Skip to main content

பினராயி விஜயனின் மாஸ்டர் ஸ்டோக், காங்கிரஸின் சொதப்பல் கூட்டணி... கேரள உள்ளாட்சி தேர்தல் ஒரு பார்வை...

 

kerala com

 

 

அண்மையில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்த ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலுக்குப் பின் தற்போது கேரள உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் பக்கம் அனைவரின் கவனமும் சென்றுள்ளது. இன்னும் ஒருசில மாதங்களில் சட்டமன்ற தேர்தலைச் சந்திக்க இருக்கும் மாநிலங்களில் கேரளாவும் ஒன்று என்பதால்தான் இந்த கவனம். வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்கு, தற்போது முடிந்துள்ள உள்ளாட்சித் தேர்தல் ஒரு முன்மாதிரி என்றும் எடுத்துக்கொள்ளலாம். இதில் வெற்றிபெறுபவர்களுக்கு, சட்டமன்ற தேர்தலில் வெற்றி விகிதத்தை அதிகரிக்க இதைத் துறுப்புச் சீட்டாகப் பயன்படுத்திக்கொள்ளலாம். 

 

அந்த வகையில் கடந்த உள்ளாட்சித் தேர்தலிலும், அதன்பின் நடைபெற்ற கேரள சட்டமன்ற தேர்தலிலும் அமோக வெற்றிபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டுக்கு இந்த உள்ளாட்சித் தேர்தலில் கடந்த வெற்றியைத் தக்க வேண்டும் அல்லது அதையும் தாண்டி வெற்றிபெற வேண்டும் என்பதுதான் நோக்கமாக இருந்தது. இந்தியா முழுவதும் காங்கிரஸ் தனது வலுவை இழந்து வரும் நிலையில் அவர்களுக்கும் இந்த உள்ளாட்சித் தேர்தல் வெற்றி என்பது தேவையான ஒன்றாக இருந்தது. கேரள அரசியலுக்குள் நுழைய பாஜக, தனது ஆரம்பப் புள்ளியாக இதை மாற்ற களத்தில் இறங்கியது. இப்படி ஒவ்வொரு கூட்டணிக்கும் கேரள உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் முக்கியமானதாகவே அமைந்துள்ளது.

 

கேரளாவில் கடந்த டிசம்பர் 8,10,14 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி (எல்டிஎஃப்), காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆகியவை இந்த தேர்தலில் முக்கியமான போட்டியாளர்களாக இருந்தன. நேற்று இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் கிராம பஞ்சாயத்துகள், ஊராட்சி ஒன்றியங்கள், மாவட்ட பஞ்சாயத்துக்கான தேர்தலில்  கேரளாவை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான எல்டிஎஃப் கூட்டணி பெருவாரியாக முன்னிலை பெற்று வெற்றி விளிமில் உள்ளது. நகராட்சிகளுக்கான தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை வகிக்கிறது. மாநகராட்சிகளுக்கான தேர்தலில் இடதுசாரி கூட்டணியும் காங்கிரஸ் கூட்டணியும் தலா 3 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன. பந்தளம், பாலக்காடு நகராட்சிகளில் பாஜக முன்னிலை வகிக்கிறது. 

 

கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு இந்த உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெறுவதற்குத் தடையாக பல சிக்கல்கள், சர்ச்சைகள் சவால்களாக முன்னிருந்தன. அவற்றில், பினராயி விஜயனின் முதன்மை செயலாளர் தங்கக் கடத்தல் விவகாரத்தில் சிக்கியது பெரும் பிரச்சனையாகவே பேசப்பட்டது. எதிர்க்கட்சிகள் இதை அவர்களின் ஆயுதமாகப் பயன்படுத்தி வந்தார்கள். ஆனால், அவர்களின் தாக்குதலைத் தடுக்காமல் பினராயி விஜயன் வேறு பாதையில் சென்று அவர்களைச் சமாளித்தார். இதுவரை தங்கள் அரசு மக்களுக்குச் செய்த நலத் திட்டங்கள் அனைத்தையும் மக்களுக்குத் தெரியவைத்தார் பினராயி விஜயன். 2018ஆம் ஆண்டு வெள்ளப்பெருக்கு சமயத்தில் அவரது அரசாங்கம் மக்களுக்கு ஆற்றிய பணிகள், சேவைகள் என்னென்ன, கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் சிறப்பான செயல்பாடு என பாசிட்டிவ் விஷயங்களை உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரங்களில் லிஸ்ட் போட்டுத் தெரிவித்தார்கள். இதுபோன்ற அவரது ஆட்சியின் செயல்பாடுகள், அவர்மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளைப் பூதாகரமாக்காமல், மறைத்துவிட்டன. 

 

கம்யூனிஸ்ட் கட்சிக்கு நகராட்சியளவில் செல்வாக்கு இருப்பதைவிட கிராம பஞ்சாயத்திலும், ஊராட்சி ஒன்றியங்களிலும் செல்வாக்கு அதிகம் என்பது இத்தேர்தலின் மூலம் நிரூபனமாகியுள்ளது. ஊழல் குற்றச்சாட்டு மட்டுமின்றி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் கொடியேரி பாலகிருஷ்ணனின் மகன் போதைப் பொருள் வழக்கில் கைதானது, அதனால் அவரை கட்சியைவிட்டு ஒதுக்கிவைத்திருந்தது போன்ற விஷயங்களும் மார்க்சிஸ்ட் கட்சிக்கு பெரும் சிக்கலாக இருந்தது. ஆனால், கிராம மக்களுக்குக் கல்வியையும், மருத்துவத்தையும் அவர்களுக்கு மிகவும் அருகிலேயே கிடைக்கச் செய்தது மற்றும் நகராட்சி, மாநகராட்சியில் உள்ளவர்களை மட்டுமின்றி கிராம மக்களுக்கு நெருக்கடியான சமயத்திலும் அரசாங்க நிர்வாகம் சிறப்பாக செயல்பட்டது போன்றவை இந்த வெற்றிக்கு மற்றொரு காரணமாக இருக்கிறது.

 

நாடாளுமன்றத் தேர்தலில் , ஒரு இடத்தைத் தவிர மற்ற அனைத்து இடங்களையும் கைப்பற்றிய காங்கிரஸ் இந்த உள்ளாட்சித் தேர்தலில் நகராட்சிகளை மட்டும் அதிகமாகக் கைப்பற்றி முன்னிலையில் உள்ளது. காங்கிரஸின் செயல்பாடுகள் நகராட்சி மற்றும் மாநகராட்சிகள் பக்கமே இருப்பதின் வெளிப்பாடுதான் இது. சில இடங்களில் காங்கிரஸ் கூட்டணி மிக நெருங்கிய வாக்கு எண்ணிக்கைகளில் தோல்வியடைந்திருக்கிறது. ஆனால், 2010 மற்றும் 2015ஆம் ஆண்டில் யார் உள்ளாட்சித் தேர்தலில் அதிகமாக பகுதிகளை கைப்பற்றினார்களோ அவர்கள்தான் அடுத்து நடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றியைக் கண்டுள்ளனர். 

 

பல வருடங்களாக காங்கிரஸ் கூட்டணியிலிருந்து கேரள காங்கிரஸைப் பிரித்து தனது கூட்டணியில் பினராயி சேர்த்தது இத்தேர்தலில் பெரிய மாஸ்டர் ஸ்ட்ரோக்காக பார்க்கப்படுகிறது. மத்திய கேரளத்தில் அவருடைய அலையால் காங்கிரஸின் பகுதிகளாகக் கருதப்பட்டவை எல்டிஎஃப் வசமானது. ஊராட்சித் தேர்தலில் மக்களுடைய பிரச்சனையைப் பேசி பிரச்சாரம் மேற்கொள்ளாமல், தங்கக் கடத்தல் குறித்து மட்டுமே காங்கிரஸ் பிரச்சாரம் செய்தது மக்களுக்கு ஒட்டவில்லை. ஜே.ஐ.டபுள்யூ கட்சியைக் காங்கிரஸ் தனது கூட்டணியில் இணைத்துக் கொண்டது, அவர்களின் கட்சியில் இருக்கும் கிறிஸ்துவர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையானது. கத்தோலிக்க பிஷப் கவுன்சிலும் இதை விமர்சித்தது காங்கிரஸுக்கு மிகவும் பின்னடைவானது. ஜமாத் கட்சியை இணைத்தது சில இஸ்லாமியர்களுக்கே பிடிக்கவில்லை எனச் சொல்லப்படுகிறது. அதேபோல இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் கூட்டணியில் ஐ.ஜே.டபுள்யூ கட்சியை இணைத்ததற்கு அதிருப்தியை வெளிக்காட்டியது.

 

இதுமட்டுமல்லாமல் காங்கிரஸ் கட்சியின் வாக்குகளை பாஜக கனிசமாக பிரிக்கத் தொடங்கியுள்ளது காங்கிரஸுக்கு பெரும் தலைவலியாகியுள்ளது. சபரிமலை விவகாரத்தை வைத்து பந்தளம் நகராட்சியை வென்றிருக்கிறது பாஜக. இது எல்டிஎஃப் வசம் இருந்த தொகுதியாகும். பாலக்காட்டில் பாஜக மீண்டும் வெற்றிபெற்று அத்தொகுதியைத் தக்கவைத்துள்ளது. பத்தனம்திட்டாவில் பல வார்டுகளையும் பாஜக வென்றிருக்கிறது. அதேபோல, திருவனந்தபுர மாநகராட்சியில் எதிர்கட்சியாகியுள்ளது பாஜக.

 

இந்த உள்ளாட்சித் தேர்தலின் முடிவுகள் முழுவதும் அறிவிக்கப்படவில்லை, ஆனாலும் முன்னிலை முடிவுகளின்படி, தங்களுக்கு வெற்றிவாய்ப்பு அமோகமாக இருப்பதால் செங்கொடிகளுடன் கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்கள் கிராமங்களிலும், நகரங்களிலும் ‘இன்குலாம் ஜிந்தாபாத்’ என்னும் கோஷங்களுடன் கொண்டாடத் தொடங்கிவிட்டனர். இந்நிலையில், இந்த தோல்விக்கான காரணங்களை ஆராய்வோம் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.