Advertisment

கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தல்; அனல் பறக்கும் கள நிலவரம்!

s

Advertisment

224 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் வரும் மே 10 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கடந்த ஒரு வருட காலமாகவே கர்நாடகா அரசியல் களம் சூடுபிடித்திருந்த நிலையில், ஆட்சியை தக்கவைக்க பா.ஜ.க.வும், ஆட்சியமைக்க காங்கிரஸ் கட்சியும் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளமும் தேர்தல் ஆட்டத்தில் களமிறங்கியுள்ளது. தேசிய கட்சியாக உருவெடுத்து வரும் ஆம் ஆத்மியும் தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்து அதிரடி காட்டி வருகிறது.

கர்நாடகாவும் - பா.ஜ.க.வும்

Karnataka election story

தென்னிந்தியாவில் பா.ஜ.க. நேரடியாக ஆட்சியில் இருக்கும் ஒரே மாநிலம் கர்நாடகாதான். இதில் 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பா.ஜ.க. தனிப்பெரும்பான்மையில் ஆட்சியமைத்ததாகக் கருதப்பட்டாலும் 110 இடங்களில் வென்ற பா.ஜ.க. 6 சுயேட்சைகளின் ஆதரவுடனே ஆட்சியமைத்தது. கடந்த 2018ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில், பா.ஜ.க. அதிக இடங்களைக் கைப்பற்றியதன் அடிப்படையில் ஆட்சியமைப்பதற்கு பா.ஜ.க.விற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. எடியூரப்பா முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டார். பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு, கர்நாடக ஆளுநர் வஜுபாய் வாலா 15 நாள் அவகாசம் வழங்கியிருந்த நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து உடனடியாக நடைபெற்ற வாக்கெடுப்பில் எடியூரப்பாவால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை. பொறுப்பேற்ற 3 நாளில் ராஜினாமா செய்தார் எடியூரப்பா. அதனையடுத்து காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் இணைந்து ஆட்சியமைத்தன. இருப்பினும், குமாரசாமி தலைமையிலான அரசு 14 மாதத்தில் கவிழ்க்கப்பட்டது. பசவராஜ் பொம்மை தலைமையில்பா.ஜ.க. ஆட்சியமைத்தது.

தேர்தல் களம் என்ன சொல்கிறது?

Advertisment

Karnataka election story

ஏ.பி.பி.-சி.ஓட்டர் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் 224 தொகுதிகள் கொண்ட கர்நாடகாவில் காங்கிரஸ் 115 முதல் 127 இடங்கள் வரை கைப்பற்றும் எனவும், ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க. 68-80 இடங்களைக் கைப்பற்றும் எனவும், கடந்த தேர்தலில் 37 இடங்களில் வெற்றி பெற்ற மதச்சார்பற்ற ஜனதா தளம் 23 முதல் 35 இடங்களில் வெற்றி பெறும் எனவும் கூறப்பட்டுள்ளது. பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக அமைந்துள்ள நிலையில், காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் முதற்கட்ட வேட்பாளர்களை அறிவித்துள்ளன. பா.ஜ.க.வின் வேட்பாளர்கள் பட்டியல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கர்நாடகா தேர்தல் களத்தில் காங்கிரஸ் - பா.ஜ.க. இடையே நேரடி போட்டியே நிலவி வருகிறது.

காங்கிரஸ் - பா.ஜ.க. முதல்வர் வேட்பாளர்கள் யார்?

Karnataka election story

இருபெரும் கட்சிகளான காங்கிரஸ் - பா.ஜ.க. தங்களது முதல்வர் வேட்பாளர்களை இதுவரை வெளிப்படையாக அறிவிக்கவில்லை. பா.ஜ.க.வில் தற்போது முதல்வராக இருக்கும் பசவராஜ் பொம்மையை சுற்றி பல சர்ச்சைகளும், ஊழல் குற்றச்சாட்டுகளும் இருக்கின்றன. குறிப்பாக அரசு டெண்டருக்கு 40% வரை கமிஷன் பெறப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. காங்கிரஸ் சார்பில் பே-சி.எம். (PayCM) என்று முதல்வர் படத்துடன் கூடிய க்யூ.ஆர் (QR Code) போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. கர்நாடகாவில் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பேசு பொருளானது. கல்வி நிலையத்திற்கு வந்த இஸ்லாமிய மாணவியிடம் ஹிந்து அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் அச்சுறுத்தும் விதமாக நடந்து கொண்டது தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. “இந்தியாவில் சிறுபான்மையினராக இருக்கும் இஸ்லாமியர்கள் ஒடுக்கப்படுகிறார்கள்; அவர்களது உரிமைகள் நசுக்கப்படுகிறது” என்று எதிர்க்கட்சிகள் கண்டனக் குரல்களை எழுப்பின.

கர்நாடகாவில் இஸ்லாமியர்களுக்கான 2B பிரிவின் கீழ் 4% தனி இட ஒதுக்கீட்டை ரத்து செய்து, கர்நாடக அரசியலைத் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும் லிங்காயத் மற்றும் ஒக்கலிகா சமூகத்திற்கு சமமாகப் பிரித்துக் கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்கிற்காக கர்நாடகாவின் மொத்த மக்கள்தொகையில் 13% இருக்கும் இஸ்லாமிய மக்களின் உரிமையைப் பறித்திருக்கிறது கர்நாடக பா.ஜ.க. அரசு என்று எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியது. இத்தனை சர்ச்சைகளுக்கு மத்தியில் பசவராஜ் பொம்மையை முதல்வர் வேட்பாளராக அறிவித்தால் அது பா.ஜ.க.விற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்றே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். முன்னாள் முதல்வர் எடியூரப்பாவும் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதனால், முதல்வர் வேட்பாளரை அறிவிக்காமலேயே தேர்தலை சந்திக்க பா.ஜ.க. திட்டமிட்டுள்ளதாகவே கூறப்படுகிறது.

