ADVERTISEMENT

டாக்டர் சைமனின் உடல் தோண்டப்படுமா? -கராத்தே தியாகராஜன் பேட்டி

06:46 PM Apr 23, 2020 | rajavel

கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மறைந்த டாக்டர் சைமனின் உடலை அடக்கம் செய்வதில் ஏற்பட்ட சர்ச்சைகள் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. சென்னை, கீழ்ப்பாக்கம் கிறிஸ்துவ கல்லறைத் தோட்டத்தில் டாக்டர் சைமனின் உடலை புதைக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலுள்ள வேலாங்காடு மயானத்தில் முறையான பாதுகாப்புடன் புதைக்கப்பட்டது அவரது உடல்!

ADVERTISEMENT



இந்த நிலையில், "என் கணவரின் உடலை கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் புதைக்கப்பட வேண்டும். இது, என் கணவரின் கடைசி ஆசை" என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு சைமனின் மனைவி வேண்டுகோள் வைத்திருக்கிறார். இதனால், டாக்டரின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு மீண்டும் புதைக்கப்படுமா? என்கிற கேள்வி அரசு மருத்துவத்துறை வட்டாரங்களில் எதிரொலிக்கச் செய்கிறது.

ADVERTISEMENT



அதேசமயம், சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலுள்ள ஒரு மயானத்தில் முறைப்படி புதைக்கப்பட்ட ஒரு உடலை மீண்டும் தோண்டி எடுப்பதில் மாநகராட்சியின் சட்ட விதிகளில் ஏதேனும் சிக்கல் இருக்கிறதா? என்பது குறித்து சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் (பொறுப்பு) கராத்தே தியாகராஜனிடம் பேசிய போது, ‘’கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் தனது கணவரின் உடல் அடக்கம் செய்யப்பட வேண்டும் என டாக்டர் சைமனின் மனைவி தெரிவித்திருக்கிறார். அதேசமயம், கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தின் நிர்வாகமும், சைமனின் உடலை அடக்கம் செய்ய முழு ஒத்துழைப்பு தருவோம் என தற்போது சொல்லியிருக்கிறது.

அதனால் காலதாமதம் இல்லாமல் சைமனின் உடலை அவர் ஆசைப்பட்டபடி, கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்ய தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும். ஏற்கனவே புதைக்கப்பட்ட இடத்திலிருந்து ஒரு உடலை தோண்டி எடுக்க மாநகராட்சி விதிகளில் இடம் இருக்கிறது. அதாவது, சென்னை மாநகராட்சி விதி எண் 325(சி) பிரிவின் படி, மாநகராட்சி ஆணையரின் அனுமதியுடன் ஏற்கனவே புதைக்கப்பட்ட இடத்திலிருந்து சைமனின் உடலை தோண்டி எடுக்கலாம். அதனால் சைமனின் உடலை தோண்டி எடுப்பதில் எந்த சட்டச் சிக்கலும் கிடையாது.

தமிழகத்தை சுனாமி தாக்கியதில் எண்ணற்றவர்கள் உயிரிழந்தனர். அப்போது, சுனாமியால் தாக்கப்பட்ட மாவட்டத்தின் கலெக்டர்களுக்கும், மாநகராட்சி ஆணையருக்கும் அன்றைய தலைமை செயலாளர் அவசர அனுமதி வழங்கினார். அதன்படி, உயிரிழந்தவர்களின் உடல்கள் அனைத்தும் உடற்கூறு ஆய்வு (போஸ்ட்மார்ட்டம்) செய்யப்படாமலே புதைக்கப்பட்டன. அதனால், எந்த சட்டச் சிக்கல்களும் இல்லை. அந்தவகையில், மாநகராட்சி ஆணையரின் அனுமதியுடன் டாக்டர் சைமனின் உடலும் தோண்டி எடுக்கப்பட்டு அவர் ஆசையை நிறைவேற்றும் வகையில் புதைக்க தமிழக அரசும், மாநகராட்சியும் பரிசீலிக்க வேண்டும்.

சென்னையில் பல்வேறு மயானங்களின் பராமரிப்பு மற்றும் இறந்த உடல்களை எரித்தல், புதைத்தல் பணிகளை சிறப்பாக செய்து வருகிறது எம்.எம்.வி. நேசக்கரம் என்கிற அறக்கட்டளை. இதன் தலைவர் வேலுவை தொடர்புகொண்டு நான் பேசிய போது, ’எங்களிடம் அமரர் ஊர்தி, அடக்கம் செய்வதற்கான பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இருக்கிறது. எவ்வித நோய் தொற்றும் பரவாமல் சைமனின் உடலை கீழ்ப்பாக்கம் கொண்டு சென்று நல்லடக்கம் செய்ய தயாராக இருக்கிறோம். மாநகராட்சி அனுமதித்தால் இதனை இலவசமாகவே செய்கிறோம்’ என சொல்கிறார். அதனால், டாக்டர் சைமனின் மனைவி வைத்த கோரிக்கையை ஏற்று அவரது உடல் கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்ய தமிழக முதல்வர் அனுமதியளிப்பது மருத்துவ உலகத்துக்குச் செய்யும் சேவை!‘’ என்று கூறினார்.


Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT