Skip to main content

காஷ்மீர் பூமி  இனிமேல் எப்படி கார்ப்பரேட் பூமியாக  ஆகப்போகிறது?

 

நேற்று வரை காஷ்மீர் என்றால் பனிசூழ் உலகம். இன்றோ அது அனல் பூமியாய் தகிக்கிறது.

 

காஷ்மீர் மீது தற்போது மத்திய அரசால் எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கை சரியா? தவறா? என்ற விவாதம், நாடு முழுக்க சூறாவளி எழுப்பிக்கொண்டிருக்க... நாம் அந்த விவகாரத்தை நாம் கவலையோடு கவனிக்கவேண்டியிருக்கிறது. 

 

குளிர் பிரதேசமான  காஷ்மீரை, அன்பும் அக்கறையும் காட்டி, அதன் மனதைக் குளிரவைக்க வேண்டிய மோடி அரசு, எரியும் நெருப்பில் பெட்ரோல் ஊற்றுவது போல், அதனிடம் இருந்த சிறப்பு அந்தஸ்து வழங்கும், அரசியல் சட்ட பிரிவு 370-ஐயும், அம்மாநில நிரந்தரக் குடியிருப்பாளர்களுக்கு சிறப்பு உரிமைகள் வழங்கும் சட்ட பிரிவு 35ஏ-வையும் அதிரடியாக நீக்கியிருக்கிறது.  இது மிகப்பெரிய அபத்தமான செயல். இதை  இந்திய அரசியலின் ஓர் வரலாற்று பிழையாகவே நாளைய தலைமுறை குறித்துவைக்கும்.

 

k


இந்த செயலைக் கண்டித்தும் ஆதரித்தும் பலவிதக் குரல்கள் எழுந்தபடியே இருக்கின்றன. 
ஆனால் காஷ்மீர் மீது கண் வைக்கும் அணு ஆயுத நாடுகளான சீனாவும் பாகிஸ்தானும்  அதன் மீது கவனத்தையும் ஆசையையும் குவிப்பது கவலைக்குரிய ஒன்று. 

 

இந்த சங்கடங்களுக்கு எல்லாம் முக்கிய காரணம், காஷ்மீரின் புவி அரசியலும் (Geo-Political)  புவி நுட்ப அடையாளமும்தான்( Geo-Strategic Significance).
காஷ்மீர் என்ற அந்த அழகிய சின்ன  நிலபரப்பிற்காக, இந்தியாவும் பாகிஸ்தானும் பல முறை மோதலில் ஈடுபட்டிருக்கின்றன. அந்த சின்ன நிலப்பரப்பு அவ்வளவு முக்கியம் வாய்ந்தது.


பாகிஸ்தான் குடிமக்களில் சரிபாதிக்கும் மேற்பட்டோர் விவசாயிகளே. அவர்களுக்கு முக்கிய நீர் ஆதாரமாக இருப்பது காஷ்மீர்தான்.  திபெத்தில் தொடங்கும் சிந்து நதி, காஷ்மீர் வழியாக பல நீர் பிடிப்புகளுக்கு உயிர் கொடுத்துவிட்டு, பாகிஸ்தான் வழியாக அரபிக் கடலை அடைகிறது. அந்த வகையில் சிந்து நதி காஷ்மீரைச்சிக்கல் இல்லாமல் கடந்து பாகிஸ்தான் வந்தால்தான் அங்கே பசுமை தழைக்கும் என்ற நிலை இருக்கிறது. 

பிரிட்டிஷ் அரசாங்கம் இந்திய துணை கண்டத்திலிருந்து பாகிஸ்தானைப் பிரித்த பிறகு, 1948 ஏபரல் 1-ல் இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு காஷ்மீர் வழியாகச் செல்லும் அனைத்து கால்வாய்களையும் அடைத்தது. இந்த பிரச்சனை பூதாகரம் அடைந்த பிறகுதான் காஷ்மீர்  விவகாரம் சர்வதேச அமைப்புகளின் கவனத்திற்குப் போனது.