Karnataka election story

தேசிய அளவில் காங்கிரஸ் கட்சிக்கு சற்று சுணக்கம் இருந்தாலும், கர்நாடக காங்கிரஸ் பலமாகவே இருந்து வருகிறது. காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளர் யார்? என்ற அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகாத சூழலில், அம்மாநில முன்னாள் முதல்வர் சித்தராமையாவும், அம்மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் டி.கே.சிவக்குமாரும் அனல் கக்கும் தேர்தல் களத்தில் தீவிரமாகச் சுழன்று கொண்டிருக்கின்றனர். அனைத்து தரப்பு மக்களிடமும் செல்வாக்கு மிக்கவராக விளங்கும் சித்தராமையா, தேவராஜ் அர்ஸ்க்குப் பிறகு கர்நாடகாவில் 5 ஆண்டுகள் ஆட்சியை நிறைவு செய்த முதலமைச்சர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். “இதுவே எனக்கு கடைசி தேர்தல்; ஆனால், அரசியலில் இருந்து ஓய்வுபெற மாட்டேன்” என்று அவர் தெரிவித்திருக்கிறார். இதே கருத்தை அவர்2018 தேர்தலின் போதும் கூறியிருந்தார்.

காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளராக சித்தராமையா அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகச் சொல்லப்பட்டாலும், அதற்கான வாய்ப்புகள் குறைந்தே இருக்கிறது. ஏனென்றால், தற்போது கர்நாடக காங்கிரஸ் தலைவராக இருக்கும் டி.கே.சிவக்குமாரை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தவே அதிக வாய்ப்புகள் இருப்பதாகத்தகவல்கள் தெரிவிக்கின்றன. காங்கிரஸ் கட்சி சந்தித்த சில நெருக்கடிகளை சமாளிக்க சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு மிகவும் பக்கபலமாக இருந்தார் டி.கே.சிவக்குமார். 2018 தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழலில் பா.ஜ.க. ஆட்சியமைப்பதை தடுக்கும் பொறுப்பு இவருக்கு வழங்கப்பட்டது. ஆனால், பா.ஜ.க.வின் சூழ்ச்சியால் டி.கே.சிவக்குமாரின் வியூகம் எதிர்பார்த்த அளவிற்கு கைகொடுக்கவில்லை. எனினும் அசராத டி.கே.சிவக்குமார், ஆதரவு குறைவாக இருக்கும் பகுதியில் மக்களை சந்தித்து உரையாடுவது போன்ற பல அதிரடி வியூகங்களை வகுத்து காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்பை பிரகாசமாக்கியுள்ளார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை தேசியக் கொடியுடன் ராகுல் காந்தி மேற்கொண்ட இந்திய ஒற்றுமைப் பயணம் கர்நாடகாவிற்குள் நுழைந்த போது தேசியக் கொடியை டி.கே.சிவக்குமாரிடன் வழங்கினார் ராகுல். 21 நாட்கள் நடைப்பயணத்தில் மீண்டும் தனது பலத்தை நிரூபித்த டி.கே.சிவக்குமார், காங்கிரஸ் மேலிடத்திற்கு ஒரு நம்பிக்கை வெளிச்சமாகவே விளங்குகிறார்.

கர்நாடக தேர்தல் - தேசிய அரசியல்

Karnataka election story

2024ல் மக்களவைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தனது பலத்தை நிரூபிக்கவும், தென்னிந்தியாவில் நேரடியாக தங்களது வசம் இருக்கும் ஒரே மாநிலமான கர்நாடகாவை தக்க வைக்கும் நோக்கிலும் பா.ஜ.க. தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. அதே வேளையில், ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமைப் பயணத்திற்குப் பிறகு நடந்த 3 மாநிலத்தேர்தல்களில் காங்கிரஸ் தோல்வியைத்தழுவியிருந்தாலும், ராகுல் காந்தியின் எம்.பி. பொறுப்பு பறிக்கப்பட்ட பிறகு நடைபெறும் முதல் சட்டப்பேரவைத்தேர்தல் இது என்பதால் பா.ஜ.க.வை வீழ்த்தியாக வேண்டும் என்ற முடிவோடு காங்கிரஸ் சுழன்று கொண்டு இருக்கிறது. காங்கிரஸ் ஆட்சியமைக்குமா? பா.ஜ.க. ஆட்சியமைக்குமா? அல்லது தொங்கு சட்டசபை அமையுமா? என்பதற்கெல்லாம் விடை மே 13 ஆம் தேதி கிடைத்துவிடும். இத்தேர்தலில் காங்கிரஸ் வென்றுவிட்டால், 2024 மக்களவைத்தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்துவதற்கு காங்கிரஸுக்கு ஒரு உந்து சக்தியாக இருக்கும் என அரசியல் விமர்சகர்கள் சொல்லி வருகின்றனர்.

- தி.மு. அபுதாகிர்

congress karnataka
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe