Skip to main content

கூட்டணி தர்மத்தை மீறும் குஷ்பு, கார்த்தி மீது நடவடிக்கை எடுக்க ஸ்டாலின் வலியுறுத்துவாரா? -கராத்தே தியாகராஜன் அறிக்கை

Published on 07/05/2020 | Edited on 07/05/2020
 Karate Thiagarajan



சென்னையைத் தவிர்த்து தமிழகத்தில் மதுக்கடைகளை திறந்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. இதனை கண்டிக்கும் வகையில் திமுகவின் கூட்டணி கட்சிகள் போராட்டம் நடத்தும் என அறிவித்திருந்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.  அதன்படி இன்று தமிழகம் முழுவதும் திமுக உள்ளிட்ட அதன் கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் நிர்வாகிகளும் கறுப்பு சட்டை அணிந்து, தங்களின்  வீடுகளுக்கு முன்பு நின்று கொண்டு மதுக்கடைகள் திறப்புக்கும் அதனை அனுமதித்த எடப்பாடிக்கும் எதிரான கண்டன முழக்கங்களை எழுப்பினர்.    

                   

 

தமிழகம் முழுவதும் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தின் மகனும், சிவகங்கை தொகுதியின் காங்கிரஸ் எம்.பி.யுமான கார்த்தி சிதம்ரம் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், மதுக்கடை திறப்புக்கு ஆதரவான கருத்தை பதிவு செய்திருக்கிறார். கார்த்தி சிதம்பரத்தின் இந்த கருத்து ஆட்சியாளர்களுக்கும் அதிமுகவினருக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 
                  

அதே சமயம், கார்த்தி சிதம்பரத்தை மையப்படுத்தி அதிரடி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார் ப.சிதம்பரத்தின் தீவிர ஆதரவாளரான கராத்தே தியாகராஜன். அவரது அறிக்கையில், ’’ மதுக்கடைகள் திறப்புக்கு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட தோழமை கட்சிகள் கண்டித்துள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் தோழமை கட்சிகள் கறுப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம் நடத்தியுள்ளனர். 

 

karthik chidambaram


                

ஆனால், தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக விரைவில் வரவிருக்கிறார் என பேசப்படும் கார்த்தி சிதம்பரம், மதுவிலக்கு உலகளவில் தோல்வியடைந்துள்ளது. தமிழகத்தில் மது கடைகளை மூடியிருக்கக் கூடாது. மது கடைகளை சில மணி நேரம் திறந்து வைத்திருக்க வேண்டும். கூட்ட நெரிசலை தவிர்க்க ஆன் லைனில் மது விற்பனை செய்ய வேண்டும் என தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். 

 

  Kushboo


                  

சில தினங்களுக்கு முன்பு அமைச்சர் கடம்பூர் ராஜுவை கோட்டையில் சந்தித்து மனு கொடுத்துவிட்டு வெளியே வந்த  காங்கிரசின் அகில இந்திய செய்தி தொடர்பாளரான நடிகை குஷ்பு, கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சிறப்பாக எடுத்து வருகிறார் என பாராட்டு தெரிவித்தார்.    
                    

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக சத்யமூர்த்தி பவனில் நடந்த காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட தலைவர் என்கிற முறையில் சில கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்தேன். இதனை விரும்பாத திமுக தலைவர் ஸ்டாலின், காங்கிரஸ் கட்சியை நிர்பந்தப்படுத்தி என்னை கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்குவதற்கு வலியுறுத்தினார். இதனை தமிழக காங்கிரஸ்  தலைவர் கே.எஸ்.அழகிரியே சொல்லியிருக்கிறார். 
                      
 

ுப

அந்த வகையில், கூட்டணி தர்மத்துக்கு எதிராக எடப்பாடி அரசை பாராட்டிய குஷ்பு மீதும்,  எடப்பாடி அரசின் மது கடைகள் திறப்புக்கு ஆதரவாக கருத்துக்களை பதிவு செய்துள்ள கார்த்தி சிதம்பரம் மீதும் நடவடிக்கை எடுக்க ஸ்டாலின் வலியுறுத்துவரா ? என் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது போல இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க முகுல்வாஸ்னிக் மற்றும் கே.சி. வேணுகோபாலுக்கு  கே.எஸ்.அழகிரி கடிதம் எழுதுவாரா ? ‘’ என காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார் கராத்தே தியாகராஜன்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

'எந்த முகத்தை வைத்துக்கொண்டு வருகிறார் மோடி' - முதல்வர் மு.க.ஸ்டாலின் பரப்புரை

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
'Which face is Modi coming with'- CM Stalin's lobbying

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் மதுரையின் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசன், சிவகங்கை காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திக் சிதம்பரம் ஆகியோரை ஆதரித்து மதுரை ரிங் ரோடு பகுதியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். கூட்டத்தில் முதல்வர் பேசுகையில், ''சு.வெங்கடேசனையும், கார்த்தி சிதம்பரத்தையும் மீண்டும் இரண்டாவது முறையாக அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க தயாராகி விட்டீர்களா? நீங்கள் வாக்களிப்பது மட்டுமல்ல ஸ்டாலினின் தூதுவனாக உங்கள் பகுதியில் இருக்கக்கூடிய மக்களிடையே இந்தியா கூட்டணிக்கு வாக்கு கேட்க வேண்டும். தமிழ் மக்கள் மீது உண்மையான பாசம் கொண்டவராக இந்தியா கூட்டணியின் பிரதமர் ஆட்சி செய்வார்.

இன்னும் ஒரே வரியில் சொன்னால் இப்பொழுது இருக்கக்கூடிய பிரதமர் மாதிரி நிச்சயம் இருக்க மாட்டார். பத்தாண்டு காலமாக தமிழ்நாட்டுக்கு எந்தச் சிறப்பு திட்டத்தையும் செய்து கொடுக்காத பிரதமர் மோடி இப்பொழுது வாக்கு கேட்டு தமிழ்நாட்டுக்கு வந்திருக்கிறார். தமிழ்நாட்டுக்கு சிறப்பு திட்டங்களை செய்துவிட்டு வந்திருக்கிறாரா? இல்லை. பக்கத்து மாவட்டங்களில் வெள்ளத்தால் தவிச்சாங்களே அவர்களுக்கு உதவி செய்துவிட்டு வந்தாரா? இல்லை. எந்த முகத்தோடு மோடி தமிழ்நாட்டுக்கு வருகிறார். இவர் தமிழ்நாட்டை மட்டும் இப்படி வஞ்சிக்கவில்லை. எதிர்க்கட்சி ஆளுகின்ற எல்லா மாநிலங்களையும் வஞ்சிக்கிறார்.

பக்கத்து மாநிலம் கேரளாவில் மக்கள் நலத்திட்டங்களுக்கு கடன் வாங்கக்கூட உச்சநீதிமன்றத்திற்கு போகின்ற நிலையை உருவாக்கி இருக்கிறார். மோடி கர்நாடகா வறட்சி நிவாரணம் கேட்டு உச்ச நீதிமன்ற கதவுகளை தட்டி இருக்கிறது. அது மட்டுமல்ல அந்த ரெண்டு மாநில முதலமைச்சர்களும் டெல்லி சாலையில் போராடுகின்ற அவலநிலையை உருவாக்கி இருக்கிறார் பிரதமர். மேற்கு வங்கத்திற்கும் இதேநிலைமைதான். மகாராஷ்டிராவில் என்ன நடக்கிறது குதிரை பேரம் நடத்தி, எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சியைக் கலைத்தார். ஆளுங்கட்சியை உடைத்து இப்பொழுது அந்த மாநிலத்தையும் நாசமாக்கி விட்டார்கள். அடுத்து ஜார்க்கண்ட் மாநிலத்தில் பழங்குடியின முதலமைச்சரை கைது செய்துள்ளார். டெல்லி, பஞ்சாபிலும்  ஆம் ஆத்மி கட்சிக்கு ஆளுநர்களை வைத்து தொல்லை கொடுத்தார்கள். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்துள்ளார்கள். எதிர்க்கட்சி ஆளுகின்ற மாநிலங்களில் மட்டும் இ.டி, ஐ.டி, சிபிஐ, மற்றும் கவர்னர்களை வைத்து தொல்லை கொடுப்பார். இதுதான் மோடி இந்தியா'' என்றார்.

Next Story

“கையெழுத்து போடுங்கள் என்றால் போடுவேன்” - வெளிப்படையாகப் பேசிய குஷ்பு

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
kushbu sundar about aranmanai 4

2024 ஆம் ஆண்டு நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் தேதி 7 கட்டங்களாக நடைபெறுகிறது. ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 அன்று நடைபெறவுள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி வருகின்றன. இதனால் தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தங்கள் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

அந்த வகையில் வேலூர் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் புதிய நீதிக் கட்சியின் நிறுவனத் தலைவர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து நடிகையும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான பா.ஜ.க.வை சார்ந்த குஷ்பு, வேலூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்பொழுது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இயக்குநர் சி.சுந்தர் இயக்கத்தில் வெளியாகவுள்ள அரண்மனை 4 திரைப்படத்தை பற்றிப் பேசினார். அவர் பேசியதாவது, “நாங்கள் அரண்மனை 4 பார்த்து விட்டோம். படம் பிரமாதமாக வந்துள்ளது. இதுவரையில் வந்த அரண்மனை படங்களை விட இது வித்தியாசமானதாக இருக்கும். நிறைய உணர்வுப்பூர்வமான காட்சிகள் மற்றும் கமர்சியல் வேல்யூ முழுவதும் ஆக உள்ளது. யோகி பாபு உள்ளிட்ட பல நடிகர்கள் இடம் சிறப்பாக நடித்துள்ளனர்” என்றார்.  

அவரிடம், அரண்மனை திரைப்படம் சீரிஸ் இன்னும் தொடர்ச்சியாக சென்று கொண்டிருக்குமா, எப்போதுதான் அது முடியும் என்ற கேள்வி கேட்கப்பட்ட நிலையில், “அதை நான் முடிவு செய்ய முடியாது. இயக்குநர், எழுத்தாளர் தான் முடிவு செய்வார்கள். இது தான் கதை. கையெழுத்து போடுங்கள் என்றால் போடுவேன் அவ்வளவுதான், எல்லாமே இயக்குநர் தான் முடிவு செய்வார் நான் அல்ல” என பதிலளித்தார். 

அவ்னி சினிமேக்ஸ் சார்பில் குஷ்பு மற்றும் பென்ஸ் மீடியா சார்பில் அருண்குமார் தயாரிப்பில், சுந்தர் சி நடித்துள்ள படம் அரண்மனை 4. இதில் தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா உட்பட பல நடிகர்கள் நடித்துள்ளனர். அரண்மனை பட வரிசையில் நான்காவது படமாக இப்படம் உருவாகியுள்ளது. விரைவில் இப்படம் திரைக்கு வரவுள்ளது. ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. சமீபத்தில் ட்ரைலர் வெளியாகியிருந்தது.