Skip to main content

மார்க்ஸியமா மறைந்தது? - தோழர் நல்லக்கண்ணு

Marxism Nallakannu

கார்ல் மார்க்ஸின் 200வது பிறந்தநாளின்போது, நக்கீரனில் வெளிவந்த தோழர் நல்லக்கண்ணுவின்  கட்டுரை...

 

கார்ல் மார்க்ஸ் பிறந்து 200வது ஆண்டு துவங்குகிறது. அவர் வாழ்ந்தது 65 ஆண்டுகள்தான். ஆனால் இந்த 200வது ஆண்டிலும் கூட அவர் வழிகாட்டியாகத்தான் இருக்கிறார். அவரின் கொள்கைகள் நிலைத்து நிற்கின்றன. குறிப்பாக, 2001ஆம் ஆண்டில் பி.பி.சி. ஒரு ஆய்வறிக்கை தயார் செய்தது. இந்த ஆயிரம் ஆண்டுகளில் அறிவியல் துறையிலும், ஆய்வுத்துறையிலும் மனித சமுதாயத்திற்கு சிறந்த சேவை செய்தவர்களைக் கணக்கெடுத்தார்கள். அப்போது மார்க்ஸ் பற்றி 'THE GREATER THINKER OF THE HUMAN SOCIETY' (மனித குலத்தின் மகத்தான சிந்தனையாளர்) என்று குறிப்பிட்டனர். இந்த 200 ஆண்டு சகாப்தத்திலும் அது இன்றும் உண்மையாக உள்ளது. அதாவது 2001ல் சிறந்த அறிஞர்களைக் கொண்டு ஆய்வு செய்து வெளியான அந்த அறிக்கை இந்த 2018லும் உண்மையாக இருக்கிறது. 
 

1990ம் ஆண்டுகளில் சோவியத் யூனியன் வீழ்ச்சியடைந்த பிறகு மார்க்ஸியம், கம்யூனிஸம் ஆகியவற்றுக்கு இனி எதிர்காலம் கிடையாது என்று உலக முதலாளிகளும், உலக ஏகாதிபத்திய நாடுகளும் உலகெங்கும் அறிவித்தன. இவற்றுக்குப் பின்தான் பி.பி.சி. ஆய்வறிக்கை 2001ல் தயாரிக்கப்பட்டது. அப்போதும் மார்க்ஸிய கருத்துக்கள்தான் எதிர்காலத்திற்கு வழிகாட்டியாய் இருக்கிறது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் 'மார்க்ஸிய கருத்துக்கள்தான் சமுதாய மாற்றத்திற்கான அடிப்படைக் கருத்தாய் இருக்கிறது. சுரண்டலற்ற சமுதாயம் ஏற்பட வேண்டும் என்பதை வெறும் கருத்தாக மட்டும் இல்லாமல் அதற்கான செயல்முறையைக் கொண்டது மார்க்சியம்' என்று பி.பி.சி.யின் அறிக்கையிலேயே சொல்லப்பட்டுள்ளது. அது இந்த 2018லும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
 

கம்யூனிஸம் வீழ்ந்துவிட்டது, அழிந்துவிட்டது என்று சொல்லப்பட்ட பின்பும், இப்பொழுதும் சீனாவில் கம்யூனிஸ்ட் ஆட்சி நடக்கிறது, கியூபாவிலும் ஆட்சி நடக்கிறது, நேபாளத்திலும் பிளவுபட்ட கம்யூனிஸ்ட் கட்சிகள் சேர்ந்து ஆட்சி நடக்கிறது. நேபாளம் இந்தியாவைப் போன்றே பல பிரிவினைகள் உள்ள நாடு. அங்கு மன்னராட்சி ஒழிக்கப்பட்டு கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆட்சி அமைக்கப்பட்டது. ஆக இவையெல்லாம் மார்க்ஸின் கருத்துக்களுக்கு இன்றும் வலு இருக்கிறது, எதிர்காலத்திலும் அது நீடிக்கும் என்பதை காட்டக்கூடியதாக இருக்கிறது.

