Kavitha Gajendran on Interview about Annamalai and Manipur Issue

Advertisment

சமூக செயற்பாட்டாளர் கவிதா கஜேந்திரனிடம் அண்ணாமலையின் நடைப்பயணம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் தற்கால அரசியல் நிகழ்வுகள் குறித்து பேட்டி கண்டோம். அப்போது அவர் நம்மிடம் பல்வேறு கருத்துகளை பகிர்ந்து கொண்டார். அதில் சிறு தொகுப்பு பின்வருமாறு....

“மணிப்பூரில் உள்நாட்டுப் போர் போன்ற மோசமான ஒரு சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒன்றிய அரசுக்கு இது பெரிய அழுத்தத்தைக் கொடுத்துள்ளது. இதுவரை பேசாத மோடியைப் பேச வைத்துள்ளது. இப்போது இந்தியா கூட்டணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மணிப்பூர் செல்வது ஒன்றிய அரசுக்கு மேலும் அழுத்தத்தைக் கொடுக்கும். மணிப்பூரில் இருக்க வேண்டிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ராமேஸ்வரத்தில் இருக்கிறார். இந்த நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் மணிப்பூர் சென்று அந்த மக்களோடு இருக்கிறார்கள்.

மணிப்பூரில் குக்கி இன மக்கள் உயிருக்கு பயந்து வாழ்ந்து வருகின்றனர். ஆனால் அண்ணாமலை இதற்கு ஆதாரம் வேண்டும் என்கிறார். அண்ணாமலை வேறு ஏதோ ஒரு கற்பனை உலகத்தில் இருந்து பேசி வருகிறார். போலீஸ் விசாரணை சரியில்லை எனும்போதுதான் சிபிஐ விசாரணையை நாம் கேட்போம். மணிப்பூர் விவகாரத்தை சிபிஐ இப்போது கையில் எடுத்திருக்கிறது. ஆனால் அவர்களுடைய போக்கு எப்படி இருக்கும் என்பதில் நமக்கு கேள்விகள் இருக்கின்றன. இவ்வளவு வன்முறையையும் கட்டுக்குள் கொண்டுவர பாஜகவுக்கு திராணி இல்லாததால் அவர்கள் பதவி விலக வேண்டும் என்று நாம் கேட்கிறோம்.

Advertisment

அண்ணாமலை என்பவர் ஒரு தலைவரே கிடையாது. அமைதியான மாநிலமாக, சகோதரத்துவத்துடன் தமிழ்நாடு விளங்கி வருகிறது. தமிழ்நாட்டில் இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் மாவட்டம் ராமநாதபுரம். அங்கு சென்று இவர்கள் யாத்திரையைத் தொடங்குகிறார்கள். மணிப்பூர் போன்ற கலவரங்களை இங்கும் உருவாக்குவதற்காகத் தான் இவர்கள் இதைச் செய்கின்றனர். என் மண் என்று அண்ணாமலை சொல்கிறார். இவருக்கும் இந்த மண்ணுக்கும் என்ன சம்பந்தம்? இந்த மண்ணுக்காக இவர் ஏதாவது போராடியிருக்கிறாரா? எம்ஜிஆர் பற்றியும், ஜெயலலிதா பற்றியும் பேசுவதற்கு அமித்ஷா யார்? எடப்பாடி பழனிசாமி இந்த நிகழ்ச்சியை புறக்கணித்திருக்கிறார். அதிமுகவினரிடம் பாஜக குறித்த அதிருப்தி நிறைய இருக்கிறது. 2024 தேர்தலில் பாஜக மீண்டும் வென்று ஆட்சியமைத்தால் இந்தியாவையாராலும் காப்பாற்ற முடியாது.

பாஜகவின் பாதயாத்திரை தொடக்க விழாவில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டன. கட்சிகளுக்குள் பிளவை ஏற்படுத்துவதற்காகவே பாஜக அமலாக்கத்துறையை பயன்படுத்தி வருகிறது. பாஜக அரசாங்கம் ஸ்டாலினைப் பார்த்து பயப்படுகிறது. இந்தியா கூட்டணியின் முக்கியமான சக்தியாக திமுக இருக்கிறது. நம்மையும் நம்முடைய பொருளாதாரத்தையும் 100 வருடங்கள் பின்னோக்கி இவர்கள் அழைத்துச் சென்றிருக்கின்றனர். வட இந்தியாவில் பாஜகவின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கிறது. பொதுத்துறை என்பதே இந்தியாவில் இல்லை என்கிற நிலை ஏற்பட்டுவிட்டது. பொய் பிரச்சாரத்தை தமிழ்நாடு அரசாங்கம் தீவிரமாக கவனிக்க வேண்டிய தேவை இருக்கிறது. அண்ணாமலை மற்றும் பாஜகவின் பொய்களை நாம் தோலுரித்துக் காட்ட வேண்டும். இந்த பாதயாத்திரையை நிச்சயம் தோல்வியடையச் செய்ய வேண்டும்”.