ADVERTISEMENT

கொல்ல வருமா கில்லர் ரோபோ?

06:21 PM Aug 26, 2017 | Anonymous (not verified)



'எந்திரன்' திரைப்படத்தின் இரண்டாம் பாகமான 2.0 வின் படப்பிடிப்பு காட்சிகள் சமீபத்தில் வெளியாகின. அந்தப் படம் செயற்கை நுண்ணறிவால் (Artificial Intelligence) உருவாக்கப்படும் கில்லர் ரோபோ செய்யும் அட்டகாசம் பற்றியதாக இருக்கும் என்று பேசப்படுகிறது. எந்திரன் படத்தின் இரண்டாம் பாதியும் அதை மையப்படுத்தியே இருந்தது. நிஜத்திலும் சிந்திக்கும் திறனுள்ள ரோபோக்கள் சார்ந்த 'செயற்கை நுண்ணறிவு' தொடர்பான ஆராய்ச்சிகளை உலகெங்கிலும் பல்வேறு நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன. அவற்றில், முக்கிய பகுதியாக ஆயுதங்கள் சுமந்து போரிடும் ரோபோக்களை உருவாக்கும் ஆராய்ச்சி நடக்கிறது. ஏற்கனவே சில நிறுவனங்கள், மாதிரிகளை உருவாக்கி சோதித்து வருகின்றன. அத்தகைய ரோபோக்களை 'கில்லர் ரோபோட்' என்று அழைக்கின்றனர்.



சிந்திக்கும் திறனுள்ள ரோபோக்களை உருவாக்கினால் நிகழக் கூடிய விபரீதம் பற்றி உணர்ந்தவர்களும் இருக்கின்றனர். கில்லர் ரோபோக்களை உருவாக்க வேண்டாம் என 'சர்வதேச செயற்கை நுண்ணறிவு மாநாட்டுக் கூட்டத்தில் (இன்டர்நேஷனல் ஜாயின்ட் கான்பிரன்ஸ் ஆன் ஆர்டிபிஸியல் இண்டெலிஜென்ஸ் (IJCAI)) முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்தகைய ஆராய்ச்சிகளுக்கு தடை கோரி ஐக்கிய நாடுகள் சபைக்கு எழுதப்பட்டுள்ள ஒரு கடிதத்தில் 26 நாடுகளை சேர்ந்த 116 ஏஐ மற்றும் ரோபோட்டிக்ஸ் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கையெழுத்திட்டுள்ளனர். "இது கற்பனை காட்சியல்ல, இது உண்மையான உலகம் மற்றும் இது மிகுந்த கவலை அளிக்கக்கூடிய தகவல்" என கூறியுள்ளார் 'கிளியர் பாத் ரோபோடிக்ஸ்' (Clearpath Robotics) நிறுவனர் ரியான் கரீபி (Ryan Gariepy). 'இது மனிதர்களை விட வேகமானதாக இருக்கும். இது விரும்பத்தாகாத வழிகளில் ஹேக் (hack) செய்யப்படும் அபாயமும் உள்ளது, மேலும் தீவிரவாதிகளின் கைகளுக்கு கிடைத்தால் அது அப்பாவி மனிதர்களை அழிக்கக்கூடும் அபாயம் உள்ளது' எனவும் அந்தக் கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது.



மேலும் அவர்கள் "ஒரு முறை இந்த 'பண்டோரா பெட்டி' திறந்துவிட்டால் அதை மூடுவது அவ்வளவு எளிதான காரியமல்ல" ( Once this Pandora's box is opened, it will be hard to close) என கூறியிருப்பது இதன் விளைவால் ஏற்படும் நாசத்தை நமக்கு எடுத்துக்காட்டுகிறது.
அந்த மேற்கோளின் தீவிரத்தை அவர்கள் புரிந்துகொண்டிருப்பது அறிவியல் மூலம் ஏற்பட இருக்கும் பெரும் அழிவிலிருந்து உலகை காப்பற்றியதற்கு சமம். சமீபத்தில் பேஸ்புக் (Facebook) நிறுவன ரோபோக்கள் செய்த கலவரமே அதற்கு சாட்சி. அது சிறிய விஷயம் என்றாலும் அது அழிவின் ஆரம்பம்தான். 'எந்திரன்' திரைப்படத்தில் நடப்பது உண்மையானால் என்ன ஆகுமென நினைத்துப் பார்த்தாலே வயிறு கலங்குகிறது அல்லவா?

கமல் குமார்

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT