
தமிழகத்தில் விரைவில் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான பரப்புரைகள் தமிழகம் முழுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மருத்துவர் எழிலனை ஆதரித்து விசிக தலைவர் திருமாவளவன் பிரச்சாரம் செய்தார். அதில் அவர் கூறியதாவது, "ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் மருத்துவர் எழிலனைஆதரித்துப் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்ற அதிகப்படியான விருப்பத்தின் பேரிலேயே இன்று இங்கு பிரச்சாரத்துக்கு வந்துள்ளேன்.
அவர் என்னுடைய நீண்ட கால நண்பர். அவர் கண்டிப்பாக வெற்றிபெற வேண்டும். அதே நேரத்தில் தளபதி அவர்கள் முதல்வராகப் பொறுப்பேற்க வேண்டும். எழிலனுடைய தந்தை பேராசிரியர் நாகநாதன் பொருளியல் வல்லுநர். பொருளாதாரத்தில் ஆகச்சிறந்த வல்லுநர். மறைந்த நம்முடைய முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களுக்கு நெருக்கமான தோழர். காலையில் கலைஞர் அவர்கள் நடைப்பயிற்சி மேற்கொள்கிறார் என்றால் அவரோடு சேர்ந்து நடக்கின்ற பாக்கியம் பெற்றவர் பேராசிரியர் நாகநாதன். அந்த அளவுக்கு நெருக்கமானவர். அவருடைய அருமை புதல்வர்தான் நம்முடைய மருத்துவர் எழிலன். நம்முடைய தலைவர் கலைஞர் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தபோது அவருடைய பிள்ளையாகவே இருந்து அவரை பார்த்துக்கொண்டவர் மருத்துவர் எழிலன். 24 மணி நேரமும் அவரை கண்காணித்து வந்தார் என்று சொன்னால் அது மிகையாகாது.
கோபாலபுரமாக இருந்தாலும், மருத்துவமனையாக இருந்தாலும் அவருடன் 24 மணி நேரமும் இருந்து அவரை கண்காணித்தார் என்ற பெருமை அவர் ஒருவரையே சாரும். அவர் சட்டமன்ற உறுப்பினராக வேண்டும் என்ற ஆசை இருப்பவர் அல்ல. தனக்குப் பதவி வேண்டும் என்ற அடிப்படையில் தளபதியை அவர் கட்டாயப்படுத்தி வற்புறுத்தி இந்த வாய்ப்பை அவர் பெறவில்லை. இவர் சட்டமன்ற உறுப்பினராக வெற்றிபெற்றால் பெரியார், அண்ணா, கலைஞர் அவர்களின் கொள்கைகளை சட்டமன்றத்தில் பாதுகாக்கும் முக்கியப் பணியை சிறப்பாகச் செய்வார் என்பதில் எனக்குச் சிறிதும் ஐயமில்லை. அதையும் தாண்டி அனைத்து காரியங்களையும் கொள்கை சார்ந்து சிந்திக்கக் கூடியவர். வெறும் கட்சிப் பற்று, தலைமைப் பற்று என்று இல்லாமல் தமிழக மக்களுக்காக ஒரே கோட்டில் அவர் சிறப்பாகப் பணியாற்றுவார் என்ற உறுதியை நான் உங்களுக்குத் தருகிறேன். பேரறிஞர் அண்ணா, பெரியாரின் கொள்கைகளையும் எப்போதும் காக்க வேண்டும், அதன்படி ஆட்சி நடக்க வேண்டும் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டவர் என்பதால் சமூகநீதி கருத்தைக் காப்பதில் யாரையும் விட அவருக்கு அதிக அக்கறை உண்டு.
நாடு தழுவிய அளவுக்கு அவருக்குக் கருத்தியல் சார்ந்த தொடர்புகள் உண்டு. அப்படி இவர் ஆற்றிய பணிகளைக் கண்டு மனமுகந்து இவரை உங்களிடம் ஸ்டாலின் அவர்கள் ஒப்படைத்துள்ளார். இவரை எதிர்த்துப் போட்டியிடக் கூடியவர் யார் என்று உங்களுக்குத் தெரியும்.அவர் சினிமா ஸ்டாராக இருக்கலாம், ஆனால் இவர் அரசியல் ஸ்டார் என்று சொன்னால் அது மிகையாகாது. கருத்தியலில் இவரோடு அவர் போட்டியிட முடியாது. இவரின் விவாதத்துக்கு அவரால் பதிலளிக்க முடியாது. அவரையும் இவரையும் நாம் ஒப்பிடவே முடியாது.அவருக்கு சினிமா புகழ் உண்டு. அதை வைத்து அரசியலிலும் புகழ் தேட ஆசை. எனவே அவர் ஒரு கட்சியில் சேர்ந்த இங்கே போட்டியிட வந்திருக்கிறார். இவர் தமிழகத்தைச் சமூகநீதி பாதையில் கொண்டுசெல்ல வேண்டும் என்ற நோக்கம் கொண்டவர். எனவே இந்த தமிழகம் அடிமையாகாமல் அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்ல தீயசக்திகளைப் புறந்தள்ள வேண்டும். மருத்துவர் எழிலனை சட்டமன்றத்துக்கு அனுப்ப வேண்டும்" என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)