந்த கண்களை பார்த்த எனக்கு, உயிரிழந்த நிலையில் அவரை பார்த்ததும் மனம்தாங்க முடியவில்லை. என் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை. 



அனிதா தற்கொலைக்கு நீங்கள்தான் காரணம் என்று டாக்டர் கிருஷ்ணசாமி பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறாரே?

சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று முதலமைச்சரிடம் டாக்டர் கிருஷ்ணசாமி மனு அளித்தார். மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை நேரில் சந்தித்து சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று மனு அளித்துள்ளார். அவர் இந்துத்துவாவின் குரலாகத்தான் ஒலிக்கின்றார். எனக்கென்னவோ அவர் எம்.எல்.ஏ.வாக முறையாக பணியாற்றியிருக்க மாட்டார் என்ற எண்ணம்தான் வருகிறது. ஏனென்றால் அவர் கோவையில் குடியிருக்கிறார். அவர் எம்.எல்.ஏ.வாக இருந்த ஒட்டப்பிடாரம் தொகுதிக்கு அவ்வப்போது  சுற்றுப்பயணம் செய்வார் என்றுதான் நினைக்கிறேன்.

இந்துத்துவா கட்சிகள் மீது, குறிப்பாக மத்தியில் ஆளும் பா.ஜ.க. மீது மக்களுக்கு ஏற்படுகின்ற கோபத்தை, வெறுப்பை திசை திருப்புவதற்கு,  மடை மாற்றுவதற்கு அவர்களின் கையாளாக, பா.ஜ.க.வினர் பேசவேண்டிய செய்திகளையெல்லாம் இவர் பேசுகிறார். உச்சக்கட்டமாக என்னையும், சமூக செயல்பாட்டாளர் கஜேந்திரபாபுவையும் அவர் இதிலே கொலைக்குற்றம் சாட்டுகின்றார். இதற்குக் காரணம் அனிதா இறந்த அன்று தொலைக்காட்சி (நியூஸ் 18) விவாதத்தில் என்னை "ஏய்' போன்ற ஏகவசனத்தில் அழைத்தார். அப்போதும் மரியாதைப் பண்பு தவறாமல் அவரை அழைத்தேன். அவருடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு, உறவினர்களுக்கு இப்படி ஒரு மரணம் ஏற்பட்டிருந்தால் எகத்தாளமாக, நக்கலாக தவறான நோக்கத்தில் கேள்வி கேட்பாரா என்ற எண்ணம் எல்லோருக்கும் இருந்தது. தொலைக்காட்சி விவாதங்களில் என்னிடமும், இயக்குநர் கரு.பழனிப்பன், தமிழன் பிரசன்னா ஆகியோரிடமும் தகராறு செய்தார். எவ்வித லாப நோக்கமும் கருதாத சமூக செயற்பாட்டாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபுவை குற்றம்சாட்டினார். இது ஒரு அநாகரிகமான செயல். அனிதா மரணத்தில் எங்கள் மீது  கொலைக் குற்றச்சாட்டு சுமத்துவதாக நினைத்து அவர் செயல்பட்டால், முடிவிலே உண்மையாக மத்திய அரசு, மாநில அரசு, அதில் பொய்யான வாக்குறுதி அளித்த முதல் அமைச்சர், மத்திய அமைச்சர், மாநில அமைச்சர்கள்தான்  அந்தக் கொலைக்காக மக்களிடத்தில் பதில் சொல்ல வேண்டிய இடத்தில் நிற்பார்கள். 

தி.மு.க.வினரோ பிற கட்சியினரோ நடத்தும் மருத்துவக் கல்லூரியில் அனிதாவுக்கு சீட் வாங்கி கொடுத்து அவரது உயிரைக் காப்பாற்றியிருக்கலாமே என பா.ஜ.க.வினர் கேட்கிறார்களே?

பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்கள் இந்தளவுக்கு விவரம் தெரிந்தவர்களாக இருப்பார்கள் என்று நான் எண்ணவில்லை. எப்போது நீட் தேர்வு வந்ததோ, அதற்குப் பிறகு எந்த தனியார் கல்லூரியிலும், அந்த கல்லூரிக்கான நிர்வாக இடங்கள் எல்லாம் நீட் தேர்வின் மதிப்பெண் அடிப்படையிலேயே நிரப்பப்படுகின்றன. சொந்தமாக நிரப்ப முடியாது. நீட் தேர்விலே வெற்றி பெறாத அனிதாவை தனியார் மருத்துவக் கல்லூரியில் சேர்த்திருக்கலாமே என்று, நீட் தேர்வைத் திணித்த மத்திய அரசின் ஆளுங்கட்சியை சேர்ந்தவர்களே சொல்கிறார்கள். நீட் தேர்வில் வெற்றி பெறாத அனிதாவை தனியார் மருத்துவக் கல்லூரியில் சேர்க்க வேண்டும் என்று சொல்வதிலிருந்தே அவர்கள் இப்படித்தான் மோ(ச)டித்தனம் செய்கிறார்களோ என்று யோசிக்க வைக்கிறது. அனிதாவுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சி கிடைக்கச் செய்து அடுத்த ஆண்டிலாவது அவர் எம்.பி.பி.எஸ். சீட் பெற வேண்டும் என்ற முயற்சியை நாங்கள் எடுத்தோம். அதுமட்டுமின்றி, அனிதா என்பவர் தனிப்பட்ட மாணவி அல்ல. ஒட்டுமொத்த தமிழக மாணவர்களின் குரலாக உச்சநீதிமன்றம் வரை சென்றவர். எனவே ஒட்டுமொத்த தமிழக மாணவர்களுக்கும் நீதி கிடைக்கச் செய்வதே அனிதாவுக்கு செய்யும் உண்மையான மரியாதை.

-சந்திப்பு : வே.ராஜவேல்

சார்ந்த செய்திகள்