Skip to main content

"ரெய்டு விட்டுப் பாருங்கள்... அமித்ஷாவை சந்திக்க எடப்பாடி எப்படி ஓடுவாருன்னு தெரியும்..." - கே.சி. பழனிசாமி பேட்டி

Published on 17/11/2022 | Edited on 17/11/2022

 

ரத

 

சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்தபோது சந்திக்காதது பற்றிப் பேசினார். இருவரும் வேறு வேறு கட்சியைச் சேர்ந்தவர்கள், தேவைப்பட்டால் சந்திப்போம், வரும் போதெல்லாம் சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் வியப்பை ஏற்படுத்திய நிலையில் இதுதொடர்பாக அதிமுக முன்னாள் எம்.பி கே.சி பழனிசாமி அவர்களிடம் கேள்வியை முன்வைத்தோம். 


நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில் வருமாறு, " சென்ற முறை டெல்லியில் அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சென்று சந்தித்தார். அப்போது எடப்பாடியின் உறவினர்கள் வீட்டில் எல்லாம் ரெய்டு நடந்துகொண்டிருந்தது. இந்த முறை அப்படி எந்த ரெய்டும் நடைபெறவில்லை. அதனால் அமித்ஷாவை அவர் சந்திக்கவில்லை. அப்படி ரெய்டு நடைபெற்று வந்தால் அவர் இந்த முறையும் அவரை சென்னையில் சந்தித்திருப்பார்.

 

அவருக்கு வேண்டியவர்களிடம் ரெய்டு போகச் செய்தால் உடனடியாக அவர் எங்கே இருந்தாலும் சந்திப்பார். அப்போது எல்லாம் அவர் தனிக்கட்சி நான் தனிக்கட்சி என்று பேசமாட்டார். பக்குவமாக நடந்துகொள்வார். அதிமுக தொண்டர்கள் பாஜக கூட்டணியை விரும்பவில்லை. எடப்பாடி தன்னுடைய சுயநலத்திற்காக இந்தக் கூட்டணியை முன்பு அமைத்தார். தேவையில்லை அதனால் அமித்ஷாவை சந்திக்கவில்லை என்று கூறும் இவர், இதற்கு முன்பு ஓடி ஓடி எதற்காக அவரை டெல்லி போய் சந்தித்தார்.தன்னுடைய தேவைக்கு மட்டும் எத்தனை தடவை வேண்டுமானாலும் சந்திக்கலாம் என்று எடப்பாடி நினைக்கிறாரா?  

 

டெல்லியில் சந்தித்தபோது தமிழக மக்கள் நலனில் அக்கறை காட்டுவதைப் போல பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பட்டியலை அவரிடம் கொடுத்ததாகக் கூறினாரே அந்த விஷயத்தில் இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அமித்ஷாவிடம் நேரில் கேட்கலாமே? அதையாவது கேட்டாரா? பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்ல வேண்டும் என்பார்கள். எடப்பாடி பழனிசாமி அதையாவது ஒழுங்காகச் செய்ய வேண்டும். இப்படி ஏடாகூடமாகப் பேசி மாட்டிக்கொள்ள வேண்டாம். அவருக்குக் கட்சியைப் பற்றியோ தொண்டர்களைப் பற்றியோ சிறிதும் கவலை இல்லை. தன் பதவியைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்பதைத் தாண்டி வேறு எந்த குறிக்கோளும் அவருக்கு இல்லை.

 

சசிகலா, தினகரன், எடப்பாடி, பன்னீர்செல்வம் என பாஜக நான்கு அடிமைகளைத் தமிழகத்தில் வைத்துள்ளது. இவர்களில் யார் சிறந்த அடிமை என்ற போட்டி அவர்களுக்குள் தற்போது ஏற்பட்டுள்ளது. அதில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்ற போட்டி அவர்கள் நான்கு பேரிடமும் இருக்கிறது. ஆகையால் பாஜக இவர்களை வைத்து பூச்சாண்டி காட்டப் பார்க்கிறது. அதில் அவர்களால் வெற்றிபெற முடியாது. இன்னும் எத்தனை தேர்தல்கள் வந்தாலும் பாஜகவால் தமிழகத்தில் வெற்றிபெற முடியாது. அதை பாஜகவுக்கு விரைவில் மக்கள் புரிய வைப்பார்கள்.


 

Next Story

ஆஜருக்கு மேல் ஆஜர்; அதிமுக வட்டாரத்தை பரபரப்பாக்கிய நீதிமன்றங்கள்

Published on 15/12/2023 | Edited on 15/12/2023
Edappadi Palaniswami ordered to appear in person

அதிமுக கட்சியினுடைய போலி உறுப்பினர் அட்டைகளை வழங்கி சட்ட விரோதமாக பணம் வசூலிப்பதாக முன்னாள் எம்பி கே.சி.பழனிசாமிக்கு எதிராக அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்த கருத்துகள் தனக்கும், தன்னுடைய நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக சென்னை சார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் கே.சி.பழனிச்சாமி, எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அவதூறு வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அந்த வழக்கை விசாரித்த சென்னை சார்ஜ் டவுன் நீதிமன்றம் கே.சி.பழனிசாமி வழக்கை தள்ளுபடி செய்தது. அதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் கே.சி.பழனிசாமி மீண்டும் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் கே.சி.பழனிசாமியின் வழக்கை தள்ளுபடி செய்த சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்ததோடு, தொடர்ந்து வழக்கை நடத்த வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. இந்தநிலையில் கே.சி.பழனிசாமி தொடர்ந்த வழக்கின் விசாரணை சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையில் ஜனவரி 23ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி ஆஜராக சம்மன் அனுப்ப உத்தரவிட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் ஏற்கனவே மாற்று நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆஜராக வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல் வழங்கி இருக்கும் நிலையில், மற்றொரு வழக்கில் ஜனவரி 23ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி ஆஜராக சென்னை சார்ஜ் டவுன் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 

Next Story

அதிமுக முன்னாள் எம்.பி. நீக்கப்பட்ட விவகாரம்; எடப்பாடி பழனிசாமிக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Published on 08/11/2023 | Edited on 08/11/2023

 

Former AIADMK MP deleted matter; Court orders action against Edappadi Palaniswami

 

அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமியை கட்சியில் இருந்து நீக்கியது தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய எடப்பாடி பழனிசாமிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

அதிமுக கட்சியின் போலி உறுப்பினர் அட்டையை வழங்கி சட்டவிரோதமாக பணம் வசூலித்ததாக கூறி அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமிக்கு எதிராக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் தன்னை பற்றி தெரிவித்திருந்த கருத்துகள் தன்னுடைய பெயருக்கும் புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக கூறி அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

 

இந்த வழக்கை விசாரித்த சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் கே.சி.பழனிசாமியின் அவதூறு வழக்கை தள்ளுபடி செய்து கடந்த ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி கே.சி.பழனிசாமி சென்னை உயர்நீதி மன்றத்தில் மறு ஆய்வு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அதிமுக பொதுச்செயலாளராக ஜெயலலிதா இருந்தபோதே கே.சி.பழனிசாமி கட்சியில் இருந்து நீக்கப்பட்டுவிட்டார் என எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதம் முன்வைக்கப்பட்டது. இதனை கேட்டறிந்த நீதிபதி கே.சி. பழனிசாமியை கட்சியில் இருந்து நீக்கியது தொடர்பான முழு ஆவணங்களையும் தாக்கல் செய்ய எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு உத்தரவிட்டார். இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை நவம்பர் 11 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.