Skip to main content

கடவுள் தேசத்தின் அழகி... கைத்தட்டக் காத்திருக்கும் இந்தியா!

Published on 28/08/2020 | Edited on 29/08/2020

 

kerala - nimmy koshy -Mrs -United Nations- 2020 - Mrs - india - elegant - 2019

 

கடவுளின் தேசம் என அழைக்கப்படும் கேரளா இயற்கையின் விளைநிலம். பச்சைப் பசேலென்று படர்ந்து அடர்ந்துள்ள காடுகளும், மலைகளும், பாய்ந்தோடும் அருவிகளும், ஜிமிக்கி கம்மல்களும், கறுப்புச் சட்டைகளும் கேரளத்தின் அடையாளத்தைப் பறைசாற்றுகிறது. இனி கேரளத்தின் அடையாளமாக நிம்மி கோஷியும் நம் நினைவு அடுக்குகளில் நிறைந்து இருப்பார். திருமணம் ஆனதும் கணவனுக்கும், குழந்தைகளுக்கும் பணிவிடை செய்து கிடப்பதே விதியென நினைக்காமல், தனக்கான விதியைத் தானே எழுதத் துடிக்கும் பல்லாயிரம் பெண்களில் நிம்மி கோஷியும் ஒருவர். ஐக்கிய நாடுகளில் இருந்து ‘திருமதி அழகிகள்’ கலந்துகொள்ளும் “மிஸ்சஸ் யுனைட்டெட் நேஷன் 2020” அழகிப் போட்டியில் இந்தியாவின் பிரதிநிதியாகக் கலந்துகொள்ள தயாராகி வருகிறார் நிம்மி கோஷி.


மத்திய அரசு அலுவலராக நிம்மியின் அப்பா இருந்ததால், கோயம்புத்தூர், திருச்சி, சென்னை, பெங்களுரு, புதுவை, ஹைதராபாத், பூனே, திருவனந்தபுரம் என எல்லா ஊர்களும் எல்லாப் பண்பாடுகளும் பழக்கம் ஆகிவிட்டதாக பகிர்ந்துள்ளார் நிம்மி. முதுகலைப்பட்டம் முடித்துள்ள நிம்மி கோஷிக்கு, திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது. ஆசிரியையாகப் பணியாற்றி வரும் நிம்மி, இப்பணியின் மூலம் நல்ல மனிதர்களாக மாணவர்களை உருவாக்கி சமூகத்தின் உண்மையான சொத்துகளாக மாற்ற முடியும் என நம்பிக்கை தெரிவிக்கிறார். திருமணமான பெண்களுக்கு வாய்ப்புகள் அருகி வரும் காலத்தில் பல்வேறு தடைகளைக் கடந்துதான் திருமதிகள் வெற்றி பெறுவதாக நிதர்சனம் பேசுகிறார்.

 

சிறு வயதில் இருந்தே பரதநாட்டியம் மீது தீவிர காதல் கொண்ட நிம்மி, அதை முறையாகக் கற்றுத் தேர்ந்தவர். மேலும், வசதியற்ற மாணவர்களுக்கு இலவசமாக பரதநாட்டிய வகுப்புகளை எடுத்து வருகிறார். கேரளாவில் அடிக்கடி ஏற்படும் வெள்ளம், நிலச்சரிவு போன்ற இடர்பாடுகளின் போது மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். வெற்றியை எப்படி அளவிடுகிறீர்கள் எனக் கேட்ட போது? “நான் வெற்றிகளைப் பொருளாதார அளவீடுகளைக் கொண்டு அளவிடுவதில்லை, மாறாக வாழ்க்கைத் தரத்தை வைத்தே மதிப்பிடுகிறேன்” என்கிறார் நிம்மி. எனது பெற்றோர்கள் எதற்காககவும் என்னை அழவிட்டதில்லை, பிரச்சனைகளை நேர்மையுடனும், துணிச்சலுடனும் எதிர்கொள்ள கற்றுத் தந்துள்ளனர் என்கிறார்.

 

kerala - nimmy koshy -Mrs -United Nations- 2020 - Mrs - india - elegant - 2019

 

ஒரு நாடு நாகரிகமான நாடக இருக்கும் பட்சத்தில் அங்கே பெண்கள் சரி சமமாக மதிக்கப்படுவர். தனக்கான துணையைத் தானே தேர்வு செய்து கொள்ளும் உரிமையைப் பெற்றவர்களாகவும் இருப்பர் எனக் கூறியுள்ள நிம்மி, அழகு என்பதற்கு நமது சமூகம் பல்வேறு தவறான கற்பிதங்களைக் கொண்டுள்ளது என்கிறார். அழகு என்றால் பிறரை வசீகரிப்பது, கவர்ச்சியை வைத்து பல விசயங்களைச் சாதித்துக் கொள்வது என்பதெல்லாம் அழகுக்கான அர்த்தம் அல்ல. பாலைவனத்தில் பூத்த பூக்களும், ஆழ்கடலில் கிடக்கும் விலைமதிப்பற்ற கற்களும் கடைசி வரை யாராலும் கொண்டாடப்படுவதே இல்லை. இதுபோல்தான், பலரின் திறமைகள் பேசப்படாமல் போனதற்குக் காரணமே, இச்சமூகம் அழகின் மீது கொண்டுள்ள தவறான அபிப்பிராயங்களே. என்னைப் பொறுத்தவரை உண்மையான அழகு என்பது, ஒரு மனிதன் தன் வாழ்நாளில் யாராவது ஒருத்தருக்கு ரோல் மாடலாக இருக்க வேண்டும். ஏதாவது ஒரு வகையில் யாருக்காகவாவது பயனுள்ளவராக இருக்க வேண்டும். அதுதான் அழகு. மற்றபடி உடல் அழகு என்பது கூடுதல் சிறப்பாக வேண்டுமானால் இருக்கலாம்.

 

எனது பெற்றோரின் உந்துதலால் சிறு வயதிலிருந்தே கலை நிகழ்சிகளில் கலந்து கொள்வேன், அப்படித் தான் முதன் முதலாக தேசிய அளவிலான ‘மிஸ்சஸ் இந்தியா எர்த் -2019’ அழகிப் போட்டியில் கலந்து கொண்டேன். அதன் இறுதிச் சுற்று வரை முன்னேறினேன். அதில் நான் ‘மிஸ்சஸ் இந்தியா எலகன்ட்” விருதைப் பெற்றேன். இதன்மூலம், எனக்கு “மிஸ்சஸ் இந்தியா யுனைட்டெட் நேஷன் -2020” விருது கிடைத்தது.  இதனால், வருகிற  26 அக்டோபர் 2020 அன்று, ஐக்கிய நாடுகளின் போட்டியாளர்கள் கலந்துகொள்ளும் சர்வதேச “மிஸ்சஸ் யுனைட்டெட் நேஷன் -2020” போட்டியில் இந்தியாவின் சார்பாகப் பங்கேற்க இருக்கிறேன். எனக்கு இது மிகவும் பெருமையான தருணம். மிகவும் தீவிரமாக இதற்காக பணியாற்றி வருகிறேன். இந்தியாவின் சார்பாக நான் மகுடம் சூடப் போகும் அந்த மகத்தான நாளை எண்ணி காத்திருக்கிறேன். இதுவரை நடைபெற்ற யுனைட்டெட் நேஷன் போட்டியில் இரண்டு இந்தியப் பெண்கள் மகுடம் சூடியுள்ளனர் நான் மூன்றாவதாக இருப்பேன் என நம்பிக்கை மிளர சொல்கிறார் நிம்மி.

 

http://onelink.to/nknapp

 

அடுத்த தலைமுறைக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள் எனக் கேள்வி எழுப்பப்பட்டபோது நிம்மி சொன்ன பதில், “வரும் தலைமுறைக்கு இந்த உலகை இன்னும் மேம்பட்ட நிலையில் விட்டுச் செல்ல விரும்புகிறேன்.  மரம் ஒருபோதும் தன் கனிகளை தானே உண்பதில்லை, ஆறு ஒருபோதும் தன் நீரை தானே குடிப்பதில்லை, சூரியன் தனக்காக மட்டுமே ஒளிர்வதில்லை, ஒருவருடன் ஒருவர் இணைந்து வாழ்வதுதான் இயற்கையின் விதி” என்று சொல்லி முடித்தார்.

 

இரண்டு குழந்தைகளின் அம்மா, ஆசிரியை, குடும்பத் தலைவி என்னும் பல பொறுப்புகளுக்கு மத்தியில் சாதிக்கத் துடிக்கும் நிம்மி போன்றோரை நாடே எழுந்து, கைத்தட்டி, உச்சிமுகர்ந்து பாரட்டும் நாள் வெகு தொலைவில் இல்லை!

 

மகுடம் சூட வாழ்த்துகள் நிம்மி சேச்சி....!
 

 

 

Next Story

மஞ்சும்மல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் மீது வழக்குப்பதிவு

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Police register cheating case against producers of Manjummel Boys

இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் சௌபின் ஷாஹிர், ஸ்ரீநாத் பாசி, பாலு வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி வெளியான மலையாளப் படம் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’. பரவா பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைத்திருந்தார். இப்படம் கொடைக்கானலில் நடந்த உண்மைச் சம்பவத்தைத் தழுவி எடுக்கப்பட்டிருந்தது. 2006 ஆம் ஆண்டு கொடைக்கானலுக்கு சுற்றுலா வரும் கேரள இளைஞர்கள், ஒரு இக்கட்டான சூழ்நிலையில் சிக்கி அதிலிருந்து எப்படி மீள்கின்றனர் என்ற சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது.

ad

சர்வைவல் த்ரில்லர் ஜானரில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தமிழிலும் ரசிகர்கள் பாராட்டி வந்தனர். இப்படம் உலகம் முழுவதும் ரூ.200 கோடி வசூலித்து மலையாள திரையுலகில் ரூ.200 கோடி கிளப்பில் இணைந்த முதல் படம் என்ற சாதனையை படைத்தது. இந்த நிலையில் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான பரவா பிலிம்ஸ் பங்குதாரர் ஷான் ஆண்டனி, லாபத்தில் பங்கு தருவதாக கூறி ஏமாற்றி விட்டதாக கேரளா அரூர் பகுதியைச் சேர்ந்த சிராஜ் என்பவர் எர்ணாகுளம் கீழமை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “ மஞ்சும்மல் பாய்ஸ் படத்திற்காக ரூ.7 கோடியை முதலீடு செய்தேன். பட தயாரிப்பு நிறுவனத்தின் பங்குதாரர் ஷான் ஆண்டனி லாபத்தில் 40 சதவீதம் பங்கு தருவதாக கூறியிருந்தார். ஆனால் இதுவரை எனக்கு ஒரு ரூபாய் கூட பணம் தரவில்லை. லாபம் மட்டும் இல்லாமல் முதலீடு செய்த பணத்தை கூட திருப்பி தரவில்லை” என குற்றம் சாட்டியிருந்தார். 

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் படத்தின் தயாரிப்பாளர்களான சவுபின் ஷாஹிர், ஷான் ஆண்டனி, பாபு ஷாஹிர் ஆகியோரின் வங்கிக் கணக்கை முடக்க உத்தரவிட்டிருந்தார். இது தொடர்பாக விளக்கம் கேட்டு தயாரிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளர்கள் வுபின் ஷாஹிர், ஷான் ஆண்டனி, பாபு ஷாஹிர் ஆகிய மூன்று பேர் மீதும் மரடு போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். எர்ணாகுளம் நீதிமன்ற உத்தரவின்படி வழக்கானது பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.