 

communism

 


1990ம் ஆண்டு உலகமயமாக்கல் கொள்கை கொண்டுவரப்பட்டது. தனியார்மயமாக்கல், தாராளமயமாக்கல், உலகமயமாக்கல் என்ற கொள்கையை வைத்து இனி எதிர்காலம் முதலாளித்துவத்திற்குதான் என்று சொல்லி வந்தனர். ஆனால், இன்று அந்த உலகமயமாக்கல் கொள்கையே உலகளவில் முதலாளித்துவத்திற்கு நெருக்கடியைத் தந்திருக்கிறது. இப்போதுள்ள நெருக்கடி என்பது அவர்களுக்குள்ளானதல்ல. ஒட்டுமொத்த முதலாளித்துவ சக்திக்கே ஏற்பட்டுள்ள நெருக்கடியாகும். கார்ப்ரேட் ஆதிக்கம் உலகம் முழுவதும் தலையிட்டு ஒரு நாட்டுக்கும், இன்னொரு நாட்டிற்கும் கலகத்தை உண்டாக்கி, அமைதியற்ற சூழ்நிலையை உண்டாக்கும் நிலைதான் இன்றைக்கு இருக்கிறது. கார்ப்ரேட் ஆதிக்கம் இன்று சீரழிந்து வருகிறது என்பதும் உறுதியாகத் தெரிகிறது. கார்ப்ரேட் ஆதிக்கம் அழிந்து முதலாளித்துவம் ஒழிய மார்க்ஸியமும், மார்க்ஸிய கருத்துக்களும் உதவும். ஏனென்றால் மார்க்ஸியம் ஒரு விருப்பக் கருத்தோ, அனுமானக் கருத்தோ இல்லை. அது மாற்றத்திற்கான, ஆய்வின் அடிப்படையிலான ஒரு முற்போக்கான கருத்து, கோட்பாடு. வெறும் மூலதனம் மட்டுமே உற்பத்தியைப் பெருக்காது. மனித உழைப்புதான் உற்பத்தியை பெருக்குகிறது. உபரி மதிப்புதான் இலாபத்திற்கு அடிப்படை என்று SURPLUS VALUE என்ற தத்துவத்தை உருவாக்கினார்.

 

இந்தியாவை பற்றி மார்க்ஸ்

'தி நியூயார்க் ஹெரால்டு ட்ரிபியூன்' (THE NEWYORK HERALD TRIBUNE) என்ற பத்திரிகையில் 'பிரிட்டிஷ் ரூல் இன் இந்தியா' (BRITISH RULE IN INDIA) என்ற தலைப்பில் இந்தியாவைப் பற்றியும், ஆசியாவின் மிகப்பெரிய நாடான இந்தியாவைத் தன் வசப்படுத்தியது, இந்தியா போன்ற மற்ற நாடுகளை அடிமைப்படுத்தி அதில் இந்தியர்களை வேலைக்கனுப்பியது போன்றவற்றை எழுதியுள்ளார். 'இந்தியாவில் வறட்சி, தொடர் ஆட்சி மாற்றம், முகலாய படையெடுப்புகள், இப்படி பல மாற்றங்கள் ஏற்பட்டும்கூட அடிப்படை சமூக மாற்றம் ஏற்படவில்லை. ஆக, இந்தியாவின் கட்டமைப்பு அவ்வளவு பிற்பட்ட சமூகக் கட்டமைப்பாக உள்ளது' என்பவை பற்றியெல்லாம் அந்நூலில் எழுதியுள்ளார். 200 வருட பிரிட்டிஷ் ஆட்சி அதற்கு முன் இருந்த கட்டமைப்பையே வலியுறுத்தியது. புதிதாக ஏதும் செய்யவில்லை. பிரிட்டனில் ஏற்பட்ட தொழிற்புரட்சிக்கு முன்பே இங்கு இயற்கை வளங்கள் ஏராளமாக இருந்தது. இங்கு பருத்தி உற்பத்தி அதிகம். இந்தப் பருத்தி உற்பத்தியை வைத்து, அதை நூலாக்கி, சன்னமான ஆடையாக்குவதெல்லாம் இந்தியாவில் மட்டுமே இருந்தது. அதே போல் ஏலம், கிராம்பு போன்ற இயற்கை வளங்கள் இருந்தன. அதேபோல் விஞ்ஞான வளர்ச்சி இல்லாத காலங்களில் “அவுரி சாயம்” என்ற சாயம்தான் பயன்பட்டது. ஆக, ஒரு பஞ்சை நூலாக்கி, வண்ண ஆடையாக்குவதில் இந்தியாதான் முதன்மையாக இருந்தது. பிரிட்டனில்கூட அதை செய்யமுடியவில்லை. அப்படியிருந்த நாட்டை சாதி, சமூக பாகுபாட்டைப் பயன்படுத்திக்கொண்டு, வியாபாரம் செய்ய வந்தவர்கள் ஆட்சியைக் கைப்பற்றிவிட்டனர் என்று சொல்லியிருக்கிறார். 
 

இங்கிருந்த பருத்தியையெல்லாம் பிரிட்டனுக்கு ஏற்றுமதி செய்து நூலாக, ஆடையாக மீண்டும் இங்கு இறக்குமதி செய்தார்கள். அதனால் இங்கிருக்கும் கைத்தறி நெசவாளர்கள் தொழில் நசுக்கப்பட்டது. டாக்கா, காஞ்சிபுரம் பட்டு ஆகியவை அழிக்கப்பட்டது. பிரிட்டிஷ் ஆட்சி அமைக்கப்பட்டவுடன் இங்கிருக்கும் இயற்கை வளங்களெல்லாம் கொள்ளையடிக்கப்பட்டது. அங்கே தொழிற்புரட்சி ஏற்பட்டதைப் பயன்படுத்தி இங்கே இயற்கையாய் வளர்ந்த தொழில்களையெல்லாம் நாசம் செய்தார்கள் என்று மார்க்ஸ் இந்த நூலில் குறிப்பிட்டுள்ளார். இந்தியா நாடல்ல, துணைக்கண்டம். கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவிற்குள் நுழையும்போது பிரிட்டனின் மக்கள்தொகை நான்கு, ஐந்து கோடியிருந்தது. ஆனால் அப்போதே இந்தியாவில் 30 கோடிபேர் இருந்தனர். இதனால் அவர்களுக்கு இந்தியா ஒரு சிறந்த வியாபார இடமாக இருந்தது. இங்கிருக்கும் மக்களையும் சுரண்டியிருக்கிறார்கள், இயற்கை வளங்களையும் சுரண்டியிருக்கிறார்கள் என்று மார்க்ஸ் கூறியிருக்கிறார். மேலும் வளர்ந்த விவசாயமும் அளிக்கப்பட்டது. அவர்களின் வியாபாரத்திற்கும் சுரண்டலுக்கும்தான் அவர்களின் ஆட்சி பயன்பட்டதே தவிர இந்த நாட்டின் வளர்ச்சிக்கு அவர்கள் ஒன்றும் செய்யவில்லை. சர்.ஆர்தர் காட்டன் என்பவர் கங்கை, காவிரி இணைப்பு பற்றியெல்லாம் கூறினார். அதற்காக அவரை பிரிட்டிஷ் அரசாங்கம் திரும்ப அழைத்துக்கொண்டு, அவருக்கு தண்டனையும் அளித்தார்கள். அவர்தான் கொள்ளிடம் கால்வாய் மற்றும் கோதாவரி அணையை கட்டியவர். அதேபோல் முல்லை பெரியாறு அணையைக் கட்டிய பென்னிக்குயிக்கிற்கு நிதியளிக்காமல் எவ்வளவு அலைக்கழித்தார்கள்? இவையெல்லாம் 'பிரிட்டிஷ் ரூல் இன் இந்தியா' கட்டுரையில் மார்க்ஸ் தெளிவுபடுத்தியுள்ளார்.

 

கம்யூனிஸம் - மார்க்ஸ்க்கு முன், மார்க்ஸ்க்கு பின் 

 

marx

 

மார்க்ஸ்க்கு முன்பு கம்யூனிஸத்தின் நோக்கங்களும் விருப்பங்களும் பொதுவானவையாக இருந்தன. எல்லோரும் சேர்ந்து வாழவேண்டும், சமதர்மம் வேண்டும் என்று விருப்பமாக இருந்தது. ஆய்வின் அடிப்படையில் இல்லை. மார்க்ஸ் ஒவ்வொரு இடத்தையும் ஆராய்ந்து தொழில் வளர்ச்சி எங்கு ஏற்பட்டிருக்கிறது, அது யாருக்கு இலாபமாக இருக்கிறது என்று ஆய்வு ரீதியாக பொருள் முதல் வாதத்தை அடிப்படையாகக் கொண்டு எடுத்துவைத்தார். தொழில் முன்னேறுகிறதென்றால் அதற்கு மூலதனம் மட்டும் முக்கியமில்லை, உழைப்புதான் முக்கியம். மனிதன் உழைத்தால்தான் உற்பத்தி செய்ய முடியும் என்பதை வரலாற்று ரீதியாகவும், பொருளியல் ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் ஆய்வு செய்து மார்க்ஸ் கூறியதுதான் மனித குலத்திற்கு நிரந்தர வழிகாட்டியாக இருக்கிறது.

 

கம்யூனிஸம், மார்க்ஸிஸம், லெனினிஸம், மாவோயிஸம்...

அனைத்திற்கும் அடிப்படைப்பார்வை மார்க்ஸிஸம்தான். மார்க்ஸிஸம் என்பது வரலாற்று பொருள்முதல்வாதம், இயங்கியல் பொருள்முதல்வாதம்தான். இது ஏதோ கற்பனையில் செய்தததல்ல, விருப்பத்தினால் விளைந்ததல்ல. எப்படி சமூகம் வளர்ச்சி பெற்றுள்ளது என்பதை வரலாற்று அடிப்படையில் ஆய்வு செய்து, ஒவ்வொன்றிற்கும் எதிர்கருத்துகளை, எதிர்மறை வாதங்களை வைத்து கண்டுபிடித்த பெருமை உண்டு. உலகம் பலதரப்பட்டது, ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு தனித்தன்மை உண்டு. அடிப்படைக்  கருத்து ஒன்றுதான். அதை வைத்துதான் லெனின், ரஷ்யாவில் புரட்சியை ஏற்படுத்தினார். சைனாவில் மாசேதுங் புரட்சியை ஏற்படுத்தினார். ஒவ்வொரு இடத்திற்கும் ஏற்றாற்போல் மாற்றிக்கொண்டனர், என்றாலும் அடிப்படை ஒன்றுதான். மாற்றம் ஒன்றுதான் மாறாதது.
 

இன்றும் இந்தியா போன்ற நாடுகளின் வளர்ச்சிக்கு அவரது தத்துவங்கள் அடிப்படையாக உள்ளது. இன்றைக்கும் அது நிலைக்கிறது. என்றைக்கும் அவரது தத்துவங்கள் வழிகாட்டும். அறிவியல், தொழில்நுட்பம் போன்ற வளர்ச்சிகளை முதலாளித்துவம் எப்படி அழிக்கிறது என்பதைப் பற்றியெல்லாம் மார்க்ஸ் விவரித்துள்ளார். மொத்தத்தில் சமுதாயத்திற்கான, தொடர்ந்து முன்னேறுவதற்கான, முதலாளித்துவத்தின் மூலம் ஆதிக்கம் செலுத்துவதற்கு எதிரான, மானிட வளர்ச்சிக்கான கருத்துகளை ஆய்வுப்பூர்வமாக அறிவித்த பெருமை மார்க்ஸ்க்கு உண்டு. மார்க்ஸியம் என்றும் மறையாது, முதலாளித்துவத்தின் வேடம்தான் கலைகின்றது, மறைகின்றது!