இதற்கிடையில் காலிஃபர் ( Collier) என்கிற பிரபல பத்திரிகை , இந்தியா, பாக்கிஸ்தான் பிரிவினைக்குப் பிறகான நிலைமையைக் கண்டறிந்து வெளிப்படுத்த நினைத்தது.  இதற்காக அது, அமெரிக்க வழக்கறிஞரும், ஐக்கிய அமெரிக்க அணுசக்தி ஆணையத்தின் தலைவருமான டேவிட் லிலிந்தையாலை  (David Lilenthial) 1951 பிப்ரவரியில் அனுப்பியது. அவர் பாகிஸ்தான் பிரதமர் லியாகத் அலி கானையும் இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேருவையும் அவர் சந்தித்தார்.


1951 ஆகஸ்ட்டில் வெளிவந்த காலிஃபர் பத்திரிகையில் "வெடிகுண்டுகள் மற்றும் ஷெல்பைர் கொண்ட எந்த ராணுவமும் ஒரு நிலத்தை முற்றிலுமாக அழிக்க முடியாது. ஆனால் இந்தியா நினைத்தால் பாகிஸ்தானை அப்பேரழிவிற்கு உட்படுத்த முடியும். இந்தியாவின்  எந்தெந்த நீர்நிலைகள் பாகிஸ்தான் மக்களையும், அந்த நிலத்தையும் உயிரோடு வைத்திருக்கிறதோ அதை மூடுவதன் மூலம், இந்தியா நினைத்தால் அப்பேரழிவை ஏற்படுத்திவிடலாம்" என்று டேவிட் எழுதியிருந்தார்.


அதே கட்டுரையில் "இது மதம்சார்ந்த பிரச்னையோ அரசியல் சார்ந்த பிரச்சனையோ இல்லை. இது ஒரு தேசத்தின் பிழைப்பு சார்ந்த பிரச்சனை" என்றார். உண்மைதான் காஷ்மீரை இந்தியா கையில் வைத்திருப்பது என்பது, பாக்கிஸ்தானைத் தன் கட்டுக்குள் வைத்திருக்க,  ஒரு மிகப்பெரிய ஆயுதத்தை கையில் வைத்திருப்பதற்கு சமம். இந்தியா நினைத்தால் பாகிஸ்தானில் ஒரு மிகப்பெரிய பேரழிவையே உருவாக்கலாம். 


இந்த பிரச்சனைக்குப் பிறகு உலக வங்கி தலையிட்டுதன் பேரில் இந்தியாவும் பாகிஸ்தானும் மனம் ஒப்பி "சிந்து நதி ஒப்பந்தம்" போட்டுக்கொண்டார்கள். அதில் பியஸ், சட்லெஜ், ராவி போன்ற ஆறுகளைப் பயன்படுத்தும் முழு உரிமை இந்தியாவிற்கும், சிந்து, ஜீலம்,செனாப் ஆறுகளைப் பயன்படுத்திக்கொள்ளும் உரிமை பாகிஸ்தானிற்கும் என்று அந்த ஒப்பந்தம் சொன்னது.  மேலும் இந்தியா மட்டும் மூல நதியினை சுரண்டாமல் பயன்படுத்தலாம் என்றும் அந்த ஒப்பந்தத்தில் குறிக்கப்பட்டிருந்தது.


இந்த ஒப்பந்தம், உலகிலேயே இரு நாடுகளிடையே போடப்பட்ட வெற்றிகரமான நீர் நிலை ஒப்பந்தம் என்று போற்றப்பட்டாலும், இதிலும் நிறைய சிக்கல்கள் வந்துகொண்டேதான் இருக்கின்றன. ஜம்மு காஷ்மீரில் உள்ள யூரி (uri)  என்ற நகரத்தில் இருந்த இந்திய ராணுவப் மீது நடப்பட்ட தாக்குதலுக்குப் பிறகு, இந்தியப் பிரதமர் மோடி தலைமையில் அதிகாரிகள் கூடி விவாதித்தனர்.  அப்போது, நாம் நம் நீர் வளத்தை பாகிஸ்தானுக்கு எதிரான ஆயுதமாகப் பயன்படுத்தலாமா? என்று ஆலோசித்துப் பிறகு வேண்டாம் என்று முடிவு செய்துள்ளனர்.

 

சமீபத்தில் நடந்த மக்களவைத்  தேர்தலுக்குச் சற்று முன்னர் நடந்த புல்வமா தாக்குதல் சமயத்தில் ,  மத்திய நீர் வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தனது ட்விட்டர் பக்கத்தில் "பாகிஸ்தானுக்கு பகிர்ந்து வரும் நீரை இந்தியா நிறுத்தும் " என்று பதிவிட்டிருந்தார். அதாவது சிந்து நதி மூலமாக இந்தியாவிற்கு ஒதுக்கப்பட்டிருந்த ரவி மற்றும் பியஸ் ஆறுகள்  ஹரியானா, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் இடையேயான  மோதல் காரணமாக இந்தியா அதிகம் பயன்படுத்தப்படவில்லை. இது பாகிஸ்தானிற்கு மிகப்பெரிய அதிர்ஷ்டமாக அமைந்திருந்தது. அதை நிறுத்தி அணைகள் கட்ட  நம் இந்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. 


ஏற்கனவே காஷ்மீர் நீர் நிலைகளில் நீர் மின்சார திட்டங்கள் பல தீட்டப்பட்டு, அதை செயல்படுத்தத் தொடங்கிய் நிலையில், இந்தியா, சிந்து நீர் ஒப்பந்தத்தை மீறுகிறது என்று பாகிஸ்தான் குற்றம் சாட்டிக்கொண்டே இருந்தது. இந்த நிலையில் பாக்கிற்கு மிகப்பெரிய தலைவலியாக அமைந்தது கிஷங் கங்கா நீர்மின் நிலையத் திட்டம். 2007ல் பாகிஸ்தானுக்கு ஒதுக்கப்பட்ட ஜீலம் ஆற்றில் இதை அமைக்கத் திட்டமிடப்பட்டிருந்தது.அப்போது பாகிஸ்தான், இது எங்களின் வறட்சிக் காலம் என்றெல்லாம் கதறினாலும் சர்வதேச நீதிமன்றம், இந்தியாவிற்கு சாதகமாகவே தீர்ப்பளித்தது.


அந்த நீர்மின் நிலைய தொடக்க விழாவில் பேசிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி, நம் கைவசம் இன்னும் பல திட்டங்கள் உள்ளதாகக் குறிப்பிட்டார். அது மட்டுமின்றி, காஷ்மீரின் நீர் நிலைகளில் அமைக்கப்படும் நீர்மின் நிலையங்கள் மூலம், நாம் இந்தியா முழுக்க மின்சாரம் வழங்க முடியும் என்றும் குறிப்பிட்டார். இது கொஞ்சம் மிகைக்கூற்றாகவே இருந்தாலும், காஷ்மீர் நீர் நிலைகள் மொத்தம் 20,000 மெகா வாட்டிற்கு மேல் மின்சாரம் தயாரிக்கும் தகுதியுடையது என்று நம்பப்படுகிறது.ஆனால் தற்போது ஏறக்குறைய 2500 மெகா வாட்ஸ் மட்டுமே தயாரிக்கப்படுகிறது. அதிலும் அதிக பட்சமாக இந்தியாவின் தேசிய நீர் மின்சார வாரியமே இதைத் தயாரிக்கிறது.  இதற்கு ராயல்டியாக்ல 12% மட்டுமே காஷ்மீர் அரசுக்கு வழங்குகிறது. காமன் வெல்த் மனித உரிமைகள் முன்முயற்சி ( Common Wealth Human Rights Initiative [CHRI] ) என்ற சர்வதேச அரசு சாரா நிறுவனத்தை சேர்ந்த வெங்கடேஷ்நாயக், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஒரு விண்ணப்பத்தை பதிவு செய்தார். அதன்படி, பதிலளித்த தேசிய நீர் மின்சார வாரியம் ஜம்மு காஷ்மீரில் இயக்கப்படும் நீர் மின்நிலையம் மூலம் ஈடுபடும் மின்சாரத்தை 2001 முதல் 2015 வரை வெவ்வேறு மாநிலங்களின் பயன்பாட்டிற்கு விற்று ரூ.19,442 கோடி ஈட்டியுள்ளது தெரிய வந்துள்ளது.


2005-ல் இருந்து 2015 வரை காஷ்மீர், 20,000 கோடி ரூபாய்க்கு இந்தியாவிடம் மின்சாரம் வாங்கியுள்ளது. ஆக இந்தியா நினைத்தால் காஷ்மீரை பாகிஸ்தானுக்கு எதிரான ஆயுதமாகவும் பயன்படுத்தலாம், சொந்த லாபத்திற்காக ஒரு வளமாகவும் பயன்படுத்தலாம். ஆனால் காஷ்மீர் பகுதியில் 65% -பகுதியைத்தான் இந்தியா தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. அதுதான் இந்தியா உட்பட காஷ்மீரைச் சுற்றியுள்ள எல்லா நாடுகளுக்கும் தலைவலியாக இருக்கிறது.


ஒருங்கிணைந்த காஷ்மீரின் எல்லைகள்  நம் இந்தியாவோடு மட்டுமல்லாது, ஆப்கானிஸ்தான், திபெத், சீனா, பாகிஸ்தான், இந்திய துணை கண்டம் என தொட்டு இருந்தது.

 

1950-ல் சீனா திபெத்தின் பெரும் பகுதியைக் கைப்பற்றிய பிறகு 1951-57ல் திபெட்டிலிருந்து காஷ்மீர் வடமேற்கு நிலப்பகுதியான அக்சாய் சின் வழியாக க்ஸின்க்ஸிங் என்ற சீனாவின் தன்னாட்சி பெற்ற மாகாணத்திற்கு ஒரு நெடுஞ்சாலை அமைத்தது. அப்போது எல்லை அத்துமீறல் என்று குற்றச்சாட்டு எழ, அது 1962 இந்திய-சீனப் போரில் போய் முடிந்தது. வெற்றி பெற்ற சீனா, இந்தியா வரையறுத்த எல்லையை மறுத்து, அக்சய் சின் பகுதியை இன்றும் சொந்தம் கொண்டாடுகிறது. மேற்கில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக்  காஷ்மீர் பகுதியும், கிழக்கில் சீனா ஆக்கிரமிப்புக் காஷ்மீர் பகுதியும் இந்தியாவிற்கு எப்போதும் அச்சுறுத்தலாக இருக்கிறது. ஏற்கனவே சீனாவிடம் பாகிஸ்தான் உள்கட்டமைப்பு என்ற பெயரில் வாங்கிய அதிக கடனை கட்டமுடியாமல், அதிக பணத்தை முதலீடு செய்த பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியைக் கொஞ்சம் கொஞ்சமாக சீனாவிடம் இழந்து வருவதாக சர்வதேச அரசியல் அறிஞர்கள் கூறுகிறார்கள். 


இந்நிலையில் பாக்கின் ஆக்கிரமிப்புப் பகுதியான கில்கிட்டும், சீனா ஆக்கிரமிப்பான அக்சய்சின்னும், இந்த இரண்டில் ஏதோ ஒரு நாட்டின் ஆக்கிரமிப்பின் மூலம் ஓர் இடத்தில் இணைத்துவிட்டால் அது பாகிஸ்தானுக்கு நல்ல வரமாக அமையும். இதனாலேயே எல்லா வருடமும் இந்தியா வரவு செலவு திட்டத்தில் பாதுகாப்புத் துறைக்கு அதிக பட்ஜெட் ஒதுக்குகிறது. 


இப்போதைய அழகிய காஷ்மீர் பூமி  இனிமேல் எப்படி எல்லாம் கார்ப்பரேட் பூமியாக  ஆகப்போகிறது என்று இந்தக் கட்டுரை சொல்ல தேவையில்லை இன்னும் சில நாட்களில் மோடியின் அரசே அதை விளக்கும். ஒன்றை நாம் மறந்துவிட கூடாது இந்தியா எப்போதும் தானாகத் தாக்குதலை துவங்ககாத Defensive அரசு, ஆனால் பாகிஸ்தானோ Offensive அரசு.


- த . இலக்கியன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
Loading...