Skip to main content

கருப்பின் அழகைக் கொண்டாடுவோம்; சாதனையுடன் சொல்லித்தரும் கருப்புநிறத்தழகி அலங்கார போட்டி!

 

karuppu nirathazhagi a beauty and makeup contest for dusky women

 

இலக்கிய காலந்தொட்டு இந்த இயந்திர காலம்வரை அழகுக்கான இலக்கணங்கள் பரிணமித்துக்கொண்டே தான் வந்திருக்கின்றன. காலத்திற்கும், அவை நிகழ்த்தும் கண்டுபிடிப்புகளுக்கும் ஏற்ப ஆடைகள், ஆபரணங்கள், அலங்கார உத்திகள்  எனப் புறக்காரணிகளை வைத்து அழகுக்கான இலக்கணத்தை வகுத்த மனிதன், உடலில் அமைந்துள்ள அங்கங்களின் பண்பியலை வைத்தும் அழகை எடைபோட்டான். மனிதனின் கூந்தலில் தொடங்கி பாதம் வரை ஒவ்வொன்றிற்கும் அழகுக்கான வரையறை என்ற ஒன்றை வகுத்தான். காலப்போக்கில் இதில் சில மறைந்துபோனாலும், இன்றளவும் அழகுக்கான அளவுகோலாக அவற்றில் சில நீடிக்கின்றன. அதில் மிக முக்கியமானது மனிதர்களின் நிறம். 

 

நிறத்தின் அடிப்படையில் ஒருவரின் அழகினை மதிப்பிடுவது என்பது காலங்காலமாக நிகழ்த்தப்பட்டு வருகிறது. வெளிர் தோல் உள்ளவர்கள் அழகானவர்கள், கருமையான தோல் உள்ளவர்கள் அழகு குறைந்தவர்கள் என்ற எண்ணம் சாமுத்ரிகா லட்சணம் காலம் தொடங்கி, இன்றைய சாஃப்ட்வேர் கால இளம் தலைமுறையினர் வரை அனைவருள்ளும் விதைக்கப்பட்டிருக்கிறது. என்னதான் இதில் ஆண் பெண் பேதமில்லை என்றாலும், இந்த வரையறையால் அதிகம் சங்கடங்களுக்கு உள்ளாக்கப்படுவது பெண்கள்தான். சுற்றத்தாரால் இப்படி ஏற்படுத்தப்படும் சங்கடங்களையும் அவை ஏற்படுத்தும் பாதுகாப்பின்மையையும் எதிர்கொள்ள சில சமயங்களில் 'நிம்மதி' என்ற பெரிய விலையைப் பெண்கள் கொடுக்க வேண்டியுள்ளது. 

 

ஆனால், இப்பழங்கால அழகு மதிப்பீட்டு வரையறைகளை மெல்ல உடைக்க தொடங்கியுள்ளது இன்றைய இளைஞர் கூட்டம். நிறத்தின் அடிப்படையில் அழகினை அளவிடும் பழக்கம் இன்றளவும் இருந்தாலும், அந்த போக்கு இப்போது மெல்லக் குறையத் தொடங்கியுள்ளது எனலாம். இணைய உலகம் ஏற்படுத்திய விழிப்புணர்வு, வெளிர் தோலுக்கு நிகராக கருமையும் அழகுதான் என்ற எண்ணத்தைப் பரப்பத் தொடங்கியுள்ளது. இக்கருத்தை முன்னிறுத்திப் பல நிகழ்வுகள் உலகம் முழுவதும் அவ்வப்போது நடத்தப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. கருமையின் அழகைப் பறைசாற்றும் வகையில் அழகிப்போட்டிகளும், ஃபேஷன் ஷோக்களும் ஏராளமாக நடக்கத் துவங்கியுள்ளன. அந்தவகையில் தமிழகத்திலும் இப்படியொரு ஒரு நிகழ்வு விரைவில் நடக்கவிருக்கிறது. 

 

பெண்களின் அழகு என்பது அவர்களின் நிறத்திலோ, தோற்றத்திலோ அல்ல, அவர்களின் தன்னம்பிக்கையில் தான் இருக்கின்றது என்ற கருத்தை விதைக்கும் வகையில், NAV FOUNDATION மற்றும் LADDER COMMERCIAL SOLUTIONS ஏற்பாட்டில் 'கருப்புநிறத்தழகி' என்ற நிகழ்வு நடைபெற உள்ளது. கருப்பு மற்றும் மாநிற பெண்களுக்குத் தென்னிந்திய மணப்பெண் அலங்காரம் செய்யும் போட்டி இந்நிகழ்வில் நடைபெற உள்ளது. 75 நிமிட கால அளவில் சிறப்பான அலங்காரத்துடன் ராம்ப் வாக் செய்யும் கலைஞர்களுக்குப் பரிசுகளும் வழங்கப்பட உள்ளன. இப்போட்டியில் முதல் பரிசாக 25,000 ரூபாயும், இரண்டாவது பரிசாக 15,000 ரூபாயும், மூன்றாவது பரிசாக 10,000 ரூபாயும் வழங்கப்பட உள்ளன. இந்த ரொக்கப்பரிசு தவிர்த்து வெற்றியாளர்களுக்கு ஆச்சரிய பரிசுகளும் வழங்கப்பட உள்ளன. 

 

வருகின்ற மே 1 (ஞாயிற்றுக்கிழமை) அன்று ஒரு உலக சாதனை நிகழ்வாக மயிலாப்பூர் சாந்தோம் மேல்நிலைப்பள்ளி அரங்கில் நடைபெற உள்ள இந்த கருப்புநிறத்தழகி நிகழ்வில், திரை நட்சத்திரங்கள், முக்கியப் பிரமுகர்கள் உள்ளிட்ட ஏராளமான சிறப்பு விருந்தினர்களும் கலந்துகொள்ள உள்ளனர். வெற்றியாளர்கள் மட்டுமின்றி இந்நிகழ்வில் பங்கேற்கும் அனைவருக்கும் உலக சாதனை சான்றிதழும் பதக்கமும் வழங்கப்பட உள்ளன. இந்நிகழ்வில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் 9363324086 மற்றும் 9003192593 ஆகிய எண்களுக்குத் தொடர்புகொண்டு பதிவுசெய்துகொள்ளவும் அறிவிக்கப்பட்டுள்ளது.