Advertisment

யார் நீ? என் போட்டோ உனக்கு எப்படிக் கெடச்சது? நம்ம சாதிசனத்தைக் காப்பாத்தணும்... காசி வழக்கில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்!

suji

Advertisment

சுஜி என்ற காசி மீது சென்னை பெண் மருத்துவர், ஆரல்வாய் மொழி, கோட்டார், நேசமணி நகர் மற்றும் அழகப்பபுரத்தைச் சேர்ந்த மாணவிகள் நால்வர் என, இதுவரை 5 பெண்கள் பாலியல் புகார் அளித்துள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவிகளில் ஒருவருக்கு வயது 17 என்பதால், காசி மீது போக்சோ உள்ளிட்ட 6 வழக்குகள் பதிவாகியுள்ளன. கஸ்டடி முடிந்து, குண்டர் சட்டமும் பாய்ந்த நிலையில், அவன் நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.

மூன்று நாள் காவல் விசாரணையின் போது, எஸ்.பி. ஸ்ரீநாத் வேகம் காட்டியதும், காக்கிகள் காசியைத் துருவித்துருவிதூங்க விடவில்லையாம். பாத்ரூம் போகணும்... எனச் சொல்லி அனுமதி வாங்கி டாய்லெட் சென்றால், கதவைத் திறக்கவே மாட்டானாம். அங்கேயே குட்டித் தூக்கம் போட்டு விடுவானாம். “ஃப்ரண்ட்ஸ்ல ஒருத்தனையாச்சும் காட்டிக் கொடுடா..’’ என்று அழுத்தம் தந்தபோது, டைசன் ஜினோ பெயரைச் சொல்லி, “என்னோடு பழகிய பெண்களை அவனும் மிரட்டினான்’ என்று கூறியிருக்கிறான்.

தான் எடுத்த ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வைத்து, தன்னிடம் பழகியவர்களை மிரட்டியதால், காசிக்கு ஜினோ மீது ஆத்திரம் ஏற்பட்டு சண்டை போட்டிருக்கிறான். காசி கைது செய்யப்பட்ட மறுநாளே, தன்னிடமிருந்த ஆபாச புகைப்படங்கள் சிலவற்றை சமூக ஊடகங்களில் ஜினோ வெளியிட்டான். “இதுபோல் உன்னுடைய ஆபாச வீடியோக்களையும் வெளியிடுவேன்..’’ என்று டாக்டர் ஒருவருடைய பேரனை மிரட்டியிருக்கிறான். நாகர்கோவிலில் உள்ள பிரபல மருத்துவமனை அந்த டாக்டருக்குச் சொந்தமானது. டாக்டரின் பேரன் காசியின் நட்பு வட்டத்தில் இருந்ததால், பிளாக்மெயில் நோக்கத்தோடு அவனை ஆபாச வீடியோவில் சிக்க வைத்துள்ளனர். இதுகுறித்து, நேசமணி நகர் காவல் நிலையத்தில் ஏற்கனவே புகார் கொடுக்கப்பட்ட நிலையில், கஸ்டடி விசாரணையின் போது காசியும் டைசன் ஜினோவை கை காட்ட, காக்கிகளிடம் அவன் பிடிபட்டுள்ளான்.

Advertisment

suji

19 வயதே ஆன காசியின் கூட்டாளி டைசன் ஜினோ, ஒருநாள் காவல் விசாரணையில், "காசி எந்தப் பெண்ணையும் காதலித்ததில்லை. கெட்ட நோக்கத்துடன் நெருங்கி, மிரட்டி பணம் பறிப்பதே அவன் குணம். ‘நோ லவ்! ஒன்லி பிளாக்மெயில்’என்பது தெரிந்ததும், பேஸ்புக் நட்பு, வாட்ஸ்-ஆப் தொடர்பிலிருந்து அந்தப் பெண்கள் அவசரமாக விலகுவார்கள். உடனே, தன்னுடன் பழகிய பெண்களின் ஆபாச வீடியோக்கள் மற்றும் போட்டோக்களை எனக்கு அனுப்புவான். நான் அவற்றைச் சம்பந்தப்பட்ட பெண்களுக்கு அனுப்புவேன்.

அவர்கள் அலறியடித்து, யார் நீ? என் போட்டோ உனக்கு எப்படிக் கிடைத்தது? என்று கேட்பார்கள். அவர்களிடம் நான் ‘காசிகிட்ட அட்ஜஸ்ட் பண்ணி நடந்துக்கிட்டா உனக்கு நல்லது. அவனை பிளாக் பண்ணக்கூடாது. இல்லைன்னா... உன்னோட ஆபாச போட்டோக்களை, ஒவ்வொண்ணா சோஷியல் மீடியாவுல ரிலீஸ் பண்ணுவோம். என்று காசி சொல்லித்தந்த மாதிரியே பேசுவேன். வேறு எதுவும் எனக்குத் தெரியாது.’’ என்று கண்ணைக் கசக்கினானாம்.

“காசியின் செல்போனில் 20-க்கும் மேற்பட்ட நண்பர்கள் இருந்தும், அவர்கள் பக்கம் போகாமல், வீடியோவில் உள்ள பெண்கள் மற்றும் பெற்றோர் தரப்பிடம், விசாரணை என்ற பெயரில் குடைச்சல் கொடுப்பதில் மட்டுமே ஆர்வம் காட்டி வருகிறது காவல்துறை..’’ என்று பாதிக்கப்பட்ட தரப்பில் நம்மிடம் பேசிய ஒருவர், “ஏன் கம்ப்ளைண்ட் கொடுத்தோம்னு கவலைப்பட வச்சிட்டாரு அந்தப் பெண் போலீஸ் அதிகாரி. வா.. உனக்கு விர்ஜின் டெஸ்ட் எடுத்து பார்ப்போம்னு மிரட்டும் தொனியிலேயே பேசுறாங்க. இப்படிப் பண்ணுனா காசிக்கு எதிராகப் புகார் கொடுக்க எந்தப் பெண்ணாவது வருவாரா?

காசி, அவனோட குடும்பத்திலேயே சிலரிடம் முறைதவறி நடந்திருக்கிறான். அவன் குடியிருக்கிற ஏரியாவுல, ஒரு தெருவுல மூணு பொண்ணுங்கள எங்கெல்லாமோ கூட்டிட்டு போயி, குடிக்க வச்சு நாசம் பண்ணிருக்கான். ஒரு பெண் போலீஸ் அதிகாரியோட பொண்ணும் காசியால பாதிக்கப்பட்டிருக்கு. இதுக்கெல்லாம் கம்ப்ளீட் புரூஃப் இருக்கு. இது போலீஸ் டிபார்ட்மெண்டுக்கே தெரியும். ஒரு பெண்ணோட அம்மாங்கிற முறையில, அந்தப் போலீஸ் அதிகாரிகிட்ட, எங்கள டார்ச்சர் பண்ணுற பெண் போலீஸ் அதிகாரி விசாரிக்கலாம்ல. ஏன் பண்ணல?'' என்று கேட்டார் பரிதாபமாக.

suji friend

பள்ளியில் படிக்கும் காலத்திலிருந்தே காசியின் நண்பர்களாக இருந்த சிலரைச் சந்தித்தோம். “எங்கள இதுல கோர்த்து விட்றாதீங்க. அவனோட நடவடிக்கையிலே எங்களுக்கு எந்தச் சம்பந்தமும் இல்லை. ‘டெஸ்ட் டியூப் குழந்தை’ மருத்துவத்தில் நிபுணரான பெண் டாக்டர், காசியின் அழகில் மயங்கி மிகவும் நெருக்கமானார். அந்த உரிமையில், காசியை பலமுறை ‘ஸ்பெர்ம் டொனேட்’ செய்ய வைத்தார். காசியிடம் அந்த டாக்டரம்மா ‘எத்தனை வீட்ல உன்னோட குழந்தை வளருது தெரியுமான்னு உசுப்பேத்தியிருக்காங்க. இதை காசியும் பெருமையா சொல்லி, தன்னுடைய நட்பு வட்டத்தில் உள்ளவர்களை ஒரு குழுவாக்கி, ‘ஸ்பெர்ம் டொனேட்’ செய்ய வைத்தான். காசி அழைத்துவரும் பெண்களுக்கு, அந்த டாக்டரம்மா ‘அபார்ஷன்’ பண்ணவும் செய்தார்.

கன்னியாகுமரியில் வசதியான பெண் ஒருவரிடம் பழக்கம் வைத்திருந்தான் காசி. அவளது வீட்டுக்கு, அந்தப் பகுதியைச் சேர்ந்த எஸ்டேட் அதிபரின் மகளை அழைத்துச் சென்றான். கல்லூரி மாணவியான அவள், காசியை தீவிரமாக காதலித்தாள். இவனோ, அந்த வீட்டில் வைத்து அவளைபலாத்காரம் செய்தான். அவள் கூச்சல் போட, அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் காவல்துறைக்கு போனில் தகவல் சொல்லிவிட்டார்கள். போலீஸ் வருவதற்குள், அந்த வீட்டைச் சுற்றி நின்றவர்களிடம் காசி, “இவள் என் மனைவிதான்.. வயிற்று வலியால் கத்தினாள்’’ என்று கூறிவிட்டு, ‘எஸ்கேப்’ ஆனான்.

இது நடந்து இரண்டு வருடங்களுக்கு மேல் இருக்கும். அப்போதே நாங்கள் அவனுடைய நட்பை முறித்துக்கொண்டோம். ஒரே நேரத்தில் அவனால் 90-க்கும் மேற்பட்ட பெண்களிடம் எப்படிப் பழக முடிந்ததென்றால், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மூலமாகத்தான். முழுக்க முழுக்க பெண்கள் மட்டுமே உள்ள நான்கு வாட்ஸ்-ஆப் குழுக்களில், காசி ஒருவன் மட்டுமே ஆண். முதலில் ஒரு மாணவியை வலையில் வீழ்த்தி, அவள் மூலமாக இன்னொரு மாணவி, அடுத்து வேறொரு மாணவி என அவன் பின்னிய சங்கிலித் தொடரில்தான் இத்தனை பெண்கள் சிக்கியிருக்கிறார்கள்.’’என்று விரிவாகப் பேசினார்கள்.

காசி வேறு சாதி என்றாலும், அவனுடனான பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களில் சிலர், ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். காசி ஆதரவு வட்டத்திலும் அந்தச் சமுதாயத்தவர் இருக்கின்றனர்.

suji

http://onelink.to/nknapp

அவர்கள், சாதி ரீதியான அக்கறையுடன், ஆளும்கட்சியின் முன்னாள் அமைச்சரை சந்தித்து, “இந்த காசி விஷயத்தில் நீங்க தலையிட்டு நம்ம சாதிசனத்தைக் காப்பற்றணும்’’என்று காசிக்கும் சேர்த்தே கோரிக்கை வைக்க, அவரோ “அவன் பேரைச் சொல்லிக்கிட்டு இந்தப் பக்கம் எவனும் வரக்கூடாது’’ என்று விரட்டியடிக்க, சங்கடத்துக்கு ஆளாகி திரும்பியிருக்கின்றனர்.

வழக்கறிஞர்கள் சிலரோடு நட்பு பாராட்டி நிறைய செலவு செய்திருக்கிறான் காசி. அந்த விசுவாசத்தில், அவனைக் காப்பாற்ற அவர்கள் முயற்சி எடுத்து வருகிறார்கள். அதனால்தான், பேரத்தின் பலாபலனை மனதில் நிறுத்தி, பொள்ளாச்சி அளவுக்குக் கூட்டுப்பாலியல் வன்முறை நடந்தும், மீடியாக்களுக்கு எந்தத் தகவலும் சென்று விவகாரம் பெரிதாகிவிடக் கூடாது என, ரொம்பவே மெனக்கெட்டு வருகிறது காவல்துறை.

-மணிகண்டன்.

girls incident issues Kanyakumari pollachi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe