ADVERTISEMENT

வைரமுத்துவை வைத்து ஆன்மீக அரசியல்!

07:19 PM Feb 03, 2018 | Anonymous (not verified)

வைரமுத்துவை வைத்து ஆன்மீக அரசியல்!



வைரமுத்து மன்னிப்புகேட்க, இறுதிக் கெடு அறிவித்திருக்கிறது மதவெறிக் கும்பல். தமிழர்களான நாம் விழிப்போடு இருக்கவேண்டிய நேரம் இது. தமிழ்ச் சமுகத்திற்கு எதிராகத் தமிழ்ச் சமூகத்தையே களமிறக்க நினைக்கிறது வடநாட்டு இந்துத்துவாக் கும்பல். அதன் வாலாய், தமிழ்நாட்டிலும் சிலர் அதிகமாய் ஆடுகின்றனர்.

பழைய பஞ்சாங்க டெக்னிக்கான ’பிரித்தாளும் சூழ்ச்சியை’ அவர்கள் கையில் எடுத்து, நம் விரலைக்கொண்டே நம் கண்ணைக் குத்தப் பார்க்கின்றனர். நமக்குள் இருக்கும் சின்னச்சின்ன ஆதங்கங்கங்களை மறந்து, தமிழர்கள் அனைவரும் ஒன்றாதல் வேண்டும். அதற்கான காலம் இது. பெரியாரியத்தால் சலைவை செய்யப்பட்ட மண்ணை, மீண்டும் மெளடீகத்தால் அழுகாக்க நினைக்கிறது மூடர் கூட்டம்.

நம் கவிஞனைத் தாக்குகின்றனர். மன்னிப்புக்கேள் என்று நிர்பந்தம் செய்கின்றனர். சோடா பாட்டில் வீசும் தகுதி பெற்ற ’அருளாளர்கள்’ தெருவில் இறங்கி அவருக்கு எதிராக முண்டா தட்டுகிறார்கள். ஆன்மீக நம்பிக்கை உடைய அப்பாவிகளின் உணர்வையும் தூண்டி, அவர்களைத் தெருவில் நிற்கவைத்தார்கள்.

அப்படி என்ன வைரமுத்து பேசிவிட்டார்? என்று கேட்டால், அவர்களுக்கே தெரியவில்லை. ஹெச்.ராஜா இட்டுக்கட்டிப் பேசியதை வைரமுத்து பேசியதாக எண்ணிக்கொண்டார்கள். இந்த எதிர்ப்பெல்லாம் வைரமுத்து என்ற தனிமனிதனைக் குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்கள் அல்ல; நம் தமிழ் இனத்தைக் குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்கள். அந்தக் கும்பலால் ஆண்டாள் அரசியலாக்கப்பட்டிருக்கிறாள். அவளை வைத்து கண்ணீர் நாடகம் நடத்திய விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணனுக்கு உடனடிப் பரிசாக பத்ம விருதை அறிவித்திருக்கிறார்கள். இது ஆண்டாளின் கருணை என்கிறார் ’கீழ்மைச் சிந்தனையாளர்’ஹெச்.ராஜா.

விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணன் பத்ம விருதுக்குத் தகுதியற்றவர் என்று சொல்லவில்லை. அவரது கலைத் தொண்டுக்கு, இதுபோல் எத்தனை விருதுகள் கொடுத்தாலும் ஈடாகாது. நவநீதகிருஷ்ணன் தம்பதியர், நீண்டகாலமாக நாட்டிய இசையை, கிராமிய இசையை, தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் எடுத்துச்சென்ற கலைக்குரிசில்கள். பெருமிதத்திற்குரிய பேராசிரியத் தம்பதிகள். அவர்களுக்குத் தகுதியற்ற கைகள், தகுதியற்ற காரணத்தால் கொடுக்கும் விருது என்பதால், தமிழ்ச் சமூகத்தால் அவரை மனமுவந்து பாராட்டக் கூட முடியவில்லை. இதுவும் தமிழர்களாகிய நமக்கு ஏற்பட்டிருக்கும் சங்கடம்.

வைரமுத்து என்கிற தமிழ்க் கவிஞனை, இவ்வளவு மோசமாக, அநாகரிகமாகத் தாக்குகிறாரே, ஹெச்.ராஜா என்று தமிழ்ச் சமூகமே கொந்தளித்திருக்க வேண்டமா? அந்த ராஜா, வடுகபட்டிக்குப் போய் வைரமுத்துவின் தாயாரிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று எவரும் குரல்கொடுக்கவில்லை என்பது, வருந்தத்தக்கது.

வைரமுத்து, ஆண்டாளை தமிழ் அரங்கில் வைத்து ஆராதித்தார். ஆனால் ஹெச்.ராஜா, ஆண்டாளைத் தெருவில் நிறுத்தி, வைரமுத்து சொல்லாத சொற்களைச் சொல்லி, அசிங்கபடுத்தி, தமிழகத்தில் ஒரு கீழ்மையான நாடகத்தை நடத்தினார். இறை நம்பிக்கை, இவர்களை எல்லாம் பண்படுத்துவதற்கு மாறாக., சோடா பாட்டிலை சுற்றவைத்திருப்பது வெட்கக்கேடானது. நம்மவர்கள் விழிப்புறவேண்டும். ஆண்டாளின் தமிழ் நம்முடையது.

தமிழை ’நீச பாசை’ என்றும், தமிழில் பேசினால் தீட்டு என்றும், தமிழைத் தொடர்ந்து அவமதித்துவரும் ’அவாள்களுக்கு’, ஆண்டாள் மீது என்ன திடீர் கரிசனம்? இது உண்மையான ஆண்டாள் மீதான பற்று அல்ல. நம்மைத் தாக்க ஆண்டாளையே அவர்கள் ஆயுதமாக்குகிறார்கள். தமிழர்களாகிய நாம் ஒன்றுபடவேண்டும்.

-ஆரூர் தமிழ்நாடன்

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT