Skip to main content

இரத்தத்தில் கடிதம்! சிக்கலில் ஜோதிமணி

Published on 17/02/2024 | Edited on 17/02/2024
Karur parliament constituency congress conflict  jothimani

நாடு முழுவதுமுள்ள கட்சிகள், பாராளுமன்றத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை மும்முரமாக செய்துவருகின்றன. பெரும்பாலான கட்சிகள் தங்களுடைய வேட்பாளர்கள் பட்டியலை தயார் செய்து வைத்துள்ளன. யாருக்கு எந்த தொகுதி, எங்கெல்லாம் வேட்பாளர்களை மாற்ற வேண்டும், எப்படித் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்பதையெல்லாம் கூட வரையறை செய்துவிட்டன.

இந்நிலையில், கரூர் பாராளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியினரிடையே ஏற்பட்டுள்ள கோஷ்டி மோதல், அகில இந்திய காங்கிரஸ் தலைமைவரை பரபரப்பை எகிற வைத்துள்ளது. இந்த பாராளுமன்றத் தொகுதியில், வேடசந்தூர், அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம், மணப்பாறை, விராலிமலை போன்ற சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. 1984 வரை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி வென்று வந்த இத்தொகுதியில், அதன்பின்னர், தி.மு.க., அ.தி.மு.க., தமிழ் மாநில காங்கிரஸ் என மாறி மாறி வென்ற நிலையில், மீண்டும் 2019ல் காங்கிரஸ் கட்சி இத்தொகுதியில் வென்றுள்ளது.

கடந்த 2019ல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஜோதிமணி, 6 லட்சத்து 95 லட்சம் வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தம்பிதுரையை 4 லட்சம் வாக்கு கள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இந்நிலையில், வரவுள்ள தேர்தலில் ஜோதிமணிக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கக்கூடாது என்று எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கடந்த தேர்தலில் வெற்றிபெறச் செய்த கட்சிக்காரர்களுக்கு எவ்வித மதிப்பும் மரியாதையும் இவர் கொடுப்பதில்லை. இவரால் கட்சியிலிருந்து வெளியேறிய பல நிர்வாகிகள் அ.தி.மு.க.வில் இணைந்துவிட்டனர். அவருடைய செயல்பாடுகள்தான் இப்படி இருக்கிறது என்றால், அவருடைய பேச்சும் சரியாக இல்லை. மாநில காங்கிரஸ் தலைவர் அழகிரி நடத்திய வீடியோ கான்ஃபரன்ஸ் கூட்டத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். அதோடு, ராகுல்காந்திக்கு இணையான தலைவராகத் தன்னை நினைத்துக் கொண்டு செயல்படுகிறார். கூட்டணிக் கட்சிக்கான தர்மத்தை மதிக்காமல் கரூர் கலெக்டர் அலுவலகத்தில் தி.மு.க.வுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் விதமாக போராட்டம் நடத்தியது என பல்வேறு குற்றச்சாட்டுகளை அவருக்கு எதிராக முன்வைக்கின்றனர்.

வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் மீண்டும் போட்டியிட ஜோதிமணிக்கு வாய்ப்பு கொடுக்கக்கூடாது என்று கரூர் தொகுதி காங்கிரஸ் கட்சியினர் போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில், மாநில தலைவர் அழகிரிக்கு, க.பரமத்தி வட்டார காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் செந்தில்குமார், இரத்தத்தில் எழுதிய கடிதத்தை மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவர் பாங்க் சுப்பிரமணியத்திடம் கொடுத்துள்ளார்.

Next Story

“பாஜகவினர் 180 இடங்களுக்கு மேல் வெற்றி பெற மாட்டார்கள்” - பிரியங்கா காந்தி

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
"BJP won't win more than 180 seats" - Priyanka Gandhi

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இந்நிலையில் உத்திரப்பிரதேச மாநிலம் சஹாரன்பூரில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ரோட்ஷோ நடத்தினார். அப்போது சாலையின் இருபுறமும் திரண்டிருந்த பொதுமக்கள் மலர்களைத் தூவி பிரியங்கா காந்திக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனைத் தொடர்ந்து செய்தியாளரிடம் பிரியங்கா காந்தி பேசுகையில், “பிரதமர் மோடியும், பாஜக தலைவர்களும் வேலையில்லாத் திண்டாட்டம், பணவீக்கம், விவசாயிகள் மற்றும் பெண்களின் பிரச்சனைகளைப் பற்றி பேசவில்லை. உண்மையான பிரச்னைகளில் இருந்து நம்மைத் திசை திருப்ப முயற்சிக்கின்றனர்.

இது குறித்து ஏன் பேசவில்லை என ஊடகங்கள் அவரிடம் கேட்க வேண்டும். அவரது கட்சித் தலைவர்கள் அனைவரும் அரசியலமைப்பு சட்டத்தை மாற்றுவோம் என்று கூறுகிறார்கள். அரசியலமைப்பை மாற்றினால் இட ஒதுக்கீடு மற்றும் மக்களின் உரிமைகள் என்னவாகும்?. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடக்கவில்லை என்றால் பாஜகவினர் 180 இடங்களுக்கு மேல் வெற்றி பெற மாட்டார்கள். மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

“இது மோடியின் வெட்கக்கேடான செயல்” - திருச்சி சிவா விமர்சனம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Trichy Siva critcized This is a shameful act by Modi

கரூர் மாவட்டம்,  கரூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும், காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய திருச்சி சிவா, “இந்தத் தேர்தலானது மிக முக்கியமான ஜனநாயகத் தேர்தல். மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் தேர்தல் நடைபெறுமா என்று சந்தேகம் உள்ளது. மதச்சார்பற்ற அனைவரும் சகோதரர்களாய் உள்ள நிலையில், மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் ஒற்றை மதத்தைச் சார்ந்த ஆட்சியாக இருக்கும். ஜனநாயகமானது காணாமல் போய்விடும். கடந்த 2016ஆம் ஆண்டு 60 ரூபாய்க்கு விற்ற பெட்ரோல் தற்போது 100 ரூபாய்க்கு மேல் விற்று வருகிறது. மோடி ஆட்சிக் காலத்தில் 108 முறை பெட்ரோல், டீசல் கேஸ், விலையினை உயர்த்தியுள்ளது.

ஆண்டிற்கு இரண்டு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கித் தருவதாக பிரதமர் மோடி கூறினார். ஆனால் இதுவரை ஏதும் செய்யவில்லை. நான்கு கோடி இளைஞர்கள் வேலை வாய்ப்பின்றி தவித்து வருகின்றனர். 80 கோடி பேர் தினமும் ரேஷன் கடையில் வரிசையில் நின்று பொருள் வாங்குகிறார்கள். 22 கோடி பேர் இரவு உணவு இல்லாமல் உறங்குகிறார்கள். பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைந்த நாடு என்று கூறிக்கொள்ளும் மோடியின் வெட்கக்கேடான செயல்.

விவசாயக் கடன், மாணவர்களுக்கான கல்விக் கடன்களை ரத்து செய்யாத மோடி அரசு, கார்ப்பரேட் பெரும் முதலாளிகளுக்கு பல்லாயிரக்கணக்கான கோடியினை தள்ளுபடி செய்திருக்கிறது. இந்தியா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் போதும், விவசாயக் கடன் மற்றும் கல்விக் கடன்கள் ரத்து செய்யப்படும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கித் தரப்படும்” என்று கூறினார்.