fd

Advertisment

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் கடந்த சில வாரங்களாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை செய்து வருகிறார்கள். இதில் பல்வேறு சொத்து ஆவணங்கள், பணம், நகை கைப்பற்றப்பட்டதாகத்தகவல் வெளிவந்த நிலையில், கே.சி வீரமணி வீட்டில் முறைகேடான வகையில் குவிக்கப்பட்டிருந்த பல நூறு யூனிட் மணல் கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அதிமுக முன்னாள் செய்தித்தொடர்பாளர் பெங்களூர் புகழேந்தியிடம் பல்வேறு கேள்விகளை நாம் முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு,

கே.சி வீரமணி வீட்டில் கடந்த 16ம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இதில், நகைகள், ஆவணங்கள், வெளிநாட்டுப் பணம் முதலியவை கைப்பற்றப்பட்டுள்ளதாகத்தகவல் வெளியாகியுள்ளது. இதை எப்படிப் பார்க்கிறீர்கள்? 653 சதவீதம் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதை எப்படி பார்க்கிறீர்கள்?

என் உடம்பு நன்றாக இருக்கிறது, ஹாட் பீட் முதல் அனைத்தும் நார்மலாக இருக்கிறது, நீங்கள் உங்கள் உடம்பைச் சோதனை செய்துகொள்ளுங்கள். இது கே.சி வீரமணியுடன் முடிந்து போகிற சம்பவம் இல்லை. இன்னும் வரிசையாக ஆட்கள் இருக்கிறார்கள். அண்ணன் தங்கமணி இருக்கிறார். கேப்டன் மீதே இன்னும் கை வைக்கவில்லை. எடப்பாடி பழனிசாமி தானே கேப்டன். இதய பிரச்சனை இருப்பவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். பலகோடி ரூபாய் பதுக்கல்கள் எல்லாம் இனி வரிசையாக வர இருக்கிறது. 500 கோடி, 1000 கோடி என மனுஷன் பார்த்தா என்ன சார் ஆவான், டொங்குனு போயிடுவான். எனவே அந்த செய்திகளைப் பார்க்கும் நாமும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். எல்லாம் நம்முடைய வரிப்பணம். போன முறை வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட பொழுது இருந்த சொத்துக்களை விட 50 மடங்கு, 100 மடங்கு என அதிகப்படியான சொத்துக்களை வாங்கி குவித்துள்ளார்கள்.

Advertisment

இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அதிமுக தலைமை, உள்ளாட்சித்தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த ரெய்டு நடத்தப்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்களே?

ஏற்கனவே நடைபெற்ற உள்ளாட்சித்தேர்தலில் இவர்கள் வெற்றி பெற்றார்களா? திமுக 52 சதவீத இடங்களில் வெற்றி பெற்றார்களே, அது எப்படி நடந்தது. திமுக வரவே வராது என்றார் ஈபிஎஸ். ஆனால் நடந்தது என்ன. திமுக வெற்றிபெற்றதும் அடுத்து நடத்த வேண்டிய நகராட்சி, மாநகராட்சி தேர்தலை நடத்தாமல் பயந்து நடுக்கினார். கிராம புறத்திலேயே அதிக இடங்களில் வெற்றிபெற்ற திமுக , இந்த தேர்தலை நடத்தினால் அனைத்து இடங்களில் வெற்றிபெறும் என்ற பயத்தினால் தேர்தலை நடத்துவதையே கை விட்டு விட்டார்.

வரப் போகின்ற உள்ளாட்சித்தேர்தலில் அதிமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றிபெறும் என்று பாஜக அண்ணாமலை தெரிவித்துள்ளாரே?

Advertisment

எனக்குத்தமிழகத்தைத்தாண்டி கர்நாடகா, டெல்லி அரசியல் தலைவர்கள் வரை பாஜக தலைவர்களுடன் நல்ல பழக்கம் இருக்கிறது. அனைவரிடமும் நட்பு பாராட்டுவேன். எடியூரப்பா வரை எனக்கு நல்ல நண்பர் தான். ஆனால் நட்பு வேறு, அரசியல் வேறு. தமிழகத்தில் பாஜக உடன் கூட்டணி வைத்தால் அந்த கூட்டணி வெற்றி பெறாது என்பது அனைவருக்கும் தெரியும், பாஜகவுக்கு இந்த உண்மை தெரியும், அதிமுகவுக்கு தெரியும். இருந்தும் அரசியல் செய்ய வேண்டும் என்ற காரணத்தால் இவர்கள் இருவரும் இப்படி மாற்றி மாற்றி கூறுகிறார்கள். அதிமுக மட்டுமல்ல, திமுக பாஜகவுடன் கூட்டணி வைத்தால் கூட அவர்களுக்கு வெற்றி கிடைக்காது என்பதே நிஜம்.

ரெய்டு போகிற இடங்களில் சொத்து ஆவணங்கள், நகை, பணம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்படுவது வாடிக்கையான ஒன்று. ஆனால் கே.சி வீரமணி வீட்டில் பல நூறு யூனிட் மணல் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகத்தகவல் வெளியாகி இருக்கிறதே?

இந்த தகவல் உண்மையாக இருந்தால் வெட்கக்கேடானது, அத்தியாவசியமானப் பொருட்களை பதுக்கி வைத்திருப்பது சட்டப்படி குற்றம். இதற்குச் சட்டத்தில் தனிப்பிரிவே இருக்கிறது. கடுமையான தண்டனை வரை இதற்குக் கொடுக்கலாம். அதுவும் அமைச்சராக இருந்த காலத்தில் இந்த மாதிரியான முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது என்பது மன்னிக்க முடியாத குற்றம். நிச்சயம் அதற்கான தண்டனையை அவர் பெறுவார்.