Skip to main content

கர்நாடகாவின் ஹீரோ சித்தராமய்யாவா?

Published on 08/03/2018 | Edited on 08/03/2018

கர்நாடகா தேர்தல் நெருங்குகிறது. இன்னும் மூன்று மாதங்கள்தான் இருக்கின்றன. ஆனால், பாஜகவோ உள்ளுக்குள் பதற்றத்தை மறைத்துக்கொண்டு வீர வசனம் பேசிக்கொண்டிருக்கிறது.

 

கர்நாடகத்தைக் கைப்பற்ற பா.ஜ.க. பலவிதமான முயற்சிகளை கையாளுகிறது. ஆனால், திராவிட மண் என்பதால் காவி அரசியல் அந்த மண்ணோடு ஒட்ட மறுக்கிறது. பா.ஜ.க. எடுக்கும் மதவாத ஆயுதங்கள் அனைத்தையும் காங்கிரஸ் முதல்வர் சித்தராமய்யா முறித்துப் போடுகிறார்.

 

மத்தியில் பா.ஜ.க. ஆட்சியமைத்த 1998 ஆம் ஆண்டுக்குப் பிறகுதான் கர்நாடகத்தில் அந்தக் கட்சி காலூன்றத் தொடங்கியது. காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதளம் கட்சிகளில் இருந்த அதிருப்தியாளர்கள்தான் பா.ஜ.க.வில் சேர்ந்தார்கள்.

 

2004 சட்டமன்றத் தேர்தலில் கர்நாடகாவில் எந்தக் கட்சிக்கும் ஆட்சியமைக்க போதுமான பெரும்பான்மை கிடைக்கவில்லை. பா.ஜ.க. 79 இடங்களைப் பெற்று முதல் கட்சியாக இருந்தது. ஆனாலும், காங்கிரஸும் மதசார்பற்ற ஜனதாதளமும் உடன்பாடு செய்துகொண்டு கூட்டணி அரசு அமைத்தன. காங்கிரஸைச் சேர்ந்த தரம்சிங் முதல்வராகவும், மதசார்பற்ற ஜனதாதளத்தைச் சேர்ந்த சித்தராமய்யா துணை முதல்வராகவும் பொறுப்பேற்றனர்.

 

Siddaramaiah

 

ஆனால், இரண்டே ஆண்டுகளில் சித்தராமய்யா மதசார்பற்ற ஜனதாதளத்திலிருந்து நீக்கப்பட்டார். இதற்கு காரணம் பா.ஜ.க.தான். அதாவது, காங்கிரஸிடமிருந்து விலகி வந்தால் முதல்வர் பொறுப்பு தர சம்மதம் என்று தேவேகவுடா மகன் குமாரசாமிக்கு உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்தே, தனது தந்தையின் பேச்சையும் மீறி பா.ஜ.க. துணையுடன் முதல்வரானார் குமாரசாமி. முதலில் தனிக்கட்சி தொடங்க நினைத்த சித்தராமய்யா, 2006 கடைசியில் சோனியா முன்னிலையில் ஏராளமான ஆதரவாளர்களுடன் காங்கிரஸில் சேர்ந்தார். குருபா கவுடா வகுப்பைச் சேர்ந்த சித்தராமய்யா காங்கிரஸின் பலத்தை அதிகரிக்க உதவியாக இருந்தார்.

 

அவரையும் பா.ஜ.க. சும்மா விட்டுவைக்கவில்லை. இரண்டே ஆண்டுகளில் குமாரசாமியை கவிழ்த்தது பா.ஜ.க. இதையடுத்து 33 நாட்கள் ஜனாதிபதி ஆட்சி அமலில் இருந்தது. இந்த இடைப்பட்ட நாளில் கட்சித்தாவலை ஊக்குவித்த பா.ஜ.க., எடியூரப்பா தலைமையில் ஆட்சியமைத்தது. ஆனால், பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் 7 நாட்களில் எடியூரப்பா கவிழ்ந்தார்.

 

அதைத்தொடர்ந்து அடுத்த தேர்தல் வரை ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இருந்தாலும் 2008 சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. 110 இடங்களைப் பெற்றது. ஆறு சுயேச்சைகளின் ஆதரவோடு எடியூரப்பா முதல்வரானார். லிங்காயத் வகுப்பைச் சேர்ந்த எடியூரப்பாவுக்கு வடக்கு கர்நாடகத்தில் அதிக ஆதரவு இருந்தது. ஆனால், மூன்றே ஆண்டுகளில் இவர் மீது ஊழல் புகார் சுமத்தப்பட்டது. அதனால் அவர் பதவி விலகினார். உடனே கர்நாடக ஜனதாக்கட்சி என்ற தனிக்கட்சியை தொடங்கினார். அவருக்குப் பதிலாக சதானந்த கவுடா முதல்வரானார். ஆனால், அவரால் சமாளிக்க முடியவில்லை. ஒரு ஆண்டு முடிவதற்குள் ஜெகதீஷ் ஷெட்டர் என்பவரை முதல்வராக்கியது பா.ஜ.க. மெஜாரிட்டி கிடைத்தும் 5 ஆண்டுகளில் மூன்று முதல்வர்களை மாற்றியது பா.ஜ.க. என்பதுதான் வரலாறு. இதற்கு முக்கிய காரணம் லிங்காயத்துக்களையும், கவுடாக்களையும் ஏமாற்றி, அவர்கள் ஆதரவையும் பெற்று, பிராமணர்கள் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கம்தான் என்று கூறப்பட்டது.

 

இந்நிலையில்தான் 2013 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்று, சித்தராமய்யா முதல்வரானார். கன்னட மொழியைக் கட்டாயமாக்கினார். மூடநம்பிக்கைக்கு எதிரான சட்டத்தை நிறைவேற்றினார். இதையடுத்து, சித்தராமய்யா ஒரு நாத்திகர் என்று பிரச்சாரம் செய்யப்பட்டது. உடனே, இதை மறுத்த அவர், தன்னை மூட நம்பிக்கைகளுக்கு எதிரானவன் என்றும், அறிவியல் உண்மைகளை மட்டுமே ஏற்பவன் என்றும் தெளிவுபடுத்தினார்.

 

மதரீதியாகவும், மொழிரீதியாகவும் பா.ஜ.க. மேற்கொண்ட அனைத்து முயற்சிகளையும் சித்தராமய்யா தனக்குச் சாதகமாக மாற்றிக்கொண்டார். கர்நாடகாவை திராவிட பூமி என்று பிரகடனம் செய்தார். இந்திக்கு வேலை இல்லை என்றார். தங்களை இந்துக்கள் இல்லை என்றும் லிங்காயத் என்ற மதத்தினர் என்றும் கூறி மாநாடு நடத்திய லிங்காயத்துக்களின் மாநாட்டை ஆதரித்தார்.

 

வடக்கு கர்நாடகாவில் பெரும்பான்மையாக உள்ள லிங்காயத்துக்களை தனது பக்கம் திருப்புவதில் அவர் வெற்றிபெற்றார். இது எடியூரப்பாவுக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. அத்துடன், மகதாயி நதி நீரைப் பங்கிடுவதற்கான பிரச்சனையிலும் எடியூரப்பாவுக்கு மிகப்பெரிய அடி கிடைத்தது. பா.ஜ.க. ஆளும் கோவா மாநில முதல்வர், வடக்கு கர்நாடகா மக்களின் குடிநீர் தேவைக்கான திட்டத்துக்குக்கூட உதவவில்லை. இது பா.ஜ.க.வின் முகத்திரையை கிழித்துவிட்டது.

 

மொத்தத்தில், சித்தராமய்யாவுக்கு சொந்த சமூகமான குருபா கவுடாக்களிடம் முழுமையான ஆதரவு இருக்கிறது. அதுபோக, ஒக்கலிக்கர்களின் வாக்குகளும், லிங்காயத்துகளின் வாக்குகளும் கணிசமாக பிரிந்து காங்கிரஸுக்கு கிடைக்கும் நிலை உள்ளது.

 

‘நடைபெறவிருக்கும் கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸுக்கு வெற்றிவாய்ப்பு உறுதியாகி இருக்கிறது’ என்கிறார் சித்தராமய்யா. பா.ஜ.க.வில் எடியூரப்பாவுக்கு முக்கியத்துவம் கொடுப்பதுபோல கொடுத்தாலும், அந்தக் கட்சியில் இருக்கிற ஆனந்தகுமார் உள்ளிட்ட பார்ப்பன தலைவர்கள் எடியூரப்பா முக்கியத்துவம் பெறுவதை ஏற்கமாட்டார்கள் என்று கூறப்படுகிறது. எடியூரப்பாவுக்கு செல்வாக்கான வடக்கு மாவட்டங்களின் தண்ணீர் பிரச்சனையைக்கூட தீர்த்து வைக்க மறுப்பதன்மூலம் இது தெளிவாகிறது என்கிறார்கள்.

 

Siddaramaiah

 

ஒருவேளை எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால் காங்கிரஸுக்கு மதசார்பற்ற ஜனதாதளம் ஆதரவளிக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால், சித்தராமய்யா முதல்வராக காங்கிரஸ் ஒப்புக்கொள்ளாது என்றும் சொல்கிறார்கள். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால், மீண்டும் அரசியல் குழப்பத்துக்கே வழிவகுக்கும் என்று கூறப்படுகிறது.

 

ஆனால், கர்நாடகத்தி்ன் தற்போதைய அரசியல் சூழல், சித்தராமய்யாவை மிகப்பெரிய ஹீரோ அளவுக்கு உயர்த்தியிருப்பதை உறுதி செய்கிறது. அவருடைய செல்வாக்கைச் சிதைக்கவே, தற்போது, சசிகலாவுக்கு சிறையில் சிறப்பு வசதி செய்துகொடுக்க சித்தராமய்யா ஏற்பாடு செய்தார் என்ற குற்றச்சாட்டு சுமத்தப்படுகிறது. அந்தக் குற்றச்சாட்டையும் சித்தராமய்யா எளிதாக கையாள்கிறார் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.

 

கர்நாடகாவின் தேர்தல் முடிவும் அதைத் தொடர்ந்து நடைபெறவுள்ள ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநில சட்டமன்றத் தேர்தல்களும் காங்கிரஸுக்கு மிகவும் முக்கியம் என்று ராகுல் காந்தி உணர்ந்திருக்கிறார். அந்த மாநிலங்களில் கட்சிக்குள் ஒற்றுமையை மிகவும் வலியுறுத்தி வருகிறார் என்கிறார்கள்.

 

பார்க்கலாம், கர்நாடகா தேர்தல் நெருங்கும்போது நிலைமை எப்படி மாறுகிறது என்று தெரியவரும